ஜனங்கள் மிக உன்னிப்பாக கண்ணிமைக்காமல்
அந்த நாடகத்தின் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் லேசாகக் கனைக்கக்
கூட இல்லை. இருட்டுக்குள் அவர்களின் கனமான மூச்சின் உஷ்ணத்தை
ஒருவனால் உணர முடிந்தது
காட்சியில் அண்ணன் சேகர் கலைந்த தலையும் கிழிந்த
ஜுப்பாவு மாக அலங்கோலமாக பைத்தியக்காரனைப் போல் உள்ளே நுழைகிறான்..
அவன் கையில் கத்தி இருக்கிறது. அந்த இடம் ஒரு
பார்க்.. பார்க் பெஞ்சில் சோமு சிகரட் பிடித்த வண்ணம் முதுகைக் காட்டிக்
கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.
சேகர் ஆத்திரத்துடன் கத்திக் கொண்டு வந்து
எதிர்பார்க்காத சோமுவின் பிடறி யைப் பிடித்துத் தூக்கி அவன் முதுகிலும்
கழுத்திலும் மாறி மாறிக் குத்துகிறான். சோமு “அய்யோ..அய்யோ.. என்று கத்துகிறான்
சேகர் அவன் காலரைப் பிடித்து இழுத்தவாறு மேடையின் முன் பக்கம்
வருகிறான் அப்போது மேடையில் ஒளி குறைந்து அவர்கள் இருவர்
மேல் மட்டும் ஒளிவட் டம் பாய்கிறது.
சேகர் கத்துவான் “அடேய்...சோமு.... அபலையான
என் தங்கையைக் கெடுத்து விட்டா யேடா..பாவி....தாயில்லாத என் தங்கையை என்
தோளில் போர்த்திப் போர்த்தி வளர்த்தே னேடா.....என் பணவெறி பிடித்த தந்தையினால் பணத்துக்காக முதியவனுக்கு அவளை மூன்றாந்தாரமாக்கிப் பின் இளம் விதவையாகித் தனித்து
நின்ற என் அப்பாவித் தங்கையை ஆசைவலை காட்டி திருமணம் செய்து
கொள்வதாய் ஏமாற்றிக் கெடுத்த கயவனே! அவள் இன்று
கிணற்றுக்குள் பிணமாக வயிறும் நெஞ்சும் ஊதிப் போய் கிடக்கிறாளே!! பாவி... அது யாரால்? அது யாராலடா?...”
கிணற்றுக்குள் பிணமாக வயிறும் நெஞ்சும் ஊதிப் போய் கிடக்கிறாளே!! பாவி... அது யாரால்? அது யாராலடா?...”
சேகர் சோமுவை மீண்டும் ஒரு முறை குத்துவான். ஜனங்கள் அதிர்ச்சி யுடன் முதுகை நெளித்துக் கொள்வார்கள்.
இப்போது சோமுவின் சட்டைப்பை இருக்கும் இடத்தில் சிகப்பாக ரத்தம் பரவும்.
ஆனால் ஜனங்களுக்கு ஏற்கனவே அவன் சட்டைப்பைக்குள் சிகப்பாக ஒரு திரவத்தை
வைத்துக் கொண்டு அப்போது உடைத்துவிடுவான் என்று. ஊகிக்க முடியும். இருந்தாலும்
காட்சியில் அதை ரத்தமாக நம்பி ரஸிப்பார்கள்.. சோமு அநேகமாக
இறந்துவிட்டது போல் கால்கள் சுரணையிழந்து நிற்கமுடியாதது போல்
சேகரின் காலர்பிடியில் தொங்கலாக நிற்பான்.
அப்போது ஒரு குரல் மேடையின் உள்புறத்திலிருந்து சமூகத்தின்
மனசாட்சி போன்ற குறியீடாக பலமாக ஒலிக்கும். யாரால்... யாரால்.. என்றா
கேட்கிறாய்...?
சேகர் கழுத்தை இங்குமங்கும் திருப்பி குரல் வந்த திசையைஅனுமானிக்க
முடியாமல் சுற்றுமுற்றும் பரவி நின்ற இருட்டைப் பார்ப்பான். அவன் சோமுவைப் பிடித்திருந்த
கைப்பிடி விடுபடும் சோமு ஒரு பிணம் விழுவதைப் போல் தடாலென்று
கீழே விழுவான்.
மேடையின் பின் மனசாட்சிக்குரல் தொடரும்.. ”யாரால்
இது நிகழ்ந்ததென்றா கேட்கிறாய்? மூடனே...உன் குடும்ப ஆசார
மூட வழக்கங்களைப் பார்.. வயதுக்கு வராத குழந்தைகளை திருமணம் என்ற
பலிக்கூடத்திலே விருப்பம் பொருத் தம் வயது எதையும் பொருட்படுத்தாமல்
பணக்காரக் கிழவர்களுக்கு மூன்றாந் தாரமாகக் கட்டி வைப்பதை சாஸ்திர தர்மமாக
அனுமதிக்கும் உன் கேடு கெட்ட சமூகத்தைக் கேள்! வயதுக்கு வருமுன்பே
விதவையாகி இளம் வயதின் அறி யாத ஆசைகளைப்பொத்தி வைத்துக் கொண்டு
அனாதரவாகப் புழுங்கும் அந்தப் பிஞ்சுக்குமரிக்கு மறுமணம் செய்வது மகா பாவமென்று
சொன்ன உங்கள் இரக்க மற்ற மூட முன்னோர்களைக் கேள்.....ஆசைக்கும் பாசத்திற்கும்
ஏங்கித் தவிக்கும் அந்தக் காய்ந்த பெண்நெஞ்சம் வஞ்சகமென்று அறியாமல்
ஒரு காமக்கிராதக னின் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போய் தன்
வசமிழந்துதன்னை இழந்து பின் ஏமாற்றப்பட்டு
இடி விழுந்த மரமாக இன்று கிடக்கிறாளே! இந்தத் தங்கை....உன் ஆருயிர் சகோதரி.....
இது யாரால்? இது யாரால்? இப்படிப்பட்ட அநீதிகளை தர்மமென்றும்
குலவழக்கமென்றும் கொண்டாடும் மூட முன்னோர்களின் முட்டள்தனமான சமூகத்தினாலா?
அல்லது உன்னாலா???.யாரால்....?.
இந்தக் கேடு கெட்ட சம்பிரதாய இருளை எதிர்த்து
நின்று வெல்லும் வரை இப்படிப்பட்ட சோமு க்களும் இப்படிப்பட்ட
அபலைத் தங்கைகளும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இப்படிப்பட்ட
அநியாயங்களுக்கு எதிராகக் குமுறும் உன் போன்றவர்களை அவர்கள் பைத்தியக்காரன்
என்று தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆம் நீ பைத்தியக்காரன்
சமூகத்தை உய்விக்க வந்த பைத்தியக்காரன்...
“....மேடையின் பின்குரல் மறையும்ம்..நான் பைத்தியக்காரன்..தான்...ஹாஹ்ஹா..
நான் இந்த ஊரை உலகத்தை சீர்திருத்த வந்த பைத்தியக் காரன்
பைத்தியக் காரன்....”
மேற்கணட வசனத்தை என் மாமா எஸ்.வி
ஸஹஸ்ர நாமம் மேடையில் பேசும்போது எத்தனை தடவை இந்த “” பைத்தியக்காரன்””
நாடகத்தைப் பார்த்தா லும் எனக்கு பயமாகவும் புல்லரிப்பாக வும் இருக்கும்.
இந்த நாடகம் 1945...46ல் சென்னை ஒற்றைவாடைத்
தியேட்டரில் வெற்றிகரமாக நடந்தது. மூதறிஞர் வ.ரா...இந்த நாடகத்தின்
தயாரிப்பிலிருந்தே ஆர்வம் காட்டி வந்தார். சில வசன ஒழுங்குகளுக்கு யோசனைகள்
கூட தெரிவித்திருக்கிறார், வார்ம் ஒரு முறையாவது அவருக்கு இந்த நாடகத்தைப்
பார்த்து ரஸிக்க வேண்டும். அவ்வளவு ஈடுபாடு.
இந்தக் காட்சியின் முடிவு இன்னும் திகில் ஊட்டுவதாக
இருக்கும். மேற் சொன்ன வசனத்திற்குப் பின் என் மாமா கீழே
பிணமாய் விழுந்து கிடக்கும் சோமுவை ஆத்திரத்தோடு பார்ப்பார். அவன் தலைமயிரைப்
பிடித்து மீண் டும் தூக்கி நிறுத்துவார். பிணம் கால் பாவாமல் சற்று தொங்கியவாறு
தள்ளாடிக் கொண்டிருக்கும் இப்படி நடிப்பதற்கும் ஒரு பக்கு வம் வேண்டும்.
நடிகரின் பெயர் சந்திரசேகரன்.
“ஆம் நான் பைத்தியக்காரன் தான்..அடேய்
சோமு உன்னைப் போன்ற அற்ப மான காமுகப் புழுக்களைக் கொல்வதற்கு
இங்கே நம் சமூகத்தில் இன்னும் நிறையப் பைத்தியக்காரர்கள் தேவை...அடேய் பாதகா
.. சோமு...என் உயிருக்கு உயிரான தங்கையை நான் இனி எந்த ஜனமத்தில்
காணப் போகிறேன்?...”
பாதகா..சீச்சீ....உன்னைத் தொடுவதே எனக்கு பாபம்!..
செத்துப் போடா கய வனே!! ‘.எ ன்று கைப்பிடியைத் தளர்த்தி விடுவார். பிணம்
மெள்ள தன் நிலை தளர்ந்து சில வினாடிகள் இரண்டுகால்களிலும் தள்ளாடும்.
அதன் தலை கவிழ்ந்து தொங்கும் அப்போது அதன் வாய்திறந்து கொள்ள
சிவப்பாக ரத்தம் வாயிலிருந் தும் மூக்கிலிருந்தும் மளமளவென்று
கொட்டும்.. பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அதிர்ந்து போய்விடுவார்கள்.
எப்படி வாயிலிருந்து ரத்தம் வழிகிறது?
எனக்குத் தெரியும் நான் நாடகத்தின்
பின்னும் முன்னுமாகப் பலதடவை பார்த்தி ருக்கிறேன்.
அந்தக் காட்சிக்காக ஏற்கனவே ஒருவன் ஓரடிக்கும் மேல்
நீளமான கரண்டியைத் தரையோடு தரையாக வைத்துக் கொண்டு மேடைக்கு இட்து புறம் மறைவில் நிற்பான். அந்தக் கரண்டியில் ரத்தநிறத்தில் சிவப்பான சர்க்கரைப் பானம்
நிரம்பி இருக்கும்.
சோமு கீழே விழுந்தவுடன் மேடையில் “”பின்குரல்””
வசனம் பேசிக் கொண்டி ருக்கும்போது கீழே கிடக்கும் சோமு மெள்ள வாயைத் திறப்பான்.
கரண்டியை மெள்ள சாய்த்து சிவப்பு பானத்தை அவன் வாயில் ஊற்றி
விடுவார்கள். இது பார்வையாளர்களுக்குத் தெரியாது.
அந்தக் காலமேடைகளில் நீளமாக அரை அடி உயரத்திற்கு
ஒரு மறைப்பு இருக்கும் அதாவது மேடையில் நடந்து முன்புறம் வரும் நடிகர்களின்
பாதங் கள் பார்வையாளர்களுக்குத் தெரியாத அளவு உயரத்துக்கு
அந்த மறைப்பு இருக் கும். அதனால் தரையில் கிடக்கும் சோமுவின்
தலை பார்வைக்கு மறைந்திருப் பதால் வாய்க்குள் பானத்தை ஊற்றுவதைப் பார்க்க
முடியாது.
இந்த அதிசயக் காட்சியைப் பார்த்து மனம்
பதறிப் போவதற்காகவே நாடகத் துக்கு நல்ல கூட்டம் வரும்.
சிலர் “அய்யோ” என்று அரற்றுவார்கள். “ரத்தம்... ரத்த,,,ம் .. .”என்று
உச் சுக் கொட்டுவார்கள்,
எனக்கு இந்த ரகஸியம் தெரிந்திருந்தாலும்
நான் அரங்கத்தில் உட்கார்ந்து நாடகம் பார்க்கும் போது ஜனங்களோடு
ஒன்றிப்போய் காட்சியின் தத்ரூபத் தைக் கண்டு சிலிர்த்துப் போவது அந்த
சின்ன வயதில் எனக்கு பிரியமான அனுபவமாக இருந்தது.. நான் பத்து
தடவைக்கு மேல் இந்த நாடகத்தைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு முறை இந்தக் காட்சியில் என் மாமாவின்
நடிப்பும் சோமுவின் பிணத்தின் வாயிலிருந்து வரும் ரத்தக்காட்சியும் மிகவும்
உணர்ச்சிகரமாக உறைய வைப்பதாக இருந்தது...
என் கைகளும் விரல்களும் பரபரத்துக் கொண்டிருந்தன.
மனசு கூடப் படபடப்பாக இருந்தது... உச்சகட்டத்தில் என் கை விரலில் இருந்த
மோதிரம் கழன்று கீழே நாற்காலிக்கடியில் இருட்டில் உருண்டு போய் விட்டது. காட்சியின்
தீவிரத்தால் நான் குனிந்து மோதிரத்தை எடுக்க முயற்சி செய்யவில்லை.
அப்படி நான் செய்யும்போது பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவாக இருக்குமே
யென்ற நினைப்பில் நான் விட்டு
விட்டேன்.
நாடகம் முடிந்தவுடன் மக்கள் எழுந்து வெளியே
செல்லத் தொடங்கினார்கள். என்னையும் தள்ளிக் கொண்டே வந்து
விட்டார்கள். எனக்குப் பத்து வய்து தான். என்னால் அவர்களை நிறுத்தி
என் மோதிரத்தைத் தேடுவதற்கு சற்று தயக்கமாக பயமாக இருந்தது.
நானும் வெளியே வந்து விட்டேன். மோதிரம் தொலை ந்துபோய்விட்டது.
வீட்டுக்கு வந்தவுடன் என் அம்மா தான் அதை
முதல் முதலாகக் கண்டு பிடித்தாள் .. “மோதிரம் எங்கேடா?”
” ட்ராமா பாத்துண்டிருந்த
போது கீழே விழுந்திடுத்து.....”
“அய்ய்யோ...அதைத் திருப்பித் தேடி எடுக்கணம்னு
தோணலையா உனக்கு?..” எண்டா பேசாம இருக்கே?...இதோ பாருங்க...
இவன் நேத்து “பைத்தியக்காரன் “ ட்ராமா பாக்கும்போது மோதரத்தைத் தொலைச்சுட்டானாம்...”
அம்மா அங்கே வந்த அப்பாவிடம் சொன்னார்.
அப்பா என்னைப் பார்த்து சற்றுக் கடுமையுடன் சொன்னார். முதலில்
நான் நாடகம் பார்க்கப் போவதே அவருக்குப் பிடிக்கவில்லை.
”ஏண்டா.....இப்படித் தொலைச்சே?தங்க மோதிரமாச்சே!!
ஒங்க மாமா தான் நாடகத்துலெ பைத்தியகாரன்னா நீ
நெஜத்துலெயே பைத்தியக்காரனா இருக்கயே!..
இதைக் கேட்டுக் கொண்டு என் மாமா அங்கே வந்து
விட்டதைக் கண்டதும் என் அப்பா தான் சொன்ன சொல்லை நினைத்து
நாக்கைக் கடித்துக் கொண்டு அசட்டுச்
சிரிப்பு சிரித்தார்.
மாமா சிரித்துக் கொண்டே அருகில் வந்து என்
முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே சொன்னார்.
“ஒரு நாடகத்தை இவ்வளவு ஆர்வமா இவன்
பாக்கறான்னா இவனுக்குள்ளே கலை உணர்வு இருக்குன்னு
அர்த்தம் ”
************************
பி.கு. அந்த நாடகத்தில் உபயோகப் படுத்தும் கத்தி ஒரு SPRING கத்தி. குத்தும் போது அதன் ர்மையான பாகம் கைப்பிடிக்குள் போய் விடும். பார்வைக்கு அது நெஞ்சுக்குள் பாய்வது போல் பிரமை ஏற்படும்!!
பி.கு. அந்த நாடகத்தில் உபயோகப் படுத்தும் கத்தி ஒரு SPRING கத்தி. குத்தும் போது அதன் ர்மையான பாகம் கைப்பிடிக்குள் போய் விடும். பார்வைக்கு அது நெஞ்சுக்குள் பாய்வது போல் பிரமை ஏற்படும்!!
.... *அம்ருதா ஆகஸ்ட் 2014 இதழில் வெளியாகியுள்ளது
....
No comments:
Post a Comment