vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, May 21, 2019




வெம்மைச் சுவடுகள்  

(கோடை கவிதைகள் )



- வைதீஸ்வரன் -




















பகல்

உருளும் சக்கரங்களில் 
ஒளி பளிச்சிட்டுத் தெறிக்கும்.
பாதையின் குறுக்குமறுக்காய்
பாதரஸம் பாயும்
நிழல்முனைகள் நீர்மூழ்கிப் பிணங்களாய்
மிதந்து தொட்டுப் புரளும் மரத்தடிகள்.
அறிவிலிக் குரங்குகள் உயிரைத் துணிந்து
ஊஞ்சலாடும் கிளைகள்...
உதிரும் கனிகள்.
கடலில் 
கத்தரித்த கந்தல் துணியலைகள்
ஒழுங்கற்று சிதறிப் பின் சிடுக்கு நீங்கும்.
அஜீர்ணவயிறாய்...மந்தக்காற்று
மேலும் கீழும் ஏறி திசையின் குடலைத்
தடவிப் பொருமும்.
ஒளி ஏறும் உலகில் 
களைப்பு மீறும் உடல்கள்.
எதிரில் வீசும் காற்றில்
முதுகேறும் வெய்யில்.

______________________________________________________________________________________



முட்கள்


கோடை சூரியன்
கொதித்தெழுந்த முள்ளம்பன்றி
முள் விரித்து உயரே
சீறி எழும்பி
நிலத்தைத் துரத்துது
மேற்கும் கிழக்குமாய்!.

நீண்ட நீண்ட நெருப்பு நகங்கள்
முதுகைக் கீறி ஆற்றை உறிஞ்சிக்
கூரைகள் மீது ரத்தம் கக்குது!

சாலை மரங்களின் விதவைக் கோலங்கள்
வறுமையின் சாட்சிகள்.
இலையற்ற கொம்பில் பறவைகள் அலகை
அகல விரித்துக் காற்றைக் கெஞ்சும்!

நாக்கு வறண்ட நாய்கள் இறைத்து
நீரை நினைத்து மண்ணைப் பிறாண்டும்.
தாரில் ஈக்கள் இறகு பொசுங்க
இலைகள்
விழுந்து வாழ்வைப் பழிக்கும்.

துணிவால் இறங்கி நடையில் தளர்ந்து
மணல்வாய் சபிக்கத் துடிப்பன கால்கள்
ஒட்டும் நாக்கின் உமிர்நீர்த் தவிப்பு.
உளறும் பேச்சு.....உஷ்ணம் வெறுப்பு
முலையை இழுத்துக் களைத்த கன்றுகள்
சுவரை நக்கும் நடை பாதைகள்.

தாகம்...தாகம்....சோடா....கோலா.....
அக்கினிக் குளத்தில் அடியிலோர் உடைப்பா!.....

ஓட்டுள் இறங்கி உள்ளைப் பொசுக்குது....
கிளையாடும் மரங்கள் எங்கே?...
கிழியாத குடைகள் வேண்டும்.
மணிக் கூண்டின் முள்ளைத் தொற்றி
மணியை மாற்றேன்!..உடனே....மாலையை ஏற்றேன்!..

கொதிக்கும் மனங்கள் வியர்ப்பது வியர்க்காத தோலுக்கு!

ஈரம் கண்டோ....எத்தனை யுகங்கள்?....
நீரில் கால் பட நிழலில் தலைபடப்
பாடும் இரவுக்கு பகlலெல்லாம் துடிப்பு.
ஐஸ்க்ரீம் கனவு!

உடல்கள் எரிவது ஒரே ஒரு நெருப்பால்.
ஊர்கூடி வியர்ப்பது ஒரே ஒரு நினைப்பால்!
முடகள் மடங்கினால் பன்றி நிலவாகலாம்.
பகலின் வியர்வையை நிலவில் துடைக்கலாம்
                                                                                                                                                             (1960)                                                                      
______________________________________________________________________


வியர்வைப் பாட்டு

வரும் கோடை வந்ததென்று
வெறும் கிளைகள் கைகொட்ட
வறண்ட நிலம் பொய்வியப்பால்
உடல் நெறித்து வாய் பிளந்த

உடற்த்தோல் ஊற்றெடுத்து
புதுவியர்வை பெருக்கெடுக்க
பனியன்கள் மிகநனைந்து
கட்கங்கள் கிழிந்தன.

கால்ர்கள் கட்டறுந்து
கழுத்துக்கள் அழுதன.
பகலென்ற பாம்புக்குப்
புதுப்பற்கள் முளைத்துப் போய்
பார்த்தவரைக் கடித்துப்
பதுங்கியவரை புழுக்கின.

பைத்தியத்தின் மூளையாய்
பாதைத் தார் இளகிப்
பாதங்கள் குதிகொதிக்க
ஓரத்து மரங்களெல்லாம்
உள்ளூரில் சொர்க்கமாச்சு.

திருட்டுக்குப் பயந்து
திறந்து வைத்த ஜன்னல்கள்
திடீர்த்துறவி நானென்று
படாரென்று வாய் திறந்தன.

பாட்டாளி -படிப்பாளி"”
பாகுபாடு கரைத்தொழுகும்
கோடைப் பொது வியர்வை
கொண்டாடிப் பனை விசிறிக் கைகள்
ஒயாமல் பகலாடி இரவாடிப்
பின் ஓயும் ஒரு வேளை
ஒரு மனம் தலைதூக்கி
வருமாறு நினைத்தது.----

“” வெள்ளிக்குடை வடிவிருந்தும்
வெய்யிலையா கொட்ட வேண்டும்?
கொல்லும் சூரியனை
சொல்லாமல் பதவி மாற்ற
ஊருக்குள் வாக்கெடுத்தால்
வியர்த்தவர் எவரும்
விரைந்து வந்து கையடிப்பார்.

ஆனாலும் எச்சரித்தேன்....
அரசியலில்
வியர்வை உலர்வதற்குள்
விஷயங்கள் முடிய வேண்டும்
காலம் தாமதித்தால்
ஊர்புத்தி
கமபளிக்குள் ஒளிந்து கொண்டு
சூரியனே வேண்டுமென்று
சொன்னலும் சொல்லும்......

உருண்டு
குளிர்காயும் பூமிக்குள்
யார்புத்தி நிலைக்கிறது??

_____________________________________________________________________________________















Sunday, May 12, 2019



 ஒரு கவிதை


- வைதீஸ்வரன்- 


உயிரின் அர்த்தம்


ஒரு பூ பூத்துக் குலுங்கி மலர்ந்து
மடிவதைத் தவிர வேறு என்ன சாதிக்கிறது?

ஆனாலும் அதன் மொத்த இயக்கமுமே
நம் உலகத்தை எத்தனை செழிப்பாக்குகிறது?
அழகாக்குகிறதுவாசனையாக்குகிறது!!
முழுமையாக்குகிறது!

மலரற்ற உலகத்தின் வறட்சியை
கற்பனை செய்ய இயலுமா?

ஆனாலும் இவையெல்லாம்
ஒரு பூவின் வாழ்வு நோக்கமாக
இருந்ததாக சொல்ல முடியுமா?

அதே சமயம் ஒரு பூவின் படைப்பு மூலம்
இவ்வளவு பேரனுபவத்தை சாத்தியமாக்கிய
காரணமற்ற உயிர்சக்தியை நாம் உணர்ந்து
நெகிழ்ந்து கொள்ளாமல் இருக்க இயலுமா?


*****

இவ்விதம் இயற்கையின் ஒவ்வொரு படைப்பும்
நிறைவாக வாழுகின்றன.
மனிதன் மட்டும் தான் ஏதோ உலகத்தை
உய்விக்க வந்தவனைப் போல் மார்தட்டிக் கொண்டு
வாழ்ந்து முடிகிறான்!!!

_______________________________________________________________________________

Thursday, May 2, 2019




நாரணோ ஜெயராமன்  கவிதைகள்


- வைதீஸ்வரன் -




(நூல் முன்னுரை)


பிறந்த கணம் தான் நம் வாழ்க்கையின் மிக சத்தியமான தருணமாக இருக்க வேண்டும். காலம் நகர நகர நம் மேல் தோல் மாதிரி பல அமானுஷ்யமான திரைகள் வளர்ந்து வளர்ந்து நம் சுயத்தை மறைத்துக் கொண்டே நம் வயதை வளர்த்துகின்றன. அல்லது பௌதீகப் படுத்துகின்றன.

பிறகு புத்தி சாலித்தனத்தையெல்லாம் சேகரித்துக் கொண்டு பல முன்னோடி சிந்தனைகளை நமக்குள் நிரப்பிக் கொண்டு மீண்டும் நாம் நம் சுயத்தை தோண்டியெடுக்க ஆர்வம் கொள்ளுகிறோம். அந்த ஆர்வம் தீராத ஏக்கமாக தொன்மையான தாகமாக விசாரமாக நெக்குருகி தேம்பும் துக்கமாக விரக்தியாக தவமாக இப்படி பலவித அவஸ்தைகளை நாம் தீவிரமாக அனுபவிப்பதே நம் வாழ்க்கையாக மாறி விடுகிறது.

இப்படி ஏன் ஒரு தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தத்துக்கு நாம் தள்ளப் படுகிறோம்? புற வாழ்க்கை திடீரென்று ஏன் காரணமில்லாமல் ஒவ்வாமை ஆகி விடுகிறது. ? காலம் நம்மை ஏன் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவே ஒரு உணர்வு நமக்குள் உறுத்திக் கொண்டே இருக்கிறது? பார்ப்பதெல்லாம் முடிவான சத்தியம் இல்லையென்பதும் சத்தியத்தைக் கண்டுணருவது தான் நம் ஜீவித நோக்கம் என்பதும் நமக்குள் உந்துதல் நேருவதற்கு பல பிரத்யட்சக் காரணங்களும் நமக்கு தோன்றுகின்றன.

ஒரு வாகனத்தை ஒருவன் வாழ்க்கை முழுவதும் ஓயாமல் துடைத்து துடைத்து பிரித்து மாட்டிக் கொண்டே இருப்பது தான் அவனுக்கு விதிக்கப்பட்ட காரியமா? அந்த வாகனத்தின் சிருஷ்டிப் பயனை அழகான ஓட்டத்தை மேடுகளிலும் பள்ளங்களிலும் மலைகளிலும் காடுகளிலும் கடக்கும் அதன் அற்புதமான சுகமான பாய்ச்சலை என்றாவது அனுபவம் கொள்வானா?

Enlightenment என்பது ஒரு மாயமான் ...வெறும் வார்த்தை. விரலை விரலால் பிடிக்கவே முடியாது. என்று ஒரு கருத்தும் நம்மை பல சமயம் சமாதானப் படுத்துகிறது.


*******





திரு நாரணோ ஜெயராமனின் அன்றாடம் மனக் காகிதத்தில் தனக்கு மட்டும் எழுதி வைத்துக் கொண்ட மனக்குறிப்புகள் போன்ற வீர்யமான சின்ன சின்ன கவிதை வரிகள் என்னை மேற்கண்ட எண்ணப் பான்மைக்கு தூண்டி விட்டன.

இப்போது எழுபதைத் தொட்டுக் கொண்டிருக்கும் திரு நாரணோ ஜெயராமன் எழுபதுகளில் புதுக் கவிதையின் இளம் பிராயத்திலேயே இத்தைகைய தனித்தன்மை வாய்ந்த குறுங்கவிதைகளை எழுதி கவனம் பெற்றவர். கசடதபற,  ஞானரதம் போன்ற சிறந்த சிறு பத்திரிகைகளில் பிரசுரம் கண்டவர்.

பிரஞ்சு கவிஞன் ARTHUR RIMBAUD மாதிரி ஏழெட்டு வருடங்களுக்குள்ளாகவே தனக்குள் சொல்ல நினைத்த காத்திரமான வரிகளை சொல்லி விட்டு மௌனத்தில் அமைதியில் ஆழ்ந்து போனவர்.

இவர் படைப்புகள் எல்லாமே கவிதைகள் என்று பொதுவாக சொல்லப்படும் சில கவர்ச்சிகரமான அம்சங்களைத் தாண்டி சீரிய தனிமையில் நுண்மையாக செதுக்கப்பட்ட  உள்ளோசைகள்.

அநேகமாக எல்லா வரிகளுமே மிக எளிமையாக ஆதங்கமாக வேதாந்தமாக புறவாழ்க்கையின் அவசங்களால் தன்னியல்பாக எழும்பிய கேள்விகள். .
வாழ்வைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் அதன் மர்மங்களை புரிந்து கொள்ளத் தவிக்கும் ஏக்கங்களுடன் எழுப்பப் படும் கேள்விகள்..... விசாரங்கள்... சமாதானங்கள்

"வாழ்வை ஒரு பொறியில் கண்டு துன்புறுகிறேன்
ஒன்றவும் முடியாமல் வேறாய் விலகவும் முடியாமல்..” என்கிறார்
.
புற வாழ்க்கையின் அநிச்சயங்களால் ஆழமற்ற அலைக்கழிப்புகளால் அமைதி ஒரு கானல் நீராய் நம்மை அலைக்கழிக்கும் நிகழ்வுகளால் ஒரு மிக நுண்மையான கள்ளமற்ற மனம் தீர்வுக்காக அலையும் தீர்வற்ற போராட்டம் தான் இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை கவிதைகளாக இவருக்கு சொல்லத் தூண்டுகின்றன.

கிருஷ்ணபரமாத்மா, வேதங்கள், தத்துவ ஞானிகள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,  மார்ஸல் ப்ரௌஸ்ட்,  கேன்ட், இவர்கள் யாருமே இவருக்கு விடையளிப்பதில்லை.
"நான் நானாக இருத்தல் என்று ஒன்று உண்டா?" என்று கேட்டுக் கொள்கிறார்.

கண்ணாடித் தரையில் விழுந்த பாம்பாக இவருடைய வாழ்க்கையின் வியர்த்தமான அசைவுகள் மீண்டும் மீண்டும் விடுதலையை கனவு காண்கின்றன

சுய வீர்யத்துடன் சார்பில்லாமல் இவர் தேடும் வாழ்க்கையின் புதிர்களுக்கு அங்கங்கே அவ்வப்போது மனித வாழ்க்கையை யோகமாக அமானுஷ்யமான அருளுக்குப் பாத்திரமாகும் யோக்யதையுடன் புனித விரதங்களுடன் அணுக வேண்டுமென்ற இந்து மத ஆச்சார்யர்களின்  போதனைகளும் இவருக்கு சில புரிதல்களில் ஒரு கலங்கரை விளக்கமாக தெரிகிறது.

இவருடைய கேள்விகள் பிரபஞ்ச பூர்வமானவை. நிரந்தரமானவை. எப்போதும் புதுமை குறையாததாக வாசிக்கும் சீரிய உள்ளத்தை எப்போதும் பல வினோதமான விபரீதமான திசைகளில் சிந்திக்கத் தூண்டுபவை. தட்சிணாமூர்த்தியின் மௌனம் போல.

நான் எனப் படுகிற என்னையும் சேர்த்து
எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகக்
கழட்டிப் பிரித்துப் பார்த்து விட்டேன் ….
என்னவோ இருக்கிறோம்...என்னவோ செய்கிறோம்..
எதுவும் சாத்தியமில்லை!
மொத்தத்தில் ஒன்றுமில்லை போங்கோ!!"  ….என்கிறார்


*******

ஆனால் இந்தக் கவிதை ஆழமானது.. அவ்வளவு எளிமையானதல்ல!.

உயிரோடு மனிதனை அறுவை சிகிச்சை செய்து திறந்து பார்த்து உயிர் இருக்கும் இடத்தைத் தேடி கண்டு பிடிக்க முயற்சிக்கும் பிரும்மாண்டமான அபத்தத்தை [ colossal absurdity } நுண்மையாக சுட்டிக் காட்டுகிறது.

எப்போதும் வாசிக்கக் கூடிய பிரபஞ்சக் கவிதைகளை எழுதிய நாரணோ ஜெயராமன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

                                                                                             *******

நாரணோ ஜெயராமனின் கவிதைகள் சில இதோ: 

பிளவு

கடந்து சென்ற பின்
வீசிப் பரவிய வாசனைக்கு
அழகில்லை; அழகின்மையில்லை
கருப்பில்லை; சிவப்பில்லை
ஒல்லியில்லை; பருமன் இல்லை
குட்டையில்லை; நெட்டையில்லை
பகுத்தலின் எதிரெதிர் இரட்டை
எதன் ஆக்கம்?

******

முடிவு

இதென்ன கூத்து?
அவனவன்
அவனவனுக்குப் பிடித்ததை
உசத்தியென்று
சிண்டு முடிந்து; சிண்டைப் பிய்த்து
நரகமாக்குகிறார்கள்.
இதொன்றும் சரிப் படாது.
என்றென்றைக்கும்
எழுதப் படாத சிலேட்டுப் பலகையாக
திறந்து வைத்திருக்கிறேன்
வாழ்க்கைக்கு என்னை!

******

உருவமற

எனக்குப் பின்னால்
படுக்க வந்த பேரன்
என் போர்வையை விலக்கி
நீங்கள் இருக்கிறதே தெரியலை" என
கண்ணாடியில் மாயபிம்பங்கள்.        

_______________________________________________________________________________________