vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, December 7, 2014

ஊரென்று ஓன்றில்லை

ஊரென்று  ஓன்றில்லை
 ------------------------------------------
வைதீஸ்வரன்


 அப்போது  
  என்னிடம்  ஒரு  கை விளக்கு இருந்தது...
  பயமின்றி நடப்பதற்கு.
  பயணத்துக்குப்  போதும்
  பாதையில் சிதறிய முட்கள் 
  பாதங்களில்  தைக்காமல்
  நம்பிக்கையுடன் நகருவதற்கும்
  எதிர்ப்படும் வௌவால்களின்
  ‘விருட்டை’த்  தவிர்த்துப் போவதற்கும்
  அப்போது  ஒரு கை விளக்கு இருந்தது.
  நடை  நிதானந்  தான்
  செல்லும்  தூரமும் நேரமும்
  அதிகந்தான்
  மேடுபள்ளங்கள்  சகஜந்தான்
  ஆனால்  அயராத  நம்பிக்கை  ஆமை  போல.....
  விடிய  விடிய நகர
  ஊரும்  சூரியனும்  ஒட்டி நெருங்கி  விடும்
  உறவும்  உற்சாகமும்  ஊற்றெடுக்கும்..
  சந்தோஷம்  சமுத்திரமாகும்..

  ஏன்  எவ்விதம்  எப்படி  மாறியது
  இந்தப் பயணம்?
  விளங்காத  கால்களைப்  போல்
  கைவிளக்கு அர்த்தமற்ற தொங்கலாச்சு  ..
  பாதைகள்  பாம்புத்  தோலாய்
  நீண்டு வளர்ந்து வளைந்து
  கால்களில்  ஏறும் முட்கள்
  கண்களுக்குத் தெரிவதில்லை
  வெளியெங்கும் அசுரப் பறவைகள்
  மரணம்  பூசிய உலோகக் கணைகளாய்
  பாய்ச்சலுடன் கடக்கின்றன..
  ஈரமற்ற மண்ணுக்குள்
  எங்கெங்கும்  கண்ணி வெடிகள்
  திசைகளைத்  தவறிக் காட்டும்
  திருட்டு  விளக்குகள் தெருவெளிச்சமாச்சு.
  பயணமோ  தெறித்துப்  பறக்கும்  வேகம்
  கண்ணிமைப்புகளில் காலத்தைத்  தாண்டுகிற உபாயம்.
  இலக்கை  அடைய  பயத்தைத்  தவிர துணையொன்றில்லை 
  அதனால் 
  சாதனையின் பெருமிதமும்  கர்வமற்ற  ஆனந்தமும்
  இல்லவே  இல்லை.
  பயணத்தின் ஞாபகங்கள் பாலை மழை போல் தொலைகின்றன
  பிழைத்துக் கரை வந்த பின்னும் கனக்கும் பதற்றங்கள்
  உறவுகளின்  ஒட்டுதலற்ற  புன்னகையும்
  தாவர சுவடற்ற தரையின் கருத்த கந்தக நெடியும்
  எனக்கு  ஊராகிறது.

  ஒரு  பயணம்  அர்த்தமற்றுப் போனதற்கு
  அப்படியென்ன விரோதம்
  நமக்கும் -  வாழ்வுக்கும் ?

  


கணையாழி  Dec  2014


No comments:

Post a Comment