Thursday, December 27, 2012


க.நா.  சு
 வைதீஸ்வரன்
க. நா. சு வை  யாருக்குத் தான்  தெரியாது?
க.நா. சு வை எனக்கும்தெரியும் என்று யார் தான்
சொல்லிக்கொள்ள  மாட்டார்கள்?
ஆனால் எனக்குத்  தெரியும் என்று நான் சொல்லிக்
கொள்ள முடியாது. அவருக்கும் என்னைத் தெரியாதது
போலத்தான்   ஊகித்துக்கொள்ள வேண்டும்.
தூரத்தில் காராக்ருகத்தில் பார்த்த
பொய்த் தேவுதான்  எனக்கு  அவர்  உருவம்.
ஐம்பது வருஷங்களுக்கு முன் என் தாய்மாமன் வீட்டுக்
கூடத்து  ஊஞ்சலில்   அவர் ஆடாமல் அசையாமல்
உட்கார்ந்திருக்கிறார். காட்சி  இன்னும் எனக்குள்  
ஆடிக் கொண்டிருக்கிறது.
பரிச்சயமில்லாத முகம் பயப்படுத்துகிறது.
பி.எஸ்.ராமையா  மணிவிழா பற்றிய சந்திப்பு.
 கூட வந்த செல்லப்பா  தான் குரலைக் காட்டினார்.
அவருடைய  மௌனம்  அலுக்க வைத்தது
அவருடைய  சிந்தனைப் போக்கை  அத்தனை எளிதாக
 ஊகித்து விடமுடியாது.
 அவர்  காட்டும் பாதையில் பண்டிதமும்  பகட்டும்
 அறவே  கிடையாது
இலக்கியம் என்று அவர் சொல்லும்   ஒன்றை   அத்தனை  சுலபமாக  அலட்சியம் செய்து விட முடியாது.   
சுயமாக சிந்திக்க நமக்குப் பொதுவான  சோம்பல்
ஆனால் திசை குழம்பிய வாசகனுக்காக  சிந்திப்பது
அவருக்கு  ஆயுட்கால  லட்சியம்.
அயராத  எழுத்து ..  ஓயாத  படிப்பு...        
தோழமையும்  சுய லாப நோக்கும்   
இரண்டாம்  பட்சம்.   
யாரை ஏன்  எப்படி ரஸிக்கிறார்  என்பது  மாலியின் மனோதர்ம
வாசிப்பு போல...... 
பருவத்துக்கு பருவம்  மாறும்  அபிமானங்கள்           .  .
உலகத்தின்   நல்லெழுத்தெல்லாம்  வாசித்து
ஊருக்குப்  பொழிந்தவர்..  அகில எழுத்துக்களை                                                                
தமிழுக்குள் வடிகாலாக்கி  வளப்படுத்தியவர் .
இலக்கிய மொழிக்கு தன்னலமற்ற  பங்களிப்பு... 
க. நா. சு  அதற்கொரு  முன்னோடி. 
கவிதையை  மாற்றி யோசித்ததில் .. இன்னொரு முன்னோடி.
ஒரு  பாமரனின்  சாதாரணமான   ஜீவிதம்  அதன்
இடர்ப்பாடுகள்.  விதிக்கப்பட்ட  துக்கங்கள்  
பிழைப்பு  பசி  சுயவிசாரணை   பழக்க வழக்க  முரண்பாடுகள்  
நடுத்தரப் பாசாங்குகள்  இதை எளிமையற்ற எளிமையாக
பேச்சு வழக்கே  கவிதையாக தொனித்தது அவர்  குரலில்
சி.சு செ க்கு சிக்காத கவிதைப் பாங்கு...

மணிக் கொடி கால  எழுத்தாளர்கள்  பலர்  மணி மணியாக
எழுதினார்கள்.  சிலர் கலங்கரை விளக்கானார்கள். 
சிலர் இலக்கியத்தின்   பொன்னெழுத்தானார்கள்
வாரிசுகளை ..... ஆராதிக்கும்  சீடர்களை  பெற்றார்கள்
ஆனால்  எழுத்தை  எடை போடுவதும்  தரம் பிரிப்பதும்
அலசி  ஆராய்வதும் கூர்மையாக  விமர்சிப்பதும்  பலனற்ற    
இலக்கிய  ஊழியம்.   .நா.சு  அதற்காக  தோன்றியவர்
மொழியின் படைப்பு வளத்தை அதன் இருப்பை  காலத்தின்        
பின்புலத்தில் பொருத்தமாகத்  தைத்து வைப்பவர்.    
ஆயுட்கால அர்ப்பணிப்புள்ள  விமர்சகர்கள்              
அவர்கள்  சேவை   தச்சனின் உழைப்பைப் போல..
மொழியோடு  கரைந்து  மறைந்து  ஆரவாரமற்று  நிற்பது. 
பாராட்டுக்குத்  தப்பித்துக் கொள்வது. 
 க.நா. சு  அப்படி ஒரு  பெருந் தச்சன்.  அவர்  சிற்பியல்ல.

0
  

Thursday, December 20, 2012

கவிதை



வேற்றூரில் ஒரு காலை
               
                                       வைதீஸ்வரன்


      அசையாமல் அசைந்து 
      காற்றை மெல்லக் காட்டிக் கொடுக்கின்றன..
     
மேகங்கள்.
      பறவைகள் பூத்த மரங்களின் கன்னம் சிவந்து
     
கனிகள் பாடுகின்றன காலைஇசையை..
      துவளும் பூமியை மெள்ளத் தடவும் கிரணவிரல்கள்
     
கிளுகிளுக்கின்றன  பசுமை சிலுசிலுத்து
      வழக்கத்திற்கு அடிமையற்ற வானம்
     
உன்னத ஒவியங்களை ஓயாமல்
     
எழுதிக் கலைத்துக் கொண்டே  சிரிக்கின்றன
      வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசமழிந்த புள்ளியில்
     
மௌனத்தில்  சயனித்திருக்கிறது உள்மனம்..
      தற்காலிக மரணத்தின்
     
அழகான சமாதி வரிசைகளாக     
     
சாலையின் இருமருங்கிலும்
     
உறங்கும்  வீடுகள்
     
உயிர்களை தாலாட்டியவாறு....

 
 0