vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, March 29, 2020

வௌவ்வால்கள்









இப்போது உலகில் பரவிய கொரோனாவுக்குக் காரணம் வெளி நாட்டுக்காரன் வௌவ்வால் ரசத்தைக் குடித்தது தான் என்ற செய்திகளை நாம் வாசிக்கிறோம். சில வருஷங்களுக்கு முன்பே எனக்கு இந்த வவ்வால்கள் தந்த ஒவ்வாமைக் கவிதை இப்போது நினைவுக்கு வந்தது….

*


வௌவ்வால்கள்


 வைதீஸ்வரன் - 



இருட்டுவதற்குத்
தயாராய்க் காத்திருந்தது போல்
இருட்டியவுடன் விருட்டென்று பறக்கின்றன
சில விசித்திரப் பறவைகள்.
காகமும் கிளியும் கழுகும்
காலி செய்து விட்ட வான்பரப்பில்
ஏனென்று தெரியாமல்
மூலைக்கு ஒன்றாய் பறக்கின்றன
முட்டாள் பறவைகள்
மரங்கள் உறங்கி விட்ட மாலையில்
இருட்டுக்குள் இதற்கு
வெளிச்சமான உலகம் எப்படித் தெரிகிறது??
வானத்தில் தானியங்கள் விளைவதில்லை
காற்றுக்குள் கனிகள் காய்த்துக் கிடப்பதில்லை
ஏன்…அந்த நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்குவதும்
கொத்தித் தின்பதற்கல்ல!
பின் எதை வேண்டிப் பறக்கின்றன…
குருட்டுப் பறவைகள்?
இருட்டுக்குள் அப்படி என்ன வஸியம்
இதன் இறக்கைகளில்
துடிப்பேற்றும் ரகஸியம்?
கழைக் கூத்தாடி கனவு போல்
எப்படித் தலைகீழாய்ப் பறந்தாலும்
எனது உலகத்தை
இருள் கவ்வும் கருப்பு வேளைக்கு
“”உதய கீதம்….. “ பாடிப் பறக்கும்
இத்திருட்டுப் பறவைகளை
என்னால் நேசிக்க முடிவதில்லை…..
என்ன தான் கடவுள்
யோசித்துப் படைத்திருந்தாலும்!

_______________________________


No comments:

Post a Comment