vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, July 2, 2012

மனதிற்குள் ஒரு மிருகம் _சிறுகதை_எஸ்.வைதீஸ்வரன்



சிறுகதை
மனதிற்குள் ஒரு மிருகம்

_எஸ்.வைதீஸ்வரன்


ஒரு  மலையில் அடர்ந்த காட்டுக்குள்  ஒரு விறகுவெட்டி  கடுமையாக  மரம்வெட்டிக்  கொண்டிருந் தான். வேலையை   சீக்கிரமாக    முடிக்கவேண்டுமென்று    மும்முரமாக இருந்தான்.  வீட்டில்   பல   வேலைகள்   பல பிரச்னைகள்.  தவிர. தன் ஆசைநாயகி வீட்டுக்கு  போய்  பல நாட்கள்  ஆகிவிட்டன. இந்த  வேலையை  வேகமாக முடித்தாக   வேண்டுமென்று  பரபரப்பாக மரத்தை  வெட்டிக்கொண்டி ருந்தான். 

அப்போது திடீரென்று ஒரு வினோதமான மிருகம் அவன் முன்னால் தோன்றியது.அப்படிப்பட்ட  ஒரு மிருகத்தை அவன் எப்போதுமே  பார்த்ததில்லை.

என்ன  அப்படிப்  பார்க்கிறாய்? என்மாதிரி மிருகத்தை இதுவரைக்கும் எங்கியும்  பார்த்ததிலலைன்னு தானே!! மிருகம் அவனிடம் நெருங்கிப் பேசியது.

திடீரென்று தோன்றி தன் மொழியில்பேசும் அந்த மிருகத்தைப்பார்த்து   விறகுவெட்டி நம்பமுடி யாமல் ஆச்சரியமுடன் பார்த்தான்.

என்ன...அப்படி அதிசயமாப்  பாக்கறே?..உன்   பாஷையிலே  நானும் எப்படிப்பேசறேன்னு  தானே! மிருகம்  அவன்நினைத்த்தை சொன்னது.

அடே என்னடா  இதுநான்  மனசுலே  நினைக்கறது  இந்தப் பிராணிக்குஎப்படி தெரியுது? விறகுவெட்டி மனசுக்குள்  வியந்துகொண்டான்.

நீ நினைக்கறதை  நான்  எப்படிப் பேசறேன்னுதானே ஒனக்கு ஒரே புதிரா குழப்பமா இருக்குமிருகம் மீண்டும்   கேட்டது.

என்னடாது! பெரிய  சூட்சுமான  மிருகமா  இருக்கே! இப்படிப்பட்ட அதிசயமிருகத்தை ஊரிலே யாரும்பார்த்திருக்கமாட்டார்கள்.இதைப்பிடி த்து வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனால் என்ன?‘என்று யோசித்தான் விறகுவெட்டி.

என்னா.. என்னைப்  பிடிச்சி  கட்டி  ஊருக்குக்  கொண்டுபோகணும்னு    நெனைக்கிறயா?

ஆண்டவா.... இந்த மிருகத்தோட பெரிய தொல்லையா போச்சு...நம்ம பிடிக்குத் தப்பி ஓட நினைச்சா மண்டையில  ஒரேஅடி போட்டுற வேண்டியது தான்.... விறகுவெட்டி  மேலும் சிந்தித்தான்.

அடே....நான்  ஓடினா  என்னை   சாக  அடிச்சிக் கொண்டு போகணும்னு   உனக்கு
இன்னொரு   எண்ணமா?  “  மிருகம் பலமாக  சிரித்தது.

விறகுவெட்டிக்கு  கோபமும்  குழப்பமும்  அதிகமாகிக்கொண்டே வந்தது.  என்னாடாது ! ரொம்பத் தொந்தரவாப் போச்சே!!  நாம்ப எத்தை நெனைச் சாலும் தெரிஞ்சிகிட்டு திருப்பிப் பேசுதே! மிருகத்துக்குத்    தெரியாம எதையுமே நினைக்க  முடியலையே!  என்ன  பண்ணலாம்?.... பேசாம இந்த  சனியனை  லட்சியம்  பண்ணாமெ உருப்படியா நாம்ப வந்த வேலையைக் கவனிக்கறதுதான்  நல்லது. சீக்கிரம் வீட்டுக்காவது   போயி சேரலாம்!.........

மிருகம்  மீண்டும்   பலமாக  சிரித்து  விறகுவெட்டி நினைத்ததையெல்லாம்   திருப்பி சொன்னது.  “என்னா....என்னை   கவனிக்காமே   ஒன்   வேலையைப் பாக்கலாம்னு நெனைக்கிறியா?  “

விறகுவெட்டி அதன்பேச்சை பொருட்படுத்தவில்லை.பதில் பேசவில்லை. மனதை ஒருமைப்படுத்திக் கொண்டான். இருந்தாலும் மனதுக்குள் மிருகத்தைப் பற்றி    பல் வேறு   சிந்தனைகள்  ஓடிக் கொண்டே  இருந்தன.

இவனுக்குள்தோன்றிய எண்ணங்களையெல்லாம் மிருகம்  திருப்ப சொல்லிக்கொண்டே இருந்தது. அவன் அதைப்  பற்றி அக்கறை கொள்ளாமல்  தன் காரியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
  
எண்ணங்கள் தானாகவே  மெள்ளமெள்ள குறைந்து வலு விழந்து மறைந்துகொண்டு வந்தன.

தன் காரியம் ஒன்றில்  மட்டுமே   கருத்தாக  வேறெதிலும் கவனமற்று செயல்பட்டான். அவன் செயலுக்கும் மனதுக்குமிடையில்  இப்போது வேறெந்த எண்ணங்களுமில்லை...

இப்போது  மரமும்  கோடாரியும்  உடலின் இயக்கமும் தவிர   அவன்   பிரக்ஞையில்   வேறெதுவு மில்லை..

அந்த  ஒருமித்த தியான நிலையில் திடீரென்று ஒருகணத்தில் அவன்  கையிலிருந்   கோடாரியின் கூர்முனை  தெறித்து விலகி சிதறியது.அது சிதறியவேகத்தில் அதேகணத்தில் அந்த மிருகத்தின் பிம்பத்தை தாக்கி வீழ்த்திக்கொன்றது!
     
இது ஒரு ZEN கதையின் தழுவல்





No comments:

Post a Comment