இருட்டுக்குள் உரியும் தோல்
- வைதீஸ்வரன் -
“ இதெல்லாம் பேசித் தீத்துக்கற பிரச்னை”
என்று தான் கூடினார்கள்.
பேச ஆரம்பித்தவுடன்
வந்தது மின்சாரத் தடை.
“ இது ஒரு தடை இல்லை....பேச்சுக்கு! “
என்று கருதி மேலும் தொடர்ந்தார்கள்..
இருட்டின் பொதுவான சுதந்திரத்தில்
பிரச்சினையைத் தயக்கமின்றி
அவரவர் மூலையிலிருந்து அலசினார்கள்.
ஆரவாரம் அதிகமில்லாமல் அடக்கமாக மொழிந்தார்கள்
மெதுவாக ஆனால் தெளிவாக இரைந்தன
முகமற்ற குரல்கள்.
யாரும் கையோங்கியது கண்ணுக்குத் தெரியவில்லை
மேலும்...நறநறப்பு..முறைப்பு உடல் மொழி வன்முறைகளுக்கு
பொருத்தமற்ற சூழல் அது.
வாய்ப்பேச்சு மட்டும் தான்.
ஒருத்தன் பேச்சின் ஒலி முடிந்த பின்பே
அடுத்தவன் மறுப்பதும் ஆமோதிப்பதும் ஆக இருந்தது.
பிரச்சினைக்கு வெளிச்சம் வந்தது போல
பெருமுச்சு கேட்டது...இரண்டு கைத்தட்டலுடன் சேர்ந்து.
அதே சமயத்தில் தான்
மின்சாரம் மீண்டது.
பளிச்சென்றன கூட்டத்தில் கூசிய கண்கள்
ஏதோ வெளிச்சத்தினால் வெட்கப்பட்டது போல!
இருட்டென்ற நிர்வாணத்தில்
சகஜமாயிருந்த இயல்பு முகங்கள்
திடீரென்று சங்கடப்பட்டு
உஷாராகி அவசரமாய் அவரவரின் அன்றாட முகங்களைப்
பூட்டிக் கொண்டனர்....அதனதன் முரண்பாடுகளையும் சேர்த்து
மீண்டு வந்த போலி உலகவெளிச்சத்தில்
பிரச்சினையின் தீர்வு பழையபடி
அகங்காரத்தின் இருட்டுக்குத் தள்ளப்பட்டது.
(2019)
______________________________________________________________________________
No comments:
Post a Comment