முதுமையில்
................................................................................................................................. வைதீஸ்வரன்
நினைவுகள்
கைநழுவும் மீன்கள்
காலப் புதரில் பதுங்கிக் கொள்ளும்
கைக்கெட்டாப் பச்சோந்தி....
முகங்கள் எவ்விதம் பெயர் மாறுகின்றன?...
சில சமயம் இறந்த வருஷங்களை
இடம் மாற்றி நிறுத்துகின்றன..
வேளைகள் இப்போது வெவ்வேறு வரிசையில்
விடிகிறது..
பலமுறை
நேற்று நடந்ததை இன்றாகவும்
இன்று பார்ப்பதை இனிமேல் தான்
பார்க்கப் போவதாகவும் ஏமாறிக் குழம்புகிறது
மனம். ஒரு சிலந்திக்கூடு........
வந்த போது தெரிந்த நீங்கள்
விடை பெறும்போது வேறொருவராகிப்
போகிறீர்கள்......ஏன் அப்படி?
நினைவு மூட்டைகள் சிதறித் தெறித்து
உருளுகின்றன நிகழ்வுகள்.......
பாரமற்ற தலை..
ஆசிரியரற்ற ஆரம்பப் பள்ளிக் கூடம்...
இப்போது ஆகாசம் எனக்கு உள்ளும் புறமும்
ஏதோ ஒரு முடிவில் இறங்கி
இப்போது குடையும் கையுமாக
கால் வீசி நடை பயில்கிறேன்... நடையா....இல்லை...
குழந்தைகள் எப்போது மீனானார்கள்?
குளத்தின் ஆழமா இது ?
அல்லது இப்படி ஒரு செவ்வானமா?
என் பயணத்தில் நானே இல்லாமல் போகிறேன்!!
No comments:
Post a Comment