கடைசி வார்த்தை
நான் வேலையிலிருந்து களைப்புடன் உள்ளே நுழைந்தேன்.
நான் வருவதை
அம்மா கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
நான் "என்ன? “ என்பது போல் அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் கட்டிலில் படுத்திருந்த அப்பாவைக் காட்டினாள்.
“எப்படி இருக்கே
அப்பா?”
அப்பா அரைமயக்கத்திலிருந்தார். போர்வையும் படுக்கையும் கலைந்து அலங்கோலமாக இருந்தது. அவர் மெள்ள தலையைத் திருப்பி குரல் வந்த திசையைப் பார்த்தார்.
" நீ வந்துட்டியா? “
நா குழறிய
குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தொனித்தது. அம்மா மெதுவான குரலில் சொன்னர்.
“ இதோட ஆறெழு தரம் சிறுநீர் கழிச்சுட்டார்..”
நான் கவலையுடன்
அப்பாவைப் பார்த்தேன். அவர் அருகில்
மேஜையில் வைத்திருந்த மாத்திரைகளைப் பார்த்தேன். இன்னும் ஒரு நாளைக்கு தேவையான மாத்திரைகள்
இருந்தன. டாக்டர்
நாளைக்குத்தான் வரச் சொல்லியிருந்தார்.
கடந்த ஆறுமாதகாலமாக இரண்டுவாரங்களுக்கு ஒருமுறை அப்பாவை ஆஸ்பத்திரி யில்
சேர்க்கவேண்டியிருந்தது. அவர் சிறுநீரக கோளாறு காரணமாக ரத்தத்திலுள்ள அவசியமான தாது வஸ்துக்களெல்லாம் சிறுநீர் மூலமாக வெளியேறிக்கொண்டிருந் தன. ஆஸ்பத்திரிக்குப் போய் இரண்டு மூன்று
நாட்களுக்கு நாலைந்து பாட்டிலகள் ஊட்டத்தை செலுத்தினால் ஓரளவு நிலைமை சீராகி
வீட்டிற்கு வருவோம். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் உடம்பு சோகை பிடித்து பழைய கதிக்குத்
திரும்பிவிடும்.
டாக்டர் "இது தற்காலிக வைத்தியம் தான்... வயதாகி விட்டது...
பார்த்துக் கொள்ளுங் கள்...” என்றார்.
அப்பா தலையை
மெள்ள என் பக்கம் திருப்பினார்." இன்னிக்குத்தானே போகணும்...?”
”இன்னிக்கு
இல்லேப்பா நாளைக்குத்தான் டாக்டர் வரச் சொல்லியிருக்கார்....”
“ அப்போ...இன்னிக்கு இல்லையா?...”
“இன்னும் ஒரு
நாளைக்கு மாத்திரை இருக்கே! அது முடிந்த பின் நாளைக்குப் போகலாமே...”
என் பதில்
அப்பாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. மெதுவாக இரண்டு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டார். நான் உடை மாற்றிக் கொள்ள உள்ளே போனேன்.
“அப்போ இன்னிக்கு இல்லையா?...இன்னிக்கே போ..க..லா..மே...”
அவர் குரல் என்
பதிலை எதிர்பார்க்காமல் தொய்வுடன்
தனக்குள்ளே முடிந்தது.
எனக்கு அவர்
ஏக்கத்தை உணர முடிந்தது. இதை கவனித்துக்
கொண்டிருந்த அம்மா " அப்பாவுக்கு என்ன பண்றதோ தெரியலே! அவருக்கு இன்னிக்கே டாக்டரைப் பாக்கணும்னு இருக்கு...”என்று எதிர்பார்ப்புடன் என் முகத்தைப் பார்த்தாள்.
சிறிது
தயக்கத்துக்குப் பிறகு நான் சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினேன். எங்கள்
வீட்டுக்கு சிறிது தூரத்தில்தான் நகரத்தின் பிரதான சாலை இருந்தது. ஆட்டோக்கள் கிடைப்பது அவ்வளவு ஒன்றும் சிரமம் அல்ல. கடந்த சில மாதங்களாக
ஓயாமல் தொந்தரவுபடுத்தும் அப்பாவின் உடல் நிலையும் தீர்வு இல்லாத வைத்தியங்களும்
எனக்குள் அலுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தின. அப்பாவை பற்றி அப்படிப்பட்ட சலிப்பு எனக்குள் ஏற்பட்டுவிடக் கூடாதென்று உள்மனத்தில் நான் எச்சரிக்கை செய்துகொண்டேன்.
அப்பா பொதுவாகவே ஆரோக்கியத்துடன் இருந்தவர். இரண்டு வருடங்களுக்கு முன்புகூட ஒரு மழைகொட்டும் ராத்திரியில் வெளியே நனைந்துகொண்டு
நடந்து போய் டாக்டரை அழைத்து வந்து ஊசி போடச் செய்து மூச்சுத்திணறலை ஆறுதல் படுத்தினார்
பிரதான சாலை ஒரு
ஆட்டோகூட இல்லாமல் விரிச்சோடிக் கிடந்தது. வித்யாசமாக பத்தடிக்கு ஒரு போலீஸ்காரராக சாலையின் இரு பக்கமும்
நின்று கொண்டிருந்தார்கள். சாலையின்
விளக்குக் கம்பங்களில் குறுக்குமறுக்காக கட்சிக் கொடிகள் எந்த அக்கறை யுமற்று
ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.
மெதுவாக ஒரு காவல்காரரரை நெருங்கி "என்ன விசேஷம்?..” என்று கேட்டேன்.
“இது தெரியாதா?.. பேபர்லே எல்லாம் வந்திருக்கே! பிரதமர் இந்தத் தெருமுனையிலே அந்த ஆஸ்பத்திரி தொறக்கறாரே... முதல் மந்திரி எல்லாம் வரப் போறாங்களே!.....”
“ அப்போ...”
"இன்னும் ரெண்டு அவருக்கு இந்த ரோடு க்ளோஸ்...”
நான்
வீட்டுக்குள் நுழைந்து சட்டையை கழட்டினேன். நான் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா.
"இன்னிக்குப்
போக முடியாது...பிரதம மந்திரி இந்த வழியா போறாராம். அதனாலெ ட்ராபிக்கை எல்லாம் நிறுத்தி வச்சிருக்கான்.“
அப்பா இரண்டு மூன்று தரம் புரண்டு படுத்தார். பெருமூச்சு விட்டார்.
“பிரதம மந்திரி ஒரு ஓரமா போனா...நாம்ப ஒரு ஓரமா போக முடியாதா?”
அப்பாவைப்
பார்த்து நான் சிரித்தேன். அவர் இதை விளையாட்டாக சொன்ன தாக தெரியவில்லை. அவர் கேட்டது ஒருவகையில் நியாயமாகக்கூட
இருந்தது. மேஜையில் குடிக்கப்படாமல் இருந்த ஜூஸை அவர் வாயில் மெள்ள ஊற்றி மீதி இருந்த மாத்திரைகளைப் போட்டேன். போர்த்திவிட்டேன்.
“கொஞ்சம்
பொறுத்துக்கோங்கோ. நாளைக்கு போயிடலாம்.. நாளைக்குத் தான் டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் கொடுத்திருக்கிறார்..”
நான் மெதுவாக என்
அறைக்குள் போய்க் கொண்டிருந்தேன்.
“ஏம்ப்பா, பிரதமர் ஜனங்களோட சேத்தியில்லையா?..அவர் வர்ரார்னா.. ஜனங்களை இப்படி விரட்டி அடிக்கணுமா?.. எம்மாதிரி பிராணாவஸ்தை பட்றவனெல்லாம்..” _வார்த்தை வராமல் துக்கம் தொண்டையை
அடைத்து ஏதோ
முணுமுணுப்பாக முடிந்தது. ..
அவர்
முணுமுணுப்பு ஒரு தனி மனிதனின் முணுப்பாக தொனிக்காமல் இது மாதிரி வேதனைக்கு
உள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சமூகத்தின் வேதனைக் குரலாக ஒலித்தது.
**********
மறுநாள் அப்பாவை டாக்டரிடம்
கூட்டிக்கொண்டு போனேன். நிலைமை நிஜமாகவே கவலைக்கிடமாகிவிட்டது. அப்பா பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். நிலைமையைப் பார்த்து அறிந்து கொண்ட நர்ஸ் ஓடிப் போய் டாக்டரை அவசரமாக அழைத்து வந்தார். அவர் அப்பாவின் நாடியைப் பரிசோதித்துப்பார்த்து ”அய்யய்யோ...” என்றார், தனக்கு மட்டும் சொல்லிக்கொண்ட மாதிரி.
“நேற்றே
வந்திருக்கவேண்டும். வரமுடியாமல் போய் விட்டது....” என்றேன் கவலை யுடன்.
“அடடா..... நேற்று வந்திருந்தா நல்லா இருந்திருக்குமே!..... ஏன் இப்படி
தாமதப்படுத்தினீங்க? என்னா ஆச்சு?”
“ அது வந்து.. ரோட் ....” நான் சொல்ல வாயெடுத்தேன்.
அதற்குள்
அப்பாவின் கை வேகமாக அசைந்தது.
பேச்சு வராமல் மூச்சு தொண்டையில் சிக்கிக்கொண்ட உயிரின் இரைச்சலுடன் இழுத்துக்கொண்டிருந்தது. வேதனையை மீறி நடுங்கிய விரல்களை அந்தரத்தில் சுட்டிக்காட்டியவாறு அவர் சொன்ன கடைசி வார்த்தை.....
“ பி...ர....தழ்.. ம்ம ….. ர்..”
0
No comments:
Post a Comment