vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, June 7, 2012

கட்டையும் கடலும் - வைதீஸ்வரனின் முதல் சிறுகதை






கட்டையும் கடலும்             



[*1961 ல்   எழுத்துவில் வெளியான  என்  முதல் சிறுகதை]
 _________________________________________________________________

வைதீஸ்வரன்






கடற்கரையோரம் ஒரு நீண்ட கட்டை கிடந்தது.  நல்ல வைரம் பாய்ந்த  பழங்கட்டை.  பல்லுபோன முகம் போல்  தலைப்பக்கம் குழியும்மேடுமாக ஒடுங்கி, ஒரு கோணத்தில்  பார்த்தால் பைத்தியம் சிரிப்பதுபோல் இருக்கும். அது மல்லாந்து கிடக்கும் அலட்சியபாவமும்,  நிச்சிந்தையும்  காணும்போது எல்லோருமே பொறாமைப்படுவதுண்டு.  அதுவும், இரவு பகல் ஓயாமல் சதா காலமும்   அல்லாடித் தவிக்கும் அலைக்கூட்டங்களுக்கோ   பொறாமையும்   பொட் டெரிச்சலும்  கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கட்டை மேல்...  தங்களைப் பழித்துக்காட்டற   மாதிரி இப்படி ஒரு கட்டை  இடிச்ச புளியாக சுகமாகப் படுத்துக்கொண்டிருப் பதைப் பார்க்கப்பார்க்க பொறுக்கவில்லை அலைகளுக்கு.


நாலு அலைகள் சேர்ந்துகொண்டு "இந்தக் கிழத்துக்கு என்னடீ வேலை இங்கே? “ என்று கிசுகிசுக்கும். இன்னும் நாலு அலைகள் எதற்கோ வந்த மாதிரி கட்டையின் காலைச் சீண்டிவிட்டுப் பின்னோடும். ஒரு சிற்றலை ஓசைப்படாமல் வந்து அடி மண்ணைப்  பறித்துவிட்டு கெக்கலிக்கும் ஒன்று சற்றுத் துணிச்சலாக அதன் முகத்தில் ஒரு வாளித் தண்ணீரை வாரியிறைத்துவிட்டு  “என்ன,  இன்னும் மயக்கம் தெளியலையா?“    என்று    விசாரித்து விட்டு  வளையும்.


ஆனால் கட்டையோ எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தது. கோபத்தின் சாயலைக் கூடக் காணோம். ஒரு காதில் புகுந்த தண்ணீரை மறு காதில் வடித்துவிட்டு ஒரே மாதிரி கிடந்தது.

இதையெல்லாம் வெகுநாட்களாக கவனித்துக்கொண்டிருந் தது ஒரு  நீலி. அவள் மேனகை ஜாதி.  அசையாததை   அசைய வைப்பதில் ஒரு ஆவல்.  அடம்.


மெள்ள பாவாடையை சுருட்டி சுருட்டி அடித்துக்கொண்டு அது கட்டையை சுற்றிச் சுற்றி வந்தது. தொட்டும் தொடாத துமாய்   பல முறை வளையவந்தது. பிறகு முகத்தில் பொய்யாக நீரை வடித்துக்கொண்டு,

“ஏ  கட்டே...ஒனக்கு   என்ன  வேணும்?


கட்டை சிரித்தது. பேசவில்லை.


“ஒண்ணுமே பேசாம இருந்தா ரொம்ப பெரிய மனுஷன்னு அர்த்தமோ?”  கொஞ்சலாக இடித்தது .  கட்டை அசைய வில்லை.
   

நீலிக்கு  அவமானம் ஒரு பக்கம்  ஆத்திரம் ஒரு பக்கம்....


“சும்மா இப்படி சோம்பேறித்தனமா மல்லாந்து கெடந்தா  பெரிய ஞானீன்னு அர்த் தமோ? ஒன் மனசுலே நீ என்ன  தான் நெனைச்சிண்டிருக்கே?” என்று செவிடனிடம் பேசுவதுபோல் கத்தியது. கட்டை காற்றுக்கு அசைந்த மாதிரி தோன்றியது. அந்தக் காற்றின்  ஓசையோடு இசைந்து மெதுவான  வார்த்தைகள் கட்டையிலிருந்து வெளிப்பட்டது.


“நீ.. இப்போ  இங்கே என்ன செய்யறே?”


” நானா....நான்...அலை.......”


“நீ ஏன் அலையறே?“ குறுக்கிட்டது கட்டை.


“நான் ஒண்ணும் அலையலே...ஆடிப் பாடறேன்.. .துள்ளிக் குதிக்கிறேன்.“  ஓடி வெளையாடறேன்......”


’ இல்லையே... நீ வெறுமனே  தத்தளிக்கிறே...?


” இல்லே  நான் கலகலன்னு கொழந்தை மாதிரி சிரிக்கி றேன்...”


”இல்லே...வளவளன்னு கெழவி மாதிரி சலிக்கிறே....”


நீலிக்குப் பொல்லாத கோபம் வந்துவிட்டது. அடிபட்ட முள் ளம்பன்றி போல  உச்சஸ்தாயியில் கத்தியது.


“ஒனக்கு ரொம்பத் தெரியுமோ? நீ ஒரு பொணம்..நான் இத்தனை  காலமே உன் தரையை மெழுகிக் கோலம் போடறேனே... அந்த உதவிக்கு நன்றி   சொல்லக்கூட   ஒனக்கு ஈரங் கிடையாது..”


 கட்டை அடித்தொண்டையில் சிரித்துக்கொண்டது.


“அடி அசடே..நீ பொறந்ததுலேருந்து மணலுக்கு   முதுகு   தேக்கிற  அடிமைத்தொழி லைத்  தவிர  வேறெ என்னத்தை சாதிச்சுட்டதா  நெனைச்சிண்டு இருக்கே! “


கேட்டதும் பொறுத்துக்கொள்ளமுடியாமல் ஓவென்று  இரைந்து கறுவிக்கொண்டே  ஓடியது நீலி.


இரவுமுழுவதும் கடலில் பேச்சுமூச்சையே காணோம்.அமைதியற்ற  மௌனம். வழக்க மான சளசளப்பும் வம்பும் அடங் கிப் போய் அலைகள் இருட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தன.  ஆத்திரம் அடங்கிவிட்டதாகத்  தெரியவில்லை...பொருமல் மீறும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக “டப் டப்’  என்று  தங்களையே அடித்துக்கொண்டன.


விர்ரென்று அடித்த காற்றில் லேசாக அசைந்தவாறு கிடந் தது கட்டை.  நிலத்தையும்  நீரையும் தேய்த்துக்கொண்டு திக்குத் தெரியாமல் சுழன்றது சூறைக்காற்று.


வானத்தில் முதல் வெளிச்சம் படிந்தவுடன் அலைகள் அத்த னையும் கூடிக்கொண்டு சதிகாரர்கள்போல்  கட்டையை வளைத்துக்கொண்டு தாக்க ஆரம்பித்தன. நெஞ்சி லும் முதுகிலும் முகத்திலும் குத்திப் புரட்டின. கட்டை புரண்டது. புரண்டுகொண்டே சிரித்தது.  இல்லை... சிரித்துக்கொண்டே புரண்டது.


ஜோவென்று எக்காளமிட்டுஅலைகள் தாக்கிய சிலகணத்துக் குள் கட்டை அவர்கள்  முதுகில் ஏறிக்கொண்டது.   நர்த்தன மாடியது. ஒவ்வொரு அலையும் முதுகை நெளித் துக் கொண்டு துடித்தன. கட்டை அவற்றை  மீன்குட்டி மாதிரி எகிறி எகிறி தாண்டிப் பாய்ந்து சென்றது.


 “ஐய்யோ....போகாதே...நில்...நில்...” என்றது ஓரலை.


“கரைக்கு வா...போ கரைக்கு   வா..” என்று தடுத்தது,  மறித் தது    ஒரு பேரலை.


“வந்து விடு..வந்து...விடு...” என்று கெஞ்சியது நீலி.


கட்டை திரும்பவில்லை.அதற்கு திசை தெளிந்துவிட்டது. அடிவானத்தில் தெரிந்த ஜாஜ்வல்யம் அதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது.


சுட்டெரிக்கும் வெளிச்சப் பகலில் அலைகள் பரபரவென்று அங்குமிங்கும் கரைக்கு வந்து கட்டை கிடந்த இடத்தை சுற்றிச்சுற்றி பரபரத்தன. கட்டை கிடந்த பள்ளத்தை தோண்டி தோண்டி  ஓயாமல் வட்டமிட்டன.


எதையோ தொலைத்ததுபோல் ஒரு பதற்றம்,வருத்தம். என்றுமே  நிலையற்ற அந்த ஜன்மங்களுக்கு ஒரு  “தாய்ச்சி”  போலிருந்தது அந்த  பழங்காலத்துக்  கட்டை.  அது இப்போது இல்லை.


அந்த மீளாத இழப்பின் ஆறாத ஓலம் என்றென்றும் நிரந்தர மாகிவிட்டது அலைகளுக்கு.















Thursday, May 31, 2012

கடைசி வார்த்தை - சிறுகதை

கடைசி வார்த்தை 

 

வைதீஸ்வரன்


நான் வேலையிலிருந்து களைப்புடன் உள்ளே நுழைந்தேன்.


 நான் வருவதை அம்மா கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.


 நான் "என்ன? “ என்பது போல் அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் கட்டிலில் படுத்திருந்த அப்பாவைக் காட்டினாள்.


“எப்படி இருக்கே அப்பா?”



அப்பா அரைமயக்கத்திலிருந்தார். போர்வையும் படுக்கையும் கலைந்து அலங்கோலமாக இருந்தது. அவர் மெள்ள தலையைத் திருப்பி குரல் வந்த  திசையைப் பார்த்தார்.


 " நீ வந்துட்டியா? “


 நா குழறிய குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தொனித்தது. அம்மா மெதுவான குரலில் சொன்னர்.


 “ இதோட ஆறெழு தரம் சிறுநீர் கழிச்சுட்டார்..”


நான் கவலையுடன் அப்பாவைப் பார்த்தேன். அவர் அருகில் மேஜையில் வைத்திருந்த மாத்திரைகளைப் பார்த்தேன். இன்னும் ஒரு நாளைக்கு தேவையான மாத்திரைகள் இருந்தன. டாக்டர் நாளைக்குத்தான் வரச் சொல்லியிருந்தார்.


கடந்த ஆறுமாதகாலமாக இரண்டுவாரங்களுக்கு ஒருமுறை அப்பாவை ஆஸ்பத்திரி யில் சேர்க்கவேண்டியிருந்தது. அவர் சிறுநீரக கோளாறு காரணமாக ரத்தத்திலுள்ள அவசியமான தாது வஸ்துக்களெல்லாம்  சிறுநீர் மூலமாக வெளியேறிக்கொண்டிருந் தன. ஆஸ்பத்திரிக்குப் போய் இரண்டு மூன்று நாட்களுக்கு நாலைந்து பாட்டிலகள் ஊட்டத்தை செலுத்தினால் ஓரளவு நிலைமை சீராகி   வீட்டிற்கு வருவோம். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் உடம்பு சோகை பிடித்து பழைய கதிக்குத் திரும்பிவிடும். 

டாக்டர் "இது தற்காலிக வைத்தியம் தான்... வயதாகி விட்டது...  பார்த்துக் கொள்ளுங் கள்...” என்றார்.

அப்பா தலையை மெள்ள என் பக்கம் திருப்பினார்." இன்னிக்குத்தானே போகணும்...?” 


”இன்னிக்கு இல்லேப்பா நாளைக்குத்தான் டாக்டர் வரச் சொல்லியிருக்கார்....”


“ அப்போ...இன்னிக்கு இல்லையா?...”


“இன்னும் ஒரு நாளைக்கு மாத்திரை  இருக்கே! அது முடிந்த பின் நாளைக்குப் போகலாமே...”


என் பதில் அப்பாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. மெதுவாக இரண்டு  முறை பெருமூச்சு விட்டுக்கொண்டார்.  நான் உடை மாற்றிக் கொள்ள  உள்ளே போனேன்.


“அப்போ இன்னிக்கு இல்லையா?...இன்னிக்கே போ..க..லா..மே...”


அவர் குரல் என் பதிலை எதிர்பார்க்காமல் தொய்வுடன்  தனக்குள்ளே முடிந்தது.


 எனக்கு அவர் ஏக்கத்தை உணர முடிந்தது. இதை கவனித்துக் கொண்டிருந்த அம்மா " அப்பாவுக்கு என்ன பண்றதோ தெரியலே! அவருக்கு இன்னிக்கே டாக்டரைப் பாக்கணும்னு  இருக்கு...”என்று எதிர்பார்ப்புடன் என் முகத்தைப் பார்த்தாள்.


சிறிது தயக்கத்துக்குப் பிறகு நான் சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினேன். எங்கள் வீட்டுக்கு சிறிது தூரத்தில்தான் நகரத்தின் பிரதான சாலை இருந்தது. ஆட்டோக்கள் கிடைப்பது அவ்வளவு ஒன்றும் சிரமம் அல்ல. கடந்த சில மாதங்களாக ஓயாமல் தொந்தரவுபடுத்தும் அப்பாவின் உடல் நிலையும் தீர்வு இல்லாத வைத்தியங்களும் எனக்குள் அலுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தின.  அப்பாவை பற்றி அப்படிப்பட்ட சலிப்பு  எனக்குள் ஏற்பட்டுவிடக் கூடாதென்று உள்மனத்தில் நான் எச்சரிக்கை செய்துகொண்டேன்.


அப்பா  பொதுவாகவே   ஆரோக்கியத்துடன் இருந்தவர். இரண்டு வருடங்களுக்கு முன்புகூட ஒரு மழைகொட்டும் ராத்திரியில் வெளியே நனைந்துகொண்டு நடந்து போய்  டாக்டரை அழைத்து வந்து  ஊசி போடச் செய்து    மூச்சுத்திணறலை   ஆறுதல் படுத்தினார்


பிரதான சாலை ஒரு ஆட்டோகூட இல்லாமல் விரிச்சோடிக் கிடந்தது.  வித்யாசமாக பத்தடிக்கு ஒரு போலீஸ்காரராக சாலையின் இரு பக்கமும் நின்று கொண்டிருந்தார்கள். சாலையின் விளக்குக் கம்பங்களில் குறுக்குமறுக்காக கட்சிக் கொடிகள் எந்த அக்கறை யுமற்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.


 மெதுவாக  ஒரு காவல்காரரரை நெருங்கி "என்ன விசேஷம்?..”   என்று கேட்டேன்.


“இது தெரியாதா?.. பேபர்லே எல்லாம் வந்திருக்கே! பிரதமர்  இந்தத் தெருமுனையிலே அந்த ஆஸ்பத்திரி தொறக்கறாரே... முதல் மந்திரி எல்லாம்  வரப் போறாங்களே!.....”


 “ அப்போ...”


   "இன்னும் ரெண்டு அவருக்கு இந்த ரோடு க்ளோஸ்...”


நான் வீட்டுக்குள் நுழைந்து சட்டையை கழட்டினேன்.  நான் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா.


"இன்னிக்குப் போக முடியாது...பிரதம மந்திரி இந்த வழியா போறாராம். அதனாலெ  ட்ராபிக்கை எல்லாம் நிறுத்தி வச்சிருக்கான்.“


 அப்பா  இரண்டு மூன்று தரம் புரண்டு படுத்தார். பெருமூச்சு விட்டார்.


 “பிரதம மந்திரி ஒரு ஓரமா போனா...நாம்ப ஒரு ஓரமா போக முடியாதா?”


அப்பாவைப் பார்த்து நான் சிரித்தேன். அவர் இதை விளையாட்டாக சொன்ன தாக தெரியவில்லை. அவர் கேட்டது ஒருவகையில் நியாயமாகக்கூட இருந்தது. மேஜையில் குடிக்கப்படாமல் இருந்த ஜூஸை  அவர் வாயில் மெள்ள ஊற்றி மீதி இருந்த மாத்திரைகளைப்  போட்டேன். போர்த்திவிட்டேன். 


“கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ. நாளைக்கு போயிடலாம்.. நாளைக்குத் தான்  டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் கொடுத்திருக்கிறார்..”


நான் மெதுவாக என் அறைக்குள் போய்க் கொண்டிருந்தேன்.


“ஏம்ப்பா, பிரதமர் ஜனங்களோட சேத்தியில்லையா?..அவர் வர்ரார்னா.. ஜனங்களை  இப்படி விரட்டி அடிக்கணுமா?.. எம்மாதிரி பிராணாவஸ்தை பட்றவனெல்லாம்..” _வார்த்தை வராமல் துக்கம் தொண்டையை அடைத்து ஏதோ முணுமுணுப்பாக முடிந்தது.  ..


அவர் முணுமுணுப்பு ஒரு தனி மனிதனின் முணுப்பாக தொனிக்காமல் இது மாதிரி வேதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சமூகத்தின் வேதனைக் குரலாக ஒலித்தது.


   **********


மறுநாள் அப்பாவை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனேன். நிலைமை நிஜமாகவே கவலைக்கிடமாகிவிட்டது. அப்பா பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். நிலைமையைப் பார்த்து அறிந்து கொண்ட நர்ஸ் ஓடிப் போய்  டாக்டரை அவசரமாக அழைத்து வந்தார். அவர் அப்பாவின் நாடியைப் பரிசோதித்துப்பார்த்து  ”அய்யய்யோ...” என்றார்,  தனக்கு மட்டும் சொல்லிக்கொண்ட மாதிரி.

“நேற்றே வந்திருக்கவேண்டும். வரமுடியாமல் போய் விட்டது....” என்றேன்  கவலை யுடன்.


“அடடா..... நேற்று  வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே!..... ஏன் இப்படி தாமதப்படுத்தினீங்க?  என்னா ஆச்சு?”

“ அது  வந்து..   ரோட் ....”  நான் சொல்ல வாயெடுத்தேன்.


அதற்குள் அப்பாவின் கை வேகமாக அசைந்தது. 


பேச்சு வராமல் மூச்சு  தொண்டையில் சிக்கிக்கொண்ட உயிரின் இரைச்சலுடன் இழுத்துக்கொண்டிருந்தது. வேதனையை மீறி நடுங்கிய விரல்களை அந்தரத்தில் சுட்டிக்காட்டியவாறு  அவர்  சொன்ன கடைசி  வார்த்தை.....


 “ பி...ர....தழ்..  ம்ம ….. ர்..”


0