vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, September 15, 2021

காலகட்டத்தின் புத்தகப்பேழை - வைதீஸ்வரன் கதைகள் -
          காலகட்டத்தின் புத்தகப்பேழை

                - வைதீஸ்வரன் கதைகள் -                         கட்டுரை: ரமேஷ் கல்யாண் 

 

                            

சிறுகதை உலகு தமிழுக்கு கவிதை அளவுக்கு சொந்தமானது அல்ல. ஆனால் அதை இருநூறு ஆண்டுகளில் பல விதமாக நாம் வளமூட்டி இருக்கிறோம் அல்லது வளப்பட்டு இருக்கிறோம். குறிப்பாக நவீன இலக்கிய பரப்பில். வங்காளம் நமக்கு கொஞ்சம் முன்னதாகவே நவீன இலக்கியத்துக்கு நெருங்கி இருந்து என்றே சொல்லலாம். பாரதியை வங்காளம் ஈர்த்திருந்தது.தமிழில் பண்டித தமிழ் மற்றும் இலட்சியவாத சிறுகதை அம்சமே கலையின் பூரணம் அல்லது கலையின் சேவை என்று இருந்த நிலைமை. மணிக்கொடி காலம், எழுத்து வின் புதிய இலக்கிய பார்வை அதை தொடர்ந்து சிற்றிதழ்கள் பல வந்து, செறிவான நவீன இலக்கியம் பேசுபொருள் ஆனது.தமிழிலக்கியத்தை முறையாக வாசிப்பவன் எதையுமே ஒதுக்கி விட்டு இலக்கியத்தை அணுக முடியாது. மு வ போன்றோர் வாசிக்கப்பட்ட காலத்திலேயே மாதைவையா போன்றோரும் வாசிக்கப் பட்டனர். இன்று நிறைய மாறி முன்னேறி இலக்கியம் வளர்ந்து விட்டிருக்கிறது. இந்த பின்னணியில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிறுகதை இலக்கியம் எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது என்று நாம் நம்மை உரசி பார்த்துக் கொள்ளலாம். அது முக்கியமும் கூட. இல்லாவிட்டால் பூனை கண்ணை மூடிக்கொண்டது போல் நாம் இருந்து விடுவோம். நிறைய பூனைகள் உலவும் இன்றைய இலக்கிய ஊடக சாம்ராஜ்யத்தில் இது மேலும் முக்கியமாகிறது.எழுத்து காலத்தில் அறிமுகமான எஸ் வைதீஸ்வரன் கவிஞரும் சிறுகதையாளரும் ஆவார். தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் சிறுகதை உலகிலும் எழுதி இருக்கிறார்கள். நானறிந்தவரை, இரண்டிற்கும் வித்தியாசப்பட்டு நிற்பவர்கள் வெகு சிலர். ஒரு உதாரணம் சுந்தர ராமசாமி & பசுவய்யா.. கவிதையின் ஒளியும் நிழலும் சிறுகதைகளின் மேல் பாவுவதையே ஒரு கலையாக பரிணமிக்க வைப்பவர்கள் உண்டு. உதாரணம் வண்ணதாசன் & கல்யாண்ஜி.

கவிஞனின் கூர்மையான அவதானங்களை சிறுகதைகளாக, கவிதை மனத்தின் வால்நட்சத்திர நீட்சியாக படைப்பவர்களில், எனது வாசிப்புக்கு அறிந்தவரை எஸ். வைத்தீஸ்வரனை சொல்லலாமென்று எண்ணுகிறேன். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் கூட. உதயநிழல் கவிதை தொகுப்பில் அட்டைப்படமும், உள்ளோவியங்களும் இவரது ஓவியங்களே.அதிருஷ்ட வசமாக அவரது அனைத்து கதைகளும் தொகுப்பாக வந்திருப்பது. எல்லாமே சுமார் ஐம்பது வருட கால நீட்சியில் எழுதப்பட்டவை. சுதந்திர கால இந்தியா, அதற்கு முற்பட்ட காலமும், சமீப காலம் வரையும் எழுதப்பட்டுள்ளன.கதையில் உள்ள பல காட்சிகள் இன்று வெறும் தகவலாக மட்டுமே ஆகிப்போனவை - தெரு விளக்குகளாக கிரசின் விளக்குகள் தொங்க விடப்படுதல் – வைத்திய முறையாக சிறிய தவளையை கக்கத்தில் வைத்து கட்டுதல் – நள்ளிரவு விமான நிலையத்துக்கு ஸ்கூட்டரில் செல்ல வேண்டிய இருத்தல் – வண்டி சக்கரத்தில் விரல் நசுங்கி போன தாத்தா விரலை பற்றி கவலை இல்லாமல் அதில் இருந்த பச்சைக்கல் மோதிரம் போனதென்று வருந்துவது – கணவனை இழந்த முத்தம்மா பாட்டி சந்தோஷமாக தானும் தீயில் இறங்குவது – தந்தி என்பது ஒரு அதிர்ச்சி செய்தியின் அடையாளமாக போவது – தூக்கத்தில் நடப்பது – போன்றவற்றை இன்று யாரும் அதிகம் எழுத மாட்டார்கள். இவற்றில் ஏறக்குறைய எல்லாமே நிஜ சம்பவங்கள் என்றே எண்ணுகிறேன்.ஒட்டு மொத்த தொகுப்பாக 34 கதைகளை படிக்கும்போது எல்லா கதைகளையுமே. கதை சொல்லிதான் கதை சொல்கிறார் என்பது தெரிகிறது. நான், என் தாத்தா, என் ஸ்கூட்டர், என் அத்தை. மேலும் கதை சொல்லியின் வெவ்வேறு பருவங்கள் – சிறுவன் முதல் வளர்ந்த வாலிபன் வரையிலும் சொல்லப்படுவதால், இது ஒரு சுயசரிதைத் தன்மையைக் கொடுத்து விடுகிறது. மேலும் சில கிட்டத்தட்ட கட்டுரைக்கு அருகில் நிற்பவை. ஆனால் இவற்றின் வடிவ அம்சங்களை விடுத்து அனுபவக்கூறுகளை, நிகழ்வுகளை வாசிக்கும்போது ஒரு காலம் கண் முன் விரிகிறது.“இன்றைக்கு பார்க்கிற நிஜத்துக்கும் என்றோ நிகழ்ந்து மறைந்த நிஜத்துக்கும் ஏதோ ஒரு பாலம் இருக்கிறது. அதுதானிந்த கதைகளுக்கு ஆதாரம்” என்று பின்குறிப்பில் அவரே சொல்கிறார்.அவருடைய திசைகாட்டி தொகுப்பில் உள்ள சில கட்டுரைகளே சிறுகதைக்கு ஒப்பானவை என்பதை நினைவு கூறலாம். சில இந்த தொகுப்பில் இருக்கின்றன. டாக்சிடர்மி பின்னணியில் எழுதப்பட்ட ‘ஒரு பறவையின் நினைவு என்னை’ மிகவும் பாதித்த ஒன்று.மிக மென்மையான உணர்வும் அவதானமும் கொண்ட கவித்துவமான கதைகள் – மலைகள், ஒரு பறவையின் நினைவு, ஒரு கொத்துப்புல், ஓவியங்களுக்கு இடையில் ஒரு காட்சி, சிருஷ்டி.அதிர்ச்சி தரும் கதைகள் – எங்கிருந்தோ வந்தான், தவளையின் ரத்தம்,ஒரு காலத்தின் பரப்பை காட்டும் கதைகள் – கொடியின் துயரம், கல்லை எறிந்தவன், பைத்தியக்காரன், ஊருக்குள் இரண்டு காளி. - என வகைகளை இதில் காணலாம்.சிருஷ்டி, கல்லை எறிந்தவன், கொடியின் துயரம், தவளையின் ரத்தம், ஒரு பறவையின் நினைவு போன்ற சிறுகதைகளைப் பற்றி சுருக்கமாக சொல்லுவது தொகுப்பை நாடி செல்ல உந்துதல் தரும் என்று நம்புகிறேன்.எனக்கு பிடித்த கதை- சிருஷ்டி. களிமண்ணில் பிள்ளையார் செய்யும் அப்பா சிறு மகன் பற்றிய சிறுகதை. அருமையான ஒரு கதை. களிமண்ணில் பிள்ளையார் செய்வதில் உள்ள சவால் என்பது ஆரம்பித்து, அப்பா ஒரு ஹீரோ போல பிள்ளையாரை உருவாக்க போகிறார் என்று ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் மகன் சிறுவன் கோபு முன்பு பிள்ளையார் செய்ய வராமல் சோதிக்கிறது. ஒரு சமயத்தில் பிள்ளையாரின் முழு உருவ அமைப்பும் நுணுக்கங்களும் கூட மனதில் தோன்ற மறுக்கிறது. என்னென்னவோ முயன்று முடியவில்லை. உற்சாகமாக “அப்பா பிள்ளையாரை நான் பண்ணட்டுமா?” என்று கேட்குக்ம்போது “ச்சே..ச்சே உனக்கு பிள்ளையார் பண்ண தெரியாது என்று சொல்ல நினைத்தார். தனக்கே அது தெரியவில்லை என்று கோபுவுக்கு தெரிந்து விட்டதை எண்ணி சங்கடமாகி மௌனமாக இருந்தார். கோபு அடுத்த வருஷம் நீ பண்ணலாம். இப்போது நான் பண்ணுவதை கவனமா பாத்துக்கோ ஒன்று லௌகீக உபதேசம் பண்ணினார்” என்று எழுதுகிறார். கடைசியில் ஏதோ ஒரு உருவம் வருகிறது. இதுவா பிள்ளையார் என்று கோபு கேட்க “இன்னிக்கு இதுதான் பிள்ளையார்” என்கிறார். அவன் ஆனந்தமாக தலையில் வைத்து ஆடிக்கொண்டு போகிறான். இதில் களிமண் பிள்ளையார் என்பதை பிள்ளையாராக அல்லாமல் வேறொரு உலகியல் குடும்ப விஷயமாக வைத்து படித்துப் பாருங்கள். கதை வேறொரு இடத்துக்கு உங்களை கொண்டு போய்விடும்.“பைத்தியக்காரன்“ என்றொரு நாடகம் பற்றி கதை வருகிறது.அதில் சிறு . குழந்தைகள். பாவாடை, சட்டை, பூ, பொட்டொடு விளையாட, பைத்தியம் போன்ற ஒருவன் வந்து, ‘எல்லாரும் வீட்டுக்கு போங்க. இல்லாவிட்டால் ஏதோ ஒரு கிழவனுக்கு மணம் செய்வித்து அவன் செத்து போன பிறகு உங்கள் பூ பொட்டை பறித்துவிடுவார்கள்,’ என்கிறான். பிறகு ஒரு சிறுமியை, ‘உன் பூ எங்கே? உனக்கு அப்படி ஆகிடக்கூடாது,’ என அவளுக்கு அலங்காரம் செய்து பூ வைத்து விட்டு , ‘பொட்டு எங்கே. எங்கே.’ என தேடுகிறான். “அய்யா அம்மா யாராவது கொடுங்களேன் “ எனக் கேட்க, நெகிழ்ந்த நிலையில் உள்ள பார்வையாளர்களிடம் இருந்து குங்குமப் பொட்டுகள் வந்து மேடையில் விழுகின்றன. இது எஸ் வி சஹஸ்ரநாமம் (இவருடைய மாமா) நிஜத்தில் நடத்திய நாடகம்தான்.மறக்க முடியாத பறவை – கதையில் இவருக்கு பரோடா அருங்காட்சியகம் அருகே வகுப்பு. படிப்பின் அங்கமாக டாக்சிடர்மி எனும் பயிற்சி. . பறவைகளை துப்பாக்கியால் சுட்டு அங்கம் சிதறாமல் அதன் உள்ளே இருக்கும் மாமிசப் பகுதிகளை எடுத்துவிட்டு பஞ்சைப் பொத்தி நிஜ உருவம் செய்வது. இவருடைய நண்பன் ஹுகும்சிங்.

ரயிலில் கிழவி ஒருத்திக்கு தன் இருக்கையை கொடுத்து உதவுகிறான். அடிபட்ட நாய் குட்டியை பிராணிகள் நல காப்பகம் சென்று சிகிச்சை தருகிறான். உச்சி மலையில் உள்ள ஒரு பூவை ஒரு பெண் கேட்டாள் என்று செங்குத்து மலை ஏறி பறித்து வந்து இந்தா என் சகோதரியே என்று தருகிறான். அவன் இந்தியும் ஆங்கிலமும் கலந்துபெசுவது கூட புரிந்து கொள்ள முடியாமல் முன்னுக்கு பின் முரண் வைத்து பேசி ஜோக்கடிப்பான்.ஒரு முறை டாக்சிடர்மிக்காக செல்லும்போது புதரில் குருவி குஞ்சுகளை பார்க்கிறான். தாய் பறவை எங்கோ இரை தேட போயிருக்கும் என்று பறவை போலவே சப்தமெழுப்புகிறான்.குஞ்சுகள் வெளியே வரும்போது சட்டென சுடுகிறான். குஞ்சுகள் சிதறி தெறித்தன. உடன் வந்த இவருக்கு கோபமும் ஆவேசமும். குஞ்சுகளை ஏன் அப்படி கொன்றாய் என்று கேட்கும்போது இதை கற்றுகொள்ளத்தானே வந்திருக்கிறோம். தோளில் துப்பாக்கியை மாட்டிக்கொண்டு நீ இதை கேட்பது மிகப்பெரிய ஜோக் என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறான். இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்று நினைத்து பார்க்க பயமாய் இருக்கிறது என்று கதை முடிகிறது.கொடியின் துயரம் - ஒரு அருமையான கதை. சுதந்திரம் கிடைக்க போகிறது என்ற சமயத்தில் சிறுவர்கள் குதூகலம் கொள்கிறார்கள். ஏதோ கொண்டாட்டம் என்று. கையெழுத்து பத்திரிக்கை, தாயின் மணிக்கொடி பாடல் எல்லாம் ஜோராக நடக்கிறது. ஜேம்ஸ் மாமா மட்டும் உற்சாமில்லாமல் இருக்கிறார். வானொலி பெட்டியில் போர் செய்திகள் கேட்பார். அவர் எங்கோ கிளம்ப ஆயத்தம் ஆவது போல் இருக்கிறது. “மாமா.. சுதந்திர தினத்துக்கு எங்கள் பத்திரிக்கை மாமா” என்றேன். அவர் சந்தோஷ படவில்லை. “எப்படியா.. எனக்கு டமில் படிக்க வராது பையா .. என்னா எழுதிருக்கே ?”

“சுதந்திரத்தை பத்தி “

“அடடே ..சொடந்திரமா ..ஹா. தம்பி இதை நல்லா ஓட்டக் கூடாதா. இப்பவே சொதந்திரம் சைடுலே பிரிஞ்சி கிலியர மாதிர வருதே ..ஹ்ஹ்ஹா என்று பத்திரிகையை கொடுத்தார். அவர் வழக்கமான மாமாவாக இல்லை. திரும்பி வந்துவிட்டோம். பிறகு அவர் ‘சீமை’க்கு போய்விடுகிறார்.

சுதந்திர தினத்தன்று எல்லோரும் கொண்டாடி கொடி ஏற்றுகிறார்கள். கொடி காற்று வீச்சு குறைவால் தளர்ந்துதான் பறக்கிறது. தாயின் மணிக்கொடி பாரீர் பாரதி பாட்டு பாடுகிறார்கள். அப்போது சலீம் மாமா அவசரமாக வந்தார். என் மாமா இவ்வளவு லேட்டு. சுதந்திரம் வந்து எவ்வளவு நேரம் ஆயிடுத்து என்று சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை. எல்லாம் போயிடுத்துப்பா என்று அப்பாவை பார்த்து அழுகிறார். என்ன ஆச்சு தகவல் தெரிந்ததா என்று கேட்க அவர் கேவிக்கொண்டே சொல்ல ‘அய்யய்யோ உன் தம்பி குடும்பமா.. டெல்லீலையா என்று கத்தி விட்டார் அப்பா. தலையை பிடித்துக்கொண்டார். சிறுவன் மகனிடம் “சலீம் மாமா வுக்கு துக்கம் நிகழ்ந்து விட்டது. இப்போது சுதந்திரம் வந்துச்சுன்னு மார்தட்டிக்கறதா .. மாரடிச்சுக்கறதா தெரியலேடா என்கிறார். பறக்க சக்தி இல்லாம வருத்தமாக தொங்கி கொண்டிருந்தது அந்த கொடி முதல் நாளில் – என்பது இந்த கதை.

மலைகள் கதையில் மிகவும் ரம்ம்யமான சூழலில் மலையின் மேல் ஏறி செல்வதை விவரிக்கிறார்.. மேலும் சென்று மலையின் அடுத்த பக்கத்தை பார்கிறார்.”ஆலமர நிழலில் இருந்து மலையைப் பருகிக்கொண்டு இருந்தேன்” என்று ஒரு வரி. மலையை அம்மா என்று கூப்பிட வேண்டும் போல இருந்தது. ஆள் அரவமே இல்லாத உச்சிக்கு வந்த பிறகு ஏதோ சலங்கைகள் ஒலிக்கும் சப்தம் கேட்கிறது. சென்று பார்த்தால் நம்பவே முடியாமல் இருநூறு பேர் ஆயுதம் ஏந்தி ஒய்வு இல்லாமல் மலையை மலைப் பாறைகளை தாக்கிக்கொண்டிருந்தார்கள். “ஏதோ கடிகார அசைவுகள் போல் அவர்கள் இயக்கம் சீரான வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்தன” என்று ஒரு காட்சி படிமத்தை எழுதுகிறார். சலங்கை ஒலியல்ல. அவை சம்மட்டி ஒலிகள்.

எல்லோரும் போய்விட்டார்கள். அந்த திசையை சற்று நேரம் பார்த்தவாறு நின்றிருந்தேன். எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அதே பெருந்தன்மையுடன் நின்று கொண்டிருக்கும் அந்த மலையை பார்த்து பெருமூச்சு விடுவது தவிர வேறேதும் செய்ய முடியாதவனாக நின்றேன். மலையை திருடி பிழைக்கும் மனித சாதிகளுள் நானும் ஒருவன்தானே ! இது உண்மை. எனக்கும் பசித்தது. இதுவும் உண்மைதான். என்கிறது கதை.

தவளையின் ரத்தம் – கதையில் அதிர்ச்சி. வறுமையில் இருந்த தாத்த தனது பெண்களுக்கு இரண்டாம் தாரம் அல்லது வறுமையான குடும்பம் என்று திருமணம் செய்து கொடுத்தார். அதில் ஒரு அத்தை வசதியாக இருந்தார். பர்மா சென்று வரும் மாமா. ஆனாலும குழந்தை இல்லை. பிறகு ஏதோ ஒரு சாமியார் மீது நம்பிக்கை வைத்து அவர் சொற்படி ஏதோ கருப்பு நிற வில்லையை கணவருக்கு தெரியாமல் பாலில் கலந்து தந்துவிடும்படி சொல்ல இவர் செய்கிறார்.. விரைவில் கரு தரிக்கிறார். குழந்தை பிறக்கிறது. வளர்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக மாமாவின் சடலம் வீட்டுக்கு வருகிறது. அந்த குழந்தை வளர்கிறான். திருமணம் ஆகி பெண் குழந்தை பிறக்கிறது. ஒருநாள் மகனுக்கு காய்ச்சல் வர டாக்டர் வந்து பார்க்க கை அக்குளில் சிறிய கட்டி இருக்கிறது. அவர் மருந்து சொல்லிவிட்டு போகிறார். இந்த அம்மா சாமியாரிடம் செல்கிறார். ஊர் கண்திருஷ்டி அதுதான் என்று சொல்லி காதில் ஏதோ சொல்கிறார். பிறகொருநாள் உடல் மோசமாகி போக டாக்டர் வந்து பார்க்க கையை தொட்டாலே ஊளையிடல் போல கத்துகிறான். கையை தூக்கினால் ஏதோ பொட்டலம் போல ஒன்று வந்து விழுகிறது. ரத்தமும் நிணமுமாக வயிருகிழிந்த ஒரு தவளை குஞ்சு அது. யார் இப்படியெல்லாம் செய்தது என்று கேட்கிறார் ஆனால் மகன் உடல் நிலை மோசமாகி இறந்து போகிறான். அதுமுதல் அத்தைக்கு பைத்தியம் போல ஆகிவிடுகிறது. வெள்ளை புடவையுடன் பேத்தியுடன் வந்து நிற்கும் மருமகளை கூட அடையாளம் தெரியவில்லை.

ஒரு கொத்துப் புல் – கதை கேதார்நாத் செல்லும் பயண அனுபவத்தில் ஒரு விஷயத்தை வைக்கிறார். மலையேற்றத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு முதியவர் மயக்கம் போடுகிறார். மருத்துவம் நடக்கிறது. இவருக்கும் ஆஸ்த்மா என்பதால் முன்னெச்சரிக்கை மருத்துவம். ஆனால் இவர்களுக்கு அந்த குதிரை இவ்வளவு உச்சிக்கு நடப்பது குறித்து அனுதாபம் இருக்கிறது. குதிரைக்கு தரப்படும் மாவுருண்டை உணவு, அது சோர்ந்துபோகாமல் நடப்பது போன்று பலவும் சொல்லி திரும்பும்போது நிலச்சரிவில் ஒரு குதிரை பின்னங்கால் பாறையில் சிக்கி இறந்து போயிருக்கிறது. வாயில் ஒரு கொத்து புல் அப்படியே இருக்கிறது. இந்த குதிரைக்கு மரணம் விடுதலை என்று ஒருவர் சொல்ல அது விடுதலை என்று நாம் எப்படி முடிவு செய்யமுடியும். இந்த வாழ்க்கையை அது வெறுத்தது என்று நாம் சொல்வதற்கில்லை. அதன் வாயில் தின்னப்படாமல் இருந்த கொத்துபுல் வாழ்க்கையின் தீராத பற்றை எனக்கு சொல்லிக்கொடுத்தது என்று ஒரு வரி இந்த கேதார்நாத் பயணத்தின் மீது வைக்கும் விமர்சனமாக கூட பார்க்க முடிவது.

ஊரில் இரண்டு காளி – ஓவியர்களை ஓவிய உணர்வை ரசனையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இப்படியான கதைகளை எழுத எஸ்.வைதீஸ்வரன் போன்றவர்களுக்கு முழு தகுதி உண்டு. நெருக்கமான ஓவிய கல்லூரி வகுப்பு நண்பர்களான ஓவியன் அம்ரீஷ் சிற்பம் படிக்கும் சவிதா நிறைய விவாதிப்பார்கள். அம்ரீஷ் காளியை வரைகிறான். ‘சக்கரங்கள், அரை வட்டங்கள், மின்னல் போல கோடுகள், கிழிந்த நிலையில் மிருக முகங்கள், அங்க திரட்சிகள், சிகப்பு நீலம் வெண்மை மஞ்சள் என் எதிரெதிர் பற்பல வண்ணங்கள் ஓவியத்துக்கு ஒரு கட்டுக்கோப்பை தந்தது.’. இது என்ன விதமான கற்பனை எனும்போது காளி என்ற உருவத்தை கற்பனை செய்யும்போது இந்த கற்பனையை வழிபட சாத்தியம்தான் என்கிறான். ஆதார சக்தியாக உள்ள அதான்த்ரீக அடிப்படைகள் மூலம் உண்டான ஓவியம் என்பதை சொல்கிறான். இரு எதிரெதிர் வண்ணங்கள் இணைவது போல வாழ்வில் நல்லது தீயதும் இணைந்துதான் இருக்கிறது என்றெல்லாம் விவரிக்கிறான். அதை தான் உள்ள விடுதியின் வெளியே மாட்டுகிறான். காளியை வணங்குபவர்கள் இதையும் வணங்குவார்கள் என்று நம்புகிறான். ஆனால் கலையம்சம் தெரியாத முரடர்கள் அவன் இல்லாதபோது வந்து அதை கிழித்து அலங்கோலம் செய்து விடுகிறார்கள். அவன் தங்கி இருக்கும் விடுதியில் கட்டுப்பாடுகள் அதிகம். பிறகு தனது தோழியை நிர்வாண மாடலாக வைத்து ஒரு கலைப் படைப்பை உருவாக்குகிறான். ஆனால் அவன் பெண்களை கூட்டி வந்து தப்பு செய்கிறான் என்று அவனையும் அவன் அறையையும் நிர்மூலமாக்குகிரார்கள். அந்த வருடம் நிர்வாண பெண் சிற்பம் வடித்த சவிதாவுக்கு பதக்கம் கிடைக்கிறது. கலை விமர்சகர்கள் அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சில அழகிய வரிகளை மட்டும் சொல்லிவிட்டு கட்டுரை முடியட்டும்.

ஆலமர நிழலில் இருந்து நிழலை பருகிக் கொண்டிருந்தேன்நாவல்பழ நிற மேனியுடன் ஓவியத்தில் உட்கார்ந்திருக்கும் பழங்குடிப் பெண்

அந்த ஓவியங்களை யதார்த்தத்தை சற்றே கலைத்துப் போட்டுவிட்டு ..

தெருக்களை அற்புதமாக காட்டுவது வெளிச்சம் மட்டுமல்ல. அதற்கு பின்னணியில் திரையிட்டிருக்கும் இருட்டும்தான்.

ஒளியின் மெல்லிய குறுகலான முனகல்தான் இருட்டுஅங்கே போகும்போது பூக்களை பறிக்க மாட்டேன். தொட்டு தொட்டு பார்ப்பேன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தொகுப்பில் கதைகள் வெளியான வருடம் குறிப்பிட்டிருக்கலாம். இப்படியான நீண்ட கால நீட்சியை தொகுக்கும் கதையம்சத்துக்கு அது முக்கியமான ஒரு வாசிப்பு உதவிக் கருவி.

முன்னட்டையில் உள்ள எழுத்தாளர் புகைப்படத்தை பின்னட்டையில் போட்டு, முகப்பு அட்டையில் நல்லதொரு ஓவியத்தையோ அல்லது நவீன டிசைனையோ அமைத்திருக்கலாம் என்று தோன்றியது. இவர் எழுத்தாளரும் மட்டுமல்ல ஓவியரும் கூட.

ஐம்பது வருட காலத்தை, அதன் மெதுவான மாற்றத்தை அடக்கி இருக்கக்கூடிய ஒரு புத்தகப்பெட்டி இது.

___________________________________________________________________________

 (Link to original article & author's blog:

 https://padithenpagirnthen.blogspot.com/2021/09/blog-post.html )

வைதீஸ்வரன் கதைகள்

எஸ். வைதீஸ்வரன்

கவிதா பப்ளிகேஷன், kavithapublication@gmail.com

 

 

 

 

 

 

Sunday, August 15, 2021

எழுச்சி

                                 எழுச்சி

                                   - வைதீஸ்வரன் -

 


 


பாறைக்  கூட்டங்களிடையே
நீ கல்லுடைக்கும் ஓசைகள்
யாருக்குக்  கேட்குமடீ  பெண்ணே!

தலையைத்  தொட்ட  மாதிரி
அங்கே  ஒரு  நிலவு...
அது  உன்  கண்ணுக்கு வெகுதூரம்....

அவ்வப்போது  வீசுகிறது  அமைதியாகக் காற்று
ஆனாலும்  அகாலங்களிடையே
இடை இடையே  மிதக்கும் சாம்பல் தூள்
உயிர் ஓலங்களின்  பேரோசையுடன்...

.அய்யோ  கடவுளே!
இறங்கி  வா....
இறங்கி  வா...

கையில் பாறைத்  துண்டை  இறுக்கிக் கொண்டு
இறங்கி  வா

உன்  வீட்டை  யாரோ  இடிக்கிறார்கள்..
பாதைகள்   தாறுமாறாகின்றன.

கிலுகிலுப்பைகளை  இரைத்து விட்டு
குழந்தைகள்  எங்கோ  தொலைந்து  போனார்கள்..!

கண்டு  பிடி..கண்டு பிடி...
வானத்தைக்  கிழித்துப்  பார்
சூரியனை  மீண்டும்  பெற்றெடு
உலகத்தை  இன்னும் ஒரு முறை
ஒரே ஒரு  முறை
சத்தியமாய்க்  கட்டிப் பார்...

பெண்ணே!
பாறைகளுக்கிடையே  நீ கல்லுடைத்த  ஓசைகள்
தான்  அதற்கு  உரமாகக்  கூடும்.....

..

(Bob Dylan இசைத்த மொழியை மீண்டும் கேட்ட போது) 

_____________________________________________________________

Tuesday, May 18, 2021

                                ஒரு  விண்ணப்பம்

                           - வைதீஸ்வரன்-
                                   

தீயென  மின்னல்  தோன்றிக்

கணத்தில் மறைந்து  போகிறது  இருட்டுக்குள்.

எனைக்  கடந்து   செல்லும்   வேளையில்

உன்  சிரிப்பும் அப்படித் தான்….

எனக்கு மட்டும் மழை பெய்ய வேண்டுமென்று

ஏங்கும் மாலைகளில்

எல்லோருக்கும் பெய்கிறது  மழை.

சுயநலமற்ற   காதலுக்கு

நான்  இன்னும்  அருகதையற்றவன்..

அது வரை  அன்பே…நீ  என்னை

அனாதையாக்கி விடாதே!..


______________________________________________________

Monday, May 3, 2021

அர்த்த ஜாமத்தில்

 


                                   அர்த்த  ஜாமத்தில்


                                 - வைதீஸ்வரன் -
    இருட்டு வேலிக்குள்

    கம்பிகளைப் பிடித்துக் கொண்டு

    நிற்கிறது  ஜன்னல்…


     சதை முளைத்த  கண்களென

     மலங்கிய வெளிச்சச்   செதில்கள்

     தெரு மேனியில்!


      இரவுகள்  பூசிய இமைத் துவாரங்களில்

      தப்பித்துக்  கொள்ளும்  கனவுப் பூச்சிகளின்

      கண்காணா  நினைவுக் கூச்சல்கள்….


      வாழ்க்கையின் கடை வாய்  நீரொழுக்கு

      காலக் கந்தலின்  கசடுகளில்..


       ஒளிந்து  கொண்ட  சூரியனை

       உருண்டு பிடிக்க  வெளியில்

       திரியும்  வெகுளியான  பூமி.


       பயத்தை  ஆலாபித்துப்  பார்க்கும்

       தனித்த  நாய்களின்  விபரீத  எதிரொலிகள்

       பத்திரமற்ற  எதிர்காலங்களுடன்

       பழைய நினைவுகளில்  பதுங்கிக் கொண்டு

       புதைந்து  கிடக்கும்  நகரங்களை

       தாலாட்டும் விதமாய்

       கோலாட்டி வலம் வரும்

       கூர்க்காக்களின்  பகற்கனவுகள்..


        இரவை  இல்லையென்று

       அசுர விளக்குகளால் அழித்து  விரட்டி

        வியர்வைக் கடலில்  பேய்ச்சிரிப்புகளில்

        பந்தலில்  பந்தடித்து  எம்பும்

        வினோத  விளையாட்டு மனிதர்கள்


          அர்த்த ஜாமத்தில்!!


                                   *******************


 


                           

Saturday, February 13, 2021

 
ஞானக்கூத்தன்    

( இரங்கல்  நினைவுகள் - 2016)  

( மீள் பதிவு )

- வைதீஸ்வரன் - 

கவிஞர்  ஞானக்கூத்தனை  நடை  பத்திரிகை  ஆரம்பித்த நாட்களிலிருந்து  எனக்குப் பழக்கம்.   முத்துசாமி சி. மணி  நடத்திய  நடை  இதழ்   ஞானக்கூத்தன்  என்கிற அருமையான கவிஞரை  அறிமுகப் படுத்தியது முக்கியமான  நிகழ்வு.

அந்த  இதழில் வந்த அவர் கவிதைகளை  யார்  வாசித்தாலும்  அடக்கமுடியாமல்  வாய்விட்டு சிரிப்பார்கள்.  திரும்பத் திரும்பப் படித்து  படித்து   சிரிப்பார்கள்.  இதுவும் ஒரு  முக்கியமான  நிகழ்வு. ஏனென்றால் அரசாங்கக் கட்டிலில்  முதல் முறையாகத்   தூங்கிய மோசிகீரனாரைப் போலவே  எழுபதுகளில்  வாசித்தவுடனே  வாய்விட்டு சிரிக்கும்படியாக  முதல்   புதுக் கவிதை  எழுதியவர் ஞானக்கூத்தானாகத்  தான் இருக்க முடியும்.  புதுக் கவிதைக்கு  முதல்  சிரிப்பை  வரவழைத்தவர்  ஞானக்கூத்தன்   என்று கூட  சொல்லலாம்

அவர்    தமிழ் மொழியிலும்  கவிதையியலும்  சீரிய  தேர்ச்சியும் நாட்டமும் கொண்டவர்.  ஆயுட்கால முழுவதும்  அதைப் பற்றி மேலும் விரிவான நுண்மையான  தகவல்களை  சேகரிப்பதிலும்  அதன் அடிப்படைகளில்  கவிதைகளை வடிவாக்குவதிலும் ஒரு படைப்புமனம்  கொண்ட  தமிழ் அறிஞர் போலவே  செயல் பட்டவர்.

அந்தக் காலத்தில்  சங்க இலக்கியங்களின் கவிதைகளை  ஆங்கிலத்தில் அறிமுகப் படுத்திய  ஏ. கே ராமானுஜனின் புத்தகங்களின் வரவு   புதுக் கவிதை  ஆர்வலர்களுக்கு ஒரு  பெரிய விழிப்புணர்வைக் கொடுத்தது.  நவீன கவிதையின்  அம்சங்கள்  எல்லாமே சங்க இலக்கியங்களிலிருந்து தொடங்குவதை அடையாளப் படுத்திய அந்த வெளியீடு புதுக்கவிஞர்களின்   ஆர்வத்தையும்  முயற்சிகளையும் வெகுவாக பாதித்தது..  அதற்கு இணையாக தமிழில்  நமது மரபு இலக்கியங்களைப் பற்றியும் சமுஸ்கிருத கவி இயல் கோட்பாடுகள் பற்றியும்  செய்திகளை  எளிமையாக மீட்டுத் தந்த  பெருமை  கவிஞர் ஞானக்கூத்தனையே சாரும்.

அவர்  கவிதைகள்  அவரைப் போலவே  மிக  எளிமையானவை உரத்துப் பேசாதவை.  ஆனால்  மீள் வாசிப்பைத் தூண்டுபவை. அழமான கருத்துக்களின் அதிர்வை ஏற்படுத்தக் கூடியவை .அவர் விட்டுச் சென்ற கவிதைகளும்  கவிதை இயல் பற்றிய  வெளியீடுகளும்  தமிழின் முக்கியமான   ஆவணமாக நிலைக்கக் கூடியவை

க நா சு வின்  அடிச்சுவட்டில் தொடர்ந்த  ஞானக்கூத்தன்  புதுக்கவிதைக்கு  இன்னொரு வித்யாசமான முகத்தைக் கொடுத்தவர்.   .  அவரும்  ஆத்மாநாம்  ராஜகோபாலனுடன்  இணைந்து வெளியிட்ட  “ழ” பத்திரிகை  அந்த  வித்யாசமான கவிதைப் போக்கை அருமையாக  ஆவணப் படுத்தி இருக்கிறது

 ஞானக் கூத்தனின்  கவிதைகள் பல இளங் கவிஞர்களை  உற்சாகப் படுத்தி  ஊக்குவித்திருக்கிறது. 

அவர்  கவிதைகள்  என்றுமே  ஸ்வாரஸ்யம்  குறையாதவை.  சிறந்த இலக்கியத்தின்  செழுமையைக் கொண்டவை.


 *       

ஒருவரின்  மரணம்  நாம்  எதிர்பார்க்க்க் கூடியது  தான்.  ஆனாலும்  அது  நாம்  மிகவும்  நேசித்துக் கொண்டாடும் ஒருவருக்கு  நேரும்போது  சற்று அதிர்ச்சியாகத் தான்  இருக்கிறது.

அவர்  விட்டுச் சென்ற  கணிசமான  படைப்புகள்  என்றும் அவர் இருப்பை நிரந்தரமாக  நிலைக்க வைக்கும்

அப்பாவை  மிகவும் நேசிக்கும் அவரது  இரண்டு  புதல்வர்களுக்கும்  மனைவிக்கும்  இது  ஒரு மிகவும்  வேதனையான  பிரிவாக  இருக்கலாம்.

அவர்களுக்கு  நம் ஆழ்ந்த  ஆறுதலும்  இரங்கலும்  நாம் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம் .

________________________________________________________________________________________

 

                     

Tuesday, January 12, 2021

ஜன்னலின் கீழே உள்ள ரோஜாக்கள்

 Roses under my Window

These roses under my window make no reference to former roses or to better ones; they are for what they are; they exist with God to-day. There is no time to them. There is simply the rose; it is perfect in every moment of its existence. Before a leaf-bud has burst, its whole life acts; in the full-blown flower there is no more; in the leafless root there is no less. Its nature is satisfied, and it satisfies nature, in all moments alike. But man postpones or remembers; he does not live in the present, but with reverted eye laments the past, or, heedless of the riches that surround him, stands on tiptoe to foresee the future. He cannot be happy and strong until he too lives with nature in the present, above time.

(Ralph Waldo Emerson)

**

ஜன்னலின் கீழே உள்ள ரோஜாக்கள் 


என்  ஜன்னலுக்குக் கீழே தெரியும்  ரோஜாச் செடிகள்  எப்போதும் தம்மை தமக்கு  முந்திய  ரோஜாக்களுடனோ அல்லது  அருகிலுள்ள தம்மை   விட மேலும் அழகான ரோஜாக்களுடனோ ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை.  அவைகள்  தம்முடைய   படைப்பின்  சுயத்தன்மையுடன் வாழ்ந்து  கொண்டிருக்கின்றன. 

அவைகள் கடவுளோடு  வாழ்ந்து  கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு “காலம்”   என்று  ஒன்றில்லை.  எளிமையானவை   ரோஜாச்செடிகள்.  அவைகள் தம் வாழ்வின்  ஒவ்வொரு கணத்திலும்  பூரணமாக  இருக்கின்றன. 

ஆனால்  மனிதனின் எண்ணங்கள் எப்போதும் முன்னும் பின்னுமாக அலைந்து கொண்டிருக்கிறது. அவன் நிகழ்கணத்தில் ஒரு போதும் நிலைத்து வாழ்வதில்லை. அவன் எண்ணங்கள் இறந்த கால ஏக்கத்தினாலும்  எதிர்காலத்தை  ஏறிட்டுப் பார்க்கும் வீண்முயற்சியினாலும் தற்கணத்தில் சூழ்ந்திருக்கும் செழுமைகளை    கவனிக்காதவனாக வாழுகிறான்.

இயற்கையோடு இயைந்து காலத்தைத் தாண்டி நிகழ்கணத்தில் வாழந்தால் அன்றி அவன் மகிழ்ச்சியாகவும் வலிமையானவனாகவும் வாழ முடியாது. 

(மொழிபெயர்ப்பு : எஸ். வைதீஸ்வரன் )

_______________________________________________________________

 


Thursday, December 10, 2020

உயரத்தில் ஒரு நாள்

 

  உயரத்தில்  ஒரு  நாள்

                                          - வைதீஸ்வரன் -


சுற்றிலும்  சோப்பு நுரை  மேகங்கள்

விரிந்த  வெள்ளை வனாந்தரங்கள் 

இடைப்பாழில்  நீலம் பாரித்த  ஏரிகளைப்

போலி செய்யும்  துளிவானம்!

கீழே  நிலத்துக்குப் பல்முளைத்தது  போல்

கட்டிடக் குப்பல்கள்  குறுக்குமறுக்காய்.

உயரப் பறக்கும் போது

ஊர்கள்  பெயரற்றுப்  போகின்றன 

விமானத்துக்குள்  நகரும்  மனம்

இரண்டு விதமாய்  மகிழுகிறது

வலதுபுறம்  வானமண்டலக் கோலாகலம்

இடப்புறம்  என் விரலைத்தொட்டுக்

குறும்பாய்  சிரிக்கும் ஒரு மழலை முகம்

                                                         ****

   

 

(ஒரு விமானப் பயண  அனுபவம்)