ஈர
சுதந்திரம்
வைதீஸ்வரன்
(*தீராநதி
செப் 2018)
இந்த
சப்தம் கேட்டது எனக்கு ஏழு வயது இருக்கலாம். வருடம் 1942.
“இந்த நேரத்துலே ஏன் இப்படி தொந்தரவு? ஒங்க
அப்பாவுக்கு என்ன புடிச்சிருக்கு? மனுஷன்
தூங்க வேணாமா? இருட்டுல
போய் சேந்தி சேந்தி தலையில ஊத்திக்கிறாரே?
என்
அப்பா படுக்கையில் புரண்டு கொண்டே பொருமினார். அம்மாவுக்கும் அது தொந்தரவாகத் தான் இருந்தது.
“ எங்க
அப்பாவை குத்தம் சொல்லாம இருக்கமாட்டீங்களே! அவருக்கு
குளிக்கணும்னு தோணுது... குளிக்கிறார்......” என்று
திரும்பிப் படுத்துக் கொண்டாள்
“ராத்திரி நேரத்துல பிசாசு மாதிரி தண்ணியை வாரி வாரி தலையில கொட்டிக்கிறாரே உங்க அப்பா! என்னன்னு
சொல்றது?
“ வயசானவரு
ஏதோ பண்ணிட்டுப் போறாரு....பேசாம தூங்குங்க! “
அப்பா
பல்லைக் கடித்துக் கொண்டே போர்வையைப் போர்த்திக் கொண்டார்.
காலையில்
எழுந்தவுடன் அப்பா தாத்தாவை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். தாத்தா
அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.கையில் சுருணைக் கயிற்றை எடுத்துக் கொண்டு . ஏதோ
வேலையாக் இருப்பது போல் அவரைக் கொடிப்பக்கம் போனார்.
என்
தாத்தாவுக்கு எப்போதுமே கண்கள் சிவப்பாக ரத்தம் கட்டியது போலிருக்கும் ரத்த அழுத்தமாக இருக்கலாம். சோதனை
செய்து மருத்துவம் பார்க்க வேண்டுமென்று யாருக்கும் தோன்றவில்லை. அவருடைய
சுபாவம் விசித்திரமானது. திடீரென்று எதையாவது வித்தியாசமாக செய்வார். புத்தி
நேராக இருப்பவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் ஒருவேளை இப்படியெல்லாம் செய்பவர்கள் மேதைகளாக இருக்கத் தகுந்தவர்களாக இருக்கலாம் ஆனால் தாத்தாவுக்கு குணங்கள் மட்டும் தான் அப்படி இருந்தது.
இப்படி
ஒரு தாத்தாவை வீட்டில் பராமரித்துக்கொண்டிருப்பது பொறுமையை சோதனை செய்யக் கூடிய விஷ்யம்
இப்படித்
தான் சென்ற வாரம் வாசலில் பிச்சைக்காரன் வந்து " அம்மா
தாயே பசிக்குது அம்மா! " என்று
கூவினான் அப்போது வீட்டில் யாரும் இலலை.தாத்தா மட்டும் தான் இருந்தார்.
“டேய் திண்ணையிலெ உக்கார்ரா! “ என்றார்
தாத்தா. பிச்சைக்காரன் சற்றுக் கலவரத்துடன் திண்ணையில் ஒடுங்கிக் கொண்டு உட்கார்ந்தான்.
தாத்தா
சமையல் அறைக்குப் போய் பெரிய வெங்கலப் பானை சோற்றையும் குழம்பையும் தூக்கிக் கொண்டு வந்தார். வாசலில்
இருந்த வாழை மரத்திலிருந்து . இலையை
அறுத்து போட்டார்.
வெங்கலப்
பானை சோற்றை இலையில் கவிழ்த்துப் போட்டுக் குழம்பை ஊற்றினார். " சாப்பிடுர்ரா! “ என்றார்.
பிச்சைக்காரனால் நம்ப முடியவில்லை. “ சாப்பிடுரா..” என்றார்.சந்தோஷமாக
ஆவலாதியாக பசி வேகத்தோடு அள்ளிப் அள்ளிப் போட்டுக் கொண்டான். பிச்சைக்காரன்.
இப்படி
யாருமே அவனுக்குப் பிச்சை போட்டிருக்க மாட்டார்கள் கண்ணிலும் மூக்கிலும் நீர் கொட்டியது.
நாலைந்து
வாய்க்கு மேல் அவன் வேகம் மட்டுப் பட்டது. சற்று
சுணக்கமாக சாப்பிட்டான். பக்கத்தில் தண்ணீர் வைத்தார் தாத்தா. தண்ணீர்
குடித்து விட்டு மேலும் இரண்டு மூன்று வாய் போட்டுக் கொண்டு மேலும் கீழும் பார்த்தான்.
“ சாப்பிடுரா....சாப்பிடுர்ரா நல்ல சாப்பிடுரா! " தாத்தா
அவனை வேகப் படுத்திக் கொண்டே இருந்தார்.
அவனால்
இன்னும் இரண்டு மூன்று வாய்க்கு மேல் முடியாமல் திணறினான்.. மேலும்
கீழும் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.தயங்கி தயங்கி விழித்தான்.
“போதும் ஸாமி....”
“ சாப்புடுரா........” தாத்தா
அவனை அன்பாக அதட்டினார்
“ அய்யா..போதும்
அய்யா...சாமீ போதும் சாமீ...” என்று
இன்னும் ஒரு வாய் முழுங்க முடியாமல் முழுங்கினான்
“படுவா...இப்ப மொத்தத்தையும் சாப்படலைன்னா பிச்சுப் புடுவேன்.......சாப்புடுருரா..! “ என்று
உரத்த குரலில் மிரட்டினார்..
“போதும் சாமீ..”
மிகுந்த
அவஸ்தையுடன் இன்னும் ஒரு வாய் போட்டுக் கொண்டு தண்ணீரைக் குடித்துக் கொண்டான் இன்னும் ஒரு வாய் போட்டுக் கொண்டான் சோறு தொண்டையை அடைத்துக் கொண்டு நின்றது.
“ அய்யோ....வேண்டாம்
அய்யோ...விட்டுடுங்க அய்யா போதும் அய்யா! “ என்று கை கூப்பி கெஞ்சினான், அவன்
வாய் மூக்கெல்லாம் பருக்கை ஒழுகியது.
தாத்தா
அவன் தலையில் தட்டி "ஸாப்பிடுரா..சாப்பிடுரா!” என்று
மேலும் விரட்டினார்.
"அய்யோ
அய்யோ யாராவது காப்பாத்துங்க! அய்யோ " என்று
கத்திக் கொண்டே அவன் திண்ணையை விட்டுக் குதித்தான்.
“படுவா...ஒதைக்கறேன் பாரு இனிமே பசிக்குதுன்னு இந்தப் பக்கம் வந்து பாரு! படுவா!..”
.. கத்திக் கொண்டே தாத்தா திண்ணையை விட்டுக் குதித்தார்.
“ அய்யய்யோ
சாமீ...."" கத்திக்
கொண்டே பிச்சைக்காரன் திரும்பிப் பார்க்காமல் தெருக் கோடிக்கு ஓட்டம் பிடித்தான்
இப்படி
வீட்டிலும் திண்ணையிலும் நேர்ந்த அலங்கோலத்தை அறிய வந்த போது என் அப்பாவுக்கு கோபம் தாங்கவில்லை.
. தாத்தாவின் இந்த மாதிரியான அட்டகாசங்கள் அவ்வப்போது இப்படி வித விதமாக நடந்து கொண்டிருந்தது. அம்மாவும்
சமாதானம் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
இப்போது
ராத்திரி மூன்று மணிக்கு கிணற்றடியில் போய் ஊரைக் கூட்டுகிற மாதிரி குளியல்.
அப்பா
அதற்கு மறு நாள் ஒரு வழி செய்தார்.
. அன்று
இரவு ராத்திரி தாத்தா குளிக்கப் போனபோது பின்கட்டுக் கதவு பூட்டி இருந்தது. தாத்தா
பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்தார். கதவை
உதைத்தார். அன்றோடு அவர் ராத்திரிக் குளியல் சாத்தியமில்லாமல் போய் விட்டது.
தாத்தா
இரண்டு மூன்று நாட்கள் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு அப்பாவை முறைத்துக்கொண்டிருந்தார். அநேகமாக
இர்ண்டு நாட்கள் தான்.பிறகு எல்லாம் அமைதியாகி விட்டது.
அப்பா
ஏதோ பெரிய பிரச்னையை தீர்த்து வைத்தது போல் அம்மாவை வெற்றிப்
புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்று
ஞாயிற்றுக் கிழமை என்று நினைக்கிறேன். விடியற்காலம் மூன்று மணி இருக்கும். யாரோ
வாசலில் இருந்து...”ஸார்...ஸார்...சுந்தரம் ஸார்...ஸார்...” என்று
கூப்பிட்ட குரல் கேட்டது.
எதிர்பார்க்காத ஒரு அழைப்பு. அப்பா
விரைந்து போய் வாசல் கதவைத் திறந்தார். அம்மாவும்
நானும் அவசரமாக பின்னால் போய் பார்த்தோம்.
ஸ்டேஷன்மாஸ்டர் சாரங்கன். எங்களுக்கு தெரிந்தவர். சேலம்
டவுன்ரயில் ஸ்டேஷனில் சில வருஷங்களாக வேலை பார்க்கிறார்.
“ என்ன..சாரங்கா! என்ன
இந்த நேரத்துலே!...என்ன விஷயமப்பா! “ அப்பா
பதட்டத்துடன் கேட்டார்.
“ ஸார்..நான்
இந்த நேரத்துலே இதை சொல்றதுக்கே தயக்கமா இருக்கு.இருந்தாலும்....”
“ சொல்லுப்பா! சீக்கிரம்
சொல்லு!..” அப்பா
ஆவலுடன் கேட்டார்.
“ எல்லாம்
ஒங்க மாமனாரைப் பத்தித் தான்!..”
அம்மா
எதையும் சற்று வேகமாக ஊகித்துக்கொள்வார்.
“ அய்யய்யோ! எங்க
அப்பாவுக்கு என்ன ஆச்சு? “ அம்மா
உடனே உள்ளே ஓடிப் போய் பார்த்தாள். அங்கே
படுக்கையறையில் என் தாத்தாவைக் காணவில்லை.
“ அய்யய்யோ! எங்க
அப்பாவுக்கு என்ன ஆச்சு! கோவிச்சுண்டு போய் ரயில்லே விழுந்துட்டாரா! அய்யோ!
“ என்று அலற ஆரம்பித்தாள்.
அப்பாவுக்கும் அது அப்படித் தான் தோன்றியது.
“ஸாரங்கா...என்னப்பா ! எங்க
மாமனாருக்கு என்னப்பா ஆச்சு? “ பதறிப்
போய் கேட்டார்.
“ அப்பவே
சொன்னேனா இல்லையா! கொல்லைக்
கதவை பூட்டுப் போட வேணாம்னு! எங்க
அப்பா ஆத்திரத்துல எதும் வேணா செய்வார். எல்லாம்
ஒங்களாலே! “ என்று
அம்மா அப்பவைப் பார்த்துக் கத்தினார்.
ஸ்டேஷன்
மாஸ்டர் பதறாமல் பதில் சொன்னார்.
“ஓண்ணும்
பயப்படாதீங்கோ! ஒங்க
அப்பாவுக்கு ஆபத்து ஒண்ணுமில்லே..இப்போ எங்களுக்குத் தான் வினை! “
“ என்ன
சொல்றே சாரங்கன்? “
“ அய்யோ! எங்க
அப்பா எங்கே இப்போ? “ அம்மா
துடிப்புடன் கேட்டாள்
“ஓங்க அப்பா இங்கே தான் இருக்கார்.. கேட்டுக்கு வெளியே நின்னுண்டிருக்கார்! கவலைப்
படாதீங்கோ. என்று
சாரங்கன் திரும்பி வாசலைப் பார்த்து " டேய்
கொண்டு வாங்கடா அவரை! “ என்று
கத்தினார்.
சிகப்பு
முண்டாசுடன் ஒரு போர்ட்டர் என் தாத்தாவை அநேகமாக இழுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். தாத்தாவுக்கு வர இஷ்டமில்லை. அவர்
சண்டி பிடித்த சவலை மாதிரி. கழுத்தில்
ஒரு சிகப்புத் தொண்டுடன் தலை குனிந்தவாறு வந்து கொண்டிருந்தார். . எங்களைப்
பார்க்க விருப்பமில்லாதது போல் எங்களை தவிர்க்க வேண்டுமென்பது போல் வந்து கொண்டிருந்தார்.அருகில் வந்தவுடன் நிற்காமல் வேகமாக உள்ளே போய் விட்டார்.
எங்களுக்கு என்ன நடந்ததென்று ஊகிக்கவே முடியவில்லை.
ஸ்டேஷன்
மாஸ்டர் சாரங்கன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஆர அமர விவரமாக என் தாத்தாவின் அபூர்வமான சாகஸத்தை பற்றி ஒரு வித உற்சாகத்துடன் விவரித்தார். நாங்கள்
விடிய விடியக் கேட்டுக் கொண்டிருந்தோம்
“” அன்றைய
வருஷங்களில் சேலம் ஜங்ஷனுக்கும் சேலம் டவுனுக்கும் சின்ன ரயில் வண்டி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போய் வந்து கொண்டிருக்கும். அந்த
வண்டியில் வெள்ளைக்கார துரைகளுக்காக மிக சௌகரியங்களுடன் முதல் வகுப்புப் பெட்டி இருக்கும் அந்தப் பெட்டியில் மெத்தென்ற நாற்காலிகளும் நிலைக்
கண்ணாடியும் அருமையான
குளியல் அறையும் இருக்கும் அந்த குளியல்பெட்டியின் மேலே ஒரு தண்ணீர் தொட்டியில் எப்போது தண்ணீர் நிரம்பி இருக்கும்.
ஜங்க்ஷனிலிருந்து போய் வருகிற துரைகள் அவ்வபோது அந்த சௌகரியங்களை உபயோகித்துக் கொள்வார்கள் .
“ ஒங்க
மாமனார் கிழவருக்கு இது எப்படிப்பா தெரிஞ்சுது? அசகாய
சூரராக இருப்பார் போலிருக்கே! “ என்று
சொல்லி விட்டு சாரங்கன் மேலும் தொடர்ந்தார்.
என்
தாத்தா விடியற்காலம் இரண்டு மணிக்கெல்லாம் ஸ்டேஷனுக்கு போய் விடுவார். அப்போது
அங்கே நிர்ஜனமாக இருக்கும். ஒரே
ஒரு போர்ட்டர் மட்டும் தாவாரத்தில் ராந்தல் விளக்கை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பான்.. காலையில்
முதல் வண்டி அநேகமாக நாலு மணிக்கு மேல் தான் ஓட ஆரம்பிக்கும்
என்
தாத்தா கருக்கிருட்டாக இருக்கும்போதே நின்றுகொண்டிருக்கும் அந்த வண்டியில் முதல்வகுப்பில் போய் ஏறிக்கொண்டுவிடுவார். அங்கே குளியல் அறையில் போய் தண்ணீரைத் திறந்து கொண்டு ஆனந்தமாக குளிப்பார்.குளித்துக் கொண்டே இருப்பார். விடிய
விடியக் குளிப்பார். நாலுமணிக்கு ரயில் புறப்பட ஆயத்தமாகி சங்கு ஊதும்போது தாத்தா பளிச்சென்று மகிழ்ச்சியுடன் வண்டியில் இருந்து இறங்கி வீட்டுக்கு வந்து விடுவார். !
இப்படி
இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாகவே அவர் குளித்துக் கொண்டிருந்தார். அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
ஆனால்
ஒரு நாள் காலை ஒரு வெள்ளைக்காரத் துரை ஸ்டேஷன் மாஸ்டர் சாரங்கன் அறைக்குள் வந்து கன்னாபின்னாவென்று கெட்ட வார்த்தையில் திட்டினான்
கடந்த
சில நாட்களாகவே முதல்வகுப்புப் பெட்டியில் குளியல் அறையில் தண்ணீரே வருவதில்லை. அல்லது
சில நிமிஷங்களுக்குள் காலியாகி விடுகிறது. இப்படி
மற்ற துரைகளுக்கும் சங்கடம் நேர்ந்திருக்கிறது
“ இந்த
பிரச்னையை உடனடியாக தீர்க்காவிட்டால் உன்னைத் தீர்த்துக்கட்டி விடுவேன்! “ என்று
துரை மிரட்டி இருக்கிறான். { இந்தியாவை
விட்டு போகிற நாள் வெகுதூரத்தில் இல்லை என்கிற நிலைமையும் அவன் ஆத்திரத்தை மேலும் கிளறி இருக்கக் கூடும்}
சாரங்கன்
அடுத்த நாள் இரவு முழுவதும் ஸ்டேஷனில் போர்ட்டர் கந்த சாமியுடன் ராந்தலை வைத்துக் கொண்டு காவல் காத்துக் கொண்டிருந்தார்.அப்போது சிவப்பு உருமாலையுடன் காக்கி சட்டையுடன் ஒருவன் முதல் வகுப்பை நோக்கிப் போவது தெரிந்தது.
சாரங்கன்
ஓடிப் போய் அவனைப் பிடித்து நிறுத்தி தலையிலிருந்த முண்டாசைத் தட்டி விட்ட போது யாரென்று அடையாளம் தெரிந்து விட்டது.
“தாத்தா...என்ன காரியம் பண்ணியிருக்கீங்க நீங்க? நம்ம
சுந்தரம் ஸாரோட மாமனார் தான் நீங்க? ராத்திரி
நேரத்துலே ரயில் வண்டிக்குள்ள போயி....இப்படி செஞ்சா உங்களை போலீஸுல புடிச்சிண்டு போயிடுவாங்க!...தெரியுமா? “ என்று
கோபமாக சொல்லியிருக்கிறார்.
“ யார்ரா
நீ! நம்ம
சாரங்கன் தானேடா? ஏண்டா
இந்த வண்டிலே டிகட்டு இல்லாம பயணம் தான் போகக் கூடாது! குளிக்கறதுக்கு கூட சுதந்திரம் இல்லையாடா?” என்று
கத்தினார் தாத்தா
மறுநாள்
சாரங்கன் மேதகு துரையிடம் போய் குளியல் பெட்டியில் ரிப்பேராய் இருந்த குழாயை இப்போது சரி செய்து விட்டதாகவும் இனிமேல் அப்படி பிரச் னை நேராதென்றும் மன்றாடி
மன்னிப்புக் கேட்டுக்
கொண்டு வந்தாராம்!!!
* * *
அந்த
சம்பவம் நடந்து சில நாடகளாகியும் கூட தாத்தா எங்களிடம் எதுவும் வாயே திறக்கவில்லை.
இந்தத்
தள்ளாத வயதிலும் அவர் இவ்வளவு துணிச்சலுடன் சுதந்திரமாக தன்னுடைய நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கும் மனோதிடத்தைப் பார்க்கும் போது எங்களுக்கு இப்போது அவர் மீது கோபப்படத் தோன்றவில்லை.
அப்பாவுக்கும் அப்படி இரக்கம் தோன்றி இருக்க வேண்டும் அல்லது தாத்தாவை சகித்துக் கொள்ள அவர் பழகிக் கொண்டு விட்டார் என்றும் சொல்லலாம்
மறுநாள்
இரவு மூன்று மணிக்கு கிணற்றடியில் வாளியை இரைத்து இரைத்து தாத்தா குளித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.
அப்பா
பின்கட்டுக் கதவை மறந்தும் கூட பூட்டுவதில்லை.!!!
***********
No comments:
Post a Comment