ஞானத் தேநீர்.
--------------------------
அந்தக் கடைக்கு நாங்கள்
அடிக்கடி போவது
அவள் தரும் போதைகாகத் தான்
கொஞ்சும் அவள் பேச்சிடையில்
விம்மும் பெருமேச்சால்
படபடக்கும் அவள் நெஞ்சு.
நாற்காலிகளின் இடைவெளிகளில்
அன்னத்தின் நளினத்துடன்
நகரும்...நெருங்கும்...குலுங்கும்...குனியும்
அவள் பணிவிடைப் பாங்கு
நாங்கள் பார்த்துத் தீராத கவர்ச்சி
எங்கள் சுவைத்த கிண்ணங்களில்
அவள் ஸ்பரிஸத்தின் எச்சம்
சுவைக்கு சுவையூட்டும்
பார்வை கிறங்கிய இருட்டில்
அவள் உடலை
உருட்டிக் கொண்டேயிருக்கும்
எண்ணங்கள்.
வீடு திரும்பும் வரை!
ஆனால் இன்று அவள்
அந்த" அவளாய் இல்லை.
உடம்பு வேறு தான் வேறாய்
உட்கார்ந்திருக்கிறாள்.
ஈ விரட்டுவது போல்
எங்களை வரவேற்கிறது அவள் கை.
நரைத்த கூந்தலுடன்
கறுத்த பற்களிடையில்
ஒழுகி வரும் சிரிப்பில்
உடலின் ஓய்ச்சல் வழிகிறது....
இருந்தாலும்
அவளிள் ஊறும் பிரியமோ
மலர்ந்து பரவும் மனோரஞ்சிதம்!
அவளைப் பார்த்த கணம்
வெறியடங்கி
சுகத்தின் மடியில் ஆழ்கிறது காமம்
காலத்தின் மாயப் பூச்சழிந்து
கருணை பரவுகிறது...காதலாக.
போதையற்ற போதம்
பரவுகிறது உள்ளெங்கும்.
திரும்பும் வழிகளில்
உலகம் மூப்பற்று
உள்ளம் மிதக்கிறது
நிர்வாணமாய்.
வைதீஸ்வரன் Published in Yukamaayini
No comments:
Post a Comment