பழத்தை இழந்த தோல்
வைதீஸ்வரன்
அந்த வாழைப் பழத் தோல் நட்ட நடுச் சாலையில் எந்த வாகனச் சக்கரங்களுக்கும் இரையாகாமல் இன்னும் கிடந்தது என் கண்களை உறுத்தி மூளையைத் திருகிற்று.
தோலை மறந்து விட முயற்சித்த போது அதன் உள்ளே இல்லாமல் இருக்கும் பழத்தைத் தேடி ஆதங்கமாக ஊரெல்லாம் அலைந்தது உள் மனசு.
பழம் இப்போது எங்கே எப்படி இருக்கும்? எப்படி அழிந்து போயிருக் கும்? எப்படி என்னவாக மாறிக் கொண்டிருக்கும்?
மனிதனின் வாய்க்குள் போய் அது அவனை சிறிதளவாயினும் சாத்வீகப் படுத்தியிருக்குமா? அவன் கோபத்தை கொஞ்ச நேரம் ஆறப் போட்டிருக்குமா?
மாட்டின் வாய்க்குள் போயிருந்தால் அதன் பசியை மேலும் தீவிரப் படுத்தி தெருத் தெருவாய் தோலின் வாசனையைத் தேடி வெறி பிடித்து அலைய வைத்திருக்குமா?
பழத்தை இழந்த தோலின் வருத்தம் நேரத்துக்கு நேரம் வீங்கிக் கொண்டே வருகிறது. தன் வயிற்றில் வளர்த்த சிசுவை வாய்க்குள் போட்டுக் கொள்ளும் பிராணிகளின் கொடுமையை தடுக்க இயலாத பலஹீனத்தால் நைந்து சுருங்கி வதங்குகிறது. அது. கடந்து போகும் ஒருத்தனையாவது சறுக்கி விட சாபத்துடன் காத்திருக்கிறது.
அது சறுக்கி விட்ட மனிதன் இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்தவனாக இருக்க வேண்டும். கையில் கூரான கத்தியை வீசிக்கொண்டு காதலிக்க மறுத்தவளின் கழுத்தை அறுக்கப் போனவனாக இருக்க வேண்டும்.
அது தான் என் பிரார்த்தனை. மற்றபடி பழத்தை இழந்த தோலின் வருத்தம் மிகவும் தன்னலமான தியாக உணர்வற்ற புலம்பல் என்பது தான் என் முடிவான கருத்து.
No comments:
Post a Comment