என் பாட்டியும் சினிமாவும்
வைதீஸ்வரன்
அப்பா சேலத்தில் பெரியகடைத்தெருவில் சைக்கிள்கடை வைத்திருந்தார்.
பொதுவாக சாயங்காலம்
கடையைப் பூட்டிக்கொண்டு ஏழு அல்லது ஏழரைக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார். அந்தப் பழக்கம் திடீரென்று மாறியது. சென்ட்றல் டாக்கீஸில் பாகவதரின் படம் ஹரிதாஸ் வெளியான பிறகு அப்பா ஒம்பதுக்குக் குறையாமல் வீடுதிரும்ப மாட்டார். ஆரம்பத்தில் என் அம்மாவுக்கும் அவருக்கும் இதுபற்றி
ஏகத் தகறாரு. அப்பா சொன்ன காரணத்தை கொஞ்சநாட்கள் தாமதித்துத் தான் அம்மா நம்ப ஆரம்பித் தாள். ஆனாலும் முழுச்சமாதானம்
அடையவில்லை.
ஏரிக்கரைப்பக்கம் சென்ட்றல் டாக்கீஸில் அதன் பக்கவாட்டு மதில்சுவரில் ஒரு பெரிய படல் கதவு இருக்கும் அதில் அங்கங்கே சௌகரியமாக ஓட் டைகள் இருக்கும். மாலை ஏழுமணிக்கு மேல் அந்தப் படல்
கதவைச் சூழ்ந்து ஒரு சின்னக் கூட்டமே நிற்கும். அந்த ஓட்டைவழியாக பார்த்தால் பாகவதரின் அங்கங்கள் மேல்பாதி கீழ்பாதியாக கொஞ்சம் கொஞ்சம் தெரி யும். படம் எப்படித் தெரிந்தாலும் பாகவதரின் பாட்டு
கணீரென்று
ஆனந்த மாக கேட்கும். என் அப்பாவும் நண்பர்களும் அந்தக் கதவடியிலேயே துணியை விரித்துப்
போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள். ஹரி தாஸ் படத்தில் இரண்டு நிமிஷத்துக்கு ஒரு பாட்டு வீதமாக இருக்கும். ஒரு அரை மணிநேரத்தில் ஐந்தாறு பாட்டுக்களாவது கேட்டு விடமுடி யும், வசனங்களையும் சேர்த்து.
என் அப்பாவுக்கும் நண்பர்களுக்கும் இது விட்டுவர முடியாத பொழுது போக்கு. ஒரு மயக்கம் என்றே சொல்ல்லாம்...ஏரிக்கரைக்காற்றும் இலவசப்பாட்டும்சொல்லிமுடியாத
சுகம்...அதுவும் முக்கியமாக காலிழந்த முடமாக பாகவதர் தன் உடம்பைத் தரையில் இழுத்துக்கொண்டு
உச்சஸ்தாயியில் பாடும் “அம்மை யப்பா உங்கள் அன்பை இழந்தேன்...” பாட்டைக்கேட்டு கண்ணீர்விடாமல் வீட்டுக்கு வரவே மாட்டார். அப்பா. கொட்டகைக்கு உள்ளே பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்களும் பெண்க ளும் கூட
அப்போது தேம்பித்தேம்பி விசும்பிக்கொண்டிருப்பார்கள்..
“இந்த சினிமாவை நானும் பாக்கணும் என்னை கூட்டிக்கொண்டு போங்க..” - அம்மா கேட்டாள். [யாருக்கும் தெரியாமல்
அப்பா இந்தப் படத்தை ஒரே
ஒரு தடவை ஏற்கனவே பார்த்திருந்தார்]
“வருகிற ஞாயித்துக்கெழமை நாம ஹரிதாஸ் படம் பாக்கறோம்.”என்றாள் அம்மா. கண்டிப்பான குரலில். “நானும் வருவேன்...” என்று அம்மா தலைப்பைப் பிடித்துக்கொண்டு தொங்கினேன் .
ஞாயிற்றுக்கிழமை
பாட்டியிடம் சொல்லிவிட்டு சினிமாவுக்குக் கிளம்பினோம்.
“நேரத்தோட வந்துடுங்கோ! “ என்றாள் பாட்டி சற்று முணுமுணுப்புடன்.
“சினிமா முடிய மூணு மணி நேரம் ஆகும்..” என்றேன்.
காசைக் குடுத்துட்டு பாதிலே வர முடியாது..” என்று நகர்ந்தார் அப்பா.
நீளப்படத்தைப் பார்த்துவிட்டு இரவு பத்துமணிக்கு குதிரைவண்டியில் வந்துகொண்டிருந்த போது அம்மாவின் மூக்கும் கண்களும் சிவந்து, குலுங்கி க்கொண்டிருந்தாள்...மகிழ்ச்சியும்
துக்கமும் பொங்கிக் கொண்டிருந்தன. ”என்ன சாரீரம் என்ன உருக்கம்...என்ன ஸ்தாயி சஞ்சாரம்.. இதெல் லாம் மனுஷ சாதகத்துலெ வராதுன்னா... பொறக்கும்போதே ஆண்டவன் அவன் நாக்குலெ சங்கீதத்தை எழுதிஇருக்கணும்..இதெல்லாம் போன ஜன்மத்து புண்ணி யம்..“ என்று தழுதழுத்துச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“ஒனக்குத்தெரியுமா?..ஏதோ தேவபுருஷனா பாகவதரை நெனைச்சிண்டு அவனைத் தொட்டுப் பாக்கணும்னு எவ்வளவு பேர் துடியாத்துடிக்கிறா தெரியுமா?...
“இந்தப் பாட்டைத்தானே நான் சாயங்காலத்துலெ
கொட்டகை ஓரத்துலே நின்னு கேக்கறேன் ...இப்பப் புரிஞ்சுதா?”, அப்பா தன்னை நியாயப்படுத்திக் கொண் டார்.
வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் காலடி வைத்தோம்.
“இரு...இரு.. உள்ளே வராதே..” பாட்டி வாசலில் நின்று சத்தமாக குரல் கொடுத்தாள். கையில் ராந்தல் விளக்கோடு நின்றுகொண்டிருந்தாள்....
“எல்லாரும் பின்கட்டுவழியாப் போய் குளிச்சுட்டு உள்ளே வாங்கோ”வென்னீர் போட்டுவைச் சிருக்கேன்..”
“குளிக்கிறதா? என்ன அம்மா இது...? இந்த நேரத்துலெ! என்ன இந்த வழக்கம்....?” அப்பா கேட்டார்.
“ஆமா அது வழக்கமில்ல நம்ப சம்பரதாயம்...சினிமா டிராமாவுக்கு
போய் ட்டுவரதும் இன் னொரு ’எடத் துக்கு’போய்ட்டு வர மாதிரிதான் குளிச்சாத் தான் அசுத்தம்போகும் ஆமா... இது ஒங்கதாத்தா சொன்னது. நேரா பின்கட்டு வழியாப்போய்
குளிச்சுட்டு உள்ளே வாங்கோ.
“
அப்பாவும் அம்மாவும் முனகிக்கொண்டேபோனார்கள்.
“என்ன பாட்டி..எதுக்கு குளிக்கணும்? நாங்க பாத்துட்டுவந்த படம் பக்திப் படம். . சாமியைப் பத்திய கதை..அதைப் பாத்தா நீகூட முருகாமுருகான்னு
கன்னத்துலேபோட்டுப்பே.. அதைப்பாத்தா என்ன தீட்டா.?”
என்று கேட்டேன்.
பாட்டி பதில்பேசவில்லை கோபமாக
அடிக்க வந்துவிட்டாள்!
அதற்குப் பிறகு நாங்கள் மாதம் ஒரு முறையாவது இப்படி ராத்திரியில்
குளிக்கவேண்டி இருந்தது.
சில வருஷங்களுக்குப் பிறகு பாட்டியைக் கரை ஏற்றிவிட்டு நாங்கள் எல்லோரும் குளித் தோம்.
அதற்குப்பிறகுதான் சினிமாவுக்குப் போய்விட்டு வீட்டுக்குவந்து துக்கம் அனுசரிக்கும் அந்தப் பழக்கத் திலிருந்து விடுபட்டோம்.
0
No comments:
Post a Comment