vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, January 3, 2019



ஓவியத்தின் மறுபக்கம்


-எஸ். வைதீஸ்வரன்-




                                                  ( ஓவியம்: எஸ். வைதீஸ்வரன் )

பரோடாவில் ஓவிய மாணவன் ராம் கிஷன் எனக்கு அடுத்த அறையில் தங்கி இருந்தான். அவன் அப்போது ஓவியக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.

நான் அங்கே மியூஸியம் நிர்வாகக் கல்விக்காக தொடங்கியிருந்த பட்டயப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
என்னுடைய கல்விக்கூடம் பரோடா கலைக் கலாசாலையின் இன்னொரு பகுதியில் இயங்கிக் கொண்டிருந்தது.

கல்லூரிக்கு அதிக தூரமில்லாமல் ஒரு 20 அறைகள் கொண்ட தனியார் குடியிருப்பு இருந்தது. கலைக் கல்லூரியில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் தங்குவதற்கு அது மிகவும் சௌகரியமாக இருந்தது

இப்போது அந்தக் குடியிருப்பை வரலாற்று சிறப்பு மிகுந்ததாகக் கூட சித்தரிக்கலாம் ஏனென்றால் அந்த அறைகளில் அப்போது தங்கியிருந்த ஓவிய மாணவர்களில் பலர் பிற்காலத்தில் சர்வதேச அங்கீகாரம் வாய்ந்த ஓவியர்களாக புகழ் பெற்றார்கள்

ஜயந்த் பாரிக்'; குலாம் மொகமது ஷேக்; பூபன் காக்கார் லக்ஷ்மண் கௌடா இவர்களெல்லாம் அங்கே இருந்தார்கள். நானும் ஓவியர் எஸ். கே ராஜவேலுவும் ஒரே அறையில் தங்கி இருந்தோம். ராஜவேலு சென்னைக்கலைக் கல்லூரியிலிருந்து இங்கே மேலும் பயில்வதற்காக உபகார சம்பளத்தில் வந்திருந்தான்

ராஜவேலுவுக்கு தனி அறையில் தங்குவதற்கு விருப்பமோ வசதியோ இல்லை. தவிரவும் எங்களுக்குள் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. நாங்கள் இருவருமே சேலத்துக் காரர்கள்.
அங்கே குஜராத்தி மராட்டிகளின் அரட்டை சப்தங்களுக்கிடையில் நாங்களும் அசந்துபோய் விடாமல் சுகமாக தமிழில் பழங்கதைகளை உரக்கப் பேசி சிரித்துக் கொண்டிருக்க முடிந்தது.
அந்த வித்யாசமான மொழிச் சூழல்களிடையே நாங்களும் சமமான சகஜத்தன்மையுடன் இயல்பாக அங்கே இருக்க முடிந்ததற்கு தமிழ் கை கொடுத்தது. அது மிகப் பெரிய ஆறுதல்!!

அன்னிய பாஷை பேசுபவர்களுக்கு நடுவில் மொழி தெரியாத ஒருவனை தனியனாக வசிக்க வேண்டுமென்று நிர்ப்பந்தித்தால் அதை விடக் கொடுமையான தண்டனையை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது! இருட்டில் கட்டிப் போட்டது போன்ற நிலையில் இருப்பான். அத்தகைய சூழலில் உண்மையிலேயே நானும் ராஜவேலுவும் பரஸ்பரமான பக்க பலத்துடன் இருந்தது பெரிய நிம்மதியாக இருந்தது

ராஜவேலு என்னை "அண்ணே.” என்று மரியாதையாகக் கூப்பிட்டாலும் வேறு விதங்களில் அவன் எனக்கு ஆசானாக ஆதர்சமான ஓவியக் கலைஞனாக இருந்தான். ஓவியங்களின் பல அடிப்படைகளை வெகு சுலபமாக எளிமையாக எனக்கு காண்பித்துக் கொடுத்து விடுவான். நான் முழு நேர ஓவிய மாணவனாக இல்லாமலிருந்தாலும் முழு நேரமும் ஓவியங்களைப் பற்றி சிந்திப்பதில் ஆர்வமுள்ளவனாக இருந்தேன் ஓவிய சம்பந்தமான பல ஓவிய மேதைகளைப் பற்றிய விஷயங்களை ராஜவேலுவுடன் பேசிக் கொண்டிருப்பது தான் எனக்கு வாய்த்த அருமையான ஓவியக் கல்வியும் பயிற்சியும்.
ஒரே அறையில் மிகவும் தேர்ச்சி பெற்ற ராஜவேலுவும் ஒரு கவிஞனின் உற்சாகத்துடன் விடுதலையாக வரைந்து பார்ப்பதில் ஆர்வமுள்ள நானும் அவரவர் போக்கில் வரைந்து கொண்டிருந்தோம்.

ராஜவேலு வரைவதைப் பார்ப்பது ஒரு பெரிய உற்சாகமான அனுபவமாக இருக்கும். அந்த மாதிரி சமயங்களில் அவன் அறைக்குள் நுழையும் போதே ஒரு வித உச்சஉணர்வு நிலையில் இருப்பான் . வாயில் விஸில் ஊதிக் கொண்ட வருவான். ஏதோ ராகத்தை இழுத்துக் கொண்டிருப்பான்.. பரபரவென்று சட்டையைக் கழட்டி தூர எறிவான் உடம்பில் என்னென்ன துணிகள் உண்டோ அத்தனையும் கழற்றி எறிவான். மூலையில் நான் உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டு அரையாடையை அவிழ்த்துப் போடுவதைத் தவிர்ப்பான்!. கேன்வாஸை பக்குவமாக சுவற்றில் சாய்த்து வைத்து விட்டு எதிரே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்வான். பிரஷ்ஷை எடுத்து கேன்வாஸில் கையை வைத்தவுடனே கை எடுக்காமல் வரைவான். தடையற்ற நீரோட்டம் போல் ஓவியம் எதிபார்க்காத வடிவ ஒழுங்குடன் நேர்த்தியாக கேன்வாஸின் பரப்பு வெளியை நிறைவான கலை அழகுடன் நிரப்பிக் கொண்டே இருக்கும்..
பொதுவாக அவன் ஓவியங்கள் எல்லாமே பெண்மையின் அற்புத உடல் நளினத்தையும் இசைப் பான்மையையும் திரட்சியான வாழ்வின் செழுமையையும் சித்தரிப்பதாக இருக்கும்

அஜந்தா எல்லோரா ஓவியர்களின் நேரடியான நவீன வாரிசாக ராஜவேலு திகழ்ந்தான். ஆனாலும் நவீன கோட்பாடுகளுக்கு புறம்பானதாக. அதீதம் அதிகமாகவே தெரியும். ஆனால் ஓவியங்களின் அழகுணர்ச்சி பழமையைப் போர்த்திக் கொண்ட புதிய வடிவத்தில் நளினமாக இருக்கும்.


                                                          ( ஓவியம்: ராஜவேலு )

படம் திருப்தியாக வரைந்து முடித்தவுடன் எழுந்து பின்னால் இரண்டடி நகர்ந்து தலையை இரண்டு பக்கமும் சாய்த்து சாய்த்து படத்தை பார்ப்பான். மனதுக்கு திருப்தியாக இருந்தால் ஒரு காதல் பாட்டை. பலமாக பாடிக் கொண்டே வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்வான்

அவன் ஓவியங்கள் வரையும் போது நான் ஒரு இடைஞ்சலாக இல்லை என்று உணர்ந்து கொண்டேன். சந்தோஷமாக இருந்தது.

என்னுடைய ஓவியங்கள் சற்று வித்யாசமாக இருந்தன. உருவங்கள் யதார்த்தமாக தோன்றாமல் கனவுலக சித்திரமாக வெளிப்பட்டது. ராஜவேலு மாதிரி பயிற்சி பெற்ற ஓவியன் இதை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க முடியும் என்று எனக்கு சலனமாக இருந்தது. ஆனால் ராஜவேலு அதை ஊக்கப் படுத்தினான்.
உங்கள் ஓவியங்கள் pure lines வகையானது மனத் தடங்கல் ஞாபகங்கள் இல்லாத நேரடியான கவித்துவ வெளிப்பாடுPaul Klee போன்ற ஓவியனின் சித்திரங்கள் போல " என்றான்”.
"இருந்தாலும் Space என்கிற கட்டுமானத்தை எப்படி ஓவியங்கள் மூலம் செறிவாக்குவது என்பதை மேலும் கவனமாக வளர்த்துக் கொள்ளுங்கள்" என்பான்அவன் ஒரு நல்ல ஆசான்.

அவன் கொடுத்த ஊக்கத்தில் நானும் என் வழியில் படங்கள் வரைந்து கொண்டிருந்தேன். கேன்வாஸுக்கு பதிலாக தடிமனான அட்டைகளில் [hard board] சில ஓவியங்கள் வரைந்தேன். அதில் ஒன்று சற்று நீளமான வித்யாசமான அமைப்புடன் ஒரு பெண்ணின் முகம் . அதன் வித்யாசத்தால் அதற்கு கவனத்தை ஈர்க்கும் விதமான அர்த்தமுள்ள பார்வையை உணர முடிந்தது. ராஜவேலு நன்றாக இருப்பதாக சொன்னான்.


                                                    ( ஓவியம்: எஸ். வைதீஸ்வரன் )

ஓவிய நண்பன் ராம்கிஷன் சற்று ஒதுக்குப் புறமான வளைவில் இருந்த அறையில் இருந்தான். அவன் அடிக்கடி எங்கள் அறைக்கு வந்து ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பான். அவனுக்கு ஏனோ மதறாஸிகளைக் கண்டால் ஒரு பாசம். அவன் பேசுவது சற்று வித்யாசமானதாக குரல் பெண் குரலின் மென்மையுடன் ஒலிக்கும்

அந்த சமயங்களில் அவன் ஓவியங்களைப் பற்றி எதுவும் பேச மாட்டான் எனக்கு சற்று வியப்பாக இருக்கும்

மதறாசிகள் நல்லவங்க... ஒழுக்கமானவங்க... தினமும் கோவிலுக்குப் போவாங்க..... பூஜை செய்வாங்க... மதறாஸ் மசாலா தோசா ரொம்ப நல்லா இருக்கும்....” என்று பேசிக் கொண்டிருப்பான்

ராஜவேலுவுக்கு அவன் பேசும் விதத்தைப் பார்த்தால் சிரிக்க வேண்டுமென்று தோன்றும். என்னிடம் கிண்டலாக ஏதோ முனகுவான்சாதுவான ராம்கிஷனை எனக்குப் பிடித்திருந்தது.

அவ்வப்போது அவன் அறைக்கு போவேன். அந்த சமயங்களில் மட்டும் அவன் தன் ஓவியங்களைப் பற்றி மிக பெருமையுடன் பேசுவான்.

ஓவியங்கள் இலக்கண சுத்தமாக இருக்க வேண்டும். இவங்க எல்லாம் கன்னா பின்னாவென்று வரையறாங்க!...All Nonsense..Bullshit! நான் இயற்கை காட்சி வரைஞ்சிருக்கேன் பாரு! இது தான் முறைப்படி வரையறது! இலக்கண சுத்தமா இருக்கணும்! இதைப் பாரு!” என்று அந்த ஓவியத்தை நிமிர்த்தி மேஜையின் மேல் வைத்தான்

இரண்டு தென்னை மரம் பட்டையாக சலனமற்ற ஒரு ஆறு பக்கத்தில் குடிசை. பளபளவென்று பொம்மைகள் மாதிரி குடத்துடன் கிராமத்து பெண்கள் விரைத்த காதுகளுடன் பசு மாடு...எல்லாம் "இலக்கண சுத்தமாக இருந்தது....ஆனால் உயிர் எங்கே போச்சு! "

என்னா? பாத்தியா? எப்படி இருக்கு? Any way you are not Art student! “ ஓவியத்துலே இப்படித் தான் நம்ம கிராமத்தை சித்தரிக்கணும்!..எப்படி?” என்பான். என் பாராட்டுக்காகவோ அபிப்ராயத்துக்காகவோ அவனுக்கு ஆர்வமிருப்பதாக தெரியாது. ஆனால் நான் தான் எனக்குள் பொங்கி வந்த ஏமாற்றத்தை அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

அப்போது நவம்பர் மாதம் என்று நினைக்கிறேன். எங்கள் பயிற்சிக் காலம் முடிய 15 நாட்கள் தான் இருந்தது ராஜவேலு தில்லி தேசீயக் கலைக் கூடத்திற்கு ஏதோ பொருட்காட்சி சம்பந்தமாக போக வேண்டி இருந்தது. திரும்பி வர ஒரு வாரமாகலாம்.

அப்போது ஒரு நாள் ராம்கிஷன் என் அறைக்கு வந்தான். அறையில் சாய்த்து வைத்திருந்த என் படங்களை அரைக் கண்ணால் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்.

"என்ன விஷயம் ?"    என்றேன்.

நீ ஆமதாபாத் பாத்திருக்கயா?"

இல்லை..”

இப்போ ஒரு சான்ஸ்!.... அங்கே குஜராத் கலைக் கூடத்துலே ஒரு ஓவியக் கலைக் காட்சி வைக்கறாங்க! என்னுடைய ஓவியங்களை அங்கே வைப்பதற்காக கொண்டு போகப் போறேன்! நீயும் வரயா?..”

நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

வேணுமின்னா நீயும் உன் படம் ஒன்றைக் கொண்டு வா! நீயும் கலைக் கல்லூரி மாணவன்னு சொல்லிக்கலாம்....உன்னை பெரிசா எடுத்துக்க மாட்டாங்கஜாலியா போய்ட்டு வரலாமா?"  என்றான்.

எனக்கு ஊரைப் பார்க்கிற ஆர்வம் இருந்தது. நான் சரியென்றேன்.
நாளைக்குக் காலையில் ரூமுக்கு வா!" என்று சொல்லி விட்டுப் போனான்.
மறு நாள் காலை எனக்கு ஆசையாக இருந்த என்னுடைய படம் ஒன்றை அட்டைக் காகிதத்தில் கட்டி எடுத்துக் கொண்டு அவன் அறைக்குப் போனேன்,

என்ன கிளம்பலாமா?  as a friend எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ன முடியுமா? எனக்கு எப்பவுமே தோள்பட்டை வலி ! " என்று கையைக் காட்டினான்
ஒரு கோணிப் பைக்குள் கட்டி வைத்திருந்த அவனுடைய இரண்டு படங்களை ரயில் நிலையம் வரை நான் சுமந்து கொண்டு வர வேண்டி இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை இருந்தாலும் இப்போது மறுக்கமுடியாத நிலைமை!

மதறாஸிகள் எப்போதுமே நல்ல நண்பர்கள்" என்று எனக்கு ஒத்தடம் கொடுப்பது போல் சொல்லிக் கொண்டே வந்தான்.

ஆமதாபாத்தில் அத்தனை பேரும் குஜராத்தி மொழியிலேயே பேசினார்கள் ராம் கிஷன் ஒவ்வொரு முறையும் அவன் நண்பர்களிடம் குஜராத்தியில் என்னை அறிமுகப்படுத்தினான். அசட்டுச் சிரிப்பைத் தவிர எதுவும் பேச முடியவில்லை. அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையாக இருந்தது.

ஒருவாறாக கலைக் கூடத்தில் கொண்டு போய் சுமைகளை இறக்கி விட்டு "அப்பாடா" என்று பெரு மூச்சு விட்டேன்.

ராம்கிஷன் அவன் படங்களை அக்கறையுடன் அவர்களிடம் சமர்ப்பித்து அதற்கான கடிதத்தை வாங்கிக் கொண்டான்.

உன்னுடைய படத்தையும் கொடு!" என்றான். கொடுத்தேன் குஜராத்தியில் ஏதோ அசிரத்தையாக ஏதோ அவர்களிடம் சொன்ன மாதிரி தொனித்தது. எனக்கும் கடிதம் கொடுத்தார்கள்.
தோளில் தொங்கிய படங்களின் பாரம் ஒருவாறாக குறைந்தது மிகவும் நிம்மதியாக பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

அடுத்த வாரம் படங்களைத் தேர்ந்தெடுத்து கண்காட்சியில் வைத்து விடுவார்கள். காட்சியில் வைக்கப்பட்ட ஓவியர்களின் பெயர்கள் அச்சிட்ட விவரம் அழைப்பிதழுடன் நமக்கு தபாலில் வரும்" என்றான் ராம்கிஷன்

ஆமதாபாத் அழகாக இருந்தது. குஜராத்திகளின் விசேஷமான கைப்பக்குவமும் மணமும் உள்ள சிற்றுண்டிகள் மிகவும் ரஸிக்கத் தகுந்ததாக சுவையாக இருந்தது. ராம்கிஷனிடம் அதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்.

ஒரு இரண்டு வாரங்கள் கழித்து சொன்னபடியே ஆமதாபாத்திலிருந்து அழைப்பிதழ் அழகான உறையில் தபாலில் எனக்கு வந்தது.

ஆவலாக பிரித்துப் பார்த்தேன். அத்தனையும் குஜராத்தி மொழியில் அச்சிடப் பட்டிருந்தது. இந்த அழைப்பிதழ் ராம்கிஷனுக்கும் வந்திருக்க வேண்டும். ஆவலுடன் அவன் அறைக்குப் போனேன்.  அப்போது தான் அவன் வெளியே நடந்து கொண்டிருந்தான். என்னை பார்த்தானா என்று தெரியவில்லை.

திரும்ப என் அறைக்கு வந்து ராஜவேலுவிடம் இதைக் காட்டி வாசிக்கமுடியவில்லையே என்றேன்

அவன் பிரச்னை இல்லை வா! என்று நான்காவது அறையிலிருந்த ஜயந்திடம் இதைக் காட்டி படிக்க சொன்னான்

பொடிப் பொடியாக பழுப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்த ஓவியர்களின் பட்டியலை கஷ்டப்பட்டுத் தான் அவன் படிக்க வேண்டி இருந்தது. திடீரென்று அவன் முகம் பிரகாசமானது "congratulations" என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டான். என் ஓவியம் தேர்ந்தெடுக்கப் பட்டு காட்சியில் வைக்கப் பட்டிருந்தது.

ராஜவேலு என்னைத் தட்டிக் கொடுத்து "ஸபாஷ் அண்ணே! “ என்றான்

ராம்கிஷன்?........” என்று கேட்டேன்.
ஜயந்த் ஒரு முறைக்கு இரண்டு முறை பார்த்து விட்டு முடிவுக்கு வந்தவனாக உதட்டைப் பிதுக்கினான்.

அதற்குப் பிறகு என் பயிற்சிக்காலம் முடிந்து ஊருக்குக் கிளம்ப இரண்டு மூன்று நாட்கள் தான் இருந்தன. ராம்கிஷனைப் பார்க்கவே முடியவில்லை. ஒரு வேளை அவனும் பல வேலைகளில் இருப்பான் ஊருக்குக் கிளம்ப வேண்டுமல்லவா? என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்

எதிர்பாராதவிதமாக ஒரே ஒரு முறை அவன் எனக்கு நேராக கடந்து போகும்படி நேர்ந்தது.. பரபரப்புடன் அவனை நிறுத்திப் பேச முற்பட்டேன் ஆனால் அவன் நிற்கவேயில்லை!. என்னைத் தெரியாதவனைப் போல் கடந்து போய்க் கொண்டிருந்தான். குனிந்த தலையை நிமிர்த்தவேயில்லை போய்க் கொண்டிருந்தான்!



எதிர்பார்க்காமல் எனக்கு நேரும் நல்ல நிகழ்வுகள் இப்படிப்பட்ட விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன எனறு நினைக்க வருத்தமாக இருந்தது.! .



                                                    (காலஞ்சென்ற ஓவியர் ராஜவேலு)
______________________________________________________________________________


( நன்றி: அம்ருதா இதழ் , ஜனவரி 2019 )