vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, May 11, 2020

பயம் - ( சிறுகதை )





பயம் 
( சிறுகதை )

- வைதீஸ்வரன் -




வகுப்பின்  கடைசி   பீரியட்  இன்னும்   பாக்கி  இருந்தது.  வனிதா தோள்பையோடு  வகுப்பை விட்டுப் படியிறங்கி வெளியே  வந்தாள்.  மாலை மூன்று  மணி  இருக்கும்,  வெய்யில் சு‌ரீரென்றது.

காலையிலேயே  அம்மா  அவளை   காலேஜை விட்டு சீக்கிரம் வரச் சொல்லி இருந்தாள்.  அவளுடைய  மாமா பெண்ணுக்கு  நிச்சயதார்த்தம்.  கண்டிப்பாக  போக வேண்டிய  உறவு.

 “வகுப்பை  மிஸ்  பண்ணி விட்டு  நானும்  வர  வேண்டுமா? “  என்று வனிதா கூடக் கேட்டாள்.

  “ இந்த மாதிரி  பங்ஷனுக்கெல்லாம்   நீ   கண்டிப்பா   வரணும்..…இல்லேன்னா  எல்லாரும்  கோவிச்சுப்பா!  “  என்றாள்  அம்மா.

இந்த  மாதிரி  உறவினர்கள்  கூடும்  நிகழ்ச்சிகளில்  நல்ல  வரனும்  சம்பந்தமும்  கிடைப்பதற்கு  நிறைய  சாத்தியம்  உண்டு.  இப்படி  வனிதாவின்  அம்மா மட்டுமல்ல… எல்லா அம்மாக்களும் மனதில் வளர்த்துக் கொள்ளுகிற நம்பிக்கை. வனிதாவால்  இதை ஊகித்திருக்க முடியாது.

காலேஜ் கட்டடத்திலிருந்து  வெளி காம்பௌண்டு வரை நடப்பதே  வெகுதூரமாக பட்டது..  சின்னப் பாலைவனமாக  ஒரே மணல் .  மாலை  சூட்டு வெய்யிலில்  நடப்பது  அவளுக்கு  வேதனையாக  இருந்தது.  அம்மா  வருகிற வழியில்  ப்யூட்டி பார்லருக்கு வேறு  போய் விட்டு வரச் சொல்லியிருந்தாள்.   அழகு ஆபத்தில் கொண்டு விடுகிறது  என்று எத்தனை அனுபவப்பட்டும்  இந்த அம்மாக்களுக்கு  தன் மகளை   அழகாக்கிப் பார்க்க வேண்டுமென்று  ஏன் இவ்வளவு  மோகம்? அவளுக்கு  ஆத்திரமாக  வந்தது.

காலேஜ் கேட்டைத் தாண்டி சாலையின் குறுக்கே கடந்து  போனால் பஸ் ஸ்டாப். வழக்கமாக  காலேஜ் விடுகிற  சமயங்களில்  அந்த  பஸ் ஸ்டாப்பில்  கூட்டம்   நெட்டித் தள்ளும். ஆனால்  பஸ்  முழுவதும்  பெண்கலாகவே  இருப்பார்கள். அது  ஒரு  விதத்தில்  நிம்மதி   தான்!

வனிதா கலேஜ் கேட்டை நெருங்கி விட்டிருந்தாள்  வழக்கம் போல் இன்று சிநேகிதிகள்  உடன் இல்லாமல்  தனியாக  நடந்து  வருவது என்னவோ  போல்    இருந்தது.  துணையற்றுப் போய் விட்ட உணர்வு.  மதியத்திலிருந்தே  அவளுக்கு ஏதோ  உடல் உபாதை.

காலேஜ்  கேட்டை  அடைத்துக்  கொண்ட  மாதிரி  சற்று  இடைஞ்சலாக  இரண்டு  மூன்று  ஆட்டோக்காரர்கள்  நின்று  கொண்டிருந்தார்கள்.  

தினந்தோறும் சாலையில்  இடிபடாமல் வீட்டுக்கு  வருவதே  பெரும் பிரயத்தனமாக  இருக்கும்.

இவ்வளவு அகலமான கேட்டின் வாயிலில்  மீன் பிடிப்பதற்கு  வலை கட்டியமாதிரி ஏன் இப்ப்டி  வழியடைத்து  நிற்கிறார்கள்? இவர்களை  ஏனென்று  யாரும் கேட்பதில்லையா?  இந்த  ஆட்டோக்கள் எல்லாமே  ஆபத்தான  மனிதர்களின் சொந்தமாகி விட்டதா?

  வனிதா  இன்னும்  நெருங்கி வர  அவளுக்கு அந்த  ஆட்டோக்காரரின் முகம் மேலும் பயங்கரமான  தெளிவுடன்  தெரிகிறது.

அவன் கூட இன்னும் இரண்டு பேர் கிழிந்த  கால் சட்டடையுடன்  சட்டையை முன்னால் முடிந்து  கொண்டு  பான்பராக் வழிய இவள் வருவதைப் ரசித்துக் கொண்டே பல்குத்திக் கொண்டிருந்தார்கள்.

வனிதாவுக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது.  திரும்பி  ஓடி விடலாம் என்று  கால்கள்  நினைத்துக்  கொண்டன.  மனம் குழம்பிய  நிலையில் இவள் மேலும் மேலும்   நடந்து  கொண்டே  இருந்தாள். அவளால்  நிற்க முடியவில்லை. 

அவள்  கேட்டைத் தாண்டி பிளாட்பாரத்துக்கு  வந்த  அதே சமயம்   ஆட்டோக்காரன் இருவருடன் ஆட்டோவில்  ஏறிக் கொண்டான். பலத்த  சத்தத்தோடு  ஆட்டோ  கிளம்பியது.  அது  தன்னை நோக்கி வருவதாக வனிதாவுக்கு     நிச்சயமாகத்  தோன்றியது.

 “அய்யோ…அம்மா!”….என்று  தலையைப் பிடித்துக்  கொண்டு அலறியவாறு  பின்னால் நகர்ந்து  குதித்தாள். ..அல்லது அப்படி  நினைத்துக் கொண்டாளா!.....கத்திய சப்தம் அவளுக்கே கேட்கவில்லை.

 ஆட்டோ  இவளைப் பொருட்படுத்தாமல்  கடந்து  சென்றது.  இவளுக்கு மெதுவாகத் தான் தெளிவாகியது.

 இவள் மேல் எதுவும்  மோதவில்லை…எவனும் இவள்  மேல்  தாவிக் குதித்து   தள்ளி  இவள்  தலை பக்க சுவற்றில்  மோதவில்லை.  மண்டையில்  ரத்தம் வழிய  மண்ணில்  மயங்கிக் கிடக்கவில்லை.  இன்னும் பத்திரமாக்  நினைவோடு  உயிரோடு  தான்  இருந்தாள்.

 முகமும்  உடம்பும்  வேர்த்து வழிய  பலஹீனமான காலகளுடன் மெதுவாக  பதறிக் கொண்டு நின்றாள்.

“ஏண்டீ வனிதா!...இங்கேயே   நின்னுகிட்டிருக்கே.!  பஸ் ஸ்டாப்புக்கு வரலியா?..”  பின்னலிருந்து  அவள் சிநேகிதி  சுபா  முதுகைத் தட்டினாள்…சற்று அவளை உற்றுப் பார்த்தவாறு.

  “ஏன்ன இப்ப்டி  உடம்பெல்லாம்  நடுங்குதே!..ஜுரமா?...காலேஜ் விட்டு அதான்  சீக்கிரமா  போறியா?  நானும்  பாதி க்ளாஸ்  கட்!  ஏண்டீ,,, WHAT  HAPPENED  TO  YOU? “

  வனிதாவுக்கு  உடனே  பேச்சு  வரவில்லை.  நாக்கு  வறண்டுபோய் இருந்தது..இரண்டு  மூன்று  வினாடிகள்  கழித்து..”  நல்ல வேளை  நீ வந்தே!”  என்று  மெதுவாக  முனகினாள்.

   “”ஏன்னடீ..என்ன ஆச்சு?..போன மாசம் நம்ப  காலேஜ் வாசல்லே  ஆச்செ…அந்த மாதிரி  அசம்பாவிதம்  எதாவது  நடந்ததா?..எவனாவது….  பொறுக்கி வந்து  உம்மேலே  இடிச்சானா?..”

“இல்லை..”

“பின்னே! “

“அப்படி எதுவும்  நடக்கலே!”

“பின்னே  என்னடீ!  “

“என்னமோ  தெரியலே!..அப்படி  நடந்துட்டதாக  ஏதோ பிரமை!...அந்த  ஆட்டோக்களைப் பாக்கும்போது  அதே  மாதிரி  ஆபத்து  எனக்கும் நேந்துட்ட மாதிரி  ஏதோ  உள்ளூர  பயம்!..அதிர்ச்சி..என்னையறியாம..”  வனிதா அந்த  உணர்விலிருந்து  இன்னும்  மீள் முடியாமல்  இருந்தாள்.

“ போடீ..பைத்தியம்!.   .YOU ARE  AN  IDIOT!..வாடீ….பஸ் ஸ்டாப்புக்குப் போகலாம்…”

சாலையின் குறுக்கே  கடந்து  இருவரும்  பஸ் ஸ்டாப்புக்குப்  போனார்கள்.
அங்கே  இவர்களையும் சேர்த்து  நாலைந்து  கல்லூரிப் பெண்கள்  நின்று கொண்டிருந்தார்கள்

ஒரு  வாட்ட சாட்டமான  போலீஸ்காரர் மட்டும்  இங்கும் அங்குமாக  நடந்து  கொண்டிருந்தார்.  பாதுகாப்புக்காக  என்று  தோன்றியது.  போன மாதம் இந்தக் கல்லூரி  வாசலிலே நேர்ந்த    அசம்பாவிதத்தால் இந்த  ஏற்பாடு என்று  தோன்றியது.

 போலீஸின்  முறுக்கி விட்ட அடர்த்தியான  மீசையும் சிவந்த  கண்களும்  கட்டுமஸ்தான  உடம்பும்  அவரைக் கடுமையான காவலுக்குப் பொருத்தமானவராகத்  தான்  காட்டியது.

அவர்  அடிக்கொருதரம் வனிதா நின்று கொண்டிருந்த பக்கமாக கடந்து  போய்க் கொண்டிருந்தார்.  ஒவ்வொரு முறையும்  வனிதா  பின்  நகர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

  “ வனீ…ஏண்டி இவனைப்   பாத்தா  பயப்படறே!..  இப்ப   எல்லாம் நமக்காக பாதுகாப்பு போட்டிருக்காங்க..பஸ் ஸ்டாப்பிலே!..ஏன்  அனாவசியமா பயப்படறே!”

காவல்காரர்    திரும்பி  இவர்கள்  நின்ற  பக்கம் நெருங்கி   மெதுவாகக் கடந்து  செல்ல  வனிதா    மீண்டும்  தலையைத் திருப்பிக் கொண்டாள்.

 “ இப்பவும் எனக்கு பயமாத் தாண்டீ இருக்கு!..ஏன்னு  தெரியலே!..”

 “இவர்களைப் பாத்தாக் கூடவா?  “    …சுபா  பலமாக  சிரித்தாள்………..

.வனிதாவுக்கு  சிரிப்பு வரவில்லை,
_________________________________________________________________________

 [கணையாழி  1998]

A Portrait Painting of S.Vaidheeswaran by Shri. Dhanushkodi Varadharajan



A Portrait Painting of S.Vaidheeswaran by Shri. Dhanushkodi Varadharajan


Shri. Dhanushkodi Varadharajan, after completing the below portrait painting mentioned:


Our friendship dates back to the days of THE MADRAS ART CLUB, starting around mid sixties. We were around thirty non professionals, as keen as the professionals to learn, to improve. Our guides were stalwarts in the art field: Anthony Doss, Santhana Raj, Surendranath and others. My friend is a poet and an artist who has received several accolades from different quarters.



.

S.Vaidheeswaran's comment:

This is an endearing portrait of mine by my multifaceted life long friend Dhanushkoti whose association crossed nearly 60 years by now. His association always inspired me to be dedicated to our chosen path and be firm on your principles. It fills me with joy and gratitude to think about such loving relationship in life.



_______________________________________________________________________


Wednesday, April 8, 2020

அசோகமித்திரன் நினைவலைகள்




அசோகமித்திரன் நினைவலைகள் 

அசோகமித்திரனின் நினைவேந்தல் கூட்டம் ஒன்றில் நான் ஆற்றிய உரையின் காணொலிப் பதிவு கீழே.

தனது படைப்புகள் மூலம் நம் மனதுகளில் அழியாப்  பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார், அசோகமித்திரன்.

கீழே உள்ள link கிளிக் செய்யவும்:



______________________________________________



Sunday, March 29, 2020

வௌவ்வால்கள்









இப்போது உலகில் பரவிய கொரோனாவுக்குக் காரணம் வெளி நாட்டுக்காரன் வௌவ்வால் ரசத்தைக் குடித்தது தான் என்ற செய்திகளை நாம் வாசிக்கிறோம். சில வருஷங்களுக்கு முன்பே எனக்கு இந்த வவ்வால்கள் தந்த ஒவ்வாமைக் கவிதை இப்போது நினைவுக்கு வந்தது….

*


வௌவ்வால்கள்


 - வைதீஸ்வரன் - 



இருட்டுவதற்குத்
தயாராய்க் காத்திருந்தது போல்
இருட்டியவுடன் விருட்டென்று பறக்கின்றன
சில விசித்திரப் பறவைகள்.
காகமும் கிளியும் கழுகும்
காலி செய்து விட்ட வான்பரப்பில்
ஏனென்று தெரியாமல்
மூலைக்கு ஒன்றாய் பறக்கின்றன
முட்டாள் பறவைகள்
மரங்கள் உறங்கி விட்ட மாலையில்
இருட்டுக்குள் இதற்கு
வெளிச்சமான உலகம் எப்படித் தெரிகிறது??
வானத்தில் தானியங்கள் விளைவதில்லை
காற்றுக்குள் கனிகள் காய்த்துக் கிடப்பதில்லை
ஏன்…அந்த நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்குவதும்
கொத்தித் தின்பதற்கல்ல!
பின் எதை வேண்டிப் பறக்கின்றன…
குருட்டுப் பறவைகள்?
இருட்டுக்குள் அப்படி என்ன வஸியம்
இதன் இறக்கைகளில்
துடிப்பேற்றும் ரகஸியம்?
கழைக் கூத்தாடி கனவு போல்
எப்படித் தலைகீழாய்ப் பறந்தாலும்
எனது உலகத்தை
இருள் கவ்வும் கருப்பு வேளைக்கு
“”உதய கீதம்….. “ பாடிப் பறக்கும்
இத்திருட்டுப் பறவைகளை
என்னால் நேசிக்க முடிவதில்லை…..
என்ன தான் கடவுள்
யோசித்துப் படைத்திருந்தாலும்!

_______________________________


Thursday, February 20, 2020

அன்பலை




அன்பலை  

( வைதீஸ்வரன் )


அன்பு வெறும் அலை என்று நினைத்தேன்
அலைகள் ஓய்வதில்லை
என்பதை எவ்விதம் மறந்தேன் 



(குறிப்பு: கீழ்க் காணும் ஓவியம் 1961ல் வரைந்தது. திரு.கே.ஸி.எஸ்.பணிக்கரால்..பரிசளிக்கப் பட்டது)

_____________________________________________________________________________


Saturday, February 1, 2020

இது கனவல்ல...... அபூர்வமான நிஜம்




   இது கனவல்ல... அபூர்வமான நிஜம்

- வைதீஸ்வரன் -
















ஆச்சரியமாக  இருக்கிறது.   இன்று என் அம்மா  என்  பகல்  கனவில்  தத்ரூபமாக  வந்து  பேசி சிரித்து விட்டுப்  போனது.!!! 

ஒரு  காரணமாக  இன்று  அம்மாவின் வருஷ திதி  என்று சொல்லலாம்....ஆனால்  அதற்காக நான்  வெகு சம்பிரதாயமாக  ஆசார நியமனமாக  எதுவும்  செய்யவில்லை.  மாமபலத்தில் உள்ள ராகவேந்திரா மடத்தில் 750 ரூபா  பணத்தைக் கட்டி பத்து  ஏழைகளுக்கு அன்னதானம் செய்வித்தேன்.. அர்க்கியம் விட்டேன் அவ்வளவுதான்  அதோடு  மறந்து விட்டு வேறு காரியங்களைப் பார்த்து வீடு  திரும்பினேன். ஏதோ கடமை முடிந்தது.. அம்மாவின் ஞாபகம்  சுத்தமாக  மறந்து விட்ட்து.

பிறகு உண்ட பிறகு  வந்த பகல் தூக்கக்  கனாவில் நான் சென்றது என் ஆபீஸ் சிநேகிதன் அனந்து  வீட்டுக்கு. வீட்டுக்கு. அவனும் நானும்  சேர்ந்த இன்னொரு நண்பன் வீட்டுக்கு போக வேண்டுமென்பது முன்கூட்டிய தீர்மானம்... அங்கே போனவுடன் அணைந்து தனக்கு விலாஸம் சரியாகத் தெரியாதென்றும் எனக்குத் தெரியுமாவென்றும் கேட்டுக் கொண்டிருந்தான். நான் தெரியாதென்றேன்...அப்படியென்றால் நண்பன் வீட்டுக்கு அநேகமாக  போக முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தான். நாங்கள் இருவரும் அவன் வீடு உள்ளறையில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது  திடீரென்று இட்து கதவைத் திறந்து  கொண்டு  கையில்  காபியுடன் எட்டுமுழப்புடவை கட்டிக் கொண்டு  ஒரு மாமி உள்ளே நுழைந்தாள்  நான்  யாரென்று பார்க்க தலை  தூக்கினேன்  “அம்ம்மா…”

எனக்கு திக்கென்று இருந்தது. அதிர்ச்சியாக இருந்தது அப்படியே அசல்..தத்ரூபம்...என்ன அதிசயம் நான் சடாரென்று எழுந்து நின்றேன் அவன் கையிலிருந்த காபியை என்னிடம் கொடுத்தாள் ..நான் வாங்கி அருகில் உள்ள ஸ்டூலில் வைத்தேன். அதற்குள் அவள் கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டாள் ...பலமாக சிரித்தாள் மிக்க இளமையாக இருந்தாள் ...பல் வரிசை சீராக இருந்தது !!!..ஏதோ நிறைய பேசின மாதிரி எனக்கு ஒரு பிரமை ..ஆனால் நான் தான் பேசி இருக்கிறேன்...அருகில் நின்ற அனந்து  "என்ன..என்ன.." என்று கேட்டான்.

“எங்க  அம்மாடா  அம்மா..தெரியலே!..”   என்றேன்  அவன் “தெரியலையே!” “என்றான் திகைப்புடன்!!  அம்மா  பலமாக  சிரித்தாள்..” நான்  எப்படி  வந்தே”  எங்கே இருந்து  வந்தே?”  என்று நிறையக் கேள்விகள் கேட்கிறேன்... “உன் பேரன் மூர்த்தி  இப்போ   வந்திருந்தான்  “  என்கிறேன்....”முர்த்தியா?”  என்று  ஏதோ  கேட்கிறாள்  அவளுக்கு   அடையாளம்  தெரியவில்லை.  ஆனால் என்னை  பார்த்து மட்டும் சிரிக்கிறாள்..கடைசியாக அந்த  சமையல் பொண்ணு மஞ்சு ரொம்ப கஷ்டப்படறாளா? அவா குடும்பத்துலே  தொந்தரவா? ..”என்று  மட்டும் சொல்லுகிறாள்.. எனக்கு சற்று ஏமாற்றமாக  இருக்கிறது.. உடனே  வீட்டில் என் மனைவிக்குப் போன்  பண்ணி அம்மாவைப்  பார்க்க உடனே வரவழைக்க வேண்டுமென்று  செல் போனை எடுக்கிறேன்  எடுத்த  உடனே  செல்போன் புடைத்துக்  கொண்டு  உருண்டையாக  ஆகிவிடுகிறது!! .    


அம்மாவின் உருவமும்  தேய்ந்து  கொண்டே வருகிறது  ஸ்டூலில் வைத்த  காபி  ஞாபகம்  வருகிறது. எடுத்துக்  குடிக்கிறேன்  அனந்து என்  செய்கையைப்  பார்த்து புரியாமல்  நிற்கிறான்  அதற்குள்  அவன்  மனைவி  இந்த  பேச்சுக்கள் கேட்டுக்  கொண்டு  வேகமாக  உள்ளே  வந்து  “   என்ன  ஆச்சு?..ஏதோ யாரோ பேசற  மாதிரி  இருந்ததே?” ?” என்று  கேட்கிறாள்.. அனந்து  “ஒண்ணும்  புரியலே..இவர்  ஏதோ அம்மா அம்மான்னு சொல்றார்  இவர்?”  என்கிறான் அப்போது  ஒரு  மலையாள மாமா வந்து  ஒரு புத்தகத்தை விரித்து  அதிலிருந்து  ஸ்லோகம்  ஒன்றை  சொல்லுகிறார்.

அதற்குள்  அம்மா  முழுக்க  மறைந்து  காணாமல்  போய்  விடுகிறாள்  என்  செல் போன்  சகஜ  உருவத்துக்கு  வருகிறது!!.  நடந்தது அவ்வளவு நிஜமாக  இருந்தது  நான் அநந்துவிடம் பரபரப்பாக  விடை சொல்லிவிட்டு  உடனே   வீட்டுக்குப்  போய்  இங்கெ  நடந்ததை  சொல்ல வேண்டுமென்று  வேகமாக  வெளியேறுகிறேன் ஸ்கூட்டரை எடுத்துக்  கொண்டு  கிளம்பியவுடன் எதிரே நான்  வந்த   தெருக்களே  அடையாளமில்லாமல்  மாறிப்  போயிருக்கிறது.  திடீரென்று  கோடம்பாக்கம்  திருவெல்லிக்கேணியாக  ஆனது போல  ...வீடு திரும்பும் வழி  சுத்தமாக  காணமல்  போய் குழப்பமாக  நடுச் சந்தியில்  நின்று கொண்டிருந்தேன்  நெஞ்சில் பசுமையாக  இருக்கும்  கனவு  அழிந்து மறந்து  போவதற்கு  முன்னால்  வீட்டுக்கு போய்  இதை  சொல்ல வேண்டுமென்று அவசரத்தில் மனசு  தவிக்கிறது.. சூல்  முற்றிய தாயின் வேதனை வலியுடன்  நான்  அம்மாவின் கனவை சுமந்து கொண்டு  வீடு திரும்பும்  வழிக்காக  தவித்துக்  கொண்டிருக்கிறேன்.

  மெல்ல  மெல்ல  திருவெல்லிக்கேணி  கோடம்பாக்கமாக  மாறிக் கொண்டு வருகிறது அதொ அசோக்நகர் அதோ மேற்கு  மாம்பலம் அதோ ரங்கராஜபுரம்.......”

இந்த அவஸ்தைக்கு  நடுவில் கத்தி மாதிரி  ஒரு குரல் உள்ளே  பாய்ந்தது.  “  ஏன்னா....மணி  நாலறையாறது....காபி  கலக்கட்டுமா? “மனைவியின் நிஜக் குரல்!  நான்  திடுக்கிட்டு எழுந்த  போது  அந்த  நிஜத்தை   நம்பவே  முடியவில்லை. நான் இருந்த  கனவு உலகம் இன்னும் அத்தனை நிஜமாக பளிச்சென்று  இருந்தது.

அவசரமாக எழுந்து மறந்து போவதற்கு  முன்னால்  நான்  கண்ட அபூர்வமான கனவை [நிஜத்தை]  எழுதி  வைத்து விட வேண்டுமென்று  கணிணியை முடுக்க  ஆரம்பித்தேன் 
“கனவுகள்  மார்கழிப் பனி மாதிரி...கொஞ்சம்  விழிப்பு வந்தாலே கரைந்து மாயமாய் போய் விடக்கூடும்” திரும்ப நினைவுக்கு கொண்டு வர முடியாது.

...அதுவும் அம்மாவின் திதியன்று இப்படி  ஒரு கனவு அபூர்வமானதாக தோன்றுகிறது  இதெல்லாம் திட்டமிட்டு தோன்றக் கூடியதா??!!!!!!!!!!!!!!!



பி. கு.  சீதா –என் மனைவியின் பெயர்
        மஞ்சு  -- எங்கள் சமையல் சேவகி
        மூர்த்தி  -  என் மகன்

__________________________________________
( நன்றி: அம்ருதா  இதழ், ஜனவரி 2020)





  

ஒரு அம்பும் கவிதையும்







ஒரு  அம்பும்  கவிதையும்
   
மொழிபெயர்ப்பு: .எஸ்.வைதீஸ்வரன்


அம்பொன்றை எறிந்தேன்  காற்று வெளியில்
விழுந்ததெந்த  மண்ணில்  அறிந்தேனில்லை
விருட்டென்று பார்வை கடந்து  பறந்தந்த  அம்பன்றோ!
வான்வெளியில்  கவிதையொன்றை
உயிர்மூச்சாய்  ஊதி   விட்டேன்
மறைந்ததெங்கே  வெளியில்… அறிந்தேனில்லை..
ஒரு  கவிதையின் வீச்சைத் தொடர்ந்து பிடிக்க
யாருக்குண்டு  திறமையும் வீர்யமும்?
நெடுநாட் கடந்த  பின்  காட்டுப் புதரொன்றில்
கண்டெடுத்தேன்  முனைமுறியா அம்பதனை
அவ்வாறே  என் கவிதையின் முழு வடிவம் 
ஒரு   அன்புநெஞ்சின்  ஆழத்தில் 
அதிசயமாய்  உறையக் கண்டேன் 



மூலக் கவிதை :

The   arrow  and  the  song
    

I  shot an arrow   into  the  air
It  fell  to  earth  I knew not  where
For  so  softly  it  flew the  sight
Could  not  follow  it  in its  flight
I  breathed  a song  into the  air
It fell into  earth  I  knew not  where
For  who  has  sight  so  keen  and  strong
That  it  can  follow  the  flight  of  song
Long afterward  in an  oak
I  found  the  arrow  still unbroke
And  the  song  from  the  beginning  to  end
I found again   in  the  heart  of  a friend

         
(Longfellow)
_____________________________________________________________________