இப்படியும் சில கவிதைகள் - காதலுக்காக.
வைதீஸ்வரன்
[1]
[1]
உன்னுடைய வாசலுக்காக
உன்னுடைய வாசலுக்காக
மல்லிகை வளர்த்தேன்.
பூ விரிந்து மலர்ந்த போது
நீ விலாஸத்தை மாற்றிக் கொண்டாய்!
[2]
தாகம் என்று
மண்டியிட்டேன்.
நீ இடுப்புக் குடத்தைக்
கவிழ்த்தாய்...
நீரில்லை என்று
நிரூபித்துக் காட்ட!
[3]
அடுத்த முறை
நீ என்னைக்
கடற்கடற்கரையில்
சந்திக்காதே!
உன் பேச்செல்லாம்
காற்றோடு போய் விடுகிறது.
[4]
உன் சிரிப்பைப் பிரித்துக்
கவிதைக்குள் வைத்தேன்.
ஆனால் நீயோ பிரிந்து
சென்று விட்டாய்.
இன்று கவிதை
என்னைப் பார்த்து
சிரிக்கிறது.
[5]
காதலர்களுக்கு எப்போதும்
நிலவு தான் சாட்சியா?
அவசியமாகும் போது
அத்தாட்சியற்று மறைந்து கொள்ள!!
[6]
டெலிபோனில் உனைக்
கேட்கும்போது
என் காதுகளுக்கு
உன் உதடுகள் மீது தான்
ஒரு கண்.
[7]
உயர உயரக் குதித்தாய் அன்று
மாம்பழங்கள் கையெட்டாமல்.
இன்று உயரமாக வளர்ந்து விட்டாய்
பழங்களை என் கைகளுக்கு விட்டு விட்டு!
[8]
ரோஜா இதழ்களின்
பனித்துளிகளைக் காண
நந்தவனங்களுக்கு நான்
ஏன் அலைய வேண்டும் –
இந்த நள்ளிரவில்?
[9]
நாளை மழை வந்தால்
உனக்குக் கப்பலில் கடிதம் எழுதி
மிதக்க விடுகிறேன்...
நீ தெரு வாசல் படியில்
நிற்கிறாயா.---..ஈரமாக?
[10]
உன் பேச்சழகைப் பழித்துக் காட்டும்
பறவைகளை நீ கண்டதுண்டா?
நீ வராமல் காத்திருக்கும் தோப்புகளில்
அந்தப் பறவைகள் தான்
எனக்குப் பகை.
[11]
நாம் விடை பெற்றுத் திரும்புகையில்
என் கன்னத்தின் ஈரத்தை
துடைக்க மனமில்லை எனக்கு..
அது உன் கண்ணீரின் ஈர மொழிகள்
என்பதால்!............
0
* [ “
கால்- மனிதன் ” கவிதைத் தொகுப்பிலிருந்து]
my ears gaze
ReplyDeleteupon your lips
when i hear you
on my phone....
this image of one sensory organ performing another organ's role is rare....i think only in Tiruvaaimozhi one entire decad goes on like this in the akaththuraip paasurams. only a love lore of tamil back ground can give its true dimensions...the pictures are great...feast to the eyes.