vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, November 28, 2019




வைதீஸ்வரனின் கவிதைகள்

- வெங்கட்  சாமிநாதன் -






யார் என்னதான் சொல்லிக்கொண்டாலும், கூட்டம் கூட்டிப் பேசினாலும், பாராட்டுரைகளைச் சேகரித்துக் கொண்டாலும் , தருமு சிவராமு ஒரு முறை சொன்னது போல, "அவர்கள் சொல்வதெல்லாம் அபிப்ராயங்களே, நான் சொல்வது judgement " என்று தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டாலும் , எல்லாம் அபிப்ராயங்கள் தாம். காலம் நிர்ணயிக்கும் என்று சொல்வது கூட, அந்தந்தக் காலத்தின் குணம் நிர்ணயிப்பதுதான் . இதில் ஏதும் judgements கிடையாது . 1973 -ல் ஞானரதம் படைப்பிலக்கியத் தேர்வு கருத்தரங்கு நடத்தியது. எனக்கு வைதீஸ்வரனின் ஒரு குட்டிக் கவிதை தொகுப்பு, உதய  நிழல் தான் ஒரே கவிதைத் தொகுப்பாகப் பட்டது. வல்லிக்கண்ணனுக்கு, நா. காமராசனின் கருப்பு மலர்கள் சிறந்ததாகப்பட்டது. காமராசன் அந்நாட்களில் மிகவும் பேசப்பட்டவர். அலங்கார சொல் ஜாலங்களில் வல்லவர். இன்று நா. காமராசனையும் காணோம். அவர் கவிதைகள் எனச் சொல்லப்பட்டவையும் போன இடம் தெரியவில்லை. ஆனால் எண்ணற்ற காமராசன்கள் வெவ்வேறு பெயர்களில் அவரவர் பேட்டைகளில் குறுநில மன்னர்களாக , சக்ரவர்த்திகளாக கோலோச்சுகிறார்கள் . ஆனால் வைதீஸ்வரன் காணாமல் போய்விடவில்லை. அவரிடமிருந்து இன்னமும் கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பெரிதும் பேசப்படுவர்களிடம் புதுச்செய்யுள் ஆகியுள்ளது. இன்றும் அன்று போல வடிவம் பார்த்து கவிதை பெயர் பெறுகிறது, கவித்வம் உணர்ந்து அல்ல. இதிலிருந்து காலம் என்ன புண்ணாக்கைச் செய்துவிட்டது என்றுதான் சலித்துக் கொள்ளத் தோன்றுகிறது.

உதய நிழல் வைதீஸ்வரனைத் தான் இப்போது 50 வருடங்களுக்குப் பின்னரும் பார்க்கிறோம். அதே ஆளுமைதான் வளர்ந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் அவர் கவிதைகளில் எனக்குப் பிடித்தவை பிக்காதவை பற்றி எழுதியிருந்தேன். "எனக்கு" என்ற சொல்லுக்கு அடிக்கோடிட வேண்டும். இப்போதும் அவருடைய "கால்- மனிதன்" தொகுப்பைப் பார்க்கும் பொழுதும், எனக்குத் தோன்றுவனவற்றை , "எனக்கு" என்ற அடிக்கோடிட்ட சொல்லுடனேயே எடுத்துக்கொள்ள வேண்டும். இது, எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்றாலும், அவ்வப்போது இதை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று தொலைக்காட்சியில் ஒரு கவிஞரின் பேட்டி நடந்துக் கொண்டிருந்தது. தான் எழுதிய கவிதைகள் 3000  பக்கங்களுக்கு இருக்கும் என்றார். அவன் காலத்திய ஆசுகவியேயான கம்பனுக்கும் மேல் மூன்று மடங்கு கவித்வம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அவரைப் பேட்டி கண்டவரைப்பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. ஆனாலும், அவர் பேட்டியாளர் சொல்வதைப் புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்தார். அதில் கேலி தொக்கியிருக்கிறதோ  என்றுப் பார்த்தேன். இல்லை. ஷெல்லியைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். கவிதை மேற்செல்ல மறுக்கிறது. ஷெல்லியும் வலுக்கட்டாயமாக உட்கார்ந்திருக்கவில்லை. கவிதை அத்தோடு நிற்கிறது. அடுத்த சரியான சொல் கிடைக்கும் வரை. அது எப்போது, நாட்கள் கழிந்து பொறி தட்டுவது போல் உதயமாகிறது. "wandering " என்ற சொல் கிடைத்ததும் கவிதை மேல் செல்கிறது. இந்த மாதிரி அவஸ்தைகள் எல்லாம் 3000  பக்கம் எழுதும் கவிஞருக்கு இல்லை. அன்று , தினம் தன்  கவிதைகளை வாசிப்பவரும் வந்தார். அவர், அத்தொலைக்காட்சியின் ஆஸ்தான கவிஞர் போலும். அவரும் கவிஞரே இல்லை என்று 40  வருடங்களுக்கு முன் நான் சொன்னதை கவிஞரோ அல்லது காலமோ லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. நான் கவிதை இல்லை என்று சொன்னது 26 வது பதிப்பு வந்துள்ளது, காலமும் மக்களும் பதில் சொல்லியாயிற்று என்று அந்த கவிஞர் தீர்மானத்தோடு சொன்னார். இவ்வளவு பலசாலிக் கவிஞர் முன் நான் என் எளிமையைத் தான் உணர்ந்தேன். ஆனாலும், இவை எதுவும் கவிதையாக இன்னமும் எனக்குத் தோன்றவில்லை. 50  வருடங்களாக. எனக்குத் தலை நரைத்து விட்டது. அவர்கள் இளமைத் தோற்றத்துடன் தான் இருக்கிறார்கள். எனக்குத் தான் என்ன பட்டாலும் புத்தி வராது என்று தோன்றுகிறது. 

ஐம்பது வருடங்களாக கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன், புதுக்கவிதையின் தோற்ற வருடங்களிலேயே தன்  கால் பதித்துவிட்ட வைதீஸ்வரன் , கால்-மனிதன் தொகுப்பின் கடைசி பக்கங்களில் பல பெரிய சிறிய தலைகளின் பாராட்டுகளையும் இணைத்துள்ளார். "பூக்கள் ஏன் மலர்கின்றன", போன்ற கேள்விகளுடன் தொடங்கும் ஒரு கவிதை,

"பதில் கிட்டாமல்
பொருள் பூத்து  விட்டால்
எனக்கும் கவிதை தோன்று மெனத்
தோன்றுகிறது இத்தருணம்"

என்று சொல்லும்போதே ஒரு கவிதை தோன்றிவிடுகிறது, நமது வைதீஸ்வரனுக்கு. ஆனால் அவர் முதல் கவிதையாகவும் , பின் அட்டையிலும் பிரதானப்படுத்தியிருக்கும்

"இந்த உலகம்
நம்மால்
அழியாமலிருக்கட்டும்"


ஒரு கவிதையாக எனக்குப் படவில்லை. நல்ல சிந்தனைகளை நன்றாக சொல்லிவிட்டால் கவிதையாகிவிடுமா ?  "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்பதில் நல்ல சிந்தனை மட்டுமில்லை. மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்க்கலாம். ஏற்ற முகபாவத்துடன் சப்தமிட்டு சொல்ல தோன்றும் உணர்வுடன் வருவது அது. இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் வைதீஸ்வரன் கவிஞன்.

"இருட்டைவிட்டு
இன்னும் பிரித்தறிய முடியாத,
ஒற்றைக் காகம்
அதன் ஒற்றைக் குரல்
மௌனத்தை இன்னும்
முழுதாய்த்  திறக்க முடியவில்லை.

குவிந்த விரல்களின் மழலையாய்
விரியும் கோலங்கள்...

வெள்ளையாய்ச் சிரிக்கிறது  விடிவு
ஒரு குழந்தையின் கள்ளத் தனத்துடன்".


போன்றக் காட்சிகளைக் காண்பவர், இது போன்று எழுதுபவர் கவிஞர் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

கதவு திறக்கும் ஒலி
கேட்கிறது..
.

என்று தொடங்கும் ஒரு கவிதை,

கதவு பொதுவாக
குற்றமற்று நிற்கிறது"


என்று முடியும் ஒரு கவிதை சிறப்பான ஒன்று தான். ஆனால் "பொதுவாக" என்ற சொல்லை நீக்கிவிட்டால், இன்னும் சிறப்பாக ஆகியிராதா? "பொதுவாக" என்னும் சொல் கருத்து விளக்கமாக வருவதல்லவா? கவிதை ஏன் கருத்து  விளக்கமாக வேண்டும்?

இப்படியெல்லாம் சில கண்களில் பட்டாலும், அவை டி.கே.சி. அருமையாக சொல்லும் "அப்பளத்தில் கல்லாக" நெருடினாலும், கைவிரல்களுக்கிடையில் பெரிதாக ஒரு அப்பளம் கிடைத்துள்ளதே.

இப்படி நெருடும் கற்கள் பரவிக் கிடக்கின்றன பல இடங்களில், சில பதங்களாகவும், பதக் சேர்க்கைகளாகவும் (உதாரணங்கள் சில வேண்டுமா - எண்ணக்கோல், காற்றுச் சாட்டை, மேக மிருகங்கள், திசைப் போர்வை, மந்திரவாதிக் கம்பளி, "அந்த இடித்(தடி) திருடனை,\"; 

 சில வரிகளாகவும்,

"இப்படிப் பட்ட அபவாதச் செயல்
எதுவானாலும் அதைச்
சட்டமாக்கி விட்டால் தான்,
ஜனநாயகத்தின்  மீசையில்
மண் ஒட்டாமலிருக்கும்."

இப்படி இன்னும் பல உண்டு தான்.

வைதீஸ்வரனுக்கு சுற்றிக் காணும் அரசியல் பற்றி, சில மனித சுபாவங்கள் பற்றி, கோஷங்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் உண்டு. ஆரோக்கியமானதும், கிண்டலாக வெளிப்படுவதும் ஆனவை அவை. அது ஐம்பது வருடங்களாக தொடரும் ஒரே பார்வை. அவரது ஆளுமைச் சார்ந்தது. இப்போதைய மதிப்புகளை, தேவையைச் சார்ந்ததல்ல. "சோரம் அல்லது களவியல்" என்று ஒரு கவிதை:

"சோரத்தின்
சுகமே அலாதி - அது
எதிர் நீச்சலின் வீர முடிவு
அவிழ்த்துவிட்ட ஆண்மையின்
தன்னிச்சைத் துள்ளல்"


என்று எழுதும் வைதீஸ்வரனின் சமூக மதிப்புகள் அவரதே. வேறு எங்கிருந்தும் பெற்றதல்ல. கூட்டத்தோடு போடும் கோவிந்தா அல்ல. அதை வெளிப்படவும் சொல்கிறார். இது நம் கவிதை உலகில் வெகு அரிதாகக் காணப்படும் குணம். கடைசியில் அக்கவிதை முடிகிறது இவ்வாறு:

"பூமியின் பொய் வாடை கடந்த
புனிதப் புணர்ச்சி என்று
புரிந்துக் கொள்வாய் நீ.
ஒப்புதலுடன் இருபாலும்
இனைந்து செய்யும் குற்றத்தை
குற்றம் என்று
எப்படி ஒப்புக்கொள்வது?"


இது போல இன்றைய பொய்க்கோஷமான ஜாதி பற்றியும், கவிதையாக, கோஷமாக அல்ல, எழுதுகிறார், மக்களுடன். இவரது விமரிசனங்கள் எல்லாம் நக்கலுடன் தான் வெளிப்படும்.

'கட்சிக்கு கொடிகள் காற்றில் பதற
"காக்கை குருவி எங்கள் ஜாதி"
என ஓலமிட்டு ஒலிபெருக்கிகள்.

அலறிப் புடைத்துப் பறந்தன
அத்தனைக் காகங்களும்
மனித ஜாதிக்குப் பயந்து '


அவருக்கு மொழி என்னமாக விளையாடுகிறது. அவர் பார்வைகளிலேயே கவித்வம்:

"வைத்தியன் பார்த்த கண்களும்
காதலன் கண்ட கண்களும்
அர்த்தங்கள் வெவ்வேறு சொல்லும்...

காடுகளைக் கடத்திக் கொண்டு
போனது நாகரிகம்...

குடிகாரன் கழுத்து துண்டாய்
பக்கவாட்டில் தொங்கும்
பேருந்து மக்கள் பத்து மணி வண்டிகளில்...

சொர்க்கத்திலேறும் முயற்சியை
தாற்காலிகமாய்த் தள்ளி வைத்தாற்போல்
சாத்தி வைத்த ஏணிகள்
மொட்டை மாடியில்..."


"மௌனத்தைப் போர்த்திக்கொண்டு கனவு காணும்
மாடு போல் படுத்திருக்கறது காடு.. "

வைதீஸ்வரன் எழுத்திலும், சிந்தையிலும், பார்வையிலும், காணும் காட்சிகளிலும் கவிஞர்தான். ஆனாலும் பல இடங்களில் அவர் கேலியும், சொல்லாட்சியும், பதச் சேர்க்கைகளும் கை விட்டுவிடுகின்றன. ஏன், பி.டி.உஷாவுக்கு  கால் சுளுக்கிக் கொள்ளாதா , இல்லை நித்யஸ்ரீ மகாதேவனுக்குத் தான் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாதா? எனவே, 166 பக்கங்களுக்கு விரியும் இக்கவிதைத் தொகுப்பில் எனக்குப் பிடிக்காத கவிதை வரிகள், பதங்கள், பதச் சேர்க்கைகள் , படிமங்கள் என்று சொல்லப்படுபவை, நகையாடல் என்று  கொள்ள்ளப்படுபவை, முழுக் கவிதைகள், கவிதைப் பொருட்கள் எல்லாம் உண்டு தான். அவை எனக்குப் பிடிக்காது போவதில், அல்லது பிடித்துப் போனவையிலும் எந்த தெய்வ சாந்நித்யமும் கிடையாது. என் ஒருவனின் ரசனை வட்டத்தில் சிறை படுபவை. இதனால் பல நஷ்டங்கள் என்னமோ இருக்கும் தான். எனக்குப் பிடித்துப் போகிறவற்றிற்கு தமிழ் நாட்டிலும், இந்தியப் பரப்பிலும், அதிகார மட்டங்களில் அங்கீகாரம், பரிசு, விருதுகள், பொன்னாடைகள், ஏதும் அவரது ஜாதகத்தில் இல்லாது போகலாம். 28 பதிப்புகள் அவர் கவிதை வராது போகலாம். 

ஆக, இந்த கணிசமான எண்ணிக்கையும் பக்கங்களும் கொண்ட தொகுப்பில் எனக்குப் பிடித்தவை என நிறையவே கவிதைகள் உள்ளன. முடிவில், கடலோர மனித, ஸீஸர், மகா கவி, அழிப்பு, பரிசு, கண்காட்சி, மிருகம், ஆஹா, சுகம், அகராதி, எதிராளி, நெருப்புப் போர்வை, ரிஷிகேஷ், ஒரு துளி காவியம், பிச்சமூர்த்தி, நகல் முகம், நடுப்பகல்,சிலிர்ப்பு, காத்திருப்பு, ஒரு கொலையின் கொண்டாட்டம், இக்கட்டு, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சொர்க்கத்தில் சோதனை என்று ஒரு நீண்ட கவிதை, அல்லது குறுங்காவியமும் இத்தொகுப்பில் உள்ளது. புதுக்கவிதையில் நீண்ட கவிதைகள் என்று பிச்சமூர்த்தியிடமிருந்தும் , சி. மணியிடமிருந்தும் தான் கவிதை என்று சொல்லத்தக்கவை வந்துள்ளன. மற்றவை எல்லாம் வேறு அளப்புகள் தான். வைதீஸ்வரனும் அதற்கு விலக்கல்ல. இருப்பினும், வைதீஸ்வரன் கவிஞர் ஆவார். அவர் பார்வையும், எள்ளலும், சமூகம் பற்றி , அரசியல் பற்றி, சக மனித மதிப்புகள் பற்றி கவிதையாக நமக்கு வந்துள்ளன. அதோடு, அவர் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அனுபவித்து எழுதுகிறாரே, அதனை அழகுடன் அவையும் கவிதையாகி வந்துள்ளன.

கிளையில் காக்கை
தன்னையே கொத்திக் கொள்கிறது
சுய விமரிசனம் போல்.


சரி,இதெல்லாம் போகட்டும், வைதீஸ்வரனின் கவித்வ ஆளுமைக்கு ஒரு சிறிய, ஆனால் முழுமையான உதாரணமாக ஒரு கவிதை. பரிசு என்ற தலைப்பில்.

நெருங்கியவன்
தெரிந்த முகம் என்று
சிரித்து விட்டேன்
மிக சிநேகிதமாய். பதிலுக்கு,
அவனும் சிரித்துவிட்டான்
நாகரீகமாய்

கடந்த பின் தான்
புரிந்தது..அவனை
அறிந்தவன் நான் இல்லையென்று

எறிந்த சிரிப்பை மீண்டும்
திரும்ப வாங்க சாத்தியமில்லை

இருந்தாலும்
அறிமுகமற்ற மனிதனிடம்
அன்பு காட்ட முடிந்தது
இன்று ஒரு நல்ல ஆரம்பம்தான்
தவறுதலாக இருந்தாலும் கூட.


இப்படி எழுதும் கவிஞருக்கு பொன்னாடையோ , சாகித்ய அகாடமி பரிசோ கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால்தான் என்ன?
***
நூல் பற்றிய விவரம்:
கால் - மனிதன்
(கவிதைகள்)
ஆசிரியர் : எஸ். வைதீஸ்வரன்
(சந்தியா பதிப்பகம், அசோக் நகர் , சென்னை 83  )

25.10.2006

_________________________________________________________________

வெங்கட் சாமிநாதன் பற்றி :

வெங்கட் சாமிநாதன்   (Venkat Swaminathan, 1933 - 2015) என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர் .  இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர்.
 நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர்.

இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல் விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.


Tuesday, November 26, 2019



கால் முளைத்த மனம்

( சிறுகதைத் தொகுப்பு  : 
ஆசிரியர் எஸ். வைதீஸ்வரன் )

(விருட்சம் வெளியீடு)

நூல் விமர்சனம்  - " சிட்டி"  ( P. G. சுந்தரராஜன் )




இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்கள் பல மாறுதல்களுக்கு உட்பட்டுப் புத்துருவம் பெற்றிருக்கின்றன. புதுக்கவிதையும், நாவலில் நனவோடை உத்தி கையாளப்படுவதும் இவ்வகையில் ஒரு வளர்ச்சி. இத்தகைய மாறுதல்களுக்கு சிறுகதை உட்பட்டதாக அதிகமாகத் தெரியவில்லை. சிறுகதை என்பதை மேல் நாட்டில், அமெரிக்காவில்தான் அதிகமாகக் கையாண்டார்கள். ஆகவே, இதை அமெரிக்க தேசிய இலக்கியம் என்றும் சொல்வதுண்டு. ஆங்கில இலக்கிய வரலாற்றில் சிறுகதைக்குத் தனி இடம் கொடுக்கப்பட்டதில்லை. வரலாற்று நூல்களில் கவிதை, உரைநடை, புனைக்கதை என்ற பகுதிகளைக் காணலாம். ஆனால், சிறுகதைக்கென தனி அத்தியாயத்தைப் பார்க்க முடியாது. புனைக்கதையின் ஒரு அம்சமாகவே அந்த வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பாட்டியிடம் கதை கேட்பது, புராண பிரவசனங்கள் கேட்பது போன்ற பழக்கம் வேரூன்றிய  தமிழ் பண்பாட்டில் சிறுகதை ஒரு தனியிடத்தைப் பிடித்ததில் வியப்பில்லை. இங்கும், மேல்நாட்டிலும் இந்த வடிவத்தில் அதிகமான மாறுதல்கள் குறிப்பிடும் படியான விதத்தில் ஏற்பட்டுவிடவில்லை. சிறுகதையை ஒரு முக்கிய வடிவமாகக் கையாண்ட மணிக்கொடி எழுத்தாளர்களிடையேக் கூட, அது ஒரு நடப்பியல் ரீதியில் தான் அதிகமாகப் புலப்பட்டது. பொருளடக்கத்தில் சோதனை செய்த மௌனி தம்முடைய முயற்சிகளில் வெற்றியடைந்ததாக சொல்வதற்கில்லை. மொழியின் நெளிவு சுளிவுகளை லாவகமாகக் கையாண்ட லா. ச. ரா. நடையில் மட்டுமே மாறுதல்களை உண்டாக்கினார். மற்றபடி இதைப் பல படைப்பாளிகள் சோதனையாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறுகதைக்கென பத்திரிகைகளும், கணிசமான சன்மானமும், பாராட்டுதலும் அடிக்கடி நிகழும் தமிழ் இலக்கிய உலகில், சிறுகதை இயல்பான வடிவத்துடன்தான் இன்னும் நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதில் சோதனை முயற்சிகளும். நவீனப் போக்குகளும் ஆங்காங்கே தென்பட்டாலும், வாசகர்களின் கவனத்தை  அதிகமாகப் பெற்றதாகத் தெரியவில்லை. 

வைத்தீஸ்வரனின் "கால் முளைத்த மனம்" என்ற சிறுகதைத் தொகுப்பு இவ்வகையில் மிகவும் வித்தியாசமானது. இலக்கிய விமர்சனத்தில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது. இந்த ஆசிரியர் ஒரு ஓவியரும் என்பதால்தானோ என்னவோ, கதைகளில் ஓவிய அம்சங்களான சர்ரியலிசம் (surrealism), impressionism , symbolism போன்ற உத்திகள் மிகுந்து கதைகளை புதுமையாகக் காட்டுகின்றன. கதைகளின் உள்ளடக்கம் நடப்பியல் பாணியிலான சம்பவங்கள்தான் என்றாலும், அவைகளில் பொதிந்திருக்கும் உளவியல் நோக்கு, கலையுணர்வு, வாசகர் எதிர்பாராத , ஆனால் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் ஆகியன சில கதைகளில் மேஜிக்கல் ரியலிசம் வரை இட்டுச்செல்கின்றன.

தலைப்புக்கதை ஒரு ஓவியக்கலப்படம் (collage). காலை முதல் இரவு வரை சாதாரணமாக  மனித வாழ்க்கையில் நிகழும் காட்சிகள் கோர்த்துக் கொடுக்கப்பட்டிருன்றன. அந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் தொனிக்கும் ஓசைகளைக் கூடக் கேட்கும் பிரமை ஏற்படுகிறது.

"கட்டையும் கடலும்", "மலைகள்" இரண்டும் கவிதையில் நனைத்தெடுத்த உரைச்சித்திரங்கள். ஒன்றில், வெறும் கட்டை, கடல் அலைகளின் உயிர்த்துடிப்பு வாசகரைக் கவர்கிறது.   "வார்த்தை"  கதையில் பல எண்ணங்களால் அலைக்கழிக்கப்டும் சிறுவனின் ஆத்திரத்தை உணர முடிகிறது. சொற்களின் பொருள் தெரியாவிட்டாலும் பழக்கத்தில் அவைகளை உபயோகிப்பதன் பின்னணியை அந்தச் சிறுவன் உணர்ந்திருப்பது இயல்பாகவே இருக்கிறது. " சைக்கிள் சாமி" கதையில் சாமியின் செயல்கள் இறுதியில் ஒரு இயல்பான முடிவைத்தான் காண்பிக்கின்றன என்றாலும், அந்த முடிவை ஆசிரியர் பயன்படுத்தும் உத்தியில் புகழ் பெற்ற அமெரிக்க  ஆசிரியர் ஓ. ஹென்றியின் சாயல் புலப்படுகிறது. "ஒரு பயணத்தின் சில மின்னல்கள்"  இதே வகையில் எதிர்பாராத முடிவை இயல்பாக உணர்த்தும் சாதனை. " சிருஷ்டி " யில் அப்பாவின் சிற்பத்திறமையைப் பற்றி மேலான கருத்து கொள்ளாத மகனின் அலட்சியம் தெளிவாகத் தெரிகிறது.

"கனவில் கனவு" மிகவும் உன்னிப்பாக, தேர்ந்த கலை உணர்வின் விளைவாக படைக்கப்பட்ட ஒரு impressionistic  (futuristic  என்றுக்கூடச் சொல்லலாம்) ஓவியம். "காக்கைக் கதை" ஒரு புதுமையான நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டாலும் அங்கத உணர்வுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

"ஹே பரோடா" சாதாரண நிகழ்ச்சி ஒன்றின் ரசமான அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யாருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான். "ஒரு துளியில்" நேரும் நேசமின்மையும், அவசரமும் , சரியாக செயல்பட முடியாத நிலையும் நடப்பியல் வகைதான். "ஜன்னல் இரண்டு" சிறுகதை வடிவத்தை மீறிய குறுநாவல் வகை. இந்தக் கதையில் ரங்கனின் அனாவசிய உணர்ச்சிகளும், தலையீடும் சரியான விளைவைத் தருகின்றன. மொத்தத்தில் இந்தக் கதைகள் ஒரு திட்டமிட்ட இலக்கிய சோதனையின் ஆரம்பக்கட்டமாகவே தொனிக்கின்றன. சில, நல்ல வெற்றியையும் பெற்றிருக்கின்றன. சிறுகதை வளர்ச்சியில் இவைகளை ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். 

________________________________________________

மேற்கண்ட கட்டுரையை எழுதிய ஆசிரியர் பற்றி:

" சிட்டி " ( பெரியகுளம் கோவிந்தஸ்வாமி சுந்தரராஜன் ) (20 April 1910 - 23 June 2006)  -  " மணிக்கொடி"  இதழ் காலத்து முன்னோடி தமிழ் எழுத்தாளர். மேற்கண்ட புத்தக விமர்சனத்தை எழுதியபொழுது, அவருக்கு சுமார் 88 வயது. இசைக் கலைஞர் மதுரை மணியின் நெருங்கிய நண்பர். எழுத்தாளர் தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய " நடந்தாய் வாழி, காவிரி " என்ற புத்தகம் குறிப்பிடத் தகுந்தது ( " “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” )

Sunday, November 10, 2019



இருட்டுக்குள் உரியும் தோல்


- வைதீஸ்வரன் -






“ இதெல்லாம் பேசித் தீத்துக்கற பிரச்னை
என்று தான் கூடினார்கள்.
பேச ஆரம்பித்தவுடன்
வந்தது மின்சாரத் தடை.

“ இது ஒரு தடை இல்லை....பேச்சுக்கு! “
என்று கருதி  மேலும் தொடர்ந்தார்கள்..
இருட்டின் பொதுவான சுதந்திரத்தில்
பிரச்சினையைத்   தயக்கமின்றி
அவரவர் மூலையிலிருந்து அலசினார்கள்.
ஆரவாரம் அதிகமில்லாமல் அடக்கமாக மொழிந்தார்கள்

மெதுவாக ஆனால் தெளிவாக இரைந்தன
முகமற்ற குரல்கள்.

யாரும் கையோங்கியது கண்ணுக்குத் தெரியவில்லை
மேலும்...நறநறப்பு..முறைப்பு உடல் மொழி வன்முறைகளுக்கு
பொருத்தமற்ற சூழல் அது.
வாய்ப்பேச்சு மட்டும் தான்.

ஒருத்தன் பேச்சின் ஒலி முடிந்த பின்பே
அடுத்தவன் மறுப்பதும் ஆமோதிப்பதும் ஆக இருந்தது.

பிரச்சினைக்கு  வெளிச்சம் வந்தது போல
பெருமுச்சு கேட்டது...இரண்டு கைத்தட்டலுடன் சேர்ந்து.

அதே சமயத்தில் தான்
மின்சாரம் மீண்டது.
பளிச்சென்றன கூட்டத்தில் கூசிய கண்கள்
ஏதோ வெளிச்சத்தினால் வெட்கப்பட்டது போல!
இருட்டென்ற நிர்வாணத்தில்
சகஜமாயிருந்த இயல்பு முகங்கள்
திடீரென்று சங்கடப்பட்டு
உஷாராகி அவசரமாய் அவரவரின் அன்றாட முகங்களைப் 
பூட்டிக் கொண்டனர்....அதனதன் முரண்பாடுகளையும் சேர்த்து

மீண்டு வந்த போலி உலகவெளிச்சத்தில்
பிரச்சினையின்  தீர்வு பழையபடி
அகங்காரத்தின் இருட்டுக்குத் தள்ளப்பட்டது

(2019)

______________________________________________________________________________