நிழலாடும் நினைவுகள்
----------------------
நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்து மறைந்த மிக நெருங்கிய வர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. அதுவும் 94 வயதில் காலமான என் தாயாரைப் பற்றிய என் 72 கால நினைவுகளை இங்கே சில வார்த்தைகளில் கட்டுக் கோப்பாக பகிர்ந்து கொள்வது அவ்வளவு எளிதான தல்ல.
நினைத்துப் பார்க்கும்போது என் ஆறு ஏழு வயதில் என் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு மார்க்கண்டேய புராணம் கேட்ட பொழுதுகள் ஞாபகத்துக்கு வருகிறது..எமனுடன் போராடி ஆயுளை நீட்டிக் கொண்ட மார்க்கண்டேயன் கதையில் என் தாயாருக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமைகள் வந்தால் எங்களுக்கு வயிற்றைக் கலக்கும்.கையில் விளக்கெண்ணைக் கரண்டியை வைத்துக் கொண்டு எங்களைத் துரத்துவார்.. எப்படியாவது எங்கள் மூக்கைப் பிடித்து வாயில் ஊற்றி விடுவார். எங்கள் ஆரோக்கியத்தின் மேல் அவள் கொண்ட இந்த கசப்பான அக்கறையை நாங்கள் பல வருஷங்கள் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
அதே போல் நாங்கள் விஷமம் செய்தால் எங்களை அடிக்க மாட்டார். மாறாக
சுக்கை அரைத்து கண்ணில் போட்டு விடுவார். நாங்கள் பாதி கண் பாதியாக
சேர்ந்து அழுது அரற்றி விடுவோம். இந்த தண்டனை கண் ஆரோக்கியத்துக்கு
நல்லது என்று அப்போது பரம்பரை நம்பிக்கை..எங்களால் ஒப்புக் கொள்ள
முடியாத நம்பிக்கை.
அம்மா பிறந்த போதே தன் அம்மாவை இழந்தவர்.. மூன்று சகோதரர்களும்
இரண்டு சகோதரியுமாக ஒர் பெரிய குடும் பம் சரியான பராமரிப்பும் பரிவும் அற்ற சூழலில் தத்தளித்து வளர்ந்தது ..அந்த ஆதரவற்ற சூழலிலிருந்து தப்பித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய என் தாயாரின் சகோதரன் 'பாய்ஸ் கம்பனியில் சேர்ந்து பல சோதனைகளை தாண்டி வளர்ந்து பிற்காலத்தில் சிறந்த நாடகக் கலைஞராக மிளிர்ந்த எஸ்.வி ஸஹஸ்ரநாமம்
'' என் அண்ணா என்ன? நானும் நடித்திருக்கிறேன் '' என்று ஜம்பமாக சில சமயம் அம்மா சொல்வதுண்டு. ஆறு வயது குழந்தையாக இருந்த போது பள்ளிக் கூடத்தில் ஞானசௌந்தரி ' நாடகத்தில் கதாநாயகியாக நடித்து ''அழுது புலம்பியிருக்கிறாராம் '' சிறப்பாக ''அழுததற்காக சிறப்பு பரிசு பெற்றதாக சொன்னார். ''எப்படி அப்படி அழுதாய்? என்று கேட்டேன்.
''பொண் கொழைந்தெளுக்கு அழுகறத்துக்கு என்ன கஷ்டம் ?''சிரிக்கத் தான் முடியாது.. அப்போதெல்லாம் சிரிச்சாலும் அது குத்தம் ''
அவர்களுக்கு பல விஷயங்களில் ரொம்ப பிடிவாதம் உண்டு. அதை கௌரவமாக வைராக்கியம் என்றும் சொல்லலாம். சொந்த பேரன் கல்யாணத்தில் கூட சாப்பிடுவதற்கு மறுத்து தனியாக சமைத்து சாப்பிடுவார்..ஆசாரம்; மடி என்ற பரம்பரை வறட்டு வழக்கத்தில்.
சின்ன வயதில் ஸாமிக்கு நமஸ்காரம் செய்து ஸ்லோகம் சொல்லும் படி ஒரு கட்டளையாக என்னை வற்புறுத்துவார். அந்த ஸ்லோகத்தை ஒரு படத்தின் முன்னால் நின்று கொண்டு தான் சொல்ல வேண்டுமா.. நடக்கும் போது விளயாடும் போது அல்லது மனத்துக்கு தோன்றும்போதெல்லாம் சொல்லக் கூடாதா? என்று எனக்குள் எப்போதும் ஒரு போராட்டம் ஏற்படுவதுண்டு. நான் பெரியவனாகி முரண்டு பிடிக்கும்வரை என்னை ஸாமியின் முன் நிறுத்துவதில் கருத்தாக இருந்தார்.
இந்த பிடிவாதங்களால் மற்றவர்களின் மௌனமான கோபத்துக்கும் நிராகரிப்புக்கும் ஆளாவதை அவள் பொருட்படுத்தியதே இல்லை. அவளுக்கென்று ஒரு கடமையை ஒரு சூழலை ஒரு உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு திருப்தியுடன் வாழ்வில் ஆசையுடன் நல்ல சுவையான ஆகாரங் களில் நப்பாசையுடன் வாழ்ந்து முடிந்தவர்.
93 வயது வரை வாசிப்பையும் யோசிப்பையும் அவர் விடவேயில்லை. அந்த காலத்து மடிசிஞ்சி பத்திரிகை முதல் சமீபத்திய வணிகப்பத்திரிகை வரை சளைக்காமல் வார வாரம் கேட்டுக் கேட்டு வாசிப்பார்...என்னுடைய கதையோ கவிதையோ படிக்க நேர்ந்தால் நேரடியாக என்னிடம் சொல்லாமல் என் மனைவியிடம் அதை படித்ததாக சொல்லுவார்..
என் காரணமாக சில பத்திரிகை இலக்கிய ஆசிரியர்களை வீட்டில் பார்த்திருக்கிறார். அவர்களுடைய படைப்புகளை அடையாளம் கண்டு கொண்டு என்னிடம் அதை சுட்டிக் காட்டுவார்.
அமுத சுரபி ஆசிரியரின் எழுத்தை எங்கே படித்தாலும் அல்லது ஊடகத்தில் பார்த்தாலும் உடனே எனக்கு சொல்லுவார். [இது நிஜமான தகவல் ]
நூறு வயது வரை வாழவேண்டுமென்று அவருக்கு ஆசை இருந்திருக்கிறது. இந்த வாழ்க்கையும் இந்த உலக சூழலின் வேதனைகளும் அவரை தீண்டவே யில்லை என்று தோன்றியது..
இருதயம் தன் செயலை மெள்ள மெள்ள குறைத்துக் கொண்டு வந்த அவருடைய கடைசி தருணங்களில் கூட அவருக்கு உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற சபலம் இருக்கத்தான் இருந்தது. மிகுந்த தள்ளாமையையும் மீறி அவர் நாற்காலியை விட்டு எழுந்து நின்று கீழே விழுந்தார்..
பிறகு நகர முடியாத நிலையில் படுக்கையோடு இரண்டொரு நாட்கள் பிதற்றிய வண்ணம் கிடந்தார்.
சாவதற்கு சில மணி நேரங்கள் முன் ஏதோ நொறுங்கிய சத்தம் கேட்டு நான் அவள் அறைக்கு சென்று பார்த்தேன்.
அவள் அருகில் ஸ்டூலில் வைத்திருந்த கடிகாரம் கீழே விழுந்து கண்ணாடி சிதறித் தரையில் கிடந்தது..
காலத்தை நொறுக்கியதான திருப்தியுடம் என் அம்மா கண்களை மூடிக் கொண்டு கிடந்தார்..
பனிப் பேழைக்குள் [ice box ] படுத்திருந்த அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவள் எதற்காகவோ சிரிப்பது போல் எனக்கு தோன்றிக் கொண்டேயிருந்தது..
வைதீஸ்வரன் -
No comments:
Post a Comment