vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, June 7, 2012

கட்டையும் கடலும் - வைதீஸ்வரனின் முதல் சிறுகதை






கட்டையும் கடலும்             



[*1961 ல்   எழுத்துவில் வெளியான  என்  முதல் சிறுகதை]
 _________________________________________________________________

வைதீஸ்வரன்






கடற்கரையோரம் ஒரு நீண்ட கட்டை கிடந்ததுநல்ல வைரம் பாய்ந்த  பழங்கட்டை.  பல்லுபோன முகம் போல்  தலைப்பக்கம் குழியும்மேடுமாக ஒடுங்கிஒரு கோணத்தில்  பார்த்தால் பைத்தியம் சிரிப்பதுபோல் இருக்கும். அது மல்லாந்து கிடக்கும் அலட்சியபாவமும்,  நிச்சிந்தையும்  காணும்போது எல்லோருமே பொறாமைப்படுவதுண்டு.  அதுவும்இரவு பகல் ஓயாமல் சதா காலமும்   அல்லாடித் தவிக்கும் அலைக்கூட்டங்களுக்கோ   பொறாமையும்   பொட் டெரிச்சலும்  கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் கட்டை மேல்...  தங்களைப் பழித்துக்காட்டற   மாதிரி இப்படி ஒரு கட்டை  இடிச்ச புளியாக சுகமாகப் படுத்துக்கொண்டிருப் பதைப் பார்க்கப்பார்க்க பொறுக்கவில்லை அலைகளுக்கு.


நாலு அலைகள் சேர்ந்துகொண்டு "இந்தக் கிழத்துக்கு என்னடீ வேலை இங்கே“ என்று கிசுகிசுக்கும். இன்னும் நாலு அலைகள் எதற்கோ வந்த மாதிரி கட்டையின் காலைச் சீண்டிவிட்டுப் பின்னோடும். ஒரு சிற்றலை ஓசைப்படாமல் வந்து அடி மண்ணைப்  பறித்துவிட்டு கெக்கலிக்கும் ஒன்று சற்றுத் துணிச்சலாக அதன் முகத்தில் ஒரு வாளித் தண்ணீரை வாரியிறைத்துவிட்டு  “என்னஇன்னும் மயக்கம் தெளியலையா?“    என்று    விசாரித்து விட்டு  வளையும்.


ஆனால் கட்டையோ எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தது. கோபத்தின் சாயலைக் கூடக் காணோம். ஒரு காதில் புகுந்த தண்ணீரை மறு காதில் வடித்துவிட்டு ஒரே மாதிரி கிடந்தது.

இதையெல்லாம் வெகுநாட்களாக கவனித்துக்கொண்டிருந் தது ஒரு  நீலி. அவள் மேனகை ஜாதி.  அசையாததை   அசைய வைப்பதில் ஒரு ஆவல்.  அடம்.


மெள்ள பாவாடையை சுருட்டி சுருட்டி அடித்துக்கொண்டு அது கட்டையை சுற்றிச் சுற்றி வந்தது. தொட்டும் தொடாத துமாய்   பல முறை வளையவந்தது. பிறகு முகத்தில் பொய்யாக நீரை வடித்துக்கொண்டு,

  கட்டே...ஒனக்கு   என்ன  வேணும்?


கட்டை சிரித்தது. பேசவில்லை.


ஒண்ணுமே பேசாம இருந்தா ரொம்ப பெரிய மனுஷன்னு அர்த்தமோ?”  கொஞ்சலாக இடித்தது .  கட்டை அசைய வில்லை.
   

நீலிக்கு  அவமானம் ஒரு பக்கம்  ஆத்திரம் ஒரு பக்கம்....


சும்மா இப்படி சோம்பேறித்தனமா மல்லாந்து கெடந்தா  பெரிய ஞானீன்னு அர்த் தமோஒன் மனசுலே நீ என்ன  தான் நெனைச்சிண்டிருக்கே?” என்று செவிடனிடம் பேசுவதுபோல் கத்தியது. கட்டை காற்றுக்கு அசைந்த மாதிரி தோன்றியது. அந்தக் காற்றின்  ஓசையோடு இசைந்து மெதுவான  வார்த்தைகள் கட்டையிலிருந்து வெளிப்பட்டது.


நீ.. இப்போ  இங்கே என்ன செய்யறே?”


” நானா....நான்...அலை.......


நீ ஏன் அலையறே?“ குறுக்கிட்டது கட்டை.


நான் ஒண்ணும் அலையலே...ஆடிப் பாடறேன்.. .துள்ளிக் குதிக்கிறேன்.“  ஓடி வெளையாடறேன்......


’ இல்லையே... நீ வெறுமனே  தத்தளிக்கிறே...?


” இல்லே  நான் கலகலன்னு கொழந்தை மாதிரி சிரிக்கி றேன்...


இல்லே...வளவளன்னு கெழவி மாதிரி சலிக்கிறே....


நீலிக்குப் பொல்லாத கோபம் வந்துவிட்டது. அடிபட்ட முள் ளம்பன்றி போல  உச்சஸ்தாயியில் கத்தியது.


ஒனக்கு ரொம்பத் தெரியுமோநீ ஒரு பொணம்..நான் இத்தனை  காலமே உன் தரையை மெழுகிக் கோலம் போடறேனே... அந்த உதவிக்கு நன்றி   சொல்லக்கூட   ஒனக்கு ஈரங் கிடையாது..


 கட்டை அடித்தொண்டையில் சிரித்துக்கொண்டது.


அடி அசடே..நீ பொறந்ததுலேருந்து மணலுக்கு   முதுகு   தேக்கிற  அடிமைத்தொழி லைத்  தவிர  வேறெ என்னத்தை சாதிச்சுட்டதா  நெனைச்சிண்டு இருக்கே! “


கேட்டதும் பொறுத்துக்கொள்ளமுடியாமல் ஓவென்று  இரைந்து கறுவிக்கொண்டே  ஓடியது நீலி.


இரவுமுழுவதும் கடலில் பேச்சுமூச்சையே காணோம்.அமைதியற்ற  மௌனம். வழக்க மான சளசளப்பும் வம்பும் அடங் கிப் போய் அலைகள் இருட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தன.  ஆத்திரம் அடங்கிவிட்டதாகத்  தெரியவில்லை...பொருமல் மீறும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக “டப் டப்’  என்று  தங்களையே அடித்துக்கொண்டன.


விர்ரென்று அடித்த காற்றில் லேசாக அசைந்தவாறு கிடந் தது கட்டை.  நிலத்தையும்  நீரையும் தேய்த்துக்கொண்டு திக்குத் தெரியாமல் சுழன்றது சூறைக்காற்று.


வானத்தில் முதல் வெளிச்சம் படிந்தவுடன் அலைகள் அத்த னையும் கூடிக்கொண்டு சதிகாரர்கள்போல்  கட்டையை வளைத்துக்கொண்டு தாக்க ஆரம்பித்தன. நெஞ்சி லும் முதுகிலும் முகத்திலும் குத்திப் புரட்டின. கட்டை புரண்டது. புரண்டுகொண்டே சிரித்தது.  இல்லை... சிரித்துக்கொண்டே புரண்டது.


ஜோவென்று எக்காளமிட்டுஅலைகள் தாக்கிய சிலகணத்துக் குள் கட்டை அவர்கள்  முதுகில் ஏறிக்கொண்டது.   நர்த்தன மாடியது. ஒவ்வொரு அலையும் முதுகை நெளித் துக் கொண்டு துடித்தன. கட்டை அவற்றை  மீன்குட்டி மாதிரி எகிறி எகிறி தாண்டிப் பாய்ந்து சென்றது.


 “ஐய்யோ....போகாதே...நில்...நில்... என்றது ஓரலை.


கரைக்கு வா...போ கரைக்கு   வா.. என்று தடுத்ததுமறித் தது    ஒரு பேரலை.


வந்து விடு..வந்து...விடு... என்று கெஞ்சியது நீலி.


கட்டை திரும்பவில்லை.அதற்கு திசை தெளிந்துவிட்டது. அடிவானத்தில் தெரிந்த ஜாஜ்வல்யம் அதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது.


சுட்டெரிக்கும் வெளிச்சப் பகலில் அலைகள் பரபரவென்று அங்குமிங்கும் கரைக்கு வந்து கட்டை கிடந்த இடத்தை சுற்றிச்சுற்றி பரபரத்தன. கட்டை கிடந்த பள்ளத்தை தோண்டி தோண்டி  ஓயாமல் வட்டமிட்டன.


எதையோ தொலைத்ததுபோல் ஒரு பதற்றம்,வருத்தம். என்றுமே  நிலையற்ற அந்த ஜன்மங்களுக்கு ஒரு  “தாய்ச்சி”  போலிருந்தது அந்த  பழங்காலத்துக்  கட்டை.  அது இப்போது இல்லை.


அந்த மீளாத இழப்பின் ஆறாத ஓலம் என்றென்றும் நிரந்தர மாகிவிட்டது அலைகளுக்கு.















No comments:

Post a Comment