vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com
Showing posts with label வைதீஸ்வரன் எழுதிய சிறுகதைகள். Show all posts
Showing posts with label வைதீஸ்வரன் எழுதிய சிறுகதைகள். Show all posts

Sunday, August 5, 2012


கல்லை எறிந்தவன்

                    -------------------------------  
வைதீஸ்வரன்

மீண்டும் பழைய கதையைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மனதுக் கென்று சில பாரபட்சங்கள் இருக்கின்றன.அது தனக்குத் தோன்றும் விஷயங்களை சத்தியமாக நம்புகிறது.!!

              ************ **** ***.
என்னுடைய பத்தாவது வயதில் எனக்கு என் தாய்மாமன் வீட்டிற்கு செல்வ தென்றால் அவ்வளவு சந்தோஷம்.  விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்பேன். பரிட்சை முடிந்த மறு நாளே கோயம் பத்தூருக்கு கிளம்பி விடுவேன்..

மரங்களும் செடிகளும் சூழ இருந்தது மாமாவின் சிவப்பு வீடு. மாமா ராணுவ கணக்கியல் துறையில் பணி புரிந்தாரென்று நினைக்கிறேன் அந்த வீடு  அந்தத் துறையில் வேலைசெய்பவர்களுக்காக ஒதுக்கப் பட்ட குடியிருப்புவாரியத்தில் அமைந்திருந்தது. மாமா இருந்த பகுதி யும் வீடும் எனக்கு மிகவும்பிடித்த பசுமையான சூழல்.அங்கேபக்கத்து வீட்டில் எனக்குப்பிடித்த  சினேகிதன் பாலு இருந்தான். பொழுது பர பரப்பாக போகும்.

வீட்டு இலக்கம் ஒன்றைத் தவிர மற்றபடி எந்த மாற்றமுமற்ற வீடுகள். தெருவோரம்  சீரான  இடைவெளிகளில் நட்டுவைத்த சிமெண்ட் கம்பங்களில் இழுத்துக்கட்டப்பட்ட  முள்கம்பிகள் தான்  அந்தத்தெரு முழுவதும் நீண்டு ஓடும் ஓரச் சுவர்.

பிரிட்டீஷ்காரர்கள் இன்னும்நாட்டைவிட்டுப் போகவில்லை.அப்போது வருஷம் 1945/46 இருக்கலாம்.ஆங்கிலேயர்கள் ரஸனைக்கேற்ப  கட்டிய அழகான வீடுகள் புகைபோக்கியுடன் காட்சி அளிக்கும். வெளியே நுழைவாசல் தவிர்த்து மீதி அறைகளில் கதவுக்குப் பதிலாக உயரமான வளைவுகள் இருக்கும். உள்ளே நடுக்  கூடத்தை அண்ணா ந்து பார்த்தால் ஒட்டடைக்கோல் எட்டாத அளவு உத்தரம் உயரமாக இருக்கும். ஆங்கிலேயர்களுக்கு உயரத்தின் மேல்  ஒரு  அபிமானம் போலும்!

வீட்டிலுள்ள மேஜைகள் கண்ணாடி பீரோக்கள் கோப்பைகள் எல்லாமே சீமையிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட மாதிரி..இதற்கு முன்பு இங்கே குடியிருந்த  ஆங்கிலேயர்  இங்கிலாந்து திரும்பும் போது  இவற்றையெல்லாம் விட்டுச் சென்றிருக்க வேண்டும்..

மாமா காரியாலயத்திலிருந்து மாலை திரும்பிவரும்போது கையில் சுருள் சுரு ளாக  நீளமான பழுப்புக்காகிதங்களுடன் பைநிறையப் பென்சில்களுடன் வரு வார். காரியாலயத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரும் அளவுக்கு வேலை யின்மேல் அவருக்கு ஓயாத வெறிப்பற்று. இந்தியர்களின் இத்தகைய  ஊழிய மனப்பான்மைதான்  அன்னியர்களுக்கு இன்றும் பிடித்த  குணவிசேஷம். எதிர் பாராமல்  30 வருடகாலமாக  அக்கறையுடன்  உழைத்த பிறகு இப்போது  தான் மாமாவுக்கு இந்த அந்தஸ்தும் இருப்பிட  வசதிகளும்  மற்ற சௌகரியங்களும் வாய்த்திருந்தன.

வீட்டில் மாமாவின் அறையில் அகலமாக ஒரு மேசை இருக்கும். மேசைக்கு மேல் ஒரு தொப்பிவைத்த மின்சார விளக்குக்கூரையில் பொருத்திய உருளை வழியாக இருகயிறுகளில்தொங்கும்.கயிறுகளைமாறிமாறி இழுத்தால்விளக்கு மேலும் கீழுமாக போய் மேசை யிலிருந்து அதன் உயரத்தை சௌகரியப்படி மாற்றிக்  கொள்ளும்படி இருக்கும்...

இந்த வசதியால் அறையின் பொதுவான வெளிச்சத்தை அவசியப்படும்போது மேசைக்கு  மாற்றிக்கொள்ளலாம். மாமா இரவு வெகு நேரம் அந்த மேசையில் காகிதங்களை  விரித்துக்கொண்டு  கழுத்தை வளைத்துக்கொண்டு  வேலை செய்வார்.

காலையில் சீக்கிரமே எழுந்து தன் பூஜைக் காரியங்களை முடித்து உணவருந்திவிட்டு புறப்படும்போதுதான் என்னைப் பார்த்து சிரிப்பார். போகும் போது அவரது பீரோவிலிருந்து இரண்டு புத்தகங்களை  கொடுத்துவிட்டுப் போவார். இரண்டுமே வீரதீரசாகஸங்கள் நிறைந்த என் வயதுக்கேற்ற புத்தகங் கள்.

மாமாவுக்குக் குழந்தைகள் கிடையாது. வீட்டில் மாமியும் பாட்டியும் மட்டுமே இருந்தார்கள். விடுமுறைக்கு நான் வரும் நாட்களில் நான் தான்அவர்களுக்குக் குழந்தை. எனக்குப் பிடித்த விதவிதமான தின்பண்டங்களை செய்துகொடுத்து நான் சுவைப்பதை ரஸிப்பார்கள்.

இன்றும் வழக்கம்போல் ஊரிலிருந்து வந்தவுடன் ஊர்க்கதையெல்லாம் பேசி விட்டு சந்தோஷமாககுதித்துக்கொண்டுதோட்டத்தை சுற்றிப்பார்க்க ஓடினேன்.  எனக்கு அதைவிட அவசரமாக பக்கத்து வீட்டு பாலுவைப் பார்க்க வேண்டும்..

தோட்டத்தில் மரங்கள் இன்னும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. மாமரத்தில் பிஞ்சுகள் தென்பட ஆரம்பித்திருந்தன. தேங்காய்கள் எந்த நேரமும் விழுநது விடுமோ என்ற பாரத்துடன் குலைகுலையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. கொய்யா மரத்தின் உச்சிக்கிளையில் ஒரு காக்காய்கூடு. இந்த மரங்கள் எல்லா முமே என் விடுமுறையை தாங்க ளும் சேர்ந்து கொண்டாடுவதைப் போல்  மனதுக்குள் விடுதலை யான மகிழ்ச்சி  துள்ளியது. நான் பாலுவைப் பார்க்க ஓடி னேன்.

பக்கத்துவீட்டுக் கதவு பூட்டிக்கிடந்தது.எனக்கு அதிர்ச்சியாக இருந் தது.  இவர்கள் எங்கே போனார்கள்நான் ஏமாற்றமுடன் மீண்டும் வீட்டுக்குஓடிவந்தேன்.

"மாமீ...மாமீ......."

என்னடா கண்ணூ?”

பக்கத்து வீட்டு பாலு வீடு பூட்டி இருக்கே!  எங்கே போனாங்க அவங்க?”

ஓ..பாலுவா.?அவா ஏதோ கல்யாணத்துக்காக கிராமத்துக்கு போறதா சொன்னா நாலைந்து நாளில் வந்துடுவாளாம்..."

எனக்கு ஏமாற்றமும் வருத்தமும் பொங்கியது. "நாலு நாளா! இன்னும் நாலுநாளைக்கு பாலுவரமாட்டானாஅவங்கூட விளையாடலாம்னு  தானே இங்கே லீவுக்கு வரேன்..."

"பாலு வந்துடுவாண்டா...நாலுநாளு தானே...சாயங்காலம் மாமா வந்து ஒன்னை எங்கெயாவது கூட்டிண்டு போவார்..."

மாலை 4 மணி இருக்கும்..எதிர்வீட்டில் முள்வேலிக்குப் பின்னால் ஒரு பையன் நின்றுகொண்டிருப்பது  தெரிந்தது. அவன் என்னைப் பார்த்துக்கொண்டு நின் றான்.அவனுக்கும் என் வயதுதான் இருக்கும். ஆனால் என்னைவிட நல்ல வளர்ச்சியுடன் இருந்தான்.. அவன் கண்கள் நீலமாக இருந்தன. தலை அழுக் கான செம்பட்டையாக இருந்தது. வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறம் அவன் உடம்பு... அவனை ஆங்கிலேயன் என்று இப்போது சொல்லுகிறேன். அப்போது வெள்ளைக்காரன் என்று சொல்லுவதுதான் பேச்சுவழக்கு.

அந்தப் பையன் என்னைப் பார்த்து ஏதோ கைகளை ஆட்டிக்கொண்டிருந்தான் சில சமயம் முகத்தைப் பழிக்கிற மாதிரி கோணிக்கொண்டு சுட்டுவிரலை ஆட்டினான்.எனக்குஅவன் செய்கைகள் புரியவில்லை.இருந்தாலும் பொதுவாக அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றேன்.அவன் என்னை ஏளனப்படுத்து கிறான் என்று ஊகிக்கும் அளவுக்கு எனக்கு அப்போது  மன முதிர்ச்சி யில்லை.

திடீரென்று ஒரு பந்தைத் தூக்கி என்பக்கம் விட்டெறிந்தான்.நான் மகிழ்ச்சியுடன்  அதை எடுத்து அவனிடம் போட்டேன். அவன் மறுபடியும் வேகமாக பந்தை என் மேல் வீசினான். நான் அதை ஓடிப்போய் எடுத்து திரும்பவும் அவன் பக்கம் வீசினேன். எனக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தது. எனக்கு  விளையாட ஒரு புதிய நண்பன் கிடைத்தான் என்று சந்தோஷத்தில் சற்று முன் இருந்த வருத்தம்  போய் விட்டது... அவன் வீசி எறிகிற பந்தை மீண்டும் மீண்டும் அவ னிடம் வீசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவன் போகப்போக பந்தை தாறுமாறாக வெவ்வேறு திசையில் வீச ஆரம்பித்தான்.அவன் வேண்டுமென்றே என்னை அலைக்கழிக்கிறமாதிரி இருந்தது. நானும் சில நேரம்  அவன்  அலைக் கழிப்புக்கு ஈடுகொடுத்து பந்தைப் பொறுக்கிப் போட்டுக் கொண் டிருந்தேன்.எனக்கு சற்று தாமதமாகத்தான் தெரிந் தது. அவன்  என்னுடன்  சகஜமாக விளையாடவில்லை என்று. அவன் என் அவஸ்தைகளைப் பார்த்து ஒவ்வொரு  முறையும் கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தான். அவன் வேண்டுமென்றே என்னை ஒரு பிராணியைப் போல் ஓட வைத்து என்னுடைய வேதனையைப்பார்த்து  சந்தோஷப்படுவதாகத் தோன்றியது. எனக்கு  மேல் மூச்சு வாங்கியது. மேலும் அவனுடன் இப்படிப் பட்ட வினயமான விளையாட்டைத் தொடர  முடியா தென்று பட்டது. அவன் திரும்பத்திரும்ப பந்தை  வீசிக்கொண்டேயிருந்தான். எனக்கு  ஆத்திரம் வந்தது. நான் வந்த பந்தை எடுத்து பலத்தையெல்லாம் திரட்டி வீசி உயரமாக எறிந்தேன். பந்து அவன் வீட்டுக் கூரையைத் தாண்டிப் பின்பக்கம் எங்கோ விழுந்து விட்டது.

வெள்ளைக்காரப்பையனுக்கு மூஞ்சிசிவந்துவிட்டது.அவன் என்னைப் பார்த்து எச்சில் துப்பி   "blackgaurd" என்று   கத்தினான். அடுத்த நிமிடம் அவனிடமிருந்து ஒரு கல் என் நெற்றிப் பொட்டில் வேகமாக வந்து தாக்கியது. அடுத்தகணமே அவன் நிற்காமல் உள்ளே ஓடிவிட்டான்.நான்"ஓ"வென்று  கத்திக்கொண்டு  மாமியைக்கூப்பிட் டுக் கொண்டே  உள்ளே ஓடினேன்.

மாமி என் அலறலைக் கேட்டு கூடத்திற்கு ஓடி வந்தாள். 

"ஐய்யோ"

என் நெற்றியின் வலதுபொட்டிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.அது கண்களில் வழிந்து கன்னத்தில் தாரையாக இறங்கி சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.

என்னடா...என்னடா..ஆச்சு?”என்று  கேட்டுக்கொண்டே மாமி பஞ் சையும் மருந்தையும்எடுத்துக்கொண்டுஓடிவந்தாள். நான் கேவலுக்கு இடையே நடந்த சம்பவத்தை சொன்னேன்.
        
"யாருஅந்த வில்லியம்ஸ் பிள்ளையா?அவன் ரொம்ப துஷ்டையாச்சே!  நீ என்ன பண்ணினே?”                                                 

கலவரத்தைக் கேட்டு உள்அறையிலிருந்து பாட்டியும் வந்தாள்.என் ரத்தத்தை யும் மாமி துணியால் கட்டுப்போடுவதையும் பார்த்து அதிர் ந்து போய்விட்டாள்.

அய்யய்யோ,யாருடீ என் பேரனை இப்படி அடிச்சதூ?எதுத்த வீட்டுப்பைய்யனாஅந்த வெள்ளைக்காரப் பைய்யனாஅவன் கட்டேலெ போக..."  பாட்டி சபித்தாள்.

சபிக்காதேங்கோ பாட்டீ.. இன்னும் அஞ்சாறு மாசம் தானெ! எல்லா ரையும் கப்பல்லே ஏத்திக் கடத்தப் போறாளே!..."

கோந்தே..இங்க பக்கத்திலெ வாடாபாக்கலாம் அய்ய்யோ..நெத்திப்பொட்டில யே  அடிச்சிருக்கானே! நாசமாப் போறவன்.. இந்த வெள் ளைக்காராளுக்கு நம்பளை கண்டா அவ்வளவு இளப்பமா?..  ஏண்டா அவன் அடிச்சா நீ சும்மாவா வந்தே?”

"எங்கே பாட்டி..யாரையும் திருப்பி அடிக்கக்கூடாதுன்னு சொல்லித் தானே குழந் தைகளை நாம்ப வளக்கறோம்...இதுகளும் சாதுவா அடிவாங்கிண்டு வருது.." என்றாள் மாமி.

மாமி சொல்லுவதைக்கேட்டவாறே மாமா அப்போதுதான் உள்ளே  நுழைந்தார்.

"என்ன கலாட்டாஇங்கே? ரெண்டுபேரும் ஏதோஆர்ப்பாட்டமா பேசி ண்டிருக்கிற மாதிரி இருக்கு?”

"அந்த வில்லியம்ஸ்கூடத்தானே ஆபீஸிலேருந்துவந்தேள்?நாளைக்குஅவரைக் கண்டா சொல்லி வையுங்கோ,அவர் பையனை கண்டிச் சுவைக்கச் சொல்லி.!" என்றாள் மாமி.

மாமா என்னை அருகில் கூப்பிட்டு காயத்தையும் தலைக்கட்டையும் பார்த்தார் நடந்த விஷயத்தைக் கேட்டறிந்தார். என்னை சமாதானப் படுத்தினார்.

"இன்னும் ரெண்டு நாள்ளெ சரியாயிடும்டா.. பாலுவும் ஊர்லேருந்து வந்துடு வான். நீ இனிமே எதுத்த வீட்டுப் பய்யனோட வெளையாட வேண்டாம்.. சரியா?...."

இரவு எனக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை.என்னை வெறுக்கும் அளவுக்கு அந்தப் பையனை நான் என்ன தொந்தரவு செய்துவிட்டேன். எனக்கு விளையா டத் தெரியவில்லையாஎன்ற தெளிவற்ற குழப்பத்தில் நான் அரைத் தூக்கத்தில் இருந்தேன்..

அப்போது  மாமி "அவா ராஜ்ஜியம் தான் முடிஞ்சி போச்சே! இந்த கட்டத்திலும் கூட இந்த வெள்ளைக்காரர்கள் ஏன் நம்மிடம் சகஜமாக இருக்கக் கூடாது"என்று  மாமாவிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்.

மாமாஅதற்கு பதில் எதுவும்பேசவில்லை. கொஞ்சநேரத்தில் குறட்டைவிட்டுத் தூங்கி விட்டார்.

* * * * *

பத்துநாள் கழிந்தது.எனக்கு நெற்றியில்காயம் ஆறிவிட்டது. தலைக்கட்டை மாமி அவிழ்த்துவிட்டாள். நான் ஊருக்குத் திரும்ப  என்னுடைய துணிமணி களை எடுத்து வைத்துக்கொண்டேன். மாமி எனக் காக நெய்ததும்ப சுவையான மைசூர்ப்பாகு செய்து பயணத்திற்குக் கட்டிக்கொடுத்தாள்.

மாமாவின் நண்பர் சேலத்திற்குப் போய்க்கொண்டிருந்தார். அந்த நண்பர்துணை யுடன் நான் போக ஏற்பாடு செய்து ரயிலில் என்னை ஏற்றிவிட மாமா காத்துக் கொண்டிருந்தார். நான் மாமிபாட்டியை நமஸ்கரித்துவிட்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டேன்.

மாமா என்னைப் பாசமுடன் பார்த்து சிரித்துவிட்டு "இருடா ஒனக்கு நான்என்ன வாங்கிவைச்சிருக்கேன்னு தெரியுமா?”

தெரியாதென்று தலையாட்டினேன்.அவர் "எங்கே காலைக் காட்டு"  என்றார்.  அவர் கையில் எனக்காக வாங்கிய புத்தம் புது காலணி இருந்தது. நான் ஆசை யுடன் அதை அணிந்து கொள்ள காலை நீட்டினேன். மாமா என் காலைப்  பார்த்துவிட்டு"ஒரு நிமிஷம்அப்படியேஇரு,முழங்கால்லே என்னடா இவ்வளவு பெரிய   தழும்பு?”  என்றார்.

"அதுவா...மாமா  இது ரெண்டு மாசம் ஆயிடுத்து மாமா.. ஸ்கூல்லே ஒரு பைய் யன் என்னோடே ஹோம்வொர்க் நோட்டுப் புத்தகத்தை பிடுங்கப் பாத்தான்... நான் அவன் பிடிக்குத் தப்பாம  ஓடினேன்.  பின்னாலேருந்து பிடிச்சுத்தள்ளி விட்டான். நான் கால் மடங்கி விழுந்து முழங்கால்லே பெரிய காயம் பட்டூ         டுத்து...இப்போ ஆறிப் போச்சு  மாமா”, என்றேன்.

மாமா ஒரு நிமிஷம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பைய்யன் பேரு என்ன?” 

கதிர்வேலு."

மாமா ஒரு நிமிஷம் யோசித்து விட்டு  மாமியையும்  பாட்டியையும் பார்த்துக் கொண்டே கேட்டார்.


கதிர்வேலுவா? கதிர்வேலுவும்வெள்ளைக்காரப் பைய்யனா?"மாமா பெட் டியை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தார்.
    

Tuesday, May 15, 2012

அர்த்தமற்ற வார்த்தை _வைதீஸ்வரன்


அர்த்தமற்ற வார்த்தை


                      _வைதீஸ்வரன்





















     
     
சிறைச்சாலையில் அவன் அடைக்கப்பட்டிருந்த அறையின் காரணமாக அவன் தட்டுத்தடுமாறி எழுந்து அருகில் போய் நிற்பதற்கே சற்று நேரம் பிடித்தது.

 வார்டன் சிரித்துக்கொண்டே சொன்னார்.

 "இன்னும் பத்து நாட்களில் உனக்கு விடுதலை கிடைக்கப் போகிறது. உன்னுடைய நன்னடத்தையை கவனித்து உன் ஆயுட்கால தண்டனையைக் குறைத்து  உன்னை விடுதலை   செய்ய  மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தி ருக்கிறது.  இந்த  நல்ல செய்தியை சொல்லி விட்டுப் போகத்தான்  வந்தேன்"   என்றார்.

வார்டன் அங்கிருந்து போய் பல நிமிஷங்கள் ஆகியும் அவன் கம்பியைப் பிடித்துக்கொண்டேநின்றான். அவன்  முகத்தில் சந்தோஷமோ   நிம்மதியோ   எதுவும்  பிரதிபலிக்கவில்லை வார்டன்  சொன்ன தகவல் அவனை பெரிதாக பாதித்ததாகத் தெரியவில்லை.

 "விடுதலைன்னா என்னா? " 

அவனுக்கு அதன் அர்த்தம் முற்றிலும் மறந்துபோய் பல வருஷங்கள் ஆகியி ருந்தது. அவன் பார்வையில் துக்கமும் பேதலிப்பும்தான் கூடியிருந்தன.   அந்தச்  செய்தி   அவன் நிம்ம தியை வெகுவாக குலைத்துவிட்டுப் போயிருந் தது.

அவன் முகத்தைக் கழுவிக்கொண்டு வழக்கம்போல் தன்  அன்றாட   வேலை களைச்   செய்வதற்குப் புறப்பட்டான்.

அவன் கடந்துபோன வழியெல்லாம் எதிர்ப்பட்ட கைதிகள் அவனுக்கு   'வணக்கம் '   சொல்லி  மரியாதையை தெரிவித்தார்கள்.

அப்போது எதிரே ஒரு சிறை அதிகாரி  இவனை நோக்கி வந்துகொண்டிருந் தார்.  "முருகையா!  நல்லா இருக்கீங் களா? இன்னிக்கி மேக்குப் பக்கமா    மரம் நட்டு ஒரு வேலி  கட்டணும். ஒரு பத்துப் பேரை உங்க வார்டுலேருந்து அனுப்பிவைக்கறீங்களா? "

முருகையன் பதிலுக்கு தலையசைத்தான். அவர்கேள்வியை அவன் பொருட் படுத்தியதாக தெரியவில்லை.

அவன் நேரே சாப்பாட்டுக்கூடத்துக்குப் போனான்.அங்கே கைதிகள் வரி சையாக கையில் தட்டுடன் சிற்றுண்டியை வாங்க நின்றுகொண்டிருந்தார் கள். இவன் போனவுடன் தோழமையுடன் வரவேற்று முதலில் நிற்கச் சொன்னார்கள் அவன் அவர்கள்அழைப்பை  நிராகரித்துவிட்டு வரிசையின்  கடைசியில் போய்நின்றான். கைதிகள்  அவனை  வினோத மாகப் பார்த்துக் கொண்டு  நகர்ந்தார்கள். இந்தப் பத்துவருஷங்களில்  அவன் இப்படி நடந்து கொண்டது இது தான்   முதல்   தடவையாக இருக்கும்.

சாப்பிட்டு முடிந்தவுடன்  முருகையன் தட்டைத் தூக்கிக் கொண்டு சமையற் காரரிடம் போய் கத்தினான்; ' ஏய்யா நீங்க ஒழுங்கா சமைக்க மாட்டீங் களா?"- தட்டைப் போட்டு உடைத்துவிட்டு  வெளியேறினான்.

கைதிகள்  திடுக்கிட்டு நின்று அவன்   நடத்தையை   புரிந்து கொள்ள முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு மறுநாள் முருகையன் சிறைச்சாலையின் வாசக சாலைக்குச் சென்று அங்குள்ள புத்தகங்களை கிழித்துக் கொண்டிருப்பதாக புகார் வந்தது.

இன்னொரு நாள் அவன் சககைதிகளிடம் ஏதோ வாக்கு வாதம்  செய்து கைகலப்பில்  ஈடுபட்டு  யாரையோ அடித்துவிட்டதாகவும்  சிறை  அதிகாரி ஒருவர் சொன்னதாகவும் ஒருவர்  அவனை பலாத்காரமாக இழுத்துக் கொண்டு போனதாகவும் சொல்லப்பட்டது.

ஒரு நாள் காலை  வார்டன் வந்து அவன் சிறைக்கம்பி களைத் தட்டி எழுப்பினார்.

"முருகய்யா...உடனே எழுந்து எங்கூட வரீங்களா?..  சீக்கிரம் வாங்க”  - அவர்  குரல் சற்றுக் கடுமையாக இருந் தது.

முருகைய்யன் அவர் பின்னால் மெள்ள நகர்ந்து போனான். அவன் ஒவ்வொரு தப்படியும் அவனை பின்னுக்கு தள்ளியதுபோல் தடைப் படுத் திக்கொண்டிருந்தது. வார்டன் அவனை மூத்த மேலதிகாரியின் அறைக்குக் கூட்டிச் சென் றான்.  

அங்கே நான்கு அதிகாரிகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டி ருந்தார்கள்.

முருகையன் அவர்களுக்கு முன் கைகட்டி நிற்காமல் பரிச்சயமற்ற பார்வை யுடன் நின்றுகொண்டிருந்தான்.

அதிகாரிகள் சற்றுநேரம் அவனை கவனித்தவாறு  இருந்தார்கள். ஒரு அதிகாரி  லேசாக கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"முருகய்யா..  உங்களுக்கு உடம்பு சரியில்லையா?..."

அவன்  பேசாமல் இல்லையென்று தலையாட்டினான்.

இன்னொருஅதிகாரி பேசினார்." ரெண்டு மூணு நாளா உங்க நடவடிக்கை   ரொம்ப  மோசமா  இருக்கறதாக  ரிப்போர்ட் வந்திருக்கு. இதுக்கு என்ன காரணம் சொல்ல முடியுமா?“

முருகையன் பதில் பேசவில்லை.

மற்றொரு அதிகாரி சொன்னார்.

"இதுக்கு திருப்தியான காரணங்களை சொன்னா  நாங்க அதை ஒத்துக்கிட்டு உங்களை மன்னிச்சுடுவோம்... இந்த சமயத்துலெ நீங்க அப்படி புத்திசாலித் தனமா    நடந்துக்கறது   ரொம்ப நல்லது."

முருகய்யன்  பதிலே பேசவில்லை.

அவனுடைய அலட்சியப்போக்கு அதிகாரிகளை சற்று பொறுமையிழக்க வைத்தது.  ஒரு மூத்த அதிகாரி சற்று ஆத்திரத்துடன் பேசினார். 

"முருகைய்யன்,  இப்படி பேசாம இருந்தா விளைவு உங்க ளுக்கு  ரொம்ப பாதகமா ஆயிடும். நீங்க இங்கே  வந்து சுமார்   23  வருஷம்  இருக்குமா ?" 

 முருகய்யன் தலையாட்டவில்லை.

"ஒங்க நன்னடத்தையும் பொறுப்பான நடவடிக்கையும் நாங்க கவனிச் சிக்கிட்டுத்தான் வர்ரோம். இன்னும் பத்து நாள்லெ உங்களுக்கு விடு தலை கிடைக்கப்போவுது. இந்த   சமயத்துலே நீங்க இப்படிப் பைத்தியக்காரத் தனமா நடந்துக்கறது நல்லாருக்காசொல்லுங்க..சொல்லுங்க”. 

முருகய்யன் இன்னும் பதில் பேச முடியாமல் நின்று கொண்டிருந்தான். ஆனால் அவன் உடம்பும் கைகளும் பதறிக் கொண்டிருந்தன.

"இப்போ ஏதாவது சொல்லப் போறீங்களா இல்லையா  நீங்க இப்பொ விடுதலை ஆகப்போறது உங்க பதிலைப் பொறுத்துத்தான் இருக்கு! பேச முடியுமா முடியாதா? "

அதிகாரி சற்று குரல் உயர்த்தி கத்தினார்.

முருகைய்யனின் வாய்  பதறியது. கண்கள் குப்பென்று தாரை தாரையாகக் கொட்டியது.

அய்யா...எனக்கு விடுதலை வேண்டாம்….எனக்கு விடு தலை வேண்டாம். என்னை இங்கெயே சாகவிட்டுடுங்க  இந்த விடுதலையை வெச்சிகிட்டு நான் இனிமே என்ன செய்யப்போறேன்.. நான் விட்டுட்டு வந்த உலகமும் வாழ்வும் எனக்குள்ளே செத்துப்போயி எவ்வளவோ வருஷம் ஆயிருச்சி.... எனக்குள்ளே எப்பவோ காஞ்சி கட்டி தட்டி வடுவாக மாறிப்போன ஞாபகத்தை மறுபடியும் கிளறிவிட்டுத் தோண்டி புதஞ்சி போன ஒண்ணைக் காட்டி இதுதான் ஒன்னொட உலகம்னு அதுலே என்னைத் தள்ளாதீங்க.. அந்த உலகம் எனக்கு இப்ப வேண்டாம்.. அந்த உலகம்..  எனக்கு இப்ப அன்னியமா போயிடுச்சி. எனக்கு இனிமே இந்த ஜெயில் தான் உலகம் சுடுகாடு எல்லாம்.   நீங்க கொடுக்கற விடுதலையை   இனிமே  யார்கிட்டெ போயி மார்தட்டிக்கப்போறேன்?  அய்யா தயவு செய்து எனக்கு விடுதலை கொடுக்காதீங்க. தயவுசெய்து இவன் நன்னடத்தை கெட்டவன்னு மறுபடியும்  என்  தண்டனையை   நீட்டி விடுங்க... என்னை   வெளியே  அனுப்பாதீங்க.  என்னை விடுதலை   செய்யாதீங்க . ....."

முருகைய்யன் மிருகம் மாதிரி கத்திக்கொண்டே கைகளை முகத்தில் புதைத் துக்கொண்டு பின்சுவற்றில் சாய்ந்தவாறு   ஓவென்று கத்தியவாறு சரிந்து உட்கார்ந் தான்.

அதிகாரிகள் உறைந்துபோய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் அடிமனத்திலிருந்து வந்த வார்த்தைகள்  அவனுடையதுதானா அல் லது வேறு ஏதோ   பிரதேசத்தின்  எதிரொலியா என்று நிதானிக்க முடியாத சோகத்தின் பாதிப்பில் அவர்கள் பேசமுடியாமல் எழுந்து நின்றார்கள்.

முருகய்யனின் விசும்பல் இன்னும் தொடர்ந்துகொண்டு தான்  இருந்தது.

சிலகேள்விகளுக்கு சட்டப்புத்தகத்தில் சரியானவிடைகள் கிடைக்கா தென்று   அவர்களுக்கு தோன்றியிருக்கக்கூடும்!

   *சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஆங்கிலப்படத்தின் ஒரு சின்ன கதாபாத்திரத்தின் வரிகளால்  தூண்டப்பட்ட   ஒரு கற்பனை சித்தரிப்பு இது.
 படத்தின்பெயர் "SHAWSHANK REDEMPTION"

Shawsank redemption"In 1947, young banker Andy Dufresne (Robbins) is found guilty of the murder of his wife and her lover; he is sentenced to life in prison, and his sentence is to be served at Maine's Shawshank penitentiary. The conditions are terrible, many of his fellow prisoners are sadistic, and many of the guards are even worse — but life begins to look up as Dufresne becomes acquainted with an old black con, Ellis Redding (Freeman, who also serves as the movie's narrator), commonly referred to as Red. A friendship begins after Red, "the man who knows how to get things", procures a rock hammer for Dufresne, an object he wishes to own in order to pursue a hobby in rock collecting. The friendship will only strengthen over the coming years.

Twenty years pass within the prison walls, showing the growth and strength of Andy and Red's friendship, Andy's various attempts to better the life of his fellow inmates through education (facilitated by the financial advice he gives the prison's corrupt warden and guards), the quest to prove his innocence, and the attempt to remain mentally free and hopeful even when surrounded by the crushing gray of prison walls.