vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, April 29, 2012

கவிதை காலமற்றது - வைதீஸ்வரன்


கவிதை காலமற்றது
                             
                               வைதீஸ்வரன்





அறுபதுகளில் தமிழ்க்கவிதையை புதுமைப் படுத்தும் நோக்கம் தீவிரமாக செயல்பட  ஆரம்பித்தது. இப்படி உருவாக்கப்படும் கவிதை இலக்கியம் "புதுக்கவிதை" என்ற  பெயருடன் அடையாளப்படுத்தப்பட்டது.  ஆங்கிலத்தில் "மாடர்ன் பொயட்ரி"க்கு  அணுக்க மான மொழிபெயர்ப்பாக இந்தப் பெயர் சூட்டப்பட்டதை அப்போது எல்லோரும்  ஒப்புக்கொண்டார்கள்.  ஆனால் இந்தப் பெயர் சூட்டிய பெருமை கநாசுவுக்கா..  சி சு செல்லப்பாவுக்கா  என்ற சர்ச்சை மட்டும் அவ்வபோது தலை தூக்கி அடங்குவதையும்   நாம் இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 
இக்கட்டுரையின் விஷயம் அதுவல்ல. கவிதையை நவீனப்படுத்த வேண்டும் கவிதையை  இலக்கணத்தின் தவிர்க்கக்கூடிய தளைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் கவிதையைசுதந்திரமான மன ஓட்டத்திற்கு ஏற்ற வீரியத்துடன் பரிமளிக்க அனுமதிக்க வேண்டும் ளிமையான தற்கால  மொழிகளில்  பூடகமான கருத்துக்களின் இசைவை  ஊடுபாவவேண்டும்  நாம் வாழும் காலத்தின்  ஓசையை நிதர்சனப் படுத்த வேண்டும் என்பதான கண்ணோட்டத்தை அன்றையகவிஞர்கள்  தங்களுக்கே  இயல்பான வடிவமைப்பில் "புதுக்கவிதைகள்"  எழுதினார்கள்.
   

ஆனால் அதே சமயத்தில்  இந்த இயக்கத்தை நிலைநிறுத்த வேண்டுமென்ற தீவிரமானபோக்குகள்  மரபுகளை அடியோடு நிராகரிப்பதாகவும்  செவ்வியல் படைப்புகளின்முக்கியத்துவத்தை ஒதுக்குவதான பான்மையை  ஊக்குவிப்பதாகவும்  ஒருகருத்தை உண்டுபண்ணத் தவறவில்லை. ஆனால் இத்தகைய முதிர்ச்சியற்ற கணணோட்டம் அதிக நாள் நீடிக்கவில்லை  புதுக்கவிதையில்தற்காலத்தன்மையை  வடிவமைப்பதற்கு  மரபுக்கவிதைகளின் தேர்ந்த ரஸனையும் பாரம்பரி யத்தைப் பற்றிய கலாபூர்வமான் பரிச்சயமும் எவ்வள்வு அத்யாவஸ்யம் என்பதை வளரும் புதுக்கவிஞர்கள்புரிந்துகொண்டார்கள்.  பிறகு புதுக்கவிதை பரவலாகி ஊன்றிய பிறகு  கவிதையில்பழங்கவிதைபுதுக்கவிதை என்பதே அவசியமற்ற ஒரு  செயற்கையான பாகுபாடு; ஒரு படைப்பு கவிதையா கவிதை இல்லையா என்பது தான் மதிப்பீட்டுக்குரிய விஷயம்  என்ற கருத்துக்கு நாம் வர வேண்டியிருந்தது.
  
இலக்கணமும் வடிவமும் ஓசையும் தான கவிதைகளில் கால வித்யாசததைக் காட்டிக்கொடுக்கின்றதே தவிர .  பல செவ்வியல் கவிதைகளை அதன் தளைகளை அகற்றிப்      பார்க்கும்போது இன்றைய நவீன கவிதையின் சிந்தனைப் பாங்கு அங்கேயே தொடங்கியிருப்பதைப் பார்க்கமுடிகிறது.     முக்கியமாக காவிய காலத்துக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் கற்பனை வளமுள்ள பல க்விஞர்கள் த்ங்கள்   அகஉணர்வுகளின் உந்துதலில் படைத்த பல தன்னெழுச்சிக் கவிதைகள் தனிப்பாடல்களாக  நமக்குக்     கிடைத்துள்ளது.  இப்பாடல்களில் பல புதுகவிதை பொதுவான அம்சங்கள் தொனிப்பதை நாம் காணமுடிகிறது.

 
தமிழைப் போலவே ஸமுஸ்கிருதத்திலும்  இப்படிப்பட்ட தனிப்பாடல்கள் அதே சமகாலத்தில் எழுதப்பட்டிருப்பதையும் நாம் அறிகிறோம்.  சுமார் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை எழுதித் தொகுக்கப்பட்ட இந்த தனிப் பாடலகள் கணிசமான தொகுப்புகளாக அப்போது வெளிவந்திருக்கின்றன.

 
இதன் முக்கியமான தொகுப்பாசிரியர்களாக வல்லபதேவா ஸார்ங்கதரா தர்மகீர்த்தி முதலிய சிலர்  சொல்லப்படுகிறார்கள்.  காவியமரபிலிருந்து வேறுபட்ட இந்த  வகைக் கவிதைகள் "சுபாஷிதா" என்ற தலைப்பில்   அறியப்படுகின்றன. . சுபாஷிதா என்பதை  ந்ன்குமொழியப்பட்டவை அல்லது நல்வாக்குகள் என்று தமிழ்ப்படுத்தலாம். 

கவிதைகளில் அநேக கவிதைகள் அநாமதேயமாகவும் பல கவிதைகள் அன்று ஆண்ட அரசன் பெயரையும்  மேலும் பல கவிதைகள்  இரண்டு மூன்று  பெயர்களையே தாங்கிக் கொண்டும் வெளிப்படுகின்றன. இக்கவிதைகளில்  பர்த்ருஹரி அமரு சூத்ரகா  என்ற  கவிஞர்கள்  எழுதியவைகள்  அருமையான  கவிதைகளாக  இருக்கின்றன.

     
இக்கவிதைகளின் பேச்சு தொனியும் அன்றாட வாழ்வுப் பார்வையும் இளிவரலும் சாதாரண  வர்ணனைகளை மீறிய இயற்கை பற்றிய வரிகளும் இக்காலக் கவிதைகளுக்கு மிக நெருக்கமாக   வெளிப்பாடுகளாக இருப்பதைக் காணும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.   இக்கவிதைகள் சிலவற்றை என் மொழிபெயர்ப்பில் இங்கே தர விரும்புகிறேன்.     முதலில் சூத்ரகா எழுதிய சில கவிதைகளைத் தருகிறேன்.
   
 
   
இது  ஒரு தத்துவப் பாடல்
       ------------
     
பாலில் நீந்தும் ஈக்களை அறிவேன்
     
மாமரம் காய்க்கும் மாங்காய் -அறிவேன்
     
பகலின் சூடும் இரவின் குளிரும் தெரியும் தெரியும்
     
ரோஜாச்செடியில் ரோஜாப் பூக்கும்
     
சிகப்பும் பச்சையும் ஒன்றல்ல தெரியும் 
     
அழகும்  அசிங்கமும் உடனே  தெரியும் 
     
வண்டல்ல தேனியென்று கண்டவுடன் தெரியும்
         .. 
எல்லாமே எனக்குத் தெரியும்...
          
என்னைத் த்விர!!
                   [
சூத்ரகா }
     
           
காதலைப் பற்றிய ஒரு யதார்த்தமான பார்வை.   இது ஒரு நவீன கவிதை!! ஷேக்ஸ்பியரின்  sonnet ஒன்று இதே கருத்தை சொல்லுகிறது!
               --------------------------------             
 
           
அவள் முகம் நிலவல்ல;கண்களும் கருவண்டல்ல
           
வளைந்த தாமரைத் தண்டல்ல அவள் கைகள்;
            
வெறும் எலும்பும் சதையும் தான் அவள் --
           
எத்தனை பொய் சொல்லுகிறார்கள் கவிஞர்கள்
            
இருந்தாலும் நாம் பொய்களை நம்ப வேண்டும்
                
காதலிப்பதற்காக! 
                           **
 
 
              இரவுப் பறவைகளின் சலனத்தை  அழகான கவிதையாக்குகிறது
               
இந்த வரிகள் _

              
இருட்டு நிதானமாக
              
உறிஞ்சி முடிக்கிறது. வெளிச்சத்தை
              
கூட்டுக்கு விரையும் காகக் கூச்சல்
              
மௌனத்தில் மறைகின்றன
               
கிளைகளின் துளைகளில்
               
ஆந்தைகள் அமர்ந்து 
              
உடம்பைக் கழுத்துக்குள் இழுத்துக் கொண்டு 
              
தலையை உருட்டி இருளை வெறிக்கிறது
               
துணிச்சலுடன் !
                       *****
        
        
ஒரு நவீனக் கவிதையின் படிம அழகு இந்த  நெடுங்காலக் கவிதையில் எவ்வளவு அற்புதமாக  வெளிப்படுகிறது!----
                 
 
                 
கிண்ணத்தில் விழுந்த நிலாக்கிரணத்தை
                 
பாலென்றெண்ணி நக்குகிறது பூனை.
                 
கிளைகளுக்கிடையில் பின்னலிட்ட கதிர்களைத்
                
தாமரைத் தண்டெனக் எண்ணுகிறது யானை
                
அரைத் துயில் விழிப்பில் அந்தக் கன்னி 
                
விரிப்பில் சிதறிய நிலாக்கற்றைகளை நேராக்கி
                 
வெதுவெதுப்பாய்  புரள விழைகிறாள்
                 
அந்த நிலவு தான் உண்மையில்
                
தன்னொளியின் போதையில் இருக்கிறது
                   
ஆனால் உலகம் ஏனோ குழம்புகிறது!

                              ****
            இது ஒரு வித்யாசமான விடம்பனக் கவிதை.   மனிதன் தனது அறியாமையால் ஏமாறுவதற்கு  வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
 யாசவர்மன்  எழுதியது --
                             
 
                    
பணத்தைப் புதைத்து வைக்கும் மனிதனை
                    
பூமி பழித்து நகைக்கிறது
                    
உடலைப் பொத்திக் காக்கும் ஒருவனை
                    
மரணம் கைகொட்டி சிரிக்கிறது.
                   
சோரம் போன மனைவியின் பிள்ளையை
                   
புருஷன் "மகனே" என்று கொஞ்சும் அறியாமையை
                   
மறைவிலிருந்து ரஸிக்கிறது
                   
மனைவியின் கள்ள மனம்!!!
                               **
   
பர்த்ருஹரி எழுதிய  இந்தக் கவிதையில்   காதலர்களுக்கு இடையே எழுகின்ற ஊடல் பிரச்னை.   எவ்வளவு யதார்த்தமாக அதே சமயம் ஒரு புதிய  சிலிர்ப்புடன் சித்திரமாகிறது..பாருங்கள் 
                  ------------------------------------------
                    "
உனைப் போகாதே!" என்று தடுப்பது அமங்கலம்
                   "
சரி போ" என்று சொல்வது அன்பற்ற செயல்
                  "
இல்லை என்னுடனேயே இரு!" என்பது ஆதிக்க குணம்
                  "
இஷ்டம் போல் நட!" என்பது பரிவற்று அன்னியப்படுத்துதல்
                 
மாறாக நான் "நீ பிரிந்தால் நான் இறப்பேன்!" என்றால்
                 
அதை நீ நம்பலாம்; நம்பாமல் போகலாம்
                    "
என் மணாளனே! எனக்குத் தெளிவாக ஒன்று சொல்லு!
                  
நான் எப்படிப் பேச வேண்டும்; நீ எனைவிட்டுப் பிரியும் போது!
                             ***
                    
கீழே வருவது இன்னொரு கள்ளக் கவிதை!----
                   
தன் காதலன் செய்த அந்தரங்க விஷமங்களை
                   
தோழியிடம்  விவரித்துக் கொண்டிருக்கும் வேளையில்
                   
தன் கணவன் நுழைந்து விட்டதைக் கண்டவள்
                       "
அந்த சமயம் தான் எனக்கு விழிப்பு வந்தது! " என்றாள் 
                   
பதறாமல்!
                                    பர்த்ருஹரி
                       
எப்போதுமே பழங்காலக் கவிதைகள் தான்   உன்னதப் படைப்பா?                         இப்போது எழுதியதென்றால் எல்லாமே ஈனமானதா?
 
வாசகனே!  உண்மை எதுவென்று
  
நீங்களே ஒரு  முடிவுக்கு வாருங்கள்
  
மதிப்பிட்டு சொல்வதற்காக
 
மற்றவனை நம்பி இருப்பவன்
 
மகா முட்டாள்!
                                    
பர்த்ருஹரி 

 [ஒருவேளை அக்காலத்திலும் புதிய கவிஞர்கள்  புலவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகி இருப்பார்களோ!!]
இக்கவிதைகளை வாசிக்கும் போது நமது கால இடைவெளி வித்தியாசமற்றுக் குறுகி விடுகிறது  ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முந்தைய இக்கவிதைகளை  அறிய வரும் போது   வியப்பாகவும்  மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.   
                  
குறிப்பு- இந்தக் கவிதைகளின் தேர்வும் மொழிபெய்ர்ப்பும் சமஸ்கிருதத்திலிருந்து நேரடியாக செய்யப்பட்டதல்ல. ஆங்கில மொழிபெயர்ப்பின் மறுமொழிபெயர்ப்பு  இவைகள். ஆகையால் கவிதையின் சுயத்தன்மை எவ்வளவு நேர்டியாக  இங்கே பிரதிபலிக்கும்  என்பதை   அறிந்து கொள்ள முடியவில்லை. இது வாசக அனுபவத் துக்காகவும் அறிமுகத்துக்காகவும் தான்.                            
                                                வைதீஸ்வரன்             
                              
 
                     
 

                      
                   
 
                     
 
      
 
        
 

No comments:

Post a Comment