வெம்மைச் சுவடுகள்
(கோடை கவிதைகள் )
- வைதீஸ்வரன் -
பகல்
உருளும் சக்கரங்களில்
ஒளி பளிச்சிட்டுத் தெறிக்கும்.
பாதையின் குறுக்குமறுக்காய்
பாதரஸம் பாயும்
நிழல்முனைகள் நீர்மூழ்கிப் பிணங்களாய்
மிதந்து தொட்டுப் புரளும் மரத்தடிகள்.
அறிவிலிக் குரங்குகள் உயிரைத் துணிந்து
ஊஞ்சலாடும் கிளைகள்...
உதிரும் கனிகள்.
கடலில்
கத்தரித்த கந்தல் துணியலைகள்
ஒழுங்கற்று சிதறிப் பின் சிடுக்கு நீங்கும்.
அஜீர்ணவயிறாய்...மந்தக்காற்று
மேலும் கீழும் ஏறி திசையின் குடலைத்
தடவிப் பொருமும்.
ஒளி ஏறும் உலகில்
களைப்பு மீறும் உடல்கள்.
எதிரில் வீசும் காற்றில்
முதுகேறும் வெய்யில்.
______________________________________________________________________________________
முட்கள்
கோடை
சூரியன்
கொதித்தெழுந்த
முள்ளம்பன்றி
முள்
விரித்து உயரே
சீறி எழும்பி
நிலத்தைத் துரத்துது
மேற்கும் கிழக்குமாய்!.
நீண்ட நீண்ட நெருப்பு
நகங்கள்
முதுகைக் கீறி ஆற்றை
உறிஞ்சிக்
கூரைகள் மீது ரத்தம்
கக்குது!
சாலை மரங்களின் விதவைக்
கோலங்கள்
வறுமையின் சாட்சிகள்.
இலையற்ற கொம்பில்
பறவைகள் அலகை
அகல விரித்துக்
காற்றைக் கெஞ்சும்!
நாக்கு வறண்ட நாய்கள்
இறைத்து
நீரை நினைத்து மண்ணைப்
பிறாண்டும்.
தாரில் ஈக்கள் இறகு
பொசுங்க
இலைகள்
விழுந்து வாழ்வைப்
பழிக்கும்.
துணிவால் இறங்கி
நடையில் தளர்ந்து
மணல்வாய் சபிக்கத்
துடிப்பன கால்கள்
ஒட்டும் நாக்கின்
உமிர்நீர்த் தவிப்பு.
உளறும் பேச்சு.....உஷ்ணம்
வெறுப்பு
முலையை இழுத்துக்
களைத்த கன்றுகள்
சுவரை நக்கும் நடை
பாதைகள்.
தாகம்...தாகம்....சோடா....கோலா. ....
அக்கினிக் குளத்தில்
அடியிலோர் உடைப்பா!.....
ஓட்டுள் இறங்கி உள்ளைப்
பொசுக்குது....
கிளையாடும் மரங்கள்
எங்கே?...
கிழியாத குடைகள்
வேண்டும்.
மணிக் கூண்டின்
முள்ளைத் தொற்றி
மணியை மாற்றேன்!..உடனே....மாலையை
ஏற்றேன்!..
கொதிக்கும் மனங்கள்
வியர்ப்பது வியர்க்காத
தோலுக்கு!
ஈரம் கண்டோ....எத்தனை
யுகங்கள்?....
நீரில் கால் பட
நிழலில் தலைபடப்
பாடும் இரவுக்கு
பகlலெல்லாம் துடிப்பு.
ஐஸ்க்ரீம் கனவு!
உடல்கள் எரிவது
ஒரே ஒரு நெருப்பால்.
ஊர்கூடி வியர்ப்பது
ஒரே ஒரு நினைப்பால்!
முடகள் மடங்கினால்
பன்றி நிலவாகலாம்.
பகலின் வியர்வையை
நிலவில் துடைக்கலாம்
(1960)
______________________________________________________________________
வியர்வைப்
பாட்டு
வரும் கோடை வந்ததென்று
வெறும் கிளைகள் கைகொட்ட
வறண்ட நிலம் பொய்வியப்பால்
உடல் நெறித்து வாய் பிளந்த
உடற்த்தோல் ஊற்றெடுத்து
புதுவியர்வை பெருக்கெடுக்க
பனியன்கள் மிகநனைந்து
கட்கங்கள் கிழிந்தன.
கால்ர்கள் கட்டறுந்து
கழுத்துக்கள் அழுதன.
பகலென்ற பாம்புக்குப்
புதுப்பற்கள் முளைத்துப்
போய்
பார்த்தவரைக் கடித்துப்
பதுங்கியவரை புழுக்கின.
பைத்தியத்தின் மூளையாய்
பாதைத் தார் இளகிப்
பாதங்கள் குதிகொதிக்க
ஓரத்து மரங்களெல்லாம்
உள்ளூரில் சொர்க்கமாச்சு.
திருட்டுக்குப் பயந்து
திறந்து வைத்த ஜன்னல்கள்
திடீர்த்துறவி
நானென்று
படாரென்று வாய் திறந்தன.
“பாட்டாளி -படிப்பாளி"”
பாகுபாடு கரைத்தொழுகும்
கோடைப் பொது வியர்வை
கொண்டாடிப் பனை
விசிறிக் கைகள்
ஒயாமல் பகலாடி
இரவாடிப்
பின் ஓயும் ஒரு வேளை
ஒரு மனம் தலைதூக்கி
வருமாறு நினைத்தது.----
“” வெள்ளிக்குடை
வடிவிருந்தும்
வெய்யிலையா கொட்ட
வேண்டும்?
கொல்லும் சூரியனை
சொல்லாமல் பதவி
மாற்ற
ஊருக்குள் வாக்கெடுத்தால்
வியர்த்தவர் எவரும்
விரைந்து வந்து
கையடிப்பார்.
ஆனாலும் எச்சரித்தேன்....
அரசியலில்
வியர்வை உலர்வதற்குள்
விஷயங்கள் முடிய
வேண்டும்
காலம் தாமதித்தால்
ஊர்புத்தி
கமபளிக்குள்
ஒளிந்து கொண்டு
சூரியனே வேண்டுமென்று
சொன்னலும்
சொல்லும்......
உருண்டு
குளிர்காயும்
பூமிக்குள்
யார்புத்தி
நிலைக்கிறது??
_____________________________________________________________________________________
No comments:
Post a Comment