vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, January 27, 2017

வைதீஸ்வரன் கதைகள் - இந்திரா பார்த்தசாரதி

    வைதீஸ்வரன் கதைகள்
(இந்திரா பார்த்தசாரதி)

வாசகனுடன் கருத்துப் பகிர்தலுக்காக அவனுடன் நேரடியாக நிகழ்த்தும் உரை யாடல் என்பதால், சிறுகதைகள், பரிசோதனை என்ற பெயரில், அவனைக் குழப்பிவிடாமல் கதை சொல்வது என்பதைத்தான் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். கதைக்கரு எப்படி வேண்டு மானாலும் இருக்கலாம். அந்நிகழ்வை படைப்பாளி எப்படித் தன் அநுபவத்துக்கேற்ப உள்வாங்கிக் கொண்டு, தன் அநுபவத்தைப் 
பகிர்கிறான் என்பதுதான் முக்கியம்.

அண்மையில் கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கும் 
‘வைதீஸ்வரன் கதைகள்’ இதற்கு ஒரு நல்ல சான்று.

வைதீஸ்வரன் ஒர் அருமையான நவீனக் கவிஞர். செல்லப்பாவின் ‘எழுத்து’வின் மூலம் கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவர்.
அதனால்தான் அவருடைய பெரும்பான்மையான சிறுகதைகளில் ஒரு கவிஞனின் பார்வை ‘பளி’ச்சென்று ஒளிர்கிறது.

இத்தொகுதியில் இருக்கும் கதைகளில் பெரும்பான்மையானவை தன்மை ஒருமை நிலையிலிருந்து எழுதப்பட்டிருப்பதால், படிக்கும் போது நண்பர் வைதீஸவரனுடன் நேரடியாக உரையாடிக் கொண்டி ருப்பதுபோல் ஓர் அநுபவம் எனக்கு ஏற்பட்டது. எழுத்தாளர் வைதீஸ்வ ரனுக்கும் இதுதான் உட்கோளாக இருக்க வேண்டுமென்று நினைக்கி றேன்.

சுயசரிதையைச் சொல்வது போல், ஆசிரியருக்குக் குழந்தைப் பருவத்தி லிருந்து பல்வேறு பருவங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வகைப்பட்ட அநுபவங்களை,  துலாக்கோல் தீர்ப்பாக எந்த விமர்ச னத்தையும், முன் வைக்காமல், எழுதப் பட்டிருக்கும் கதைகள் இவை.

‘நம்புவதா ,நம்பாமலிருப்பதா’ என்ற ஒரு மனக்குழப்பம் மனிதனுக்கு இயல்பாக உண்டு. ஆனால், நம் நம்பிக்கையிமையைப் புறக்கணித்து விட்டு, சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அவை சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன. 

ஆங்கிலக் கவிஞர் காலரிட்ஜ் இந்த இலக்கிய உத்தியைக் கையாண்டு ‘கிரிஸ்டாபல்’, ‘குப்ளாக் கான்’  போன்ற கவிதைகளை எழுதியிருக்கி றார். புதுமைப்பித்தன் எழுதியுள்ள  ‘காஞனை’யும் இவ்வகைப் படைப்பு தான். வைதீஸ்வரனின்‘விஸ்வாம்பரம்’, ‘’கனவில் கனவு’, போன்ற கதைகளைப் படிக்கும்போது இவ்வாறு தோன்றியது. இவ்வாறு நடந்திருக்குமா என்ற சந்தேகத்துக்கும், சந்தேகமிமைக்கும் இடையே ஊசலாடும் மன நிலை.

இந்நிலையில் பல தத்துவார்த்தமான் கேள்விகள் பிறக்கின்றன. எது நிஜம், எது தோற்றம்? இக்கேள்வியும், இவர் கதை ஒன்றில் வருகிறது. ‘ஆலிஸ் இன் தெ ஒண்டர்லாந்தில்’ ஆலிஸ் கேட்பாள்: ‘நான் கனவு காண்கின்றேனா, அல்லது நானே யாரோயொருவர் காணும் கனவில் வரும் கதாபாத்திரமா?’ என்று. தாத்தா அந்த ‘ விஸ்வாம்பரம்’ கதையைச் சொல்லும்போது, அவ்வாறு நடந்திருக்கக் கூடியதுதான், அந்தக் கதையின் இன்றிமையாத தர்க்கம் என்று நமக்குப் படுகிறது. அவ்வாறு நம்ப வைப்பதுதான் கலைஞனின் ஆற்றல்.

‘தமர் உகந்த உருவம் அவன் உருவம்’ என்று திருவாய்மொழி கூறுவது போல்,  களிமண்ணை எப்படிப் பிசைந்தாலும் அவர் பிள்ளையார்தாம். ‘சிருஷ்டி’ என்ற கதையில் அச்சிறுவனின் தந்தை சிற்பியாக ஆக முயன்று,  தத்துவ ஞானியாக ஏற்றம் பெற்று, உண்மை உருவத்தில் இல்லை உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர்கிறார்..

வைதீஸ்வரன் கவிஞர் மட்டுமன்று, நல்ல ஓவியர். அந்த அநுபவத்தில் விளைந்த சில நல்ல சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றிருக் கின்றன.

வைதீஸ்வரன் என்ற கலைஞனைப் பல்வேறு பரிமாணங்களில் அறிவதற்கு இத்தொகுதி உதவும்.




No comments:

Post a Comment