vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, October 12, 2013

சிறுகதை

                                                               மோதிர விரல்

_வைதீஸ்வரன்


ஒரு நாள் என் பெரிய மாமா கோயமுத்தூரிலிருந்து  தகவல் அனுப்பியிருந்தார், “அப்பாவின் அட்டகாசம்  தாங்கவில்லை, அவரை கொஞ்ச நாள்  சேலத்திற்கு அனுப்பிவைக்கிறேன் என்று.

தாத்தாவை சமாளிப்பது அப்போது பிரச்னையாகத் தான் இருந்தது. வயதான காலத்தில் தான்  அவர்  உடல் முறுக்கு தீவிரமாகிக் கொண்டிருந்தது.   நல்ல வைத்தியரை வைத்து அவர் உபாதைகளைக் கண்டறியும்   அக்கறையோ  விருப்பமோ என்  மாமாவுக்கு இல்லை.

அப்பா என்றுகூடப் பார்க்காமல் அவர் என் தாத்தாவைக் கண்டி பார் திட்டுவார்.  என்  தாத்தாவுக்கு  அதிகமான ரத்தக் கொதிப்பும் ஹார்மோன் பிரச்னையும் இருந்திருக்க வேண்டும்  அவர் இப்படித் தான் நடந்து கொள்வாரென்று ஊகிக்கவே முடியாது.  விபரீதமாக ஏதாவது செய்வார்.. திடீர் திடீரென்று அவர்  யார் மீதோ ஆத்திரம் கொண்டவராக  வீட்டில் உள்ள சாமான்களை தூக்கி எறிவார்.  சிலவற்றை உடைப்பார்.. வாசலில் யாருக்காகவோ பரிந்து கொண்டு போய்  யாரையோ அடிக்கத் தொடங்குவார்.   ஒரு சமயம் வாசலில்  பிச்சைக் காரன் வந்து அம்மா..தாயே..சாப்பிட்டு மூணுநாளாச்சுன்னு கத்தி இருக்கிறான். தாத்தா  சமைத்துவைத்திருக்கும் அத்தனை பண்டங்களையும் அவனுக்கு கொண்டு  போய் போட்டு விட்டு அவனைத் திண்ணை யிலேயே  அதட்டி உட்கார  வைத்து சாப்பிடச் சொல்லி இருக்கிறார்.  அவன் வேண்டாம் ஸாமி  போதும்  ஸாமி என்று கெஞ்சியிருக்கிறான் தாத்தா அவனை விட வில்லை.    “சாப்பிடுரா..சாப்பிடுரா..என்று   அடித்து மிரட்டி  அவனை மொத்த சாப்பாட் டையும்  திங்கச்  சொல்லி இருக்கிறார் .. அவன்  முடிந்த வரை முழுங்கி விட்டு தப்பித்துக் கொண்டு  ஓடியிருக்கிறான்..  அதற்குப் பிறகு அவன்   எங்கள்  தெருப்பக்கம் தலை காட்டுவதையே  நிறுத்திக்  கொண்டான்.

இப்போதும் அந்த மாதிரி ஏதோ நிகழ்ந்திருக்கிறது...வாசலில் ..ஏதோ பொம்மை வியாபாரி வந்திருக்கிறான்....கூடை  நிறைய பலூன்கள்  கிலுகிலுப்பை ஊதிகள் சொப்புகள்...சின்ன சின்ன  பொம்மைகள்...  தாத்தா வெளியே வந்திருக்கிறார்... அப்போது பள்ளிக்கூடம் விட்டு சில குழந்தைகள்  வந்துகொண்டிருக்கிறார்கள் .  தாத்தா அந்த பொம்மைக்காரனிடம்அவர் களுக்கு ஆளுக்கு ஒரு பொம்மை கொடு என்று  சொல்லி இருக்கிறார்.. பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம்...நல்ல நல்ல தாத்தா நல்ல தாத்தா  என்று சொல்லிக் கொண்டே போனார்கள். இன்னிக்கு நல்ல  வியாபாரம்”.. பொம்மைக்காரன் சந்தோஷமாக எல்லோருக்கும் வாரி வாரிக்கொடுத்திருக்கிறான். கூடையே  காலி.எப்படிங்க அய்யா இ வ் வளவு பெரிய   மனசு..உங்களுக்கு...தர்மப் பிரபுவா இருக்கீங்களே! பொம்மைக் கா ரன் வாயாரப் பாராட்டிவிட்டு காசுக்கு காத்திருக்கிறான் தாத்தா   சொன்னார்  “ஏண்டா...காசாஎன்கிட்ட காசு எங்கடா இருக்குஇருந்தா நான்   ஏண்டா   இதெல்லாம்  தர்மமா கொடுக்கிறேன்..” 

  “என்ன  ஸாமி  சொல்றீங்க?......................

 “என் கிட்டே  காசு  ஒண்ணும் இல்லெ......காசு எதுக்குடா ஒனக்கு? ...காசு கீசு கேக்காதே..கொழந்தைகளுக்குத் தானே கொடுத்தே...எனக்கா  கொடுத்தே? ”

  “ஏண்டா கெழவா...  ஒரு  கூடை  பொம்மையை  வாங்கிட்டு  காசு இல்லைங்கறயா?"

   “டேய்...காசு  எதுக்குடா..உனக்கு...?  வேணும்னா...வீட்டுக்குள்ளெ  போய் அரை மூட்டை நெல்லு இருக்கு,  அதை எடுத்துகிட்டு  போ...காசையா  திங்கப்  போறே? “

 அப்போது மாமா வெளியே போயிருந்தார்  வீட்டில் வேறு யாருமில்லை.

   பொம்மைக்காரன் சத்தம்போட்டான். வயிற்றிலடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான்.. தெருவில் நாலைந்து பேர் கூடி விட்டார்கள்.

பாத்தா  வயசான பெரியவரு மாதிரி இருந்தே!  பைத்தியக்காரனா நீஎன் பொழப்புலெ மண்ணள்ளிப் போட்டுட்டியேடா.....

 அப்போது மாமா   வந்தார்..  விஷயத்தை அறிந்ததும்  கோபம் பொத்துக் கொண்டு வந்தது.  அந்த பொம்மைக் காரன்  சொன்ன தொகையை .பேரம்பேசிக் கொடுத்து விட்டு தாத்தாவை உள்ளே இழுத்துக் கொண்டு போனார்.  நாற்காலியில் அவரை  உடகார வைத்து நகராமல் கட்டி வைத்தார்  கட்டி வைத்து விட்டு  என் அப்பாவுக்குத் தகவல் அனுப்பி இருக்கிறார்.  என்  மாமாவுக்கு மனைவி. இல்லை  வீட்டை கவனித்துக் கொள்ள சரி யான  வசதி இல்லை.

தகவல் வந்த  மறு நாளே  தாத்தா  எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார். தாத்தாவை  சமாளிக்கக் கூடிய  திடகாத்திரத்துடன்  மாமாவுக்குத் தெரிந்த  தோட்டக் காரன் ஒருவன்  இருந்தான்.  அவன் தான்  தாத்தாவை  விட்டு விட்டு போனான்.

 தாத்தாவுக்கு என் மேல் ரொம்ப பிரியம். . என்னைக் கண்டால்  குஸ்தி போடுவது போல் கைகளை ஆட்டிஆட்டி  பலமாக சிரிப்பார்...விளையாடுவார். 

என் அம்மாவுக்கும்  தன் அப்பா மேல் உள்ளூர பாசமும் இரக்கமும் உண்டு  ..அடிக்கடி ஸ்வாதீனமில்லாமல்   நடந்துகொண்டாலும்  அம்மா அதை பெரிய விஷயமாகப் பொருட் படுத்தவில்லை. அவரை நல்ல வைத்தியரிடம் கூட்டிக் கொண்டு போய்  மூளைக் கொதிப்புக்கு வைத்தியம் செய்திருக்கலாம்.  ஏன் யாருமே அதை செய்யவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன்  ஒரு வேளை  தாத்தா வைத்தியரை அடித்து விடுவாரோ என்ற பயமாக இருக்கலாம்.

 “மாப்பிள்ளையோட  வியாபாரமெல்லாம் நன்னா  நடக்கறதா?”

தாத்தா  அம்மாவை  ஆவலுடன் விஜாரித்தார்.  மாப்பிள்ளை சைக்கிள் வியாபாரம் செய்வ தில்  தாத்தாவுக்கு  ஏதோ பெருமையாக இருந்தது.

அதை விட  இங்கே வந்த பிறகு   அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கு  பெரிய ஸ்வாரஸ் யம் ஒன்று  இருந்தது  அது தான் என் அப்பா வைத்திருந்த காளை மாடும் வண்டியும்!!

 அந்தக் காளை மாடு  நங்கவள்ளி சந்தையில்  சுழி பார்த்துப் லட்சணம் பார்த்து  அப்பா ஆசை யாக வாங்கியது. செக்கச் செவேலென்று இருக்கும்  அதன்  திமிலும்  காதும் உறுதியான கால்களும்  அழகாக தஞ்சாவூர் நந்தியை போல்  இருக்கும்  அதன் கம்பீரம் என்றும்  மனசைக் கவர்ந்துகொண்டே இருக்கும்   முரட்டு மாடு தான் . என் தாத்தாவைப் போலவே அந்த மாட்டின் சுபாவத்தையும்  நிதானிக்கமுடியாது.  எவ்வளவு வருஷமாக  நாங்கள்  பழகி இருந்தாலும் என் அப்பாவைத் தவிர யார் பக்கத்தில்போனாலும்  கொம்பை ஒரு ஆட்டு ஆட்டும்   வண்டியில் அதைப் பூட்டிய மறு நிமிஷமே  அது தலைதெறிக்கப் பாய்ந்து ஓட ஆரம்பித்து விடும் வண்டி ஓட்டுபவனை ஏற விடாது. இர்ண்டு தெருக்கள் கடந்த பின் தான் அது  ஆத்திரமடங்கி சமாதானமடைந்து   நடைபோடும்.  இந்த பிரச்னையினால்  வண்டியைப் அதன் கழுத்தில் பூட்டும் போது  யாராவது இரண்டு பேர் அதன் மூக்குக் கயிற்றை  இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள்   என் அப்பா  வண்டியில் ஏறி கயிற்றைப் பிடித்துக் கொண்ட வுடன்  அந்த இரண்டு பேர் விலகிக்கொள்வார்கள்  மாடு  நாலுகால் பாய்ச்சலில் பறந்து கொண்டு தெருவைத்   திரும்பும்.

  ஆனால் அது புத்தி கூர்மை உள்ள மாடு.   காலை பத்து மணி சுமாருக்கு  வண்டி பூட்டினால் அது நேராக எங்கள் அப்பாவின் கடை வாசலில் போய் நிற்கும்  மாறாக  பொழுது விடிய விடிய இருட்டில்  வண்டி பூட்டினால்  அது கடைப் பக்கம் திரும்பாமல்  பெரிய பாதை வழியாக திரும்பி  சீராக பத்து கிலோ மீட்டர் கடந்து தாரமங்கலம்  போய்  எங்கள் தோட்டத்துக் குள்  நுழைந்து கிணற்றடி பக்கம்  போய் வாயெல்லாம் வெள்ளை  நுரை  வழிய   உடம்பை சிலிர்த்துக்கொண்டு நிற்கும். வண்டி ஓட்டுபவன்  அதை நெறிப்படுத்தவே தேவையில்லை அதன் சூட்சுமத்தை எண்ணி எண்ணி பூரித்துப்போவார் அப்பா.

 அதை   தர்மராஜா  என்று   கூப்பிடுவார் .  அது தனக்குள்ளே சில  நியதிகளை வரித்துக் கொண்டிருக்கிறது.   தனக்கென்று சில கடமைகளை   விரும்பி ஏற்றுக் கொண்டு  ஒரு வித சுயேச்சையான, விடுதலையான   சுய கர்வத்துடன் காரியங்களை செய்துகொண்டிருந்தது போல் தோன்றியது . .அதன் விசித்திரமான  குணங்களை பார்க்கும்போது  அந்தக் காளையை என் தாத்தாவோடு    ஒப்பிடலாமோ என்று  கூட நினைக்கத் தோன்றியது..

அதிசயமாக  அந்த தர்மராஜா...என்  தாத்தாவின் குரலுக்குக் கட்டுப் பட்டது.  அவர் அருகில் துணிச்சலாக போவார்  வைக்கோல் கட்டை வாயில்  கொடுப்பார் கழுத்தை சொறிந்து கொடுப்பார்.. அது  அமைதியாக என் தாத்தாவின் பரிவை ஏற்றுக் கொள்ளும்.

தன் வயதை உதாசீனப்படுத்திவிட்டு என் தாத்தா  காளையை வண்டியில்  பூட்டி ஓட்டவும் துணிந்துவிட்டார்...என்  அப்பாவும்  அம்மாவும் எவ்வளவு எச்சரிக்கை செய்தாலும் ம்  தாத்தா  அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.. 

தாத்தாவின்  சுபாவம்  வெகுவாகவே  சகஜமாகிவிட்டது.  அவருக்கு செய்ய நிறைய காரியங் கள்  இருப்பது போல்  இங்குமங்கும் போய்க் கொண்டிருந்தார்.  மாட்டுக்கு நேரம் பார்த்து தீனிவைப்பதும் குளிப்பாட்டுவதும்  அவருக்கு மிகப் பிடித்த பொழுது போக்கு.

 ஒரு  நாள்  என் அப்பாவுக்கு  குளிர் ஜுரம் வந்துவிட்டது.  ஆனாலும்  கடைக்கு அவசியம் போக  வேண்டி இருந்தது.  யார் தடுத்தாலும்  கேட்காமல்   தாத்தா வண்டியைப்  பூட்டி அப்பாவை ஏற்றிக் கொண்டு போய் கடையில்  விட்டு விட்டு வந்தார் . வண்டி பூட்டியவு டன்  காளை   கட்டு மீறி  ஓடுவதைத் தவிர்க்க  தாத்தா  ஒரு யுக்தியைக் கையாண்டார்.

வண்டியை ஒரு முட்டுச் சுவற்றுக்கு முன்னால் நிறுத்தி   காளையைப் பூட்டுவார். மாடு  பாய்ந்து ஓட முடியாமல்  நின்ற இடத்திலேயே  சற்று  கால்களை உதைத்து திமிறிக் கொண்டிருக்கும்!!

இப்போது   தாத்தா  வண்டி  ஓட்டுவது  ஒரு  சகஜமான வேலை ஆகி விட்ட.து அதைப் பற்றி யாரும் பயமோ கவலையோ  படவில்லை...சில சமயம் என்னையும் அம்மாவையும் ஏற்றிக் கொண்டு  கடை வீதிக்கு கூடக்   கூட்டிக் கொண்டு போவார்.

நாளாவட்டத்தில்  வண்டி மாட்டை  கையாளும்பொறுப்புமுழுக்க முழுக் க  தாத்தாவே  ஏற்றுக் கொண்டுவிட்டார்.  காலையில் அப்பாவை கடையில் கொண்டு போய் விட்டு விட்டு வரு வார்  .பிறகு மதியம் மாப்பிள்ளைக்கு  சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவார். இப்படி  பலகாரியங்கள்.


அன்றைக்கும்  தாத்தா  மத்தியானம்  சாப்பாட்டுப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வண்டியை  கிளப்பிக் கொண்டு போனார்.  தர்மராஜாவைச் செல்லமாக   பிருஷ்டத்தில் தட்டிக் கொண்டே  ஓட்டிக் கொண்டிருந்தார்.  போகப் போகத் தான் ஞாபகம் வந்தது , மாட்டிற்கு காலையில் தண்ணீர் வைக்கவில்லையென்று...  அவருக்கு வருத்தமாக இருந்தது..  அதை நினைத்துக் கொண்ட  போது  அவருக்கும் தொண்டை வறட்சியாகப் போய்க் கொண்டிருந் தது.  நல்லவேளை அந்த   ரயில்வே  கேட்  தாண்டியவுடன் வாடகைக் குதிரைகளுக்கான   தண்ணீர் தொட்டி  பக்கவாட்டில் நீளமாக கட்டப் பட்டிருந்தன. தாத்தா  மாட்டை தண்ணீர் தொட்டிப் பக்கம் செலுத்தி நிறுத்தி கீழே இறங்கி  தர்மராஜாவை தண்ணீர் குடிக்க சொன்னார்....அதன் தாடையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அது தண்ணீர் குடிக்கும் பாங்கை ரஸித்துக்கொண்டிருந்தார் தர்மராஜா குடித்துமுடித்து பாசத்துடன் தலையை   இரண்டு முறை ஆட்டியது.

 தாத்தா  கழுத்துக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு  எச்சரிக்கையாக வண்டியின் முன்பக்கம் ஏர்க்கால்  படியில் கால்வைத்து ஏறப் போனார்.அப்போது  எங்கிருந்தோ வந்த ஒரு குதிரை தண்ணீர் குடிக்க  காளையின் அருகாமையில்  வந்த்து.  தர்மராஜா இதை எதிர்பார்க்கவில்லை கோபமும் திகிலும் பீறிட்டு  அது  கொம்பை பலமாக ஆட்டி திமிறிக்கொண்டு குதித்தது.

முன் படியில் வைத்த  கால் தவறி தாத்தா  மண்ணில்  உருண்டார்  மாட்டின் கழுத்துக் கயிறு அவர் கைகளில்  எப்படியோ விடுபட  முடியாமல்  சிக்கிக் கொண்டது காளை.  இப்படியும் அப்படியுமாக வண்டியை  இழுத்துக் கொண்டு வட்டமடித்தது. தாத்தாவின்  கை விரல்கள் சக்கரத்தடியில்  மாட்டிக் கொண்டு விட்டது. தாத்தா  ஆன மட்டும் கையை விடுவித்துக் கொள்ள பாடுபட்டார்.

  அதற்குள்  கூட்டம்கூடி விட்டது  இரண்டு பேர் மாட்டைப்  பிடித்து கொண்டார்கள். இரண்டு பேர் கீழே  கிடந்த தாத்தாவை  தூக்கி நிறுத்த  முயன்றார்கள்  அவர் விரல் வண்டிச் சக்கரத் தடியில்  அழுந்திக் கிடந்தது அதை விடுவிக்க மெதுவாக  வண்டி சக்கரத்தை நக்ர்த்திய போது  எல்லோரும் அதிர்ந்துபோனார்கள்.  துண்டு பட்டுப் போன தாத்தாவின் மோதிர விரல்  தனியாகத்  தரையில்  துடித்துக்கொண்டிருந்தது.  நிறைய ரத்தம்  பாய்ந்து கொண்டிருந்தது.

சற்று மயக்கமாக  இருந்தாலும் தாத்தா  பிரக்ஞை இழக்கவில்லை.

 “அந்த வெரலைப் பிடீடா...வெரலைப் பிடீடா...”  என்று கத்திக் கொண்டிருந்தார்.  யாரோ ஒருவன்  அந்த விரல் துண்டை  எடுத்து தாத்தாவிடம் கொடுத்தான்.  தாத்தா  அதை தன் சட்டையின் கடிகாரப்பைக்குள்  போட்டுக் கொண்டு  பக்கத்தில் இருந்தவனிடம் மேல் துண்டைக் கிழித்து  ரத்தம்கசியும் வலது கையை அலம்பி  கட்டுப் போடச் சொன்னார்.  

தாத்தா....வாங்க   தாத்தா  பக்கத்துலெ  பெரிய ஆஸ்பத்திரி இருக்குது. குதிரை வண்டிலே  போயிறலாம் வாங்க.. என்றார்கள்  கூடி இருந்தவர்கள். 

 தாத்தா அதற்கு மசியவில்லை.

அடப் போடா,விரலுப் போனா மசிரு போச்சு உசிரா போச்சு... என்னை ஏத்தி   என்  வண்டிலே  ஒக்காரவையுங்க  அது போதும் நான்  ஆஸ்பத்திரிக்கு போயிடறேன்..”   

எவ்வளவு சொல்லியும் தாத்தா  மற்றவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. ரத்தம் அதிக மாக  போய்க்கொண்டே இருந்த்து  காலம் கடத்தாமல் தாத்தாவை  அவர் விருப்பப்ப டியே  வண்டியில்  ஏற்றி விட்டார்கள்.

இடது  கையில்  மாட்டுக்  கயிற்றைப் பற்றிக் கொண்டு  சற்று பக்கவாட்டில் சாய்ந்த வாறு   “போடா..தர்மராஜா..”  என்றார்.

அவர் மேல்  அனுதாபமும் துணிச்சலைக் கண்ட ஆச்சரியமும் கொண்ட இரண்டு பேர்  வண்டியின் பின்னால் சைக்கிளில்  அவரை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

 ஆஸ்பத்திரி காம்பௌண்டுக்குள்  நுழையும் போதே தாத்தாவுக்கு அநேகமாக மயக்கம்  வந்து விட்டது  ஆனால்  பிரக்ஞை தப்புவதற்குள்  அவர் பின்னால்  வந்த அந்த  இரண்டு பேர்களை கூப்பிட்டு,   டேய் பசங்களா...தேர்முட்டி பக்கத்துலெ சைக்கிள் கடை வைச்சிருப் பான் என் மாப்பிள்ள  சுந்தரம்,  அவனை இங்கெ வரச் சொல்றீங்களா?  என்று  சொல்லி விட்டு மயங்கி விட்டார்
                ************
 ஒரு  அரை மணி சிகிச்சைக்குப் பிறகு  தாத்தாவுக்கு முழிப்பு வந்தது.

சுற்று முற்றும்பார்த்தார்  பக்கத்தில் டாக்டர்  நின்று கொண்டிருந்தார்.. இரண்டொரு  நர்ஸு கள்...பின்னால்  என் அப்பா  கவலையும்  அதிர்ச்சியுமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

 டாக்டர் தாத்தாவின் தோளைத் தட்டி        எப்படி  இருக்கீங்க  தாத்தா..? என்றா.
ர்
  எனக்கு  பெரிசா  ஒண்ணுமில்லே  டாக்டர்...ஏதோ சந்தர்ப்பம்இப்படி....

You  are a   brave  old Man… நீங்க  எல்லாம்   மிலிட்டரீலே  இருக்க வேண்டிய வங்க.....ரொம்ப  துணிச்சலான  ஆளா  இருக்கீங்களே!!   சபாஷ்என்றார் டாக்டர்.

 “டாக்டர்.....ஒங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்  ..முடிஞ்சா  அவசரமா  ஒரு  உதவி பண்ணமுடியுமா? “

 “என்ன உதவி?   

இந்த ஒடைஞ்ச விரலை  கையிலே மறுபடியும்  சேர்த்து ஒட்டி விட முடியுமா?”

தாத்தா  சட்டைப் பையிலிருந்து ரத்தக் கசிவுடன் இருந்த  மோதிர விரலை எடுத்து நீட்டினார்
அவர் சொன்ன விஷயத்தின் அதிர்ச்சியை மீறி  எல்லோருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

தாத்தா  நல்ல யோசனை  தான்... ஆனா  உங்களுக்கு  எதுக்கு இந்த ஒடைஞ்ச விரல்? நாலு  விரலே  போறுமே  நீங்க  சாமர்த்தியசாலி ஆச்சே!! அதைக் கொடுங்கோ இப்படி... "

டாக்டர்  தாத்தாவை  வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்து விட்டு மேற்கொண்டு ஆக  வேண்டிய  சிகிச்சையை கவனிப்பதற்காக  நகர்ந்தார்.  

 அப்பா  தாத்தாவின் அருகில்  கண்ணிர் தளும்ப நின்றார்.

என்ன  மாமா....இப்படி ஒரு பெரிய  ஆபத்துலே  இன்னிக்கு மாட்டிண்டுட்டேளே! அதான்  வண்டியெல்லாம்  ஓட்ட வேண்டாம்னு  எவ்வளவோ தடுத்தோம்...” 

   தாத்தா  சற்றும்  கலங்கவில்லை  லேசாக சிரித்துக்கொண்டார்.

 “டேய் சுந்தரம்...வெரலு போனதைப் பத்தி எனக்கு வருத்தமே  இல்லைடா... அதை விட  ஆறாத  வருத்தமென்னன்னா.... அந்த  மோதிர விரல்லே  ஒரு  பச்சைக் கல் மோதிரம் இருந்தது.  வண்டி சக்கரம்  பிரண்டதிலே  மொத்தமா நசுங்கி  அந்த மோதிரம் பொடிப் பொடியா போயிடுத்து...மிச்ச விரல்லே அது இருக்குமோன்னு பாக்கத் தான் அதை கொண்டு வந்தேன்  ஆனா  அது  போயிடுத்து.....    நான்  கண்ணை மூடின அப்புறம் அந்த மோதிரத்தை ஒனக்குத் தான் கொடுக்கணும்னு நினைச்சிண்டிருந்தேன்  அந்த  ஆசை இப்போ பொடிப் பொடியா  போயிடுத்து....அதான் எனக்கு  ஆறலே...

 அதற்கு மேல் பேசமுடியாமல் தாத்தாவுக்கு  மீண்டும்   லேசாக மயக்கம் வந்து விட்டது.

அப்பா  துக்கத்துடன்  வாயைப்புதைத்துக் கொண்டு தாத்தாவைப் பார்த்துக்கொண்டிருந்    தார். 


இந்த  தாத்தாவை  ஊரில்  எல்லோரும்  பைத்தியக்காரத் தாத்தா  என்று தான்  அந்தக்     காலத் தில் சொல்லிக்கொன்டிருந்தார்கள்

     
     அம்ருதா   அக் 13