vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, November 26, 2019



கால் முளைத்த மனம்

( சிறுகதைத் தொகுப்பு  : 
ஆசிரியர் எஸ். வைதீஸ்வரன் )

(விருட்சம் வெளியீடு)

நூல் விமர்சனம்  - " சிட்டி"  ( P. G. சுந்தரராஜன் )




இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்கள் பல மாறுதல்களுக்கு உட்பட்டுப் புத்துருவம் பெற்றிருக்கின்றன. புதுக்கவிதையும், நாவலில் நனவோடை உத்தி கையாளப்படுவதும் இவ்வகையில் ஒரு வளர்ச்சி. இத்தகைய மாறுதல்களுக்கு சிறுகதை உட்பட்டதாக அதிகமாகத் தெரியவில்லை. சிறுகதை என்பதை மேல் நாட்டில், அமெரிக்காவில்தான் அதிகமாகக் கையாண்டார்கள். ஆகவே, இதை அமெரிக்க தேசிய இலக்கியம் என்றும் சொல்வதுண்டு. ஆங்கில இலக்கிய வரலாற்றில் சிறுகதைக்குத் தனி இடம் கொடுக்கப்பட்டதில்லை. வரலாற்று நூல்களில் கவிதை, உரைநடை, புனைக்கதை என்ற பகுதிகளைக் காணலாம். ஆனால், சிறுகதைக்கென தனி அத்தியாயத்தைப் பார்க்க முடியாது. புனைக்கதையின் ஒரு அம்சமாகவே அந்த வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பாட்டியிடம் கதை கேட்பது, புராண பிரவசனங்கள் கேட்பது போன்ற பழக்கம் வேரூன்றிய  தமிழ் பண்பாட்டில் சிறுகதை ஒரு தனியிடத்தைப் பிடித்ததில் வியப்பில்லை. இங்கும், மேல்நாட்டிலும் இந்த வடிவத்தில் அதிகமான மாறுதல்கள் குறிப்பிடும் படியான விதத்தில் ஏற்பட்டுவிடவில்லை. சிறுகதையை ஒரு முக்கிய வடிவமாகக் கையாண்ட மணிக்கொடி எழுத்தாளர்களிடையேக் கூட, அது ஒரு நடப்பியல் ரீதியில் தான் அதிகமாகப் புலப்பட்டது. பொருளடக்கத்தில் சோதனை செய்த மௌனி தம்முடைய முயற்சிகளில் வெற்றியடைந்ததாக சொல்வதற்கில்லை. மொழியின் நெளிவு சுளிவுகளை லாவகமாகக் கையாண்ட லா. ச. ரா. நடையில் மட்டுமே மாறுதல்களை உண்டாக்கினார். மற்றபடி இதைப் பல படைப்பாளிகள் சோதனையாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறுகதைக்கென பத்திரிகைகளும், கணிசமான சன்மானமும், பாராட்டுதலும் அடிக்கடி நிகழும் தமிழ் இலக்கிய உலகில், சிறுகதை இயல்பான வடிவத்துடன்தான் இன்னும் நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதில் சோதனை முயற்சிகளும். நவீனப் போக்குகளும் ஆங்காங்கே தென்பட்டாலும், வாசகர்களின் கவனத்தை  அதிகமாகப் பெற்றதாகத் தெரியவில்லை. 

வைத்தீஸ்வரனின் "கால் முளைத்த மனம்" என்ற சிறுகதைத் தொகுப்பு இவ்வகையில் மிகவும் வித்தியாசமானது. இலக்கிய விமர்சனத்தில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது. இந்த ஆசிரியர் ஒரு ஓவியரும் என்பதால்தானோ என்னவோ, கதைகளில் ஓவிய அம்சங்களான சர்ரியலிசம் (surrealism), impressionism , symbolism போன்ற உத்திகள் மிகுந்து கதைகளை புதுமையாகக் காட்டுகின்றன. கதைகளின் உள்ளடக்கம் நடப்பியல் பாணியிலான சம்பவங்கள்தான் என்றாலும், அவைகளில் பொதிந்திருக்கும் உளவியல் நோக்கு, கலையுணர்வு, வாசகர் எதிர்பாராத , ஆனால் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் ஆகியன சில கதைகளில் மேஜிக்கல் ரியலிசம் வரை இட்டுச்செல்கின்றன.

தலைப்புக்கதை ஒரு ஓவியக்கலப்படம் (collage). காலை முதல் இரவு வரை சாதாரணமாக  மனித வாழ்க்கையில் நிகழும் காட்சிகள் கோர்த்துக் கொடுக்கப்பட்டிருன்றன. அந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் தொனிக்கும் ஓசைகளைக் கூடக் கேட்கும் பிரமை ஏற்படுகிறது.

"கட்டையும் கடலும்", "மலைகள்" இரண்டும் கவிதையில் நனைத்தெடுத்த உரைச்சித்திரங்கள். ஒன்றில், வெறும் கட்டை, கடல் அலைகளின் உயிர்த்துடிப்பு வாசகரைக் கவர்கிறது.   "வார்த்தை"  கதையில் பல எண்ணங்களால் அலைக்கழிக்கப்டும் சிறுவனின் ஆத்திரத்தை உணர முடிகிறது. சொற்களின் பொருள் தெரியாவிட்டாலும் பழக்கத்தில் அவைகளை உபயோகிப்பதன் பின்னணியை அந்தச் சிறுவன் உணர்ந்திருப்பது இயல்பாகவே இருக்கிறது. " சைக்கிள் சாமி" கதையில் சாமியின் செயல்கள் இறுதியில் ஒரு இயல்பான முடிவைத்தான் காண்பிக்கின்றன என்றாலும், அந்த முடிவை ஆசிரியர் பயன்படுத்தும் உத்தியில் புகழ் பெற்ற அமெரிக்க  ஆசிரியர் ஓ. ஹென்றியின் சாயல் புலப்படுகிறது. "ஒரு பயணத்தின் சில மின்னல்கள்"  இதே வகையில் எதிர்பாராத முடிவை இயல்பாக உணர்த்தும் சாதனை. " சிருஷ்டி " யில் அப்பாவின் சிற்பத்திறமையைப் பற்றி மேலான கருத்து கொள்ளாத மகனின் அலட்சியம் தெளிவாகத் தெரிகிறது.

"கனவில் கனவு" மிகவும் உன்னிப்பாக, தேர்ந்த கலை உணர்வின் விளைவாக படைக்கப்பட்ட ஒரு impressionistic  (futuristic  என்றுக்கூடச் சொல்லலாம்) ஓவியம். "காக்கைக் கதை" ஒரு புதுமையான நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டாலும் அங்கத உணர்வுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

"ஹே பரோடா" சாதாரண நிகழ்ச்சி ஒன்றின் ரசமான அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யாருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான். "ஒரு துளியில்" நேரும் நேசமின்மையும், அவசரமும் , சரியாக செயல்பட முடியாத நிலையும் நடப்பியல் வகைதான். "ஜன்னல் இரண்டு" சிறுகதை வடிவத்தை மீறிய குறுநாவல் வகை. இந்தக் கதையில் ரங்கனின் அனாவசிய உணர்ச்சிகளும், தலையீடும் சரியான விளைவைத் தருகின்றன. மொத்தத்தில் இந்தக் கதைகள் ஒரு திட்டமிட்ட இலக்கிய சோதனையின் ஆரம்பக்கட்டமாகவே தொனிக்கின்றன. சில, நல்ல வெற்றியையும் பெற்றிருக்கின்றன. சிறுகதை வளர்ச்சியில் இவைகளை ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். 

________________________________________________

மேற்கண்ட கட்டுரையை எழுதிய ஆசிரியர் பற்றி:

" சிட்டி " ( பெரியகுளம் கோவிந்தஸ்வாமி சுந்தரராஜன் ) (20 April 1910 - 23 June 2006)  -  " மணிக்கொடி"  இதழ் காலத்து முன்னோடி தமிழ் எழுத்தாளர். மேற்கண்ட புத்தக விமர்சனத்தை எழுதியபொழுது, அவருக்கு சுமார் 88 வயது. இசைக் கலைஞர் மதுரை மணியின் நெருங்கிய நண்பர். எழுத்தாளர் தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய " நடந்தாய் வாழி, காவிரி " என்ற புத்தகம் குறிப்பிடத் தகுந்தது ( " “காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” )

1 comment:

  1. ஐயா, உங்களின் முழு கதைத் தொகுப்பு வந்துள்ளதா? அப்படியெனில் என்ன பதிப்பகம் வெளியிட்டுள்ளது? எங்கு கிடைக்கும்?

    ReplyDelete