அர்த்த ஜாமத்தில்
- வைதீஸ்வரன் -
இருட்டு வேலிக்குள்
கம்பிகளைப் பிடித்துக் கொண்டு
நிற்கிறது ஜன்னல்…
சதை முளைத்த கண்களென
மலங்கிய வெளிச்சச் செதில்கள்
தெரு மேனியில்!
இரவுகள் பூசிய இமைத் துவாரங்களில்
தப்பித்துக் கொள்ளும் கனவுப் பூச்சிகளின்
கண்காணா நினைவுக் கூச்சல்கள்….
வாழ்க்கையின் கடை வாய் நீரொழுக்கு
காலக் கந்தலின் கசடுகளில்..
ஒளிந்து கொண்ட சூரியனை
உருண்டு பிடிக்க வெளியில்
திரியும் வெகுளியான பூமி.
பயத்தை ஆலாபித்துப் பார்க்கும்
தனித்த நாய்களின் விபரீத எதிரொலிகள்
பத்திரமற்ற எதிர்காலங்களுடன்
பழைய நினைவுகளில் பதுங்கிக் கொண்டு
புதைந்து கிடக்கும் நகரங்களை
தாலாட்டும் விதமாய்
கோலாட்டி வலம் வரும்
கூர்க்காக்களின் பகற்கனவுகள்..
இரவை இல்லையென்று
அசுர விளக்குகளால் அழித்து விரட்டி
வியர்வைக் கடலில் பேய்ச்சிரிப்புகளில்
பந்தலில் பந்தடித்து எம்பும்
வினோத விளையாட்டு மனிதர்கள்
அர்த்த ஜாமத்தில்!!
*******************
No comments:
Post a Comment