இந்த நள்ளிரவில்............
வைதீஸ்வரன்
[ஜுன் 2018 அம்ருதா]
இந்த நள்ளிரவில் எப்படி ஏன்
மனம் பிரகாசமாக இருக்கிறது..?
பகல் நிறத்தில் ஒளிந்து பதுங்கிக் கொள்ளும் பிராணிகள் போல்
இந்த மனத்துக்கு ஒரு உடம்பா?....
இருட்டுக் கரி பூசப் பூச ஒரு செத்த நட்சத்திரம்
மீண்டும் பிறந்து இளமைக்கு ஒரு பிரபஞ்ச சாட்சியாய் தெரிவது
என் மனத்தை போல் தானா?
பகல் ஒளி ஒரு விகாரம்...
பைத்தியங்களின் கும்மாளம்
பாசாங்குகளின் ஊர்வலம்..
.பொய்களின் அறைகுறை அரிதாரம்..
அங்கே செத்துக் கிடப்பது போல் பல ஊமைக் கவிதைகள்
இருட்டை போர்த்திக் கொண்டு கிடக்கின்றன..
.அறியாமைகளோடு அடையாளமற்ற குப்பைகளாய்...........
பூமிப் பாதாளத்துக்குள் புதைந்து புரளும் கடல்களின் காத்திருப்பாய்
.அவைகள்..............
திடீரென்று உடம்பைக் கழற்றிப் போடத் திமிருடன் துணியும் வேளை.யை .அது அறியக்கூடுமா?
யோனிக் கதவுகளை முட்டித் திறக்கும் தலையென மனம்................
இந்த நள்ளிரவில் சூரியன் போல் எப்படி பிரகாசமாக விரிகிறது?
கவிதைக் கங்குகள் பொற்த்தூளாய் உள்ளே உருண்டு ஒரு பேரிசை மீண்டு வருகிறது! பிரபஞ்சத்தின் முதற்கணம் என் மனம்
எப்படி இது?
No comments:
Post a Comment