vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, October 12, 2013

சிறுகதை

                                                               மோதிர விரல்

_வைதீஸ்வரன்


ஒரு நாள் என் பெரிய மாமா கோயமுத்தூரிலிருந்து  தகவல் அனுப்பியிருந்தார், “அப்பாவின் அட்டகாசம்  தாங்கவில்லை, அவரை கொஞ்ச நாள்  சேலத்திற்கு அனுப்பிவைக்கிறேன் என்று.

தாத்தாவை சமாளிப்பது அப்போது பிரச்னையாகத் தான் இருந்தது. வயதான காலத்தில் தான்  அவர்  உடல் முறுக்கு தீவிரமாகிக் கொண்டிருந்தது.   நல்ல வைத்தியரை வைத்து அவர் உபாதைகளைக் கண்டறியும்   அக்கறையோ  விருப்பமோ என்  மாமாவுக்கு இல்லை.

அப்பா என்றுகூடப் பார்க்காமல் அவர் என் தாத்தாவைக் கண்டி பார் திட்டுவார்.  என்  தாத்தாவுக்கு  அதிகமான ரத்தக் கொதிப்பும் ஹார்மோன் பிரச்னையும் இருந்திருக்க வேண்டும்  அவர் இப்படித் தான் நடந்து கொள்வாரென்று ஊகிக்கவே முடியாது.  விபரீதமாக ஏதாவது செய்வார்.. திடீர் திடீரென்று அவர்  யார் மீதோ ஆத்திரம் கொண்டவராக  வீட்டில் உள்ள சாமான்களை தூக்கி எறிவார்.  சிலவற்றை உடைப்பார்.. வாசலில் யாருக்காகவோ பரிந்து கொண்டு போய்  யாரையோ அடிக்கத் தொடங்குவார்.   ஒரு சமயம் வாசலில்  பிச்சைக் காரன் வந்து “அம்மா..தாயே..சாப்பிட்டு மூணுநாளாச்சு”ன்னு கத்தி இருக்கிறான். தாத்தா  சமைத்துவைத்திருக்கும் அத்தனை பண்டங்களையும் அவனுக்கு கொண்டு  போய் போட்டு விட்டு அவனைத் திண்ணை யிலேயே  அதட்டி உட்கார  வைத்து சாப்பிடச் சொல்லி இருக்கிறார்.  அவன் “வேண்டாம் ஸாமி  போதும்  ஸாமி “ என்று கெஞ்சியிருக்கிறான் தாத்தா அவனை விட வில்லை.    “சாப்பிடுரா..சாப்பிடுரா..” என்று   அடித்து மிரட்டி  அவனை மொத்த சாப்பாட் டையும்  திங்கச்  சொல்லி இருக்கிறார் .. அவன்  முடிந்த வரை முழுங்கி விட்டு தப்பித்துக் கொண்டு  ஓடியிருக்கிறான்..  அதற்குப் பிறகு அவன்   எங்கள்  தெருப்பக்கம் தலை காட்டுவதையே  நிறுத்திக்  கொண்டான்.

இப்போதும் அந்த மாதிரி ஏதோ நிகழ்ந்திருக்கிறது...வாசலில் ..ஏதோ பொம்மை வியாபாரி வந்திருக்கிறான்....கூடை  நிறைய பலூன்கள்  கிலுகிலுப்பை ஊதிகள் சொப்புகள்...சின்ன சின்ன  பொம்மைகள்...  தாத்தா வெளியே வந்திருக்கிறார்... அப்போது பள்ளிக்கூடம் விட்டு சில குழந்தைகள்  வந்துகொண்டிருக்கிறார்கள் .  தாத்தா அந்த பொம்மைக்காரனிடம் “அவர் களுக்கு ஆளுக்கு ஒரு பொம்மை கொடு “என்று  சொல்லி இருக்கிறார்.. பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம்...நல்ல நல்ல தாத்தா நல்ல தாத்தா  என்று சொல்லிக் கொண்டே போனார்கள். இன்னிக்கு ‘நல்ல  வியாபாரம்”.. பொம்மைக்காரன் சந்தோஷமாக எல்லோருக்கும் வாரி வாரிக்கொடுத்திருக்கிறான். கூடையே  காலி.” எப்படிங்க அய்யா இ வ் வளவு பெரிய   மனசு..உங்களுக்கு...தர்மப் பிரபுவா இருக்கீங்களே! “பொம்மைக் கா ரன் வாயாரப் பாராட்டிவிட்டு காசுக்கு காத்திருக்கிறான் தாத்தா   சொன்னார்  “ஏண்டா...காசா? என்கிட்ட காசு எங்கடா இருக்கு? இருந்தா நான்   ஏண்டா   இதெல்லாம்  தர்மமா கொடுக்கிறேன்..” 

  “என்ன  ஸாமி  சொல்றீங்க?......................

 “என் கிட்டே  காசு  ஒண்ணும் இல்லெ......காசு எதுக்குடா ஒனக்கு? ...காசு கீசு கேக்காதே..கொழந்தைகளுக்குத் தானே கொடுத்தே...எனக்கா  கொடுத்தே? ”

  “ஏண்டா கெழவா...  ஒரு  கூடை  பொம்மையை  வாங்கிட்டு  காசு இல்லைங்கறயா?"

   “டேய்...காசு  எதுக்குடா..உனக்கு...?  வேணும்னா...வீட்டுக்குள்ளெ  போய் அரை மூட்டை நெல்லு இருக்கு,  அதை எடுத்துகிட்டு  போ...காசையா  திங்கப்  போறே? “

 அப்போது மாமா வெளியே போயிருந்தார்  வீட்டில் வேறு யாருமில்லை.

   பொம்மைக்காரன் சத்தம்போட்டான். வயிற்றிலடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான்.. தெருவில் நாலைந்து பேர் கூடி விட்டார்கள்.

“பாத்தா  வயசான பெரியவரு மாதிரி இருந்தே!  பைத்தியக்காரனா நீ? என் பொழப்புலெ மண்ணள்ளிப் போட்டுட்டியேடா.....”

 அப்போது மாமா   வந்தார்..  விஷயத்தை அறிந்ததும்  கோபம் பொத்துக் கொண்டு வந்தது.  அந்த பொம்மைக் காரன்  சொன்ன தொகையை .பேரம்பேசிக் கொடுத்து விட்டு தாத்தாவை உள்ளே இழுத்துக் கொண்டு போனார்.  நாற்காலியில் அவரை  உடகார வைத்து நகராமல் கட்டி வைத்தார்  கட்டி வைத்து விட்டு  என் அப்பாவுக்குத் தகவல் அனுப்பி இருக்கிறார்.  என்  மாமாவுக்கு மனைவி. இல்லை  வீட்டை கவனித்துக் கொள்ள சரி யான  வசதி இல்லை.

தகவல் வந்த  மறு நாளே  தாத்தா  எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார். தாத்தாவை  சமாளிக்கக் கூடிய  திடகாத்திரத்துடன்  மாமாவுக்குத் தெரிந்த  தோட்டக் காரன் ஒருவன்  இருந்தான்.  அவன் தான்  தாத்தாவை  விட்டு விட்டு போனான்.

 தாத்தாவுக்கு என் மேல் ரொம்ப பிரியம். . என்னைக் கண்டால்  குஸ்தி போடுவது போல் கைகளை ஆட்டிஆட்டி  பலமாக சிரிப்பார்...விளையாடுவார். 

என் அம்மாவுக்கும்  தன் அப்பா மேல் உள்ளூர பாசமும் இரக்கமும் உண்டு  ..அடிக்கடி ஸ்வாதீனமில்லாமல்   நடந்துகொண்டாலும்  அம்மா அதை பெரிய விஷயமாகப் பொருட் படுத்தவில்லை. அவரை நல்ல வைத்தியரிடம் கூட்டிக் கொண்டு போய்  மூளைக் கொதிப்புக்கு வைத்தியம் செய்திருக்கலாம்.  ஏன் யாருமே அதை செய்யவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன்  ஒரு வேளை  தாத்தா வைத்தியரை அடித்து விடுவாரோ என்ற பயமாக இருக்கலாம்.

 “மாப்பிள்ளையோட  வியாபாரமெல்லாம் நன்னா  நடக்கறதா?”

தாத்தா  அம்மாவை  ஆவலுடன் விஜாரித்தார்.  மாப்பிள்ளை சைக்கிள் வியாபாரம் செய்வ தில்  தாத்தாவுக்கு  ஏதோ பெருமையாக இருந்தது.

அதை விட  இங்கே வந்த பிறகு   அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கு  பெரிய ஸ்வாரஸ் யம் ஒன்று  இருந்தது  அது தான் என் அப்பா வைத்திருந்த காளை மாடும் வண்டியும்!!

 அந்தக் காளை மாடு  நங்கவள்ளி சந்தையில்  சுழி பார்த்துப் லட்சணம் பார்த்து  அப்பா ஆசை யாக வாங்கியது. செக்கச் செவேலென்று இருக்கும்  அதன்  திமிலும்  காதும் உறுதியான கால்களும்  அழகாக தஞ்சாவூர் நந்தியை போல்  இருக்கும்  அதன் கம்பீரம் என்றும்  மனசைக் கவர்ந்துகொண்டே இருக்கும்   முரட்டு மாடு தான் . என் தாத்தாவைப் போலவே அந்த மாட்டின் சுபாவத்தையும்  நிதானிக்கமுடியாது.  எவ்வளவு வருஷமாக  நாங்கள்  பழகி இருந்தாலும் என் அப்பாவைத் தவிர யார் பக்கத்தில்போனாலும்  கொம்பை ஒரு ஆட்டு ஆட்டும்   வண்டியில் அதைப் பூட்டிய மறு நிமிஷமே  அது தலைதெறிக்கப் பாய்ந்து ஓட ஆரம்பித்து விடும் வண்டி ஓட்டுபவனை ஏற விடாது. இர்ண்டு தெருக்கள் கடந்த பின் தான் அது  ஆத்திரமடங்கி சமாதானமடைந்து   நடைபோடும்.  இந்த பிரச்னையினால்  வண்டியைப் அதன் கழுத்தில் பூட்டும் போது  யாராவது இரண்டு பேர் அதன் மூக்குக் கயிற்றை  இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள்   என் அப்பா  வண்டியில் ஏறி கயிற்றைப் பிடித்துக் கொண்ட வுடன்  அந்த இரண்டு பேர் விலகிக்கொள்வார்கள்  மாடு  நாலுகால் பாய்ச்சலில் பறந்து கொண்டு தெருவைத்   திரும்பும்.

  ஆனால் அது புத்தி கூர்மை உள்ள மாடு.   காலை பத்து மணி சுமாருக்கு  வண்டி பூட்டினால் அது நேராக எங்கள் அப்பாவின் கடை வாசலில் போய் நிற்கும்  மாறாக  பொழுது விடிய விடிய இருட்டில்  வண்டி பூட்டினால்  அது கடைப் பக்கம் திரும்பாமல்  பெரிய பாதை வழியாக திரும்பி  சீராக பத்து கிலோ மீட்டர் கடந்து தாரமங்கலம்  போய்  எங்கள் தோட்டத்துக் குள்  நுழைந்து கிணற்றடி பக்கம்  போய் வாயெல்லாம் வெள்ளை  நுரை  வழிய   உடம்பை சிலிர்த்துக்கொண்டு நிற்கும். வண்டி ஓட்டுபவன்  அதை நெறிப்படுத்தவே தேவையில்லை அதன் சூட்சுமத்தை எண்ணி எண்ணி பூரித்துப்போவார் அப்பா.

 அதை   தர்மராஜா  என்று   கூப்பிடுவார் .  அது தனக்குள்ளே சில  நியதிகளை வரித்துக் கொண்டிருக்கிறது.   தனக்கென்று சில கடமைகளை   விரும்பி ஏற்றுக் கொண்டு  ஒரு வித சுயேச்சையான, விடுதலையான   சுய கர்வத்துடன் காரியங்களை செய்துகொண்டிருந்தது போல் தோன்றியது . .அதன் விசித்திரமான  குணங்களை பார்க்கும்போது  அந்தக் காளையை என் தாத்தாவோடு    ஒப்பிடலாமோ என்று  கூட நினைக்கத் தோன்றியது..

அதிசயமாக  அந்த தர்மராஜா...என்  தாத்தாவின் குரலுக்குக் கட்டுப் பட்டது.  அவர் அருகில் துணிச்சலாக போவார்  வைக்கோல் கட்டை வாயில்  கொடுப்பார் கழுத்தை சொறிந்து கொடுப்பார்.. அது  அமைதியாக என் தாத்தாவின் பரிவை ஏற்றுக் கொள்ளும்.

தன் வயதை உதாசீனப்படுத்திவிட்டு என் தாத்தா  காளையை வண்டியில்  பூட்டி ஓட்டவும் துணிந்துவிட்டார்...என்  அப்பாவும்  அம்மாவும் எவ்வளவு எச்சரிக்கை செய்தாலும் ம்  தாத்தா  அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.. 

தாத்தாவின்  சுபாவம்  வெகுவாகவே  சகஜமாகிவிட்டது.  அவருக்கு செய்ய நிறைய காரியங் கள்  இருப்பது போல்  இங்குமங்கும் போய்க் கொண்டிருந்தார்.  மாட்டுக்கு நேரம் பார்த்து தீனிவைப்பதும் குளிப்பாட்டுவதும்  அவருக்கு மிகப் பிடித்த பொழுது போக்கு.

 ஒரு  நாள்  என் அப்பாவுக்கு  குளிர் ஜுரம் வந்துவிட்டது.  ஆனாலும்  கடைக்கு அவசியம் போக  வேண்டி இருந்தது.  யார் தடுத்தாலும்  கேட்காமல்   தாத்தா வண்டியைப்  பூட்டி அப்பாவை ஏற்றிக் கொண்டு போய் கடையில்  விட்டு விட்டு வந்தார் . வண்டி பூட்டியவு டன்  காளை   கட்டு மீறி  ஓடுவதைத் தவிர்க்க  தாத்தா  ஒரு யுக்தியைக் கையாண்டார்.

வண்டியை ஒரு முட்டுச் சுவற்றுக்கு முன்னால் நிறுத்தி   காளையைப் பூட்டுவார். மாடு  பாய்ந்து ஓட முடியாமல்  நின்ற இடத்திலேயே  சற்று  கால்களை உதைத்து திமிறிக் கொண்டிருக்கும்!!

இப்போது   தாத்தா  வண்டி  ஓட்டுவது  ஒரு  சகஜமான வேலை ஆகி விட்ட.து அதைப் பற்றி யாரும் பயமோ கவலையோ  படவில்லை...சில சமயம் என்னையும் அம்மாவையும் ஏற்றிக் கொண்டு  கடை வீதிக்கு கூடக்   கூட்டிக் கொண்டு போவார்.

நாளாவட்டத்தில்  வண்டி மாட்டை  கையாளும்பொறுப்புமுழுக்க முழுக் க  தாத்தாவே  ஏற்றுக் கொண்டுவிட்டார்.  காலையில் அப்பாவை கடையில் கொண்டு போய் விட்டு விட்டு வரு வார்  .பிறகு மதியம் மாப்பிள்ளைக்கு  சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவார். இப்படி  பலகாரியங்கள்.


அன்றைக்கும்  தாத்தா  மத்தியானம்  சாப்பாட்டுப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வண்டியை  கிளப்பிக் கொண்டு போனார்.  தர்மராஜாவைச் செல்லமாக   பிருஷ்டத்தில் தட்டிக் கொண்டே  ஓட்டிக் கொண்டிருந்தார்.  போகப் போகத் தான் ஞாபகம் வந்தது , மாட்டிற்கு காலையில் தண்ணீர் வைக்கவில்லையென்று...  அவருக்கு வருத்தமாக இருந்தது..  அதை நினைத்துக் கொண்ட  போது  அவருக்கும் தொண்டை வறட்சியாகப் போய்க் கொண்டிருந் தது.  நல்லவேளை அந்த   ரயில்வே  கேட்  தாண்டியவுடன் வாடகைக் குதிரைகளுக்கான   தண்ணீர் தொட்டி  பக்கவாட்டில் நீளமாக கட்டப் பட்டிருந்தன. தாத்தா  மாட்டை தண்ணீர் தொட்டிப் பக்கம் செலுத்தி நிறுத்தி கீழே இறங்கி  தர்மராஜாவை தண்ணீர் குடிக்க சொன்னார்....அதன் தாடையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அது தண்ணீர் குடிக்கும் பாங்கை ரஸித்துக்கொண்டிருந்தார் தர்மராஜா குடித்துமுடித்து பாசத்துடன் தலையை   இரண்டு முறை ஆட்டியது.

 தாத்தா  கழுத்துக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு  எச்சரிக்கையாக வண்டியின் முன்பக்கம் ஏர்க்கால்  படியில் கால்வைத்து ஏறப் போனார்.அப்போது  எங்கிருந்தோ வந்த ஒரு குதிரை தண்ணீர் குடிக்க  காளையின் அருகாமையில்  வந்த்து.  தர்மராஜா இதை எதிர்பார்க்கவில்லை கோபமும் திகிலும் பீறிட்டு  அது  கொம்பை பலமாக ஆட்டி திமிறிக்கொண்டு குதித்தது.

முன் படியில் வைத்த  கால் தவறி தாத்தா  மண்ணில்  உருண்டார்  மாட்டின் கழுத்துக் கயிறு அவர் கைகளில்  எப்படியோ விடுபட  முடியாமல்  சிக்கிக் கொண்டது காளை.  இப்படியும் அப்படியுமாக வண்டியை  இழுத்துக் கொண்டு வட்டமடித்தது. தாத்தாவின்  கை விரல்கள் சக்கரத்தடியில்  மாட்டிக் கொண்டு விட்டது. தாத்தா  ஆன மட்டும் கையை விடுவித்துக் கொள்ள பாடுபட்டார்.

  அதற்குள்  கூட்டம்கூடி விட்டது  இரண்டு பேர் மாட்டைப்  பிடித்து கொண்டார்கள். இரண்டு பேர் கீழே  கிடந்த தாத்தாவை  தூக்கி நிறுத்த  முயன்றார்கள்  அவர் விரல் வண்டிச் சக்கரத் தடியில்  அழுந்திக் கிடந்தது அதை விடுவிக்க மெதுவாக  வண்டி சக்கரத்தை நக்ர்த்திய போது  எல்லோரும் அதிர்ந்துபோனார்கள்.  துண்டு பட்டுப் போன தாத்தாவின் மோதிர விரல்  தனியாகத்  தரையில்  துடித்துக்கொண்டிருந்தது.  நிறைய ரத்தம்  பாய்ந்து கொண்டிருந்தது.

சற்று மயக்கமாக  இருந்தாலும் தாத்தா  பிரக்ஞை இழக்கவில்லை.

 “அந்த வெரலைப் பிடீடா...வெரலைப் பிடீடா...”  என்று கத்திக் கொண்டிருந்தார்.  யாரோ ஒருவன்  அந்த விரல் துண்டை  எடுத்து தாத்தாவிடம் கொடுத்தான்.  தாத்தா  அதை தன் சட்டையின் கடிகாரப்பைக்குள்  போட்டுக் கொண்டு  பக்கத்தில் இருந்தவனிடம் மேல் துண்டைக் கிழித்து  ரத்தம்கசியும் வலது கையை அலம்பி  கட்டுப் போடச் சொன்னார்.  

“தாத்தா....வாங்க   தாத்தா  பக்கத்துலெ  பெரிய ஆஸ்பத்திரி இருக்குது. குதிரை வண்டிலே  போயிறலாம் வாங்க.. “ என்றார்கள்  கூடி இருந்தவர்கள். 

 தாத்தா அதற்கு மசியவில்லை.

“அடப் போடா,விரலுப் போனா மசிரு போச்சு உசிரா போச்சு... என்னை ஏத்தி   என்  வண்டிலே  ஒக்காரவையுங்க  அது போதும் நான்  ஆஸ்பத்திரிக்கு போயிடறேன்..”   

எவ்வளவு சொல்லியும் தாத்தா  மற்றவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. ரத்தம் அதிக மாக  போய்க்கொண்டே இருந்த்து  காலம் கடத்தாமல் தாத்தாவை  அவர் விருப்பப்ப டியே  வண்டியில்  ஏற்றி விட்டார்கள்.

இடது  கையில்  மாட்டுக்  கயிற்றைப் பற்றிக் கொண்டு  சற்று பக்கவாட்டில் சாய்ந்த வாறு   “போடா..தர்மராஜா..”  என்றார்.

அவர் மேல்  அனுதாபமும் துணிச்சலைக் கண்ட ஆச்சரியமும் கொண்ட இரண்டு பேர்  வண்டியின் பின்னால் சைக்கிளில்  அவரை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

 ஆஸ்பத்திரி காம்பௌண்டுக்குள்  நுழையும் போதே தாத்தாவுக்கு அநேகமாக மயக்கம்  வந்து விட்டது  ஆனால்  பிரக்ஞை தப்புவதற்குள்  அவர் பின்னால்  வந்த அந்த  இரண்டு பேர்களை கூப்பிட்டு,  “ டேய் பசங்களா...தேர்முட்டி பக்கத்துலெ சைக்கிள் கடை வைச்சிருப் பான் என் மாப்பிள்ள  சுந்தரம்,  அவனை இங்கெ வரச் சொல்றீங்களா?  என்று  சொல்லி விட்டு மயங்கி விட்டார்
                ************
 ஒரு  அரை மணி சிகிச்சைக்குப் பிறகு  தாத்தாவுக்கு முழிப்பு வந்தது.

சுற்று முற்றும்பார்த்தார்  பக்கத்தில் டாக்டர்  நின்று கொண்டிருந்தார்.. இரண்டொரு  நர்ஸு கள்...பின்னால்  என் அப்பா  கவலையும்  அதிர்ச்சியுமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

 டாக்டர் தாத்தாவின் தோளைத் தட்டி    “    எப்படி  இருக்கீங்க  தாத்தா..? என்றா.
ர்
 “ எனக்கு  பெரிசா  ஒண்ணுமில்லே  டாக்டர்...ஏதோ சந்தர்ப்பம்இப்படி....”

”You  are a   brave  old Man… நீங்க  எல்லாம்   மிலிட்டரீலே  இருக்க வேண்டிய வங்க.....ரொம்ப  துணிச்சலான  ஆளா  இருக்கீங்களே!!   சபாஷ்” என்றார் டாக்டர்.

 “டாக்டர்.....ஒங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்  ..முடிஞ்சா  அவசரமா  ஒரு  உதவி பண்ணமுடியுமா? “

 “என்ன உதவி?  “ 

” இந்த ஒடைஞ்ச விரலை  கையிலே மறுபடியும்  சேர்த்து ஒட்டி விட முடியுமா?”

தாத்தா  சட்டைப் பையிலிருந்து ரத்தக் கசிவுடன் இருந்த  மோதிர விரலை எடுத்து நீட்டினார்
அவர் சொன்ன விஷயத்தின் அதிர்ச்சியை மீறி  எல்லோருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

“தாத்தா  நல்ல யோசனை  தான்... ஆனா  உங்களுக்கு  எதுக்கு இந்த ஒடைஞ்ச விரல்? நாலு  விரலே  போறுமே  நீங்க  சாமர்த்தியசாலி ஆச்சே!! அதைக் கொடுங்கோ இப்படி... "

“டாக்டர்  தாத்தாவை  வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்து விட்டு மேற்கொண்டு ஆக  வேண்டிய  சிகிச்சையை கவனிப்பதற்காக  நகர்ந்தார்.  

 அப்பா  தாத்தாவின் அருகில்  கண்ணிர் தளும்ப நின்றார்.

“என்ன  மாமா....இப்படி ஒரு பெரிய  ஆபத்துலே  இன்னிக்கு மாட்டிண்டுட்டேளே…! அதான்  வண்டியெல்லாம்  ஓட்ட வேண்டாம்னு  எவ்வளவோ தடுத்தோம்...” 

   தாத்தா  சற்றும்  கலங்கவில்லை  லேசாக சிரித்துக்கொண்டார்.

 “டேய் சுந்தரம்...வெரலு போனதைப் பத்தி எனக்கு வருத்தமே  இல்லைடா... அதை விட  ஆறாத  வருத்தமென்னன்னா.... அந்த  மோதிர விரல்லே  ஒரு  பச்சைக் கல் மோதிரம் இருந்தது.  வண்டி சக்கரம்  பிரண்டதிலே  மொத்தமா நசுங்கி  அந்த மோதிரம் பொடிப் பொடியா போயிடுத்து...மிச்ச விரல்லே அது இருக்குமோன்னு பாக்கத் தான் அதை கொண்டு வந்தேன்  ஆனா  அது  போயிடுத்து.....    நான்  கண்ணை மூடின அப்புறம் அந்த மோதிரத்தை ஒனக்குத் தான் கொடுக்கணும்னு நினைச்சிண்டிருந்தேன்  அந்த  ஆசை இப்போ பொடிப் பொடியா  போயிடுத்து....அதான் எனக்கு  ஆறலே...”

 அதற்கு மேல் பேசமுடியாமல் தாத்தாவுக்கு  மீண்டும்   லேசாக மயக்கம் வந்து விட்டது.

அப்பா  துக்கத்துடன்  வாயைப்புதைத்துக் கொண்டு தாத்தாவைப் பார்த்துக்கொண்டிருந்    தார். 


இந்த  தாத்தாவை  ஊரில்  எல்லோரும்  பைத்தியக்காரத் தாத்தா  என்று தான்  அந்தக்     காலத் தில் சொல்லிக்கொன்டிருந்தார்கள்

     
     அம்ருதா   அக் 13


Tuesday, August 6, 2013


         
                
பெயர்
        -வைதீஸ்வரன்
   



         
                
பெயர்
                      -வைதீஸ்வரன்
   
அன்று மிலிட்டரி  உத்யோகத்துக்கு  அனுப்பவே  மாட்டேன் என்று பெரியம்மாவும் பெரியப்பாவும்  பிடித்த பிடிவாதத்தை யும் லட்சியம் செய்யாமல் கிளம்பிப்போன  ஒரே பிள்ளை பிரகாஷ் இன்று  கடுமையான ராணுவப் பயிற்சிகளில் தேறி உத்யோகத்தில் நிரந்தரமாகி பத்திரமாக   விடுமுறைக்கு  வந் திருக்கிறான். என் பெரியம்மாவுக்கு  கண்ணீர் தழுதழுத்தது.  இத்தனை காலமாக  உள்ளூர கவலையில்   குமைந்துகொண் டிருந்த  பெரியப்பாவுக்கு திடீரென்று  பாரமற்றுப்போன மனசை    தாங்கிக்கொள்ள முடிய வில்லை. அடிக்கடி துண்டால் முகத் தைத் துடைத்துக் கொண்டார்….

எங்கள் இரண்டு தலைமுறைகளில்  இந்த மாதிரி வித்யாசமான வேலைக்கு  யாருமே  போனதில்லை.அதுவும்ராணுவத்துக்கு. முதல் முதலாகப்  போனது  பிரகாஷ் தான்.எங்கள் தலை முறைகளைப்  பார்த்தால்  அநேகமாக தோட்டத்தை வைத்துக் கொண்டு ஜீவனம் செய்வது, அல்லது  ஊருக்குள் வைதீக காரியங்கள் செய்து பிழைப் பது  கோர்ட் வாசலில் பத்திரம் எழுதுவது இல்லாவிட்டால்   ஆரம் பப் பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியார் உத்யோகம்  பார்ப் பது. இந்த சின்ன வட்டம் தான்.  அதைத்  தாண்டி யாரும் வெளியே போனதில்லை..இந்தப் பின்னணியில்  பிரகாஷ்  இப்படி ஒரு துணிச் சலான  லட்சியங்களுடன்   வீட்டை விட்டுப் போய்  ராணுவத்தில் சேரவேண்டுமென்றமுடிவெடுத்தது   எல்லோருக்கும் திகைப்பா கவும் கவலையாகவும் இருந்தது….

பெரியம்மா  பிள்ளையைத் தொட்டு  தொட்டுப் பார்த்தாள். “அங்கே போய்  என்ன கஷ்டமெல்லாம் பட்டேடா?... இதென்ன  இங்கே   தழும்பு?   இதென்ன..   இங்கே   ஒரு  சிராய்ப்பு?”   என்று  பிரகாஷை தடவித் தடவி விசாரித்துக் கொண்டே இருந்தாள்.. பிரகாஷ்   அங்கே மலைப் பள்ளத்தாக்குகளில் அவனுக்கு கொடுக்கப்பட்ட விதவிதமான பயிற்சிகளையெல் லாம் விவரித்து  சொல்லிக்கொண் டிருந்தான்.  அவனைச் சுற்றி  எல்லோரும் உட்கார்ந்து கொண்டு   அச்சமும் பிரமிப்புமாக கேட்டுக்கொண்டேயிருந்தார்கள்.பெரியப்பா முகத்தில் பையனைப் பற்றிய பெருமை அடிக்கடி மின்னிக்  கொண்டே இருந்தது.

“என்ன   பிள்ளையாண்டான்  வந்துட்டானா? “எங்கள் குடும்பஜோஸி   யர் உள்ளே வந்துகொண்டே  கேட்டார்.. ஏற்கனவே அவரை  பெரியப்பா  வரச் சொல்லியிருக்க வேண்டும்.

 “என்ன  பிரகாஷ்.....நன்னா  இருக்கயா?  அங்கே எல்லாம் பிரமா தமா டிரய்னிங்  எல்லாம்  முடிச்சுட்டு வந்திட்டயா?”

“ஆமாம்  மாமா...நீங்க  சௌக்கியமா?

“எல்லாம்  சௌக்கியம்.. பிரகாஷ்...இப்போ   ஒங்க   அப்பா அம்மா வுக்கெல்லாம் என்ன  கவலை தெரியுமோ?” ஜோஸியர் தலையை சாய்த்துக் கொண்டு  கேட்டார்.

  “................”

 ”இனிமே  நம்ம  நாட்டுலெ  எல்லாம்  அமைதியா  இருக்கணும்அண்டை அயல்  நாட்டோட   சண்டையே  வரப்படாது...   நாட்டுக்கு பட் டாளமே தேவையில்லையோன்னு   எல்லாரும் நெனைக்க ணும் ....”

  எல்லோரும் சிரித்தார்கள்.

  பெரியம்மா கேட்டாள்: ”ஜோஸியரே, நல்லநாள்  பாத்துட்டேளா? “

“நாளைக்கு  வெள்ளிக் கிழமையே  நன்னா..இருக்கு.  பிரகாஷ் ஜன்ம நட்சத்திரமும் நாளைக்குத் தானே..!  “

“ஆமாம்”

 “கணபதி ஹோமம்  ஆயுஷ் ஹோமம்  ரெண்டையும் நாளை க்கே பண்ணிடலாம்…எல்லாம்  ஏற்பாடு பண்ணுங்கோ.. நானே  ஸாஸ் திரிகளைக் கூட்டிண்டு  வந்துடறேன்...சரியா?..”

பெரியப்பா திருப்தியுடன் தலை அசைத்தார்.

“ரொம்ப சந்தோஷம் மாமா..எல்லாம் தயார்  பண்ணிடறோம்” என் றாள் பெரியம்மா.

ஜோஸியர்   வழிநடை தாண்டியவுடன்    பெரியப்பா  மெதுவான குர லில் கேட்டார்:

“ஜோஸியரே, பிள்ளை   ஜாதகத்தைப் பாத்துட்டேளா? நீங்க பயப் படுத்தின மாதிரி இன்று வரை எதுவும் நடக்கலியே!!  ஆண்ட வன் செயல்  தானா?..”

“அதைத் தான்  நானும்சொல்லணும்னு இருந்தேன்.ஏதோ தசாபுக்தி  அவனைக் காப்பாத்திருக்கு.ஆனா..இன்னும்  அந்த கண்டம்  இருக்கு. அதுக்குத்தான் நாளைக்கு ஹோம பரிகாரம் வரட் டுமா?..”

காலை விடியும் முன்பே  வாசலில் செம்மண் கோலமிட்டு குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. அதே ஊரில் இருந்த பிரகாஷின் அக்கா  உதவிகள் செய்ய  சீக்கிரமே வந்து விட்டாள். நெருங்கிய உறவினர்கள் மெல்ல வந்து கூடிக் கொண்டிருந்தார்கள்.

பெரியப்பா வாசலில் ஒரு ஈஸிசேரில் உட்கார்ந்துகொண்டு காபி குடித்துக்கொண்டிருந்தார்.முகத்தைத் துண்டில் துடைத்துக் கொண்டே பிரகாஷ் அப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

“என்னடா,நன்னாத் தூங்கினயா?  Many happy returns.   இன்னிக்கு  உனக்கு நட்சத்திரப் பொறந்த நாளு...”

“அப்பா  அதைப்பத்தித்தான் நானும் நெனைச்சிகிட்டிருந்தேன்”

“என்ன? “

“இன்னிக்கு  என் ப்ரெண்டு ஜார்ஜை  கூப்பிடலாம்னு  இருக்கேன்.. வந்தா அவனும்  ரொம்ப சந்தோஷப்படுவான்...”

பெரியப்பா  ஈஸிசேரிலிருந்து  எழுந்து உட்கார்ந்துகொண்டார்.

“அது  யாரு..?  ஜார்ஜூ?.......

“டேராடன்னிலிருந்து  நானும் அவனும்  ஒண்ணாத்தான் வந்தோம். நாளைக்கு  அவன்  சொந்தஊர்  ஆலப்புழைக்குப் போறான்.  மூணு வாரம் கழிச்சுத்தான்  வருவான்...”

பெரியப்பா  கன்னத்தைத் தடவிக்கொண்டார்.

“பிரகாஷ்,எனக்கு  என்ன  பதில் சொல்றதுன்னு தெரியலே... இந்த விசேஷமெல்லாம் நம்ப  குடும்பத்துக்குள்ளேசெய்யறது.. இதுலே வெளி மனுஷா கலந்துக்கறது சரி இல்லே....இன்னொரு சமயம் அவன் வர முடிஞ்சா   நன்னா  இருக்கும்...”

“இன்னொரு சமயம்  அவனால  வர முடியாது..அதனால தான்  சொல்றேன்...”

“நான்  எப்படி விவரமா ஒனக்கு சொல்லறதுன்னு தெரியலே..  ஒங்கம்மா..  இங்கே  வந்திருக்கிற  உறவுகள்  ஸாஸ்திரிகள் யாருமே  இதை  ஆட்சேபணை  செய்யலாம்....குடும்பத்து விசேஷம் இல்லையா? அது நமக்குள்ளே  இருக்கிற வழக்கம்... மத்தபடி. வேறெ  ஒண்ணும்  இல்லெ”

பெரியப்பா  எழுந்து  ஸாஸ்திரிகளிடம்  ஏதோ பேசப்போவது போல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.  

பிரகாஷுக்கு  வருத்தமாக  இருந்தது. ’அதென்ன  குடும்பவழக்கம்?.. இரண்டு வருஷமா  என்னுடன்  மிக நேசமாக  தோழமையுடன்  பழகி வந்த ஜார்ஜை  ஏன் நான் குடும்பத்தில் ஒருவனாக அழைக் கக்  கூடாதா? ஒரு சகோதரனை விட அக்கறையுடன் அவனு க்கு  பல சமயங்களில்  கைகொடுத்து உதவி இருக்கிறான். சமயத் தில் நல்ல  யுக்திகள் சொல்லி    இக்கட்டான சங்கடங்களில் இருந்து  காப்பாற்றி இருக்கிறான்.. அப் படி ஒரு நட்பு....பாசம்....

தவிர, அவன் இன்று  வரமுடியாவிட்டால்  பிறகுமூன்றுவாரங் களு க்குப் பிறகு  வேலைக்குத் திரும்பிய போது தான் பார்க்க முடியும். சங்கடமாக இருந்தது. ஆனாலும்  அப்பா எந்த தனிப்பட்ட  காரணத்துடன் இதைச் சொல்லவில்லை என்று அவனால்  உணர முடிந்தது.

பலமான வேத கோஷங்களோடு  ஹோமம் இரண்டுமணி நேரம் நடந்தது. வீடுமுழுதும் புகைமண்டலம்   கூடத்தை சுத்தப் படுத்தி   உணவு  பரிமாற  இலை போட  தயார் செய்து கொண்டி ருந்தார் கள்.

உறவினர்கள் வாசல்பக்கம் வந்து  காற்றாட நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்  எல்லோருக்கும்  பசி கிள்ள  ஆரம்பித்தி ருந்தது. பெரியம்மா பிரகாஷை  நெருங்கி அவன்நெற்றியில் குங்கு மம் இட்டு  அனைவரையும் நமஸ்கரிக்கச் சொன்னாள். பிரகாஷ் அவன் அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணும் போது  அவர்  பிரகாஷ் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்த மாதிரி  இருந்தது. ஜார்ஜ் பற்றிய  நினைப்பு அவருக்கு வந்திருக்கக் கூடும். 

அப்போது  டெலிபோன்  ஒலித்தது. பிரகாஷ் எடுத்தான். மறு முனையில்  பிரகாஷின் சகோதரி புருஷன் தான் பேசினார். “ஹலோ பிரகாஷ்” என்றார்.. வீட்டிலிருந்து புறப்படும் போது தன்னுடைய  ஸ்கூட்டர்  பழுதடைந்துவிட்டதாகவும்  பைக்கில் வந்து  கூட்டிக்கொண்டு போகமுடியுமா?  என்று கேட்டார். 

“அதுக்கென்ன?  இப்பவே வரேன்” என்று அப்பாவிடம் விஷ யத்தை சொன்னான். வாசலில்  அங்கே வீட்டுக்கு வந்த உற வினர்களின் பைக்குகள்  இரண்டொன்று நிறுத்தப்பட்டிருந்தன. அங்கே   ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

“மாமா..இது  உங்கள்  பைக்கா?” 

“ஆமாம்...”

அதற்குள்  பெரியப்பாவும் வாசலுக்கு வந்துவிட்டார்.

“சுந்தரம்  உன் பைக்கை  கொஞ்சம்கொடேன். மாப்பிள்ளை  வீட் டுலெ காத்துண்டிருக்கார்.  பிரகாஷ்  போய்  கூட்டிண்டு வந்திடு வான்   வீடு பக்கத்திலெ தான் இருக்கு  போய்ட்டு வர பத்து நிமி ஷம் தான்  ஆகும்..என்ன?..

 “ என்ன   மாமா  தாராளமா  எடுத்துண்டு போகட்டுமே!!  பிரகாஷ்... இந்தா சாவி...”

 பிரகாஷ்    வண்டியைத் திருப்பி  உட்கார்ந்து  சாவியைப் போட்டு  துரிதமாக ஸ்டார்ட்  செய்தான்.

“பிரகாஷ்...சீக்கிரமா  வந்துட்றா....எல்லாருக்கும்இலை போட்டாச்சு..”
 “இதோ  இப்பொ வந்துடறேன்...”  

வண்டி வேகமாக வாசல் கேட்டைத் தாண்டி திரும்பியது
அவசரமாக வெளியே வந்த பெரியம்மா  உரத்த குரலில் கத் தினாள்:

“சீக்கிரம் வந்துடுறாப்பா... இங்கே  இலை போட்டாச்சு.......”


                     ***************

 பிரகாஷ் கிளம்பிப் போய்  அரைமணி ஆகி விட்டது.   மாப் பிள்ளை  இதோடு மூன்று  முறை போன் செய்துவிட்டார்.  பிர காஷ்   இன்னும் வரவில்லை.  

“ஒரு  வேளை  வண்டி  நடுவில  பஞ்சர்  ஆகி இருக்குமோ?”
 உறவினர் ஒருவர் லேசாக  தனக்குள்  சொல்லிக்கொண்டார்.

“ உன்  வண்டிலே  பெட்ரோல்  ஒண்ணும் கம்மியா இல்லையே?   பெரியப்பா உறவினரைக  சந்தேகமாக  கேட்டார்.

“அதெல்லாம்  நெறைய  இருக்கு...”

  உறவினர்கள் எல்லோரும் வெளியில் வந்து கேட்டையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டார்கள். எல்லோருக்கும் பசி கிண்டியது.  உள்ளே  இலைகளைப் போட்டு சமையல்காரர்   சில பண்டங்களைப்  பரிமாறியிருந்தார்...

 பிரகாஷின்  சகோதரி சொன்னாள், “அப்பா...எனக்கு  இப்ப நிச்ச யமா தெரிஞ்சி போச்சு. பிரகாஷுக்கு வீடு மறந்து போயிடுத்து ரெண்டு வருஷம் கழிச்சு  வரான் இல்லையா?  தெரு கட்டிடமெல் லாம்  இப்ப  மாறி இருக்கோல்யோ?... அதான் சுத்தறான்..”

”அடையாளம் தெரியாத  அளவுக்கு ..பிரகாஷ்  அவ்வளவு ஒண்ணும் சோடை இல்லை..அவன் மிலிட்டரிக்காரன். தெரிஞ் சுக்கோ!...  ஆனா, ஏன்   இவ்வளவு   நாழின்னு   தான்  யோஜ னையா   இருக்கு..”   பெரியப்பா   குறுக்கும் நெடுக்குமாக  உலாவிக் கொண்டிருந்தார்.  திடீரென்று  நின்றார்.

’ஒருவேளை  அவன் ப்ரெண்டு  ஜார்ஜைப் பாத்துட்டு அங்கே  போகப் போறானோ?..’  தனக்குள் நினைத்துக்கொண்டார். 

மேலும் பத்து நிமிஷம்  கழிந்தது. [அப்போது கைப்பேசி இல்    லாத காலம்] பெரியப்பா  திடீரென்று தீர்மானித்தவராய் அங்கே நின்று கொண்டிருந்த ஒரு உறவுக்காரர் பையனைப்  பார்த்து, “டே,ராமூ, இந்த  சைக்கிளை எடுத்துண்டு   போய்.. நம்ம   த்யாகு மாமா  வீட்டு  வரைக்கும் போயிப் பாரு.வழிலே பிரகாஷ் எ ங்க யாவது நிக்கறானான்னு பாத்துட்டு   வா...”

 ராமு  உடனே  சைக்கிளை எடுத்துக்கொண்டு  போனான் “அம்பீ. .       சீ க்கிரம் பிரகாஷைப் பாத்து கூட்டிண்டு வாடா... இங்கெ எல்லாருக் கும் பசிக்கிறது...”  யாரோ ஒரு வயதான உறவி னர் வயிற்றைத் தடவிக்கொண்டு சொன்னார்.

நினைத்ததற்கும்  சீக்கிரமாகவே   ராமு  போனவேகத்திலேயே திரும்பிவந்தான். “என்ன....என்னா...?“என்று எல்லோரும்  நெருங்கி வந்தார்கள்.

“மாமா....தெரு  திரும்பின உடனே  இடது பக்கம் காம்ப் பௌண்டு கிட்டே நம்ம  பைக்   கீழே  விழுந்து கண்ணாடி ஒடை ஞ்சி  கிடக் கறது..பைக்கின் முன் சக்கரம் வளைந்துபோச்சு.கீழே மண் ணு லே  எல்லாம்   ரத்தக் கறை...”

“அய்ய்ய்யோ...அய்யோ...ஆண்டவா... என்னடா ஆச்சு?   பிரகாஷ்  எங்கேடா?  யாரானும்  அங்கெ  இருக்காளா?  அய்யோ  முருகா.. முருகா..”பெரியப்பா  தலையை பிடித்துக்கொண்டு கத் தினார்.  

 விஷயத்தைக்கேள்விப்பட்டு  பெரியம்மா,  பிரகாஷின் சகோதரி, கூடி இருந்தவர்கள்   எல்லோரும்    வேதனையில்   பதறி அரற் றினார்கள்.

உடனே  பெரியப்பாவுடன்  நாலைந்து பேர்கள்  சேர்ந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக  விபத்து நடந்த   இடத்துக்கு  விரைந் தார்கள்.

பைக் மிகவும்  மோசமாக சேதமடைந்திருந்தது.அதிக  வேகத்துடன்  அது கட்டுப்பாடு இழந்து  அந்த  மின் கம்பத்தில் மோதியிருக்க   வேண்டும்.  அதை  ஓட்டிக் கொண்டு வந்தவன்  எவ்வளவு   ஆபத்தான  நிலைமையில் இருக்கக்கூடும் என்று கற்பனை செய்து பார்க்க பயமாக இருந்தது.

அந்த இடத்தை சுற்றி இரண்டு மூன்று பேர்  நின்றுகொண்டிருந் தார்கள் .

“என்ன  ஆச்சு  ஸார்?...எப்படி  இது  நடந்தது?  இதை ஓட்டிக்கொண்டு வந்தவர்  எங்கே?   இவர்  தான்  அவருடைய  அப்பா...என்ன  ஆச்சு  சொல்லுங்க..? “  எல்லோரும்  பதறினார்கள்.

”வண்டி  ரொம்ப  வேகமாத்தான்  வந்தது.திடீர்னு  ஒரு நாய்  குறுக்கெ பாஞ்சு  ஓடியது..  அவரு  அதை எதிபார்க்கலெ..வண்டி இடது பக்கம் வேகமாப்போய் விளக்குக்கம்பத்துலெ மோதிடுத்து. ஓட்டி யவர் கீழ சாஞ்சி அவர்மேலெ பைக் பலமா விழுந்துடுத்து. அவருக்கு முட்டிக்கால்லெ பலமான   அடின்னு நெனைக்கிறேன்..”

“அய்ய்யோ...  அப்புறம்  என்ன ஆச்சு?  இப்ப  எங்கெ இருக் கார்..?

இந்தப் பக்கம் வந்த யாரோ  ஒரு  இளைஞன்  தான். ஓடி வந்து சம யோசிதமா  எல்லா  உதவியையும் செஞ்சான்.... அடிபட்ட இடத் துலெ கைக்குட்டையை இறுக்கமா கட்டுப் போட்டு  அவரை மெள்ள தாங்கி பிடிச்சுத் தூக்கி வழிலே   வந்த  காரை நிறுத்தி அதிலெ  பக்கத்துல உள்ள ஸாயி நர் ஸிங் ஹோமுக்கு கொண்டு போயிருக்கான்.. எங்க கிட்டே தகவல் சொல்லிட்டுப் போனான்..”

“ஐய்ய்யோ...”

ஸாயி நர்சிங்ஹோம் அதிக தூரத்தில் இல்லை.எல்லோரும் வண்டி பிடித்து  வேகமாகப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே  அவசர சிகிச்சைப்பிரிவு  எங்கே  என்று  விசாரித்துக்கொண்டு  ஓடினார்கள்,

அந்தப் பிரிவில்  போடப் பட்டிருந்த  இரண்டு மூன்று கட்டில்களில்  கைகளிலும்  கால்களிலும்  மண்டையிலும் கட்டுப் போட்டுக் கொண்டு                பல வயதுள்ளவர்கள்   பரிதாபமாகப் படுத்துக் கொண்டிருந்தார்கள்.

பிரகாஷ்  கடைசிக்கட்டிலில்  சாய்ந்தவாறு  இருந்தான்.அவன்  முகத்தில் வலியும்  களைப்பும் தெரிந்தது.   கைகளிலும்   முகத் திலும் சிராய்த்து ரத்தம்  துளிர்த்துக் கொண்டிருந் தது.   அவன்  கணுக் கால்   பெரிதாக         வீங்கி இன்னும் ரத்தக்கசிவு நிற்கவில்லை   பெரிய கட்டுப்போட்டு டாக்டர்   வலியைக் குறைக்க  ஊசி போட்டிருந் தார்...கை மணிக்கட்டில் பொருத்திய  drip  ஓடிக் கொண்டிருந்தது.

“ அய்ய்யோ...  பிரகாஷ்....  என்னப்பா  இப்படி  ஒரு ஆக்ஸிடெண்ட்...அதுவும்   இன்னிக்கு... “  பிரகாஷின்  தந்தை  பதறி போய் பொங்கி  வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டு  பேசினார்.

பிரகாஷ் விபத்தின்அதிர்ச்சியை  வெகுவாகவே  தாங்கிக்கொண்டு   வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் இருந்தான். அப்பா வைப் பார்த்தவுடன் சிரிக்க முயற்சிசெய்தான். ராணுவப் பயிற்சியால் வளர்த்துக் கொண்ட  மனத் திண்மை அது.

“ஒண்ணும்  பயப்படும்படியா இல்லைப்பா.... ஏதோ  இப்படி நேர்ந்து போச்சு...ஜோஸியர்  இனிமே  கண்டம்  அது இதுன்னு  நம்மை  பயப் படுத்த மாட்டார்  இல்லையா?.. “

அப்போது  டாக்டர்  வந்தார்.

”இங்கே  எல்லாரும் கூட்டமா  நிக்கக் கூடாது...தயவு செய்து வெளியெ போங்க.. நீங்க  தான்  இவரோட   அப்பாவா?   நீங்க  இருங்க..”

எல்லோரும் நகர்ந்தார்கள். “டாக்டர்  என்ன  ஆச்சு டாக்டர்? இப்போ எப்படி இருக்கு?“

“நல்லவேளை பெரிய ஆபத்துலேருந்து தப்பிச்சுட்டார். கணுக்கா லிலே  சிக்கலான  முறிவுஏற்பட்டிருக்கு. ரத்தமும் ஜாஸ்தியா போயி ருக்கு.எல்லாத்துக்கும்  இப்போ சிகிச்சை கொடுத்துருக்கோம்.   நாளைக்கு  ஆபரேஷன்  பண்ணணும்.அதுக்கப்பறம்  எலும்பு  சேர்றதுக்கு  ஒரு மாசமாவது  ஆகும்.. இருந்தாலும்   இவர்   இளைஞரா   ஆரோக்கியமா   இருக்க றதுனாலெ  பழையபடிக்கு   வந்துடுவார்... சரியா..?

“இப்போ  நீங்க  கெளம்புங்க.உடனடியா  சிலஎக்ஸ்ரே ஸ்கேன்  இதெல்லாம்  எடுக்கணும்...கொஞ்சம் வெளிலே  போய் இருங்க...”
  
டாக்டர் வார்த்தைகள்   கொஞ்சம்   ஆறுதலாக   இருந்தாலும் திடீரென்று  இந்த   நல்ல  நாளில் இப்படி ஒரு  அதிர்ச்சியான சம்பவம்   நேர்ந்ததை நினைத்து அவர் உருகிப்போனார்.

“பிரகாஷ்....இனிமே ஒனக்கு  ஒரு  ஆபத்தும்  வராது...எல்லாம் சரியாயிடும்... நான்  வெளிலே  இருக்கேம்ப்பா....” பெரியப்பாக கண்களைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தார்.

“அப்பா....”
  
“ என்ன?”

“என்னைத் தாங்கி பிடிச்சி வண்டி ஏத்தி  இங்கே  கூட்டிகிட்டு வந்தானே... அவன் எங்கே?  “

 “அய்ய்ய்யோ....அதை  மறந்தே  போய்ட்டோமே!  எப்படி இருப்பான்?” 

“சீக்கிரம் போய்  அவனைப் பாருங்கப்பா...வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டு பெல்ட் போட்டுண்டு இருப்பான்.. இங்கே வந்தபோது என் அவஸ்தை யிலே  அவனுக்கு  ஒரு தேங்க்ஸ் கூட  சொல்லலே!  பெரிய உதவி செஞ்சிருக் கார்... சீக்கிரம் போய் பாருங்க....”

பெரியப்பா  அவசரமாக  வார்டுக்கு  வெளியே  வந்து சுற்றுமுற்றும் பார்த்தார்... யாரும்  தென்படவில்லை.

“எங்கே போயிருப்பான்அந்தப் பையன்....கடவுள் மாதிரி சமயத்துலெ வந்து   இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கானே!  “

அப்போது  ஒரு இளைஞன்  முகம்  உடை எல்லாம் ஈரமாக கைக் குட்டையில் துடைத்துக்கொண்டு   அருகிலிருந்த  ஓய்வறையிலிருந்து   வெளியே வந்தான் சற்றுகருப்பாக இருந்த அவன் வெள்ளை வெளேரென்ற சட்டையும்  பேண்டும் பெல்டும் அணிந்துகொண்டி ருந்தான்.  ஆனாலும்  அவனுடைய தூய்மையான வெள்ளைச் சட்டை மேலெல்லாம் பல இடங்களில்  ரத்தக்கறை படிந்திருந்தது. பார்க்க வேதனையாக இருந்தது. அந்தக் கறையை முழுதாக நீக்க முடிய வில்லை..அநேகமாக  அந்த  சட்டையைக் கூட அவன் எறிந்துவிடலாம்... 

“ஏம்ப்பா...நீதான்  என்  பிள்ளையைக் காப்பாத்திக்கொண்டுவந்தபையனா?  நீ எவ்வளவு சிரமப்பட்டு  இந்த  பெரிய உதவியைப் பண்ணியிருக்கே!! ஒன்   வெள்ளைச் சட்டையெல்லாம்  இப்படிப் பாழாயிடுத்தே!  ஒனக்கு எப்படி நன்றிசொல்றதுன்னே தெரியலே..” 

 அவன் கையைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்தார்  பெரியப்பா. 

”அதெல்லாம்  ஒண்ணும்  பெரிசா  செய்யலேஅய்யா.. நல்லவேளை பெரிய ஆபத்துலேருந்து  அவர் தப்பிச்சுட்டார்  அது தான்  எனக்கு நிம்ம தியா  இருக்கு. ஒங்க பையன் நல்லா   ஆயிடுவாரு அய்யா.  கவலைப் படாதீங்க..”.

”இருந்தாலும்  இப்படியொரு  நல்லமனசும்  அக்கறையா  உதவிசெய்யற குணமும்   எல்லாருக்கும்  வராதுப்பா.......நீ   தீர்க்காயுசா நன்னா இருக் கணும்...பகவான்  ஒனக்குஒருகொறையும்வைக்கக் கூடாது..”

 “அய்யா..  இப்படி சரியான  சமயத்துலே  ஒருத்தரைக் கஷ்டத்துலேர்ந்து காப்பாத் தற  சந்தர்ப்பத்தை  ஆண்டவன் எனக்கு கொடுத்தாரே!அதையே ஒரு  வரமாவே நெனைச்சிக்குறேன் எல்லாருக்கும்  கெடைக்காத புண்ணியம்...  ஒங்க பையன் நல்லா  ஆயிடுவார்... நான்  வரட்டுமா?” 

“ தம்பீ..  ஒங்க உதவிக்கு கைம்மாறா......... “ 

”அதெல்லாம்  ஒண்ணுமே  வேண்டாங்க.நான் அவசரமா  இப்ப சர்ச்சுக்குப் போயிக் கிட்டிருந்தேன்..அங்கே  ஒரு  திருமணம் அதுலே நான்தான்   மாப்பிள்ளைத் தோழன்.. தாமதமாகிவிட்டது  ஆனாலும் பரவாயில்லெ... நான்  வரட்டுங்களா?”

கை கூப்பி விட்டு அவன் வேகமாக  படி இறங்கிப் போனான்.

”தம்பி...தம்பீ..  நீ..என்னோட  இன்னொரு பிள்ளையாட்டம் இருக்கே.. ஒம் பேரு  சொல்லாம  போறயே!!”

“ஜா..ர்..ஜ்....”  அவன் தெருவுக்குள்  திரும்பிவிட்டான்.

பெயரைக் கேட்டவுடன்  பெரியப்பாவுக்கு  சுரீரென்று ஒரு  நிமிஷம் மூளையில் மின்னலடித்தது.  அதெப்படி காலையில் கேட்ட அதே  பேருடன்    இங்கே   இந்த மாதிரி ஒரு சூழலில்..இன்னொருவன்...!!

இன்று இப்படி ஒரு அதிர்ச்சியூட்ட வேண்டுமென்றே கடவுள்  செய்த சூழ்ச்சியா? 

வீட்டுக்கு நடந்து போகும் போதெல்லாம்  இந்தப்  பெயர் பற்றிய நெகிழ்ச்சியில் அவர் மனம் உளைந்துகொண்டேயிருந்தது. இது எப்படி ஒரு விபரீதமான ஒற்றுமை.!!!.. 

போகப் போக அவர் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றார்.  தனக் 
குள்ளே  பேசிக் கொண்டே போனார்....

‘எல்லாருக்கும் பெயர்  இருக்கிறது......அதேபோல்...ஒரே பெயர் கொண்ட வர் கள்  ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்...

அந்தப் பையன்  ஜார்ஜ்ஜா யிருந்தா  என்ன?  
ராமுவா இருந்தா என்ன? கரீமா  இருந்தா  என்ன?  
யாரா  இருந்தா  என்ன...?
அவனை நான் சாப்பிடக் கூப்பிட்டிருக்க வேண்டும்

    *  அம்ருதா  ஆகஸ்ட்  2013