vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, August 18, 2014

எனக்குப் பிடித்தவற்றில் சில கவிதைகள்

   எனக்குப் பிடித்தவற்றில்


சில  கவிதைகள்

வைதீஸ்வரன்
1.

    அப்பா!...உன்  ஆடுகளை விற்றுத் தான் என்னை
    பார்க்க வர  முடியும் என்கிற  தொலை தூரத்தில் 
  என்னைக்  கட்டி வைக்காதே!
    காடுகள்  ஆறுகள்  மலைகள்  இல்லாத  ஊரில்
    முடிக்காதே  என்  திருமணத்தை...
    கோழி  கூவி  பொழுது  புலராத  முற்றமில்லாத
    வீட்டிலோ....கொல்லைப்புறத்திலிருந்து  
    சூரியன்  அஸ்தமிப்பதை பார்க்க  முடியாத  வீட்டிலோ 
    மாப்பிள்ளை  பார்க்காதே!
    இது வரை  ஒருமரம் கூட  நடாத பயிர்  ஊன்றாத
    மற்றவர்கள் சுமையைத்  தூக்காத  கை என்ற  
    வார்த்தையைக்  கூட  எழுதாத
    எழுதத்  தெரியாதவன்  கையில்  
    என்னை  ஒப்படைக்காதே!
    எனக்குத்  திருமணம்  செய்ய  வேண்டுமானால்
    நீ  காலையில்  வந்து  அஸ்தமன நேரத்தில்
    நடந்தே  திரும்பக் கூடிய இடத்தில் செய்து  வை  
    இங்கே  நான்  ஆற்றங்கரையில்  அழுதால்
    அக்கரையில் உன்  காதில்  பட்டு 
    நீ  வர வேண்டும்
நிர்மலா புதில்  எழுதியது. [சந்தால்  மொழிக்  கவிதை ] (Translated  by  AMBAI)

2. 

யாண்டுளானாயினு  மறியேனோரும்
  புலி சேர்ந்து  போகிய கல்லளை போல
  வீன்ற வயிறோ விதுவே
  தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!
      {அதன் எளிமையான  வடிவம்}
  புலியுறங்கும்  குகை
  எனது  கருவறை -  பாய்ந்து
  புறப்பட்டு வருவான் என்
  புதல்வன்
  தொலைவதும் ஓய்வதும்
  அவன்  குணமல்ல
                                           புறநாநூறு

3.

  இரவில்  காலியான  ரயில்
  இனி நகரப்  போவதில்லை
  எனும் உத்திரவாதத்தை  அவளுக்கு
  அளிக்கவில்ல
  இரயிலின் கடைசி  மூச்சை  உணர்ந்தவள்  போல
நிற்கும்
  பெட்டிக்குள்  கால் வைக்கிறாள்  கிழவி
நகர்கிறது இரயில்
  ஓசையற்று
நகர்வது
  ஒரு  கால் வைத்த  ரயிலா
மறுகால் தொடும்
  தரையா
பதற்றத்தில்
  ப்ளாட்பாரத்தில்  விழுந்தவள்
அப்படியே
  கிடக்கிறாள்.
யாருமில்லாத இரயில் எங்கே
  போகக்  கூடும்?
என்று
  அவளுக்குப் புரியவில்லை
கன்னத்தால் அழுத்தி
  நிறுத்துகிறாள்
நகரும் பிளாட்பாரத்தை.!
 
_ கோகுல  கண்ணன் 


4. காலத்தை  உறங்க  விட  மாட்டேன்

 துன்பங்களின் போது 
தாயாரின் முந்தானைக்குள் பதுங்கியது போல்
நான் கவிதைகளுக்குள் புதைந்து
  கொள்கிறேன்
    **
வியர்வை
  எறும்புகள் 
எத்தனை
  தட்டினாலும்  விலகுவதில்லை
    **
அவள்
  மரணம்  நொடியில்  நிகழ்ந்த்து
எங்கள்மரணம்
 
நொடிக்கு நொடி நிகழ்கிறது.
    **
காலண்டர்கலை
  தின்று  கொழுத்த 
காலத்துக்கு
இயக்கம் மட்டுமுண்டு
இலக்குகள்
  இல்லை
  **
கண்களிலிருந்து
உதிர்வதால்
  அவை
கண்ணீர் போலாகுமா?
  **
அதோ
 
அந்தப்பையன்
 
மீண்டும் நம் குழந்தைப் பருவத்துக்குள்
பந்தெறிகிறான்!!
_TELUGU  POET  N GOPI 

5. எழுச்சி

நல்லாசைகள்  போல்
பூத்துக்
  குலுங்குகின்றன  நந்தவனங்கள்
மொழி யற்ற
  கருணையை
தூவுகிறது காற்று
வெளியெங்கும்
உள்ளத்
  தடையை மீறிப்
பாய்கிறது
  ஒளியின்  ஊற்று
உடல் முனையில்
சூழும்
  துயரக் கரும்புயல்
விலகித் தெரிகிறது
ஆகாசம்
உடல்
  தாண்டும் உயிருக்கு
விளையாட ஒரு
  மைதானம்
பிரபஞ்சம்

6.

உச்சிக்  கோடையில் 
ஒரு
  கூரையைத்  தொட்டு விட்ட
தீப்பிழம்பு
ஊரெங்கும் பரவுமேயென்று
  அஞ்சி
ஏரிக்கு
  ஓட்டமாய்  ஓடினேன்
இருந்த
  இட்த்தில்  ஏரியைக்  காணவில்லை
எங்கே எங்கே யென்று
ஊரெங்கும் கேட்ட போது
ஓவென்று
  கத்தின
காலிப்
  பானைகள்!
_வைதீஸ்வரன்

7.

யோனியில் பனித் துருவம்
உருக
  வைத்த பெருங்கனல்
உருகிய துருவம்
  
கிளைத்து நதி
  பெருக
புணர்வின் கரையெங்கும்
காமப் பூ தழைத்த
நாகக் காட்டில்
ஆதவனே
  பௌர்ணமி
ஆசையெல்லாம் நட்சத்திரங்கள்
       _தாரா  கணேசன்


8.

சொற்கள் மறைக்கப்பட்ட  பத்திரிக்கை
சொற்களை மறைத்து
வெளிவந்த
  பத்திரிகை
இடையில்
  கிழித்தெறியப் படுகிறது
பத்திரிகையின் மொழி ஊமையாக
கண்களற்றவர்
  வாசிக்கிறார்
ஊமைகளின்
  பத்திரிகை
வெளி வர
  மறுத்து  விடுகிறது
எடுத்துச் சென்றவனின் முகம்
பின் பக்கம்பதிந்திருக்க
வனங்கள் அழிந்த
  மணம்
முன்பக்கத்தில் பெருக்கெடுக்கிறது
பயங்கரக்
  கோடுகள் நிறைந்த
ஒரு
  பத்திரிக்கை
விடிய
  முடியாத  காலையில் 
வந்து என்னை
  எழுப்பிவிட்டு
வீடு
  துடிக்கிற  செய்திகளை
நிரப்பி
  விடுகிறது
_தீபச்செல்வன்(இலங்கை)
 

9. கிறுக்கன்

அவசரமாய்
  காலைக் கடனை
மாலையில்
  கழித்து
அவசரமாய்
  அள்ளித் தின்று
இருசக்கர
  வண்டியில்
மூன்றாவது சக்கரமாகி
இரவுதோறும் ஓடும் ஆலுவலன்
அவசரமாய்
  சொல்லிக்  கொண்டான்
“நான்
  பீட்டர்...நான் பீட்டர் “ என்று
அவசரமாய்
  பேசப் போகும்
பலரிடம் அவன்
ஆங்கிலம் பேசி குறை களைந்து கொண்டே
இருக்க
குறைகள்
இன்னும்....இன்னும்...
வேண்டும்
  இன்றும்

                           10.  கிளிக்குஞ்சு

பகலில்
  தூக்கத்திலும்
அவன்
இஅரவின் பச்சை நியான்
அமெரிக்க
  நெடுஞ்சாலையில்
நிலாமுகிழ்க்க
காண்கிறான்
வேண்டும்
வேண்டும்
வேண்டும்
      டும்
      டும்
தாளகதிக்கு
இறுகின கால்களுக்கிடையில்
நசுங்கிச்
  சுருங்குகிறது
கிளிக் குஞ்சு
_பெருந்தேவி


11.வெளிப்பாடு

இடத்தை
  சொல்லிவிட்டு
மறைந்து
  கொள்ளும்  குழந்தை
காணவில்லை என்று
  எங்கெல்லாமோ  தேடுவேன்
சுருள்தலையில் ஒரு பிரி உயர்ந்து
எட்டிப்பார்க்கும்.
ஒற்றைக் கண் பின் தொடர்ந்து
உளவு பார்த்துப்
  பதுங்கும்
வெளியில் முளைத்த கனவாய்
கதவைப்பற்றியிருக்கும்
பூவிரல்கள்
அடிக்கொரு தரம்
  கிளி மிழற்றும்
“என்னைத்
  தேடுகிறாய் தானே?” எனவும்
என்னைத்
  தானே  தேடுகிறாய்?”எனவும்
அனுதாபம்கொண்டோ
  ஆற்றமாட்டாமலோ
தனக்காயோ..எனக்காயோ
கள்ள வெள்ளமாய் பீறிட்டேகி எனை
அள்ளிக் கட்டிக் சிரிக்கும் கணம்
அறை நிறையும் உயிர்மணம்
வளர
  வளர 
மறைவிடங்களும் வளரும்
  தானே!!
   _ரிஷி’
                                
           
                         
12. அள்ள..அள்ள...

விரல்களைப்  பிரிக்கும் போதே
கைக்குள் இருந்தது
இலைகளை
  அசைப்பதற்கு  முந்திய  காற்று
மணலை அள்ளினேன்
கையில் காற்சுவடுகளுடன்
 
கரை
  இருந்தது
நீரை அள்ளினேன்
கையில் முடிவற்று
  நதி இருந்தது
அகண்டு
  கிடந்த ஆகாயத்தை
அள்ளிவிட்டு
உள்ளே
  தான்  இருக்கும் என்று
       _கல்யாண்ஜி


13.விதி

ஒரு
  ஓடையில் மீன் பிடிப்பதைப் பார்க்கிறேன்
வாயில் மாட்டிய
  முள்ளின் கூர்மையைப்  பற்றி
அதிகம் யோசிக்கிறேன்.
கசிந்த
  ரத்தத்தைக்  கண்ணுற்று 
ஒரு
  கழிவிரக்கத்தை  உருவாக்கிக்கொள்கிறேன்
அப்புறம்
  அதையே  பார்த்து மறந்து  விடுகிறேன்.
வழக்கம்
  போல்  சுய பச்சாத்தாபத்திற்குள்  செல்கிறேன்
என்
  கண்ணீரைப்  பற்றி அலசி  மாய்கிறேன்
உணவைத்
  தேடுவதின்  வழியில்  மூழ்கி  விடுகிறேன்.
முள்ளில்
  மாட்டியது  மீன் 
விதியென்று
  சொல்லி விடுகிறேன்
அது
  குழம்பானதை  ருசியைப்  பற்றிய விசயமாக
மாற்றுகிறேன்
என் தயிர் மத்தில்
  வெண்ணை வருவதை பற்றித்
தான்
  கவனமாக இருக்கிறேன்
சிதறிக் கிடக்கும் பூலோகங்களின்
 
மாபெரும்
  சோகங்களில்
நான்
  தலையிடுவதென்பது
என்
  வேலையில்லை யென்று நினைத்து  விட்டேன்
கருணையில்லாத என்னிடம்
 
சொற்களில் சொல்ல முனைதல்
பேதமை மிக்கது
 _அய்யப்ப மாதவன்  


14.  பாட்டாவின்  நதி

இந்த வழியாகத் தான்
  
எங்கள்
  பழைய நதி  ஓடியதாம்
முன்பு
ரொம்ப
  காலத்துக்கு  முன்பு
பெரிய
  நதி  அது
எங்கள்
  தாத்தா அதில் தான்
குளிப்பாராம்.
அவரோடு
  பெரிய யானையும்
அப்புறம்
  எப்படியோ 
நதி
  நின்று  போச்சாம்
அந்த இடமெல்லாம் மணலாச்சு
மணல் மேலே
  எங்கப்பா
வீடு
  கட்டிக் குடி வந்தார்,
இப்பக்
  கூட  
எங்க
  கொல்லைப்புறத்தைத் 
தோண்டிப் பாத்தால்
மீன் முட்கள் கிடைக்கின்றன
எங்கள் பெரிய நதியோட
நினைவாகத்
  தான்
நாங்கள்
சனிக்கிழமை
  தோறும்
குளிக்கிறதில்லே!
   _ஜெய மோகன் 


15.திருப்பம்

ஒரு
  வேர்க்கடலையின் உருவத்தில்
கடவுள் இருந்த போது
அதை
  நான்  தவற விட்டிருக்க வேண்டும்
அல்லது
  என்னைத்  துரத்தும் ஒரு நாயின்
வடிவத்தில் நெருங்கும்போது
கல்லெறிய
  ஓடியிருக்கவேண்டும்
அல்லது
  என் தாயின்  செவிப்பறை
நடுங்க அவளைத்
  திட்டிய போது
கடவுள்
  என்னை விட்டு விட்டு விலகிப் போயிருக்கலாம்
அல்லது
  ஒரு  பிச்சைக் காரனை
அலட்சியப் படுத்திய போது
 
ஒரு வேசியை
  இகழ்ச்சியாய்  நோக்கும்போது
கடவுள்
  என்னைக் கை விட்டிருக்கலாம்
எப்படியானாலும்
ஒரு குழந்தையின் சிறுநீர்ச் சூடு போல
என்னுள் மெதுவாய்ப் பரவிய கதகதப்பை
எங்ஙனம் நான் இழத்தல்
  கூடும்?
இனி ஒரு புல்லின்
  கூர்முனையும்
என்னல் மழுங்காதிருக்கட்டும்
குளிர் காலத்தில் என் வீட்டில்
  சமையலறையில் 
கரப்பான்கள் அடைய
 
இனி சம்மதிப்பேன்
ஏனெனில்
ஒரு குயவனோரம் உட்கார்ந்து
 
உற்று ரஸிக்கும் கடவுளை
என் பக்கம்
  திருப்ப  வேண்டும்
_யவனிகா  ஸ்ரீராம்

16.

உன் அடையாளங்கள்
என்ன
  என்று  கேட்டார்கள்
என்ன சொல்ல?
சுருட்டை
  முடியையா?
சுயநலத்தையா?
உயரமாய்
  வளர்ந்ததையா?
உடனிருந்து
  கெடுத்ததையா?
செந்நிறம் என்பதையா?
செய்நன்றி மறந்ததையா?
வசீகரச்
  சிரிப்பையா?
வக்கிர புத்தியையா?
எதைச்
  சொல்ல?
அகத்தின் அசிங்கம்
முகத்தில் தெரியுமா?
 _தங்கம் மூர்த்தி 


17.

 நம்புகிறேன்

ஆறு மாதத்  தம்பி தூக்கத்தில்  அழுகிறான்

ஏனென்று  கேட்கிறேன்  தூக்க்கத்தில்  சிரிக்கிறான்

ஏனென்று  கேட்கிறேன் ...கனவில் நரிகள்
மிரட்டுகின்றன. அழுகிறான். இந்திரன் செய்யும்
வேடிக்கைகள் கண்டு சிரிக்கிறான்
பாட்டியின் கதைகளை நம்புகிறேன்
அந்தியில் கூரை  மீது  கூடும்  காகங்கள்
இருட்டும்வரை  ஓயாமல்  கரைகின்றன
எதனாலென்று  கேட்கிறேன்
காகங்கள்  வாய்ப்பாடு ஒப்பிப்பதாய் 
தாத்தா சொல்லுகிறார்.  நம்புகிறேன்
அவ்வப்போது  அம்மா தீண்டாதவளாகி
ரேழித் திண்ணையில்  வசிப்பதேனென்கிறேன்
அம்மா கழுதையின் கழிவை  மிதித்து விட்டதனாலா
அப்பா  சொல்கிறார்.  .நம்புகிறேன்
அன்றொரு நாள்  அண்டம் குலுங்க இடி இடிக்க  
அச்சத்தில் நனைந்து போகிறேன்
அர்ச்சுனன் பெயரைச் சொல்லிக் கொண்டிரு
இடி மேலே விழாது துணிவூட்டும்
அம்மாவின் பேச்சை  நம்புகிறேன்
மயிலிறகு  புத்தகத்தில் பக்கங்களில்
குட்டி போட்டதால் கணக்குப்பிணக்கான
என்னிடம் சந்தோஷம் சொல்லுகிறான்
நம்புகிறேன்
விடலையில் உலகம் என்பது அழகிய பெண்களென்று 
யாரும் சொல்லாமலே நம்புகிறேன்
காளைப் பருவத்தில் என் வசதிகள கவனிக்கிறவளை
என்னை  நேசிப்பவளாக  நம்புகிறேன்
தன் நேர்மைக்கும் உழைப்புக்கும்
திறமைக்கும் அங்கீகாரம் தருபவனென்று 
முதலாளி சொல்லுகிறார் ,நம்புகிறேன்
என் கனவுகளை நனவாக்க எவனெவனோ
கட்சியை நடத்தி  ஆட்சியைப் பிடிப்பதாய்
அன்றாடம் சொல்லுகிறான்  நம்புகிறேன்
எல்லோரும் சொல்வதை  நம்பி 
எப்படி  ஆனேன் என்பதை மட்டும்
எனக்கு சொல்ல விருப்பமில்லை.

_லாவண்யா    
18.  பனை

அம்மாவின் ஒடிசலை

உன் மெலிந்த  தேகத்திலும்

பற்களை

மட்டையிலும்
அவளன்பை 
இள நொங்கினிலும்  வைத்திருக்கிறாய்
கனிவைப் பழத்திலும் 
செம்பட்டை  முடியை
உச்சியிலும்  உறுதியை
வைரத்திலும் வைத்திருக்கிறாய்
ஏர் முடிந்து
கூடி அருந்துகிற  வேளையில் உன்  ஓலையே
அம்மாவின் கைகளாக
மழைக்காலங்களில் 
முந்தானையாக
மேலாக
அம்மாவைப்போலவே
கருத்திருக்கிறாயே!
வறட்சியிலும் 
உயித்திருக்கிறாயே!
எல்லாவற்றிலும்  அம்மாவாக  இருக்கிறாய்
கருப்பும் கருப்புமற்ற
வெண்  பனைகளை  வாசலில் வளர்க்கிறேன்
கவனிப்பின்றிக் கிடக்கின்றாய்
அம்மாவைப் போலவே!
_யாழினி முனுசாமி        

19.

எங்கிருந்தோ 
அழைக்கிறாய்
  நீ
வேண்டுதலோ விருப்பமோ
கட்டளையோ
ஏதுமற்று
அது என் கதவைத் தட்டுகிறது
ஜன்னலில் எட்டிப் பார்க்கிறது
குறுகுறுப்பாய்
வீட்டை சுற்றி வந்து
வாசலில் படுக்கிறது
ஒரு
  நாய்க்குட்டியாய்.
சேமித்து வைத்த
பழஞ்சோகங்களை
அலுமினியத் தட்டில் வைக்கிறேன்
இளைப்பினூடே
  உணர்கிறது
என் புண்களை
  
உன் நினைவு
 
0
வாழ்வின்
  தூற்றலில்
காற்றின் திசையில்
பயணித்த
  உமியாக  நான்
மூட்டைக்குள்
  அடைபட்ட
நெல்லாக
  நீ      

_வெங்கட் தாயுமானவன்


{புற்று நோய் பாதிப்பால் தனது இறுதி 

நாளைமுன்கூட்டியே தெரிந்துகொண்டவன்.}











Go to your blog list





  _________________________________________________________



Wednesday, August 6, 2014

காதல் கவிதைகள் 8th century


Aug 6 at 9:14 PM
    காதல்  கவிதைகள்  8th  century
   அவளை...................................
        நினைத்த  கணமே
     
சூடு  பரவுகிறது  மேனியெல்லாம்
       
கண்ட  கணமே
     
பித்தாகிறது  சித்தமெல்லாம்........
       
எப்படிக்  கூறுகிறார்கள்
     
அவளை ஒரு  மெல்லியளால்  என்று?


அவஸ்தை

           
                                  
     நீ............
     இல்லாத  போது
      ஏங்குகிறேன்  உன்  அருகாமைக்காக!
      இருக்கும்போது
      அஞ்சுகிறேன்  இழந்துவிடுவேனோவென்று.
      அன்பே!
      நீ  இருந்தாலும்
      இல்லாவிட்டாலும்
      எனக்கு  வாய்ப்பது
      அவஸ்தை  ஒன்று  தான்


 A  political  Parody      

  கழுதைகளே!!  ஏன்  இப்படி  அழுக்கு  மூட்டைகளை  சுமந்து கொண்டு  அவலமாக  ஆற்றோரம் திரிகிறீர்கள்?
வாய்  திறக்காமல்  அரசாங்க  லாயத்துக்கு  செல்லுங்கள்!
அங்கே உளுந்தும்  கொள்ளுமாக  விருந்து  சாப்பாடு  கிடைக்கும்  உங்களுக்கு!
அங்குள்ள  அதிகாரிகளுக்கு  வாலுள்ளதெல்லாம்  அரசாங்கக்  குதிரைகள்  தான்!
அதிகாரிகள்  கூறுவதைத்தான் அரசனும் நம்பிக் கொண்டிருக் கிறான்
மற்றபடி  பாமர  மக்கள்  இவ்விஷயங்களில்  அக்கறையற்றி ருப்பதில் கவனமாக  இருக்கிறார்கள்....ஹஹ்ஹா...

                         காளிதாஸா
   



Sunday, August 3, 2014

பைத்தியக்காரன்


          
பைத்தியக்காரன்
   
        வைதீஸ்வரன்.




 ஜனங்கள்  மிக  உன்னிப்பாக  கண்ணிமைக்காமல்  அந்த நாடகத்தின் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  யாரும் லேசாகக் கனைக்கக்  கூட இல்லை.  இருட்டுக்குள் அவர்களின்  கனமான  மூச்சின்  உஷ்ணத்தை  ஒருவனால் உணர முடிந்தது 

 காட்சியில்  அண்ணன் சேகர்  கலைந்த தலையும் கிழிந்த ஜுப்பாவு மாக  அலங்கோலமாக  பைத்தியக்காரனைப் போல்  உள்ளே நுழைகிறான்..  அவன்  கையில்  கத்தி இருக்கிறது.  அந்த  இடம்  ஒரு  பார்க்..  பார்க் பெஞ்சில்  சோமு  சிகரட் பிடித்த வண்ணம் முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.  

 சேகர் ஆத்திரத்துடன்  கத்திக் கொண்டு  வந்து  எதிர்பார்க்காத சோமுவின் பிடறி யைப் பிடித்துத்  தூக்கி  அவன்  முதுகிலும் கழுத்திலும் மாறி  மாறிக் குத்துகிறான்.  சோமு “அய்யோ..அய்யோ.. என்று கத்துகிறான்  சேகர்  அவன் காலரைப் பிடித்து இழுத்தவாறு  மேடையின்  முன் பக்கம்  வருகிறான்  அப்போது  மேடையில்  ஒளி குறைந்து  அவர்கள்  இருவர்  மேல் மட்டும் ஒளிவட் டம்  பாய்கிறது.

 சேகர்  கத்துவான்   “அடேய்...சோமு.... அபலையான  என் தங்கையைக் கெடுத்து விட்டா யேடா..பாவி....தாயில்லாத  என் தங்கையை  என்  தோளில் போர்த்திப் போர்த்தி வளர்த்தே னேடா.....என் பணவெறி பிடித்த தந்தையினால் பணத்துக்காக  முதியவனுக்கு அவளை மூன்றாந்தாரமாக்கிப் பின்  இளம் விதவையாகித் தனித்து நின்ற  என்  அப்பாவித் தங்கையை  ஆசைவலை காட்டி திருமணம்  செய்து கொள்வதாய்  ஏமாற்றிக் கெடுத்த  கயவனே!  அவள்  இன்று 
கிணற்றுக்குள்  பிணமாக  வயிறும் நெஞ்சும்  ஊதிப் போய் கிடக்கிறாளே!! பாவி... அது  யாரால்?  அது  யாராலடா?...”


 சேகர்  சோமுவை மீண்டும்  ஒரு முறை  குத்துவான்.  ஜனங்கள் அதிர்ச்சி யுடன்  முதுகை நெளித்துக் கொள்வார்கள். இப்போது சோமுவின்  சட்டைப்பை இருக்கும் இடத்தில் சிகப்பாக ரத்தம் பரவும்.  ஆனால் ஜனங்களுக்கு ஏற்கனவே  அவன் சட்டைப்பைக்குள்  சிகப்பாக ஒரு திரவத்தை வைத்துக் கொண்டு அப்போது உடைத்துவிடுவான்  என்று. ஊகிக்க முடியும்.  இருந்தாலும்  காட்சியில் அதை ரத்தமாக  நம்பி  ரஸிப்பார்கள்..  சோமு அநேகமாக  இறந்துவிட்டது போல்  கால்கள்  சுரணையிழந்து நிற்கமுடியாதது போல்  சேகரின்  காலர்பிடியில் தொங்கலாக நிற்பான்.

அப்போது  ஒரு குரல் மேடையின் உள்புறத்திலிருந்து சமூகத்தின்  மனசாட்சி போன்ற குறியீடாக பலமாக  ஒலிக்கும். யாரால்... யாரால்.. என்றா  கேட்கிறாய்...?

சேகர்  கழுத்தை இங்குமங்கும் திருப்பி  குரல் வந்த திசையைஅனுமானிக்க முடியாமல் சுற்றுமுற்றும் பரவி நின்ற இருட்டைப் பார்ப்பான்.  அவன் சோமுவைப் பிடித்திருந்த கைப்பிடி விடுபடும்  சோமு ஒரு  பிணம் விழுவதைப்  போல் தடாலென்று  கீழே  விழுவான்.

 மேடையின் பின் மனசாட்சிக்குரல்  தொடரும்.. ”யாரால்  இது  நிகழ்ந்ததென்றா கேட்கிறாய்?  மூடனே...உன்  குடும்ப  ஆசார  மூட வழக்கங்களைப் பார்.. வயதுக்கு வராத குழந்தைகளை  திருமணம் என்ற  பலிக்கூடத்திலே விருப்பம்  பொருத் தம்  வயது  எதையும் பொருட்படுத்தாமல்  பணக்காரக் கிழவர்களுக்கு  மூன்றாந் தாரமாகக் கட்டி வைப்பதை  சாஸ்திர தர்மமாக அனுமதிக்கும் உன் கேடு கெட்ட சமூகத்தைக் கேள்!  வயதுக்கு வருமுன்பே  விதவையாகி    இளம் வயதின் அறி யாத  ஆசைகளைப்பொத்தி வைத்துக் கொண்டு  அனாதரவாகப் புழுங்கும் அந்தப் பிஞ்சுக்குமரிக்கு  மறுமணம் செய்வது மகா பாவமென்று  சொன்ன  உங்கள் இரக்க மற்ற  மூட முன்னோர்களைக் கேள்.....ஆசைக்கும் பாசத்திற்கும்  ஏங்கித்  தவிக்கும் அந்தக் காய்ந்த பெண்நெஞ்சம்  வஞ்சகமென்று  அறியாமல்  ஒரு காமக்கிராதக னின்  பசப்பு வார்த்தைகளைக் கேட்டு  நெகிழ்ந்து போய் தன் வசமிழந்துதன்னை இழந்து  பின்  ஏமாற்றப்பட்டு  இடி விழுந்த மரமாக இன்று கிடக்கிறாளே! இந்தத்  தங்கை....உன் ஆருயிர் சகோதரி..... இது  யாரால்?  இது யாரால்?  இப்படிப்பட்ட  அநீதிகளை தர்மமென்றும் குலவழக்கமென்றும் கொண்டாடும்  மூட முன்னோர்களின் முட்டள்தனமான சமூகத்தினாலா?  அல்லது உன்னாலா???.யாரால்....?. 

இந்தக்  கேடு கெட்ட  சம்பிரதாய இருளை எதிர்த்து  நின்று  வெல்லும் வரை இப்படிப்பட்ட  சோமு க்களும்  இப்படிப்பட்ட  அபலைத் தங்கைகளும்  இருந்து கொண்டுதான்  இருப்பார்கள்.  இப்படிப்பட்ட  அநியாயங்களுக்கு எதிராகக் குமுறும் உன் போன்றவர்களை  அவர்கள் பைத்தியக்காரன்  என்று  தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.  ஆம்  நீ  பைத்தியக்காரன் சமூகத்தை உய்விக்க வந்த  பைத்தியக்காரன்...

“....மேடையின் பின்குரல் மறையும்ம்..நான்  பைத்தியக்காரன்..தான்...ஹாஹ்ஹா.. நான்  இந்த  ஊரை  உலகத்தை சீர்திருத்த வந்த  பைத்தியக் காரன்  பைத்தியக் காரன்....”

 மேற்கணட  வசனத்தை  என்  மாமா  எஸ்.வி ஸஹஸ்ர நாமம் மேடையில் பேசும்போது எத்தனை தடவை  இந்த “” பைத்தியக்காரன்””  நாடகத்தைப்  பார்த்தா லும் எனக்கு  பயமாகவும் புல்லரிப்பாக வும்  இருக்கும்.

 இந்த  நாடகம்  1945...46ல்  சென்னை  ஒற்றைவாடைத் தியேட்டரில் வெற்றிகரமாக  நடந்தது.  மூதறிஞர்  வ.ரா...இந்த  நாடகத்தின் தயாரிப்பிலிருந்தே  ஆர்வம் காட்டி வந்தார்.  சில வசன ஒழுங்குகளுக்கு யோசனைகள் கூட தெரிவித்திருக்கிறார், வார்ம் ஒரு முறையாவது  அவருக்கு இந்த  நாடகத்தைப் பார்த்து ரஸிக்க  வேண்டும். அவ்வளவு  ஈடுபாடு.

 இந்தக் காட்சியின் முடிவு இன்னும் திகில் ஊட்டுவதாக  இருக்கும். மேற் சொன்ன  வசனத்திற்குப்  பின் என்  மாமா  கீழே  பிணமாய் விழுந்து கிடக்கும் சோமுவை  ஆத்திரத்தோடு பார்ப்பார். அவன் தலைமயிரைப் பிடித்து மீண் டும்  தூக்கி நிறுத்துவார்.  பிணம் கால் பாவாமல் சற்று தொங்கியவாறு  தள்ளாடிக் கொண்டிருக்கும்  இப்படி நடிப்பதற்கும் ஒரு பக்கு வம்  வேண்டும்.  நடிகரின் பெயர் சந்திரசேகரன்.

 “ஆம்  நான்  பைத்தியக்காரன்  தான்..அடேய்  சோமு  உன்னைப் போன்ற  அற்ப மான  காமுகப் புழுக்களைக்  கொல்வதற்கு  இங்கே நம் சமூகத்தில் இன்னும் நிறையப் பைத்தியக்காரர்கள்  தேவை...அடேய் பாதகா .. சோமு...என்  உயிருக்கு உயிரான  தங்கையை  நான்  இனி எந்த ஜனமத்தில்  காணப் போகிறேன்?...”

 பாதகா..சீச்சீ....உன்னைத் தொடுவதே  எனக்கு  பாபம்!.. செத்துப் போடா  கய வனே!! ‘.எ ன்று  கைப்பிடியைத்  தளர்த்தி விடுவார். பிணம் மெள்ள  தன்  நிலை தளர்ந்து சில வினாடிகள் இரண்டுகால்களிலும் தள்ளாடும்.  அதன் தலை கவிழ்ந்து தொங்கும்  அப்போது  அதன்  வாய்திறந்து கொள்ள  சிவப்பாக  ரத்தம்  வாயிலிருந் தும்  மூக்கிலிருந்தும்  மளமளவென்று கொட்டும்..  பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள்  அதிர்ந்து போய்விடுவார்கள்.  எப்படி  வாயிலிருந்து  ரத்தம் வழிகிறது?

 எனக்குத்  தெரியும்  நான்  நாடகத்தின்  பின்னும் முன்னுமாகப் பலதடவை பார்த்தி ருக்கிறேன்.

அந்தக் காட்சிக்காக ஏற்கனவே  ஒருவன்  ஓரடிக்கும் மேல் நீளமான கரண்டியைத் தரையோடு தரையாக வைத்துக் கொண்டு  மேடைக்கு இட்து புறம் மறைவில்  நிற்பான். அந்தக் கரண்டியில் ரத்தநிறத்தில்  சிவப்பான சர்க்கரைப் பானம் நிரம்பி இருக்கும்.

 சோமு  கீழே விழுந்தவுடன்  மேடையில் “”பின்குரல்””  வசனம் பேசிக் கொண்டி ருக்கும்போது கீழே கிடக்கும் சோமு  மெள்ள வாயைத் திறப்பான்.  கரண்டியை மெள்ள  சாய்த்து சிவப்பு பானத்தை  அவன் வாயில்  ஊற்றி  விடுவார்கள்.  இது பார்வையாளர்களுக்குத்  தெரியாது.

அந்தக்  காலமேடைகளில்    நீளமாக அரை அடி உயரத்திற்கு  ஒரு மறைப்பு இருக்கும்  அதாவது  மேடையில் நடந்து  முன்புறம் வரும் நடிகர்களின் பாதங் கள்  பார்வையாளர்களுக்குத்  தெரியாத  அளவு உயரத்துக்கு  அந்த  மறைப்பு இருக் கும்.  அதனால்  தரையில் கிடக்கும்  சோமுவின் தலை பார்வைக்கு மறைந்திருப் பதால்  வாய்க்குள்  பானத்தை ஊற்றுவதைப் பார்க்க முடியாது.

 இந்த  அதிசயக் காட்சியைப் பார்த்து  மனம்  பதறிப் போவதற்காகவே  நாடகத் துக்கு  நல்ல  கூட்டம்  வரும்.  சிலர்  “அய்யோ”  என்று  அரற்றுவார்கள். “ரத்தம்... ரத்த,,,ம் .. .”என்று  உச் சுக் கொட்டுவார்கள்,

 எனக்கு  இந்த  ரகஸியம் தெரிந்திருந்தாலும்  நான் அரங்கத்தில்  உட்கார்ந்து நாடகம்  பார்க்கும் போது  ஜனங்களோடு  ஒன்றிப்போய் காட்சியின்  தத்ரூபத் தைக்  கண்டு சிலிர்த்துப் போவது அந்த  சின்ன வயதில்  எனக்கு பிரியமான  அனுபவமாக  இருந்தது.. நான்  பத்து தடவைக்கு மேல் இந்த  நாடகத்தைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு  முறை  இந்தக் காட்சியில்  என்  மாமாவின் நடிப்பும்  சோமுவின் பிணத்தின் வாயிலிருந்து  வரும் ரத்தக்காட்சியும் மிகவும்  உணர்ச்சிகரமாக  உறைய வைப்பதாக  இருந்தது...

என் கைகளும்  விரல்களும்  பரபரத்துக்  கொண்டிருந்தன.  மனசு கூடப் படபடப்பாக  இருந்தது... உச்சகட்டத்தில் என்  கை விரலில் இருந்த மோதிரம் கழன்று கீழே நாற்காலிக்கடியில் இருட்டில் உருண்டு போய் விட்டது.  காட்சியின் தீவிரத்தால்  நான் குனிந்து  மோதிரத்தை எடுக்க  முயற்சி செய்யவில்லை.  அப்படி நான் செய்யும்போது  பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவாக  இருக்குமே யென்ற நினைப்பில்  நான் விட்டு விட்டேன்.

நாடகம்  முடிந்தவுடன்  மக்கள்  எழுந்து  வெளியே செல்லத்  தொடங்கினார்கள்.  என்னையும்  தள்ளிக் கொண்டே  வந்து விட்டார்கள்.  எனக்குப் பத்து  வய்து தான்.  என்னால் அவர்களை நிறுத்தி என்  மோதிரத்தைத்  தேடுவதற்கு  சற்று தயக்கமாக  பயமாக  இருந்தது.  நானும் வெளியே  வந்து விட்டேன்.  மோதிரம் தொலை ந்துபோய்விட்டது.

வீட்டுக்கு வந்தவுடன்  என்  அம்மா  தான்  அதை  முதல் முதலாகக் கண்டு பிடித்தாள் ..  “மோதிரம்  எங்கேடா?”

 ” ட்ராமா  பாத்துண்டிருந்த போது  கீழே  விழுந்திடுத்து.....”

 “அய்ய்யோ...அதைத்  திருப்பித்  தேடி  எடுக்கணம்னு  தோணலையா    உனக்கு?..” எண்டா  பேசாம  இருக்கே?...இதோ பாருங்க... இவன்  நேத்து “பைத்தியக்காரன் “ ட்ராமா பாக்கும்போது  மோதரத்தைத்  தொலைச்சுட்டானாம்...”

அம்மா  அங்கே  வந்த அப்பாவிடம்  சொன்னார்.  அப்பா என்னைப்  பார்த்து சற்றுக்  கடுமையுடன்  சொன்னார்.  முதலில்  நான்  நாடகம்  பார்க்கப் போவதே அவருக்குப் பிடிக்கவில்லை. 

”ஏண்டா.....இப்படித்  தொலைச்சே?தங்க  மோதிரமாச்சே!!    ஒங்க  மாமா  தான்  நாடகத்துலெ  பைத்தியகாரன்னா  நீ  நெஜத்துலெயே  பைத்தியக்காரனா  இருக்கயே!..




இதைக் கேட்டுக்  கொண்டு  என்  மாமா  அங்கே வந்து  விட்டதைக் கண்டதும்  என்  அப்பா  தான்  சொன்ன  சொல்லை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டு  அசட்டுச்  சிரிப்பு சிரித்தார்.

மாமா  சிரித்துக்  கொண்டே அருகில் வந்து  என்  முதுகைத்  தட்டிக்  கொடுத்துக் கொண்டே சொன்னார்.

 “ஒரு  நாடகத்தை  இவ்வளவு  ஆர்வமா  இவன் பாக்கறான்னா  இவனுக்குள்ளே    கலை உணர்வு  இருக்குன்னு  அர்த்தம்  ”  

************************
பி.கு.  அந்த  நாடகத்தில் உபயோகப் படுத்தும் கத்தி  ஒரு SPRING  கத்தி.  குத்தும் போது  அதன் ர்மையான  பாகம்  கைப்பிடிக்குள்  போய்  விடும்.  பார்வைக்கு  அது நெஞ்சுக்குள்  பாய்வது போல் பிரமை  ஏற்படும்!!

               
  
    
        
....    *அம்ருதா ஆகஸ்ட் 2014 இதழில் வெளியாகியுள்ளது

....

Friday, July 11, 2014

கைக்குட்டை



                                        எஸ்.வைதீஸ்வரன்  



சுமார்  இருபது  வருஷங்களுக்கு முன்பு  நான் கேட்ட  தகவல்  இது.

தத்துவஞானி ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  பல வருஷங்களாக ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும்  சென்னைக்கு  வந்து  மூன்று நான்கு நாட்களுக்கு சொற்பொழிவாற்றுவார். 

காலைவேளைகளில் ஆர்வலர்களோடு கேள்வி-பதில் நிகழ்ச்சிகளும் ஸ்வாரஸ்யமாக  நடை பெறும்.  இந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கி ஒரு பெரிய அறிவுஜீவிக்கூட்டமே ஒவ்வொரு வருட மும் காத்திருக்கும் .

அவருடைய சொற்பொழிவின் சாராம்சமே “என்னை நீங்கள்  எந்த விதத்திலும் உயரமான பீடத்தில் உட்கார்ந்திருக்கும் குருவாக பாவிக்கக்கூடாது. இங்கே நான் உட்கார்ந்திருப்பது ஒரு நிமித்தமே!  இந்த சொற்பொழிவு உங்களுக்குள் ஆழமான சுயமான கேள்விகளைத்  தூண்ட வேண்டும். அதன்  மூலம் உங்களுக்குள் ஏற்படும்  எண்ணங்கள்  தாண்டிய உணர்வு பூர்வமான “புரிதல்” உங்கள் வாழ்க்கையை முற்றிலும்  மாற்றி அமைக்க வேண்டும். தயவு செய்து இங்கே பேச்சைக் கேட்டுவிட்டுப் போகும் மனப்பான்மையுடன் வர வேண்டாம்..”  என்பது தான்

 அவர்  சென்னைக்கு வரும் போதெல்லாம் விடியற்காலையில்  கடற்கரைக்கு போய்  நீண்ட நேரம் நடைபயில்வார்.அவருடன் கூட அவருக்கு இணக்கமானசில நண்பர்களும் தொடர்ந்து செல்வார்கள். ஆனால் மௌனமாகத் தான்  நடப் பார். 

 ஒரு  நாள் அவர் அப்படி நடந்துபோய்க்கொண்டிருந்தார். அவர் சற்று வேகமாக நடப்பார்.  தொடர்ந்து போன நண்பர்கள் சற்று பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது  பிளாட் பாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு நொண்டிப் பிச்சைக்காரன் வயதான பெரியவரைப் பார்த்தவுடன் வேகமாக அவரை எதிர்கொண்டு “அய்யா...தருமம் போடுங்க அய்யா!..”  என்று  கை நீட்டினான்.

ஜே.கே  சட்டென்று நின்று  விட்டார்.  அந்தப் பிச்சைக்காரனை சில வினாடிகள் கூர்ந்து பார்த் தார். தன் ஜுப்பாவின் பைகளில் கையை விட்டு அதில் இருந்த புத்தம்புதுக் கைக்குட்டையை அவனிடம் அன்புடன் கொடுத்துவிட்டு  நடையைத் தொடர்ந்தார். 

பிச்சைக்காரன் குழப்பத்துடன்  கைக்குட்டையைக் கையில் வைத்துக்கொண்டு அவர் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே நின்றான். ‘இவர் என்ன பைத்தியமா? இந்தக் கைக்குட் டையை நான் என்ன செய்வது?’  என்று கூட  அவனுக் குத்  தோன்றியிருக்கும்.

அப்போது  பின்னாலிருந்து ஓடிவந்தார் ஒருவர். “இந்தக் கைக்குட்டையை அந்த அய்யா  கொடுத்தாரா?”  பிச்சைக்காரனிடம் கேட்டார்.  பிச்சைக்காரன்  “ஆமாம்” என்றான்.

“இந்தா  பத்து ரூபாய். தரேன்......அந்தக் கைக்குட்டையை எனக்குக் கொடுத்து விடு.”  என் றார். பிச்சைக்காரன்  சந்தோஷமாக அந்தக் கைக்குட்டையை அவரிடம் கொடுத்து பணத்தை  வாங்கிக்கொண்டான்.

“அந்த அய்யா பெரிய குருஜி... தெரியுமா உனக்கு?”என்று சொல்லிக்கொண்டே கைக்குட்டை யைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு நகர்ந்தார் அந்த மனிதர். ஒரு பெரிய பொக்கிஷம் கிடைத் தது போன்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் பொங்கியது..

“ஆமாங்க..உண்மையிலேயே அவரு பெரிய மகான் தான்...அவரால எனக்கு எவ்வளவு பெரிய தருமம் இன்னிக்கு  கிடைச்சிருக்கு! “ என்று சொல்லிக் கொண் டான் பிச்சைக் காரன்.

இந்த நெகிழ்ச்சியான  சம்பவத்தைக் கேள்விப்பட்ட போது எனக்கு இரண்டு விதமாக  நினைக் கத்தோன்றியது.

ஒன்று... சித்தர்கள் தான் இந்த மாதிரி  நடைமுறையான நிகழ்வுகளில் வினோதமான தீர்வைத் தர முடியும். அவர் செய்த தருமம்  வித்யாசமானது..!

இரண்டு...என்ன தான் ஜே.கே.  .தன்னை  ஒரு பெரிய குருவாகப் பார்த்து ஆராதிக்காதீர்கள் என்று சொன்னாலும்  அவரை ஒரு மகானாக பக்தியுடன் பார்க்கும் நேயர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 


                   
  அமுதசுரபி  ஜூன்  14

Thursday, July 3, 2014

பருக்கை

பருக்கை

வைதீஸ்வரன்


பருக்கை
வைதீஸ்வரன்
அன்று  ஒரு  கல்யாணத்திற்குப் போக அழைப்பு வந்தது.  அவர்கள்  அதிகம் பரிச்சய மில்லாதவர்களாக  இருந்தாலும் சில உறவு நிர்ப்பந்தங்களால் இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு போயாக வேண்டியிருக்கிறது...

 ஆனால்  அன்று அந்தக்  கல்யாணத்துக்குப் போக எனக்கு கொஞ்சமும் மனம் ஒப்ப வில்லை.  காரணம் என்று எதுவும்  இருக்கவில்லை. ஆனால்“ “”நான்  வரவில்லை “ என்று மனைவியின்  ஏமாற்றத்தையும் பொருட்படுத்தாமல் அவளிடம் உறுதியாக  சொல்லி விட்டேன்.  

 மாலையில்  போவதற்கு  என்று  எந்த  இடமும் இல்லாவிட்டாலும்  நான் நடக்கும் திசைகளை என்  கால்களே  தீர்மானிக்கட்டும் என்று  வெளியில் இறங்கிவிட்டேன்.  பல சமயம் எனக்கு இப்படிப்பட்ட இயக்கம் பிடிக்கும்.  நோக்கமோ  அவசரமோ அவசி யமோ  எதுவுமில்லாத ஒரு அசைவுக்கு  ஒரு  விடுதலை இருக்கிறது இறக்கையசைக் காமல்  பறப்பது  போல்  ஒரு  மிதப்பான அனுபவம்.   தெருக்கள்  எல்லாமே நடப்பவனை அலட்சியப்படுத்துகிற மாதிரி தான்  இருக்கிறது...கடந்துவந்த தெருக்களை திரும்பிப் பார்க்கும்போது எப்படிக் கடந்து வந்தோம் என்று திகைப்பாகக் கூட  இருக்கிறது. சில சமயம் 

அதுவும்  அன்று  நான்  கடந்து  வந்த  தெருக்கள்  ஒவ்வொன்றிலும்  ஏதாவது  ஒர்  விசேஷமோ கொண்டாட்டமோ  கல்யாணமோ கோவில் உற்சவமோ ஏதாவது ஒன்று தெருவை அடைத்துக்  கொண்டிருந்தன.

 அந்த  நாள் ஏதோ விசேஷ நாளாக  இருக்கவேண்டும். ஒருவேளை அந்த  ஆண்டின்  கடைசி முகூர்த்த  தினமாகக் கூட  இருக்கலாம். போகிற  வழியில் குறைந் தது  இரண்டு  மூன்று கல்யாண  மண்டபங்களை நான் கடக்க  நேரிட்டது.  இது யதேசையாக நேர்ந்த தாக  இருக்கலாம். 

ஒரு தெருவில் அந்த கல்யாண மண்டபத்தின் வரவேற்பு அலங்காரம் அநேகமாக நடை பாதைவரை தாண்டியிருந்தது.  இரண்டு பக்கங்களிலும் கார்களும் ஸ்கூட்டர்களும் நெருங்கிப் புதுங்கி தெருவை ஒற்றையடிப் பாதையாக ஆக்கிக் கொண்டிருந்தன. உறவுக ளும் நண்பர்களும் கூட்டங் கூட்டமாக நுழைவதும் வருவதுமாக இருந்தார்கள். அநேகமாக  தெருவில் நடப்பவர்கள் எல்லாருமே கல்யாண வீட்டிற்குள் நுழைந்துவிட லாம்!!  அப்படி ஒரு  சந்தடி.!!

பூவாசனை  சந்தனகந்தம்  பன்னீர்மணம் வெற்றிலை வாசம் வியர்வை நாற்றம்  உடல் பூச்சுக்களின் மூச்சுக்களின் நெடி  என்று பலதும் அந்த வாசலின்  புழுக்கமான  மாலைக் காற்றில் கலந்து  குழப்பிக் கொண்டிருந்தது.

 இந்த சங்கடத்திலிருந்து தப்பித்துக்  கொள்ள  சற்று வேகமாக  மண்டபத்தின் வாசலைக் கடந்தேன்.  வசதியாக  அருகில் திரும்பிய  ஒரு  சின்ன  சந்துக்குள் நுழைந்துவிட்டேன். அங்கே அதிக  வெளிச்சமில்லை ஆனால் சற்று அதிர்ச்சி தருவதாக வீடுகளின்  பின்புறங் கள் தான்  அந்தத்  தெருவுக்கு இருபுறமும் வரிசையாக  இருந்தன... நுழைந்தது தவறென் றாலும்  கடந்து தான் தீர  வேண்டும்.

கொஞ்ச  தூரம் நடந்துசென்றபோது  பக்கவாட்டில் கல்யாண மண்டபத்தின் நீண்ட சாப்பாட் டுக் கூடம்  மேல்மாடியில் பிரகாசமான விளக்கொளியில் தெரிந்தது.  அங்கே வரிசையாக  உட்கார்ந்து  சாப்பிடுபவர்களையும் பண்டங்கள் ரொப்பிய பாத்திரங்களோடு முன்னும் பின்னுமாக உலா வரும் பரிமாறுபவர்களையும் பார்க்க முடிந்தது.

“ அண்ணா...சாம்பார்  இன்னும் கொஞ்சம்  போடட்டுமா?’

 “டேய்..  அந்த  மாமிக்கு  பால்  பாயஸம்  ஊத்துடா! “

  “அப்பளம்...  அப்பளம்  கொண்டா..டா....இந்தப்பக்கம்....”

 “அதோ அந்த  மூலையிலே நாலு  இடம் காலியா  இருக்கு...”

இந்தக் கூக்குரல்களோடு  விருந்தின்  கதம்ப மணமும்  கலந்து  வேடிக்கையான உச்சிக் காட்சியாக  இருந்தது.!

 மேலே தெரிந்த மண்டபப் பந்தலின்  பிரகாசமான  ஒளியின் காரணமாக கீழே தெருச் சுவரோரம்  இருட்டில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த  உயரமான  தகரத் தடுப்பை  நான்  உடனடியாக கவனிக்கவில்லை.  

 மேலே விருந்து சாப்பிட்ட  எச்சில் இலைகளை எல்லாம் அங்கே தான்  போடுகிறார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.  

நான்  அதைக் கடந்து போக முயற்சித்தேன் . இருண்ட குப்பைத் தொட்டிக்குள் பார்வைக்குத் தெரியாமல் ஒரு  நாய்  ஆத்திரத்தோடு உறுமுகிற சத்தம் கேட்டது. சத்தம் பயங்கரமாக தூண்டப்பட்டதாக இருந்த்து.  மாறி மாறி உச்சத்துக்கு போய் கமறலாக இறங்கியது. கேட்பதற்கு நடுக்கமாக  இருந்தது.

எதையோ எதிர்த்து விரட்டிக் குரைப்பது போல் நாயின் குரைப்பு ஆங்காரத்துடன் எதிரொலித்தது. ஆனால் நாய் என் பார்வைக்குப் படவில்லை.  இன்னொரு நாயின் பதில் குரைப்பும் கேட்கவில்லை!

எச்சிலிலைகளுக்காக  தகரத் தடுப்புகளின் பின்னால் இரண்டு  நாய்கள் அடித்துக் கொண்டு .போராடிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.  ஆனால்  நாய்களை பார்க்க முடியவில்லை.

வினோதமாக குரைப்பும் உறுமலும் ஒரே நாயினிடமிருந்து தான் வந்துகொண்டிருந்தது.. . ஏன் அப்படி? விசித்திரமாக இருந்தது. 

 மறுகணம்  அந்த  நாயின்  பலமான உறுமல் திடீரென்று  சில நொடிகளில்  மாறி வலிவேதனையின் உச்சத்தில் ஒலிக்கும் ஊளையாக மாறியது. தகரத் தட்டிகள் முன்னும் பின்னும் தள்ளாடின. 

 திடீரென்று வெளிப்பட்ட அந்த நாய் வெளியே பாய்ந்து ஓட யத்தனித்தது. ஆனால் அதனால் வேகமாக ஓடமுடியவில்லை.  பின்னங்காலை நொண்டிக்கொண்டு  வாலை மடக்கிக் கொண்டு ஊளையிட்டவாறே திரும்பிப்பார்த்துக்கொண்டு நொண்டி  நொண்டி நகர்ந்து  போயிற்று.

காட்சியின் வேதனை நெஞ்சைப் பிழிந்தது.  எச்சில்சோற்றுக்காக அந்த  நாயைக் கடித்துக் குதறி விரட்டிய அந்த இன்னொரு நாய் எப்படிப்பட்ட வெறியனாக இருக்க வேண்டும்?

காக்கைகள் கூட பகிர்ந்து உண்ணுகின்றன  இந்த நாய்களுக்கு ஏன் அந்த பண்பில்லை?

எந்தக் கணமும் அந்த நாய் இலையை வாயில் கவ்விக்கொண்டு வெளியே வர லாம்......திகைப்புடன், அதைப் பார்த்துவிடவேண்டுமென்று நிலைத்திருந்தேன்..

  அப்போது தான்  அங்கே பார்த்தேன்.

 இரண்டு மூன்று எச்சில் இலைகள் நிறைய மிஞ்சிய சோற்றைப் பொட்டலம் கட்டிக் கொண்டு கையில் ஒரு கொம்புடன்  புறங்கையிலும் மாரிலும்  ரத்தம் வழிய, வாயிலும் உடம்பிலும்  தாடியிலும் பருக்கைகள் சிதறி ஒட்டிக்கிடக்க, பரட்டைத்தலையுடன் கருப்பாக அழுக்காக வெளிப்பட்டான். ..ஒருவன்!!! ....... மனிதன்!! 

 அந்த இன்னொரு  நாய்  ஏன்  குலைக்கவில்லை என்ற உண்மை இப்போது என் மனதைப்  பதறவைத்துக்கொண்டிருந்தது.!!!.............

  
[*ஜூலை 2014 அம்ருதா இதழில் வெளியாகியுள்ளது] 








0