கவிதை சமாதி வார்த்தைகள்
_வைதீஸ்வரன்
கொட்டி முழக்கின
நாற்பதினாயிரம் கரங்கள்
கோரமாய் ஒலித்தன
பாராட்டுக் கோஷங்கள்
வட்ட மைதானத்தில்
நட்ட நடுப் புள்ளியாய்
ஒரு நாலடி மனிதன்
கர்வத்தால் காலகட்டி
வானத்தைப் பிய்ப்பது போல்
ஆர்ப்பரித்தான்.
இரும்புத் துண்டுகளாய்
இரண்டு கரங்களைத் தூக்கி
வளைய வந்து
திசையை ஆட்டினான்.
வெற்றி வெற்றியென்று
செவிப்பறை கிழியக் கத்தினான்....
ரத்த நிறத்து மண்ணில்
கழுத்து வக்கரித்து
நாக்கு நரம்பறுந்து தொங்க
காற்றைக் கிழித்த கொம்புகள்
கழித்துப் போட்ட கழிகளாகக் கிடக்க
கருத்த வயிறு பருத்து வானம் பார்க்க
ஒரு காளையெனும் அற்புதப் படைப்பு
அவலப் பிண்டமாய்
கிடக்கிறது பூமியில்
தெறித்து விழுந்தது தெய்வமே போல
பரந்து கிடக்கும் மண்ணில்
பராக்கிரமத்தை நிரூபிக்க
மனிதனுக்குக் கிடைத்தது
இந்த மைதான வட்டமும்
வன்மம் தெரியாத ஒரு
வாயற்ற ஜீவனும் தானா?
மனத்தின் வெறிகளை விடவா
ஒரு மிருகத்தை ஜெயிப்பது
பெருமைக்குரிய மனித சாதனை??
[தி இந்து தமிழ் 16/5/14
*The words are the
reaction to seeing the video on “ Bullfight in
Barcelona..”
No comments:
Post a Comment