vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, March 26, 2012

ஒரு வால் நட்சத்திரம் _ மின்தமிழில் வெளியான அஞ்சலிக்கட்டுரை



மின்தமிழில் வெளியான அஞ்சலிக்கட்டுரை

ஒரு வால் நட்சத்திரம்
_எஸ்.வைதீஸ்வரன்
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு யுகமாயினி- யின்    மாதாந்திரக் கூட்டத்திற்கு அழைப்பிதழ் வந்தது.....

வெங்கட் தாயுமானவன் என்கிற கவிஞர் அன்று பேசுகிறாரென்றும்    அவருடைய முடிவு  இன்னும் சில மாதங்களுக்குள்  நேர்ந்து விடக்    விடும்   என்று மருத்துவர்கள் அறுதியிட்டுக் கூறியதை ஏற்றுக்   கொண்ட  மனப்பக்குவத்துடன்  தனக்கு தெரிந்த இலக்கிய    செய்திகளை பேச வருகிறார் என்றும்  அழைப்பில் தெரிவிக்கப்    பட்டிருந்தது.

மரணம்  எல்லோருக்கும் நிச்சயம் என்பதை யாரும்  மறுப்ப   தில்லை.  ஆனால்  அது தனக்கு  இப்போது நேரப்போவதில்லை   என்ற பயங் கலந்த நம்பிக்கையுடனேயே   நாம் சாகும் வரை   வாழ்ந்து விடுகிறோம். குழந்தை பிறக்கும் தேதியை முன் கூட்டியே   துல்லியமாக  தீர்மானிப்பது போல் இறக்கும் தேதியையும்   எழுதிக் கையில் கொடுத்து விட்டால்  எல்லோரும் இன்னும்   உருப்படியாக  விழிப்புணர்ச்சியுடன்  காலம் தாழ்த்தாமல் வாழ்வில்   செய்ய வேண்டி யதை செய்வார்கள் என்று தோன்றுகிறது..  ஆனால் மனித சுபாவத்தை அவ்வளவு சரியாக எடை போட்டு   விட முடியாது..

 அன்று யுகமாயினி கூட்டத்தில் பேசிய  வெங்கட் தாயுமானவன்   தான் பேசிய ஒவ்வொரு கணமும் மரணத்தை வென்று கொண்டிருந்தார்   என்று தோன்றியது. தன்னுடைய அற்புதமான ஆழமான  தன் வாழ்க்கை பார்வைகள்   பற்றியும் ;    பிறந்த சிசு  தாய்முலையை தேடும் இயல்பான வேட்கையுடன் தான் தேடிக் கொண்டிருக்கும் கவிதையின் மூல வேர்களைப் பற்றியும் அவர் தெளிவாக நம்பிக்கையுடன் பேசினார்.. அதை கேட்டுக் கொண்டிருந்த போது  அவர் வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் எவ்வளவு உற்சாகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று  தோன்றியது. இவரை மரணம் ஒன்றும் செய்யாது என்று நினைத்துக் கொண்டேன்.

சந்திப்புகள் தான் வாழ்க்கை .. அதிலும்  நல்லவர்களை ,    பேரறிஞர்களைஆழ்ந்த ஆன்மீக பக்குவமடைந்தும் தங்களை    பிரபலப் படுத்திக் கொள்ளாத அல்லது  பிரபலமாகாதவர்களை   அபூர்வமான கலைஞர்களை  நம் வாழ்க்கையில் சந்திப்பது   பிறவிப் பயன் என்று நான் கருதுகிறேன்.வெங்கட் தாயுமானவனை   அறிந்து கொண்டது  அப்படிப்பட்ட  உணர்வை எனக்கு   தருகிறது.

வெங்கட் தாயுமானவனைப் பற்றி அவருடைய வலைபின்னல்(blog) மூலம் வாசித்து அறிய வருகிற போது அவருடைய சிந்தனை முதிர்ச்சியும் பிரபஞ்சப் பார்வையும் என்னை பிரமிக்க வைக்கிறது. அவருக்கு  உள்ள பாரம்பரீய அறிவும் இந்திய  ஆன்மீக தத்து வங்கள் பற்றிய தீவிரமான பார்வைகளும்  அந்த கருத்துக்களை ஒரு கவிஞனின் நேர்த்தியுடன் மற்றவர்களுக்கு சொல்லும் பாங்கும் என்னை நெகிழ வைக்கின்றன ..

மறைந்து போய் விட்ட நமது பாரம்பரீய விளையாட்டுக்களில் பொதிந்திருக்கும்  அடிப்படையான உடல் மொழிகளின் குறியீட்டுத் தன்மை பற்றியும்  உடல் மூலம் உள்மனத்தை உசுப்பிவிடுகிற உபாயங்களை சொல்லக் கூடிய அத்தகைய விளையாட்டுகளின்   முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கமாக எடுத்து சொல்லுகிறார் தாயுமானவன் ..பல்லாங்குழி, கும்மி விளையாட்டு  பாண்டியாட்டம் கரகாட்டம் கோலாட்டம்  கல்லாட்டம் இவை ஒவ்வொன்றும் ஒரு ஆன்மீக எழுச்சிக்கு இட்டுச்செல்லுகின்ற தீர்மானிக்கப்பட்ட  உடல் மொழியாக விவரிக்கப்படுகிறது.  இந்த விளையாட்டுக்களின் அழிவு நமக்கு ஒரு பெரிய பாரம்பரீய கலாசார இழப்பு..என்ற கருத்து வலுப்படுகிறது..

சின்ன வயதில்  அவருடைய தந்தையின் ஆர்வத்தினால் தேவாரம் திருவாசகம் சித்தர் நூல்கள்  அத்தனையும் மனனம் செய்திருக்கிறார் .. இயல்பான கவியுள்ளத்தின் தூண்டுதலால் தன்னை ஒரு  சுயமான  கவிஞனாக பண்படுத்திக் கொள்ள  பல ஆண்டுகள்  சீரிய இலக்கிய மாணவனாக  பல முன்னோடிக் கவிஞர் களை படித்தும்  அணுகியும்  விவாதித்தும்  கவிதா இயல் பற்றிய ஒரு தனிப்பட்ட கணிப்புக்கு வர வேண்டுமென்று உறுதியுடன் முயற்சி செய்துவந்திருக்கிறார் ..      ஜீவனத்துக்காக  பத்திரிகை நிருபராகவும் தொலைக்காட்சி ஊடகங்களில்  உதவி இயக்குனராகவும்  உரைநிகழ்ச்சிகள்  தயாரிப்பாள ராகவும்  பணி புரிந்திருக்கிறார்.

வயது 35 .. அவரது  இளம் மனைவிக்கும் குழந்தைக்கும் இது    ஆறுதல் செய்ய முடியாத  துக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இழப்பு.        அவர் தன் கவிதை ஒன்றில்

                       வாழ்வின் தூற்றலில்
          காற்றின் திசையில் பயணித்த
          உமியாக நான்.....
          மூட்டைக்குள் அடை பட்ட
          நெல்லாக நீ !!

என்று  சொல்லுவது அவர் தன் உடல் மூட்டையை கழற்றிக்     கொண்டு  உமியின் விடுதலையுடன் என்றும் நிரந்தரமான இந்த பிரபஞ்சத்துடன் கலந்துவிட்டார்  என்று  நாம் கவித்துவமாக  ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்.
        
ஆனால் அவர் தனக்கு விதிக்கப்பட்ட  குறைந்த ஆயுளில் ஒரு சுரணை யுள்ள அர்த்தமுள்ள அறிவார்ந்த வாழ்க்கையை    வாழ்ந்திருக்கிறார். அவர் விட்டுச்சென்றிருக்கிற கவிதைகளும் நினைவுத்தடங்களும்  அதற்கு சிறந்த அத்தாட்சி.   அவருடைய எழுத்துக்களை புத்தக வடிவில்  வெளியிடுவது சாத்தியமானால் அது அவருடைய வாழ்விற்கு  ஒரு சிறந்த ஞாபகார்த்தமாக  அமையும் என்று  நம்புகிறேன்.
          -



1 comment:

  1. i have heard this young man speak......every word you say is true....he is a permenant person as a thinker, poet, ....deepaprakasan

    ReplyDelete