vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, July 11, 2014

கைக்குட்டை



                                        எஸ்.வைதீஸ்வரன்  



சுமார்  இருபது  வருஷங்களுக்கு முன்பு  நான் கேட்ட  தகவல்  இது.

தத்துவஞானி ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  பல வருஷங்களாக ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும்  சென்னைக்கு  வந்து  மூன்று நான்கு நாட்களுக்கு சொற்பொழிவாற்றுவார். 

காலைவேளைகளில் ஆர்வலர்களோடு கேள்வி-பதில் நிகழ்ச்சிகளும் ஸ்வாரஸ்யமாக  நடை பெறும்.  இந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கி ஒரு பெரிய அறிவுஜீவிக்கூட்டமே ஒவ்வொரு வருட மும் காத்திருக்கும் .

அவருடைய சொற்பொழிவின் சாராம்சமே “என்னை நீங்கள்  எந்த விதத்திலும் உயரமான பீடத்தில் உட்கார்ந்திருக்கும் குருவாக பாவிக்கக்கூடாது. இங்கே நான் உட்கார்ந்திருப்பது ஒரு நிமித்தமே!  இந்த சொற்பொழிவு உங்களுக்குள் ஆழமான சுயமான கேள்விகளைத்  தூண்ட வேண்டும். அதன்  மூலம் உங்களுக்குள் ஏற்படும்  எண்ணங்கள்  தாண்டிய உணர்வு பூர்வமான “புரிதல்” உங்கள் வாழ்க்கையை முற்றிலும்  மாற்றி அமைக்க வேண்டும். தயவு செய்து இங்கே பேச்சைக் கேட்டுவிட்டுப் போகும் மனப்பான்மையுடன் வர வேண்டாம்..”  என்பது தான்

 அவர்  சென்னைக்கு வரும் போதெல்லாம் விடியற்காலையில்  கடற்கரைக்கு போய்  நீண்ட நேரம் நடைபயில்வார்.அவருடன் கூட அவருக்கு இணக்கமானசில நண்பர்களும் தொடர்ந்து செல்வார்கள். ஆனால் மௌனமாகத் தான்  நடப் பார். 

 ஒரு  நாள் அவர் அப்படி நடந்துபோய்க்கொண்டிருந்தார். அவர் சற்று வேகமாக நடப்பார்.  தொடர்ந்து போன நண்பர்கள் சற்று பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது  பிளாட் பாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு நொண்டிப் பிச்சைக்காரன் வயதான பெரியவரைப் பார்த்தவுடன் வேகமாக அவரை எதிர்கொண்டு “அய்யா...தருமம் போடுங்க அய்யா!..”  என்று  கை நீட்டினான்.

ஜே.கே  சட்டென்று நின்று  விட்டார்.  அந்தப் பிச்சைக்காரனை சில வினாடிகள் கூர்ந்து பார்த் தார். தன் ஜுப்பாவின் பைகளில் கையை விட்டு அதில் இருந்த புத்தம்புதுக் கைக்குட்டையை அவனிடம் அன்புடன் கொடுத்துவிட்டு  நடையைத் தொடர்ந்தார். 

பிச்சைக்காரன் குழப்பத்துடன்  கைக்குட்டையைக் கையில் வைத்துக்கொண்டு அவர் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே நின்றான். ‘இவர் என்ன பைத்தியமா? இந்தக் கைக்குட் டையை நான் என்ன செய்வது?’  என்று கூட  அவனுக் குத்  தோன்றியிருக்கும்.

அப்போது  பின்னாலிருந்து ஓடிவந்தார் ஒருவர். “இந்தக் கைக்குட்டையை அந்த அய்யா  கொடுத்தாரா?”  பிச்சைக்காரனிடம் கேட்டார்.  பிச்சைக்காரன்  “ஆமாம்” என்றான்.

“இந்தா  பத்து ரூபாய். தரேன்......அந்தக் கைக்குட்டையை எனக்குக் கொடுத்து விடு.”  என் றார். பிச்சைக்காரன்  சந்தோஷமாக அந்தக் கைக்குட்டையை அவரிடம் கொடுத்து பணத்தை  வாங்கிக்கொண்டான்.

“அந்த அய்யா பெரிய குருஜி... தெரியுமா உனக்கு?”என்று சொல்லிக்கொண்டே கைக்குட்டை யைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு நகர்ந்தார் அந்த மனிதர். ஒரு பெரிய பொக்கிஷம் கிடைத் தது போன்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் பொங்கியது..

“ஆமாங்க..உண்மையிலேயே அவரு பெரிய மகான் தான்...அவரால எனக்கு எவ்வளவு பெரிய தருமம் இன்னிக்கு  கிடைச்சிருக்கு! “ என்று சொல்லிக் கொண் டான் பிச்சைக் காரன்.

இந்த நெகிழ்ச்சியான  சம்பவத்தைக் கேள்விப்பட்ட போது எனக்கு இரண்டு விதமாக  நினைக் கத்தோன்றியது.

ஒன்று... சித்தர்கள் தான் இந்த மாதிரி  நடைமுறையான நிகழ்வுகளில் வினோதமான தீர்வைத் தர முடியும். அவர் செய்த தருமம்  வித்யாசமானது..!

இரண்டு...என்ன தான் ஜே.கே.  .தன்னை  ஒரு பெரிய குருவாகப் பார்த்து ஆராதிக்காதீர்கள் என்று சொன்னாலும்  அவரை ஒரு மகானாக பக்தியுடன் பார்க்கும் நேயர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 


                   
  அமுதசுரபி  ஜூன்  14

No comments:

Post a Comment