vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com
Showing posts with label சுய ரூபம். Show all posts
Showing posts with label சுய ரூபம். Show all posts

Monday, June 27, 2016

சுய ரூபம்

சுய  ரூபம்


வைதீஸ்வரன்
 (*கல்கி  ஜூலை 2016இதழில் வெளிவந்துள்ளது)

வானத்தைக்  கையில்  பிடிக்க  முடியுமாஎன்று 
யாரோ  கேட்டது  நினைவுக்கு  வருகிறது  இன்று 
வானத்தைக்  கண்ணால்  அளக்க   முடியாமல்
குனிந்து  கொண்ட போது
வேளைக்கு  வேளை
வானம்  பிடிக்கு நழுவுகிறது.  காணாமல்  போகிறது.
 மாறு வேஷத்தில்
என்னை  ஏய்க்கிறது.
 கிட்ட  வருவது  போல்  பாவனை  செய்கிறது
இரவில்  எங்கோ  தொலைந்து  போய் விடுகிறது.
நிலவைப்  பார்க்கும் போது
உலரும் நீலத்துணி  போல்  மிதக்கிறது.
எரிக்கும்  பகலில்  என்னை  வெறித்துப் பழுப்பாக   நோக்குகிறது. 
சூரியன்  விழும் போதும்  எழும்போதும்
 சோகம் ராகம் போலும் 
ஒரு கதகளிக்காரனின்
 ஜாஜ்வல்யமான ஆட்டத்தைப்  போலி  செய்தும்
 பறவைகளைக் குழந்தைகளாக்கிக்  கூச்சலிடச்  செய்கிறது!!.
மழைக்குள்  பதுங்கியும்
பனியில்  நடுங்கியும்
 புயலில் பூதங்களாகி
 சடைகளால் திசைகளை விரட்டி
 நெருப்புவிழிக்  கீறலாய்   திறந்து மூட
 பூமியைத்  தோலுரிக்கிறது
 சில  பருவங்களில்  வளைந்தது   போலவும்
 சில  பருவங்களில்  விலகி  துறந்தது  போலவும்
  யோசிக்க  வைக்கிறது...
துக்க நினைவுகளில்  மணல் வெளியில்
மனம் கிடந்து  தேம்பும்  கணங்களில்
என்  மேல் பரந்த  பட்டுக் கருமை போர்த்தி  அரவணைக்கிறது
 இந்த   வானத்தின்  சுய ரூபம் தான்  என்ன?
 சுயமே  அற்ற  ஞானம்  தான்  வானமா?   
   எனக்குள்  ஒரு  வானம்  இருக்கக்  கூடுமா?
   என்  ரூபம்  ரூபமற்றுப்     போகும்போது
   நானும்  அந்த  வானமா?................