vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, October 13, 2012



                 
மரத்திற்கு ஒரு இரங்கல்
                                        ----------------------------------------------------- வைதீஸ்வரன் 



 இன்று வரை ஒவ்வொரு அடுக்ககங்கள்   நிலத்தை ஆக்ரமிக்கும் ஒவ்வொரு காலத்திலும் அங்கே இருந்த மரங்கள் அடியோடு  வீழ்த்தப் படுகின்றன.  எனக்குத் தெரிந்த  ஒரு நண்பரின் பழங்கால வீடு. சின்ன ஆசிரமம் போல் இருக்கும். அதைச் சுற்றி மாமரங்களும் தென்னையும் கொய்யாமரங்களும் அடர்ந்து சூழ்ந்திருக்கும்   எங்கு பார்த்தாலும் பசுமை பசுமைதான்.  வெளிவீதியில் எரிக்கும் வெய்யில் அவர் வீட்டுக்குள் எப்போதும் அண்டாது குளு குளுவென்றிருக்கும்.  அங்கே உள்ளே சென்றதுமே  மனம் ஏதோ தன்னிச்சையாக அமைதியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும். அதற்கு முன் உள்ளே புரட்டிப்போட்டுக் கொண்டிருந்த கோபங்களும் வருத்தமும்  ஏமாற்றங்களும்  மௌனமாகி மெள்ள வீர்யம் கெட்டு   மயக்கங் கொடுத்த நோயாளிகளைப் போல் மனதின் ஓரத்தில் ஒதுங்கி விடும்   ஜிவ்வென்று  மனம் விரிந்து பரந்து லேசாகி உடல் தாண்டி மிதக்கத் தொடங்கி விடும்...அந்த  மரங்களுக்கு  அவ்வளவு ஆக்க சக்தி இருந்தது என்பதே  எங்களுக்கு ஞாபகம் இல்லை.

ஒரு நாள் வெளி நாட்டிலிருந்து வந்த அந்த நண்பருடைய மகன்கள் ஒரே வாரத்தில்   தீர்மானித்து முடிவெடுத்து  அதைத் தடுக்க முயன்ற அந்த நண்பரின் வயதான முனகலை அலட்சியம் செய்து விட்டு அந்த இடத்தை அடுக்ககமாக  மாற்றினார்கள்.  பலமாதங்களுக்கு அந்த வீட்டை சுற்றி  வெடி வைத்துப் பிளந்த  பிணங்கள் போல் அந்த  நெடுங்கால மரங்கள் சிதறிக் கிடந்ததன..

இது போன்ற அதிர்ச்சியான ஊமைக் கொலைகள் நகரங்கள் முழுவதிலும் நடந்து கொண்டே இருக்கின்றன.  மரம் நடு விழா என்று அவ்வப்போது  அரசியல்  சினிமா நாயகர்கள்   கையில் மம்மட்டியுடன் காட்சியளிக்கும்   போட்டோவிற்குப் பிறகு அந்த மரமும் அந்த இடங்களும் என்ன வாயிற்று?
              
               1] மன்னிப்பு
               மரங்கள் ஓயாமல்
               அழிந்து கொண்டிருந்த போதிலும்                              
               குயில்களுக்கு இன்னும்
                 கோபமில்லை  யாரிடமும்
                 அதன் குரல் இன்னும்
                 காதலையே  பாடுகின்றன
                 இனி வரப் போகும்
                 “ஒரு மனிதனுக்காக..”
                      **************

                   2] காத்திரு
                  மரங்கள் சிரித்த்தைப் போல்
                  பறக்கின்றன  காகங்கள்
                  கொஞ்சம்  தென்றலும்
                  குளிர்ந்த வானமும்  போதும்
                  அவைகள்  சிரிப்பதற்கு.
                   எப்போது அவைகள்
                   சிரிக்குமென்று
                   எதிர்பார்க்க முடியாது.
                   .........காத்திருக்க வேண்டும்.
                   காசுகளைக் கூட்டிக் கழித்து
                    கணக்கு சரி வராமல்
                   சலிக்கும்  தருணங்களில்
                   கண்களை சற்றே  உயர்த்துங்கள்
                   ஒரு வேளை
                    அது சிரிக்கலாம்.
                    எதற்கும் காசுகளை எண்ணும்போது
                    சில இடை வெளிகளை
                     ஒதுக்கிவிடுவது  நல்லது..
                     மரங்களின் சிரிப்பைப் பார்ப்பதற்காக
                          ****************************    
                     
          3] சிலிர்ப்பு
                    மரத்திற்கு மரம் பறந்து
                    கிளைகளில் நெஞ்சு விம்ம அமர்ந்து
                     சிலிர்க்கும் பறவைக்குஞ்சுகளுக்குத் தான்
                    எவ்வளவு கர்வமற்ற  ஆனந்தம்!
                    இந்த விடியலும் வானும்  மரங்களும்
                    தனக்கே  சொந்தம் போல்
                     எத்தனை அதிகாரமற்ற  பாந்தவ்யம்
                     அந்தப் பறவைகளுக்கு
                     பறவைகளில்லாத வானத்தின் சோகத்தை
                     என்னால் யோசிக்க முடியவில்லை.
                     நிச்சயம்
                     அது வானத்தை விடப்  பெரிதாக
                     இருக்கும்  

                       -----வைதீஸ்வரன்  தொகுப்பு  கால் – மனிதன்


Tuesday, October 9, 2012



           
ஆயுள் ரேகை
 _ வைதீஸ்வரன்


பிரபலமான ஜனரஞ்சக  எழுத்தாளர்  குஷ்வந்த் சிங்குக்கு இப்போது வயது98. இன்னும் அவர் ஆரோக்கியமாக சுறுசுறுப்புடன்எழுதிக் கொண்டு வாழ்க்கையை உற்சாகமாகக் கழித்துக்கொண்டுவருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய  நீண்டஆயுளின் ரகஸியங்களை, அவர் கடைப்பிடித்த சில வாழ்க்கைமுறைகளைஒருபத்திரிகைப்பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவை:
“அறுபது கடந்தவுடனேயே உணவு நித்திரை பழக்க வழக்கத்தை சீர்படுத்திக் கொள்ளவேண்டும்.
காலையில் டீ காபி குடிப்பதில்லை. கொய்யாப்பழ சர்பத் சாப்பிடு கிறேன். 
அன்றாடம் கொஞ்சமும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  முதல்நாள்இரவில்  “வயிறுஇளக்கி” பழங்கள் எடுத்துக் கொண்டோஅல்லது மறுநாள் இனிமாசிகிச்சை செய்துகொண்டோ குடலை சுத்தமாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.
நமக்கு அப்பாற்பட்ட ப்ரும்மாண்டமான சக்தி ஒன்றை  ஏதாவது ஒரு ரூபத்தில் நினைத்து சில நிமிஷங்கள் பிரார்த்தனையில் ஈடுபடலாம்.. 
காலை 9மணிக்கு காய்கறித் துண்டுகளோடு ரொட்டி  பழ பானம்.
பிறகு நடைப்பயிற்சி அவசியம்.
நடைப்பயிற்சி செய்யும் சக்தி  குறைந்து விட்டால்  தினமும் உடல் முழுவதும்  சூடு பறக்க மஸாஜ்  செய்து கொள்ள  ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மாலையில் கூடியவரை நண்பர்களுடன் கலந்து  பேசிப் பொழுது போக்க வேண்டும்.
இரவு  ஏழு மணிக்கு  மிதமான அளவு  malted wine குடிக்கலாம். 
பிறகு  சப்பாத்தி  காய்கறிகள் கோதுமைக் கஞ்சி பால் 8 மணிக்கு முன்பாக  எடுத்துக் கொண்டு  ஒன்பது மணிக்குப் தூங்கப் போக வேண்டும். மிகவும் விருப்பமான புத்தகங்களைப் படிக்கலாம்
சாப்பிடுவது தூங்குவதை தவிர  வேறு ஸ்வாரஸ்யங்கள் அவசியம். எழுத்தாளனும் ஓவியனும்அதிர்ஷ்டசாலி. மற்றவர்கள் தோட்ட வேலை பூ, அலங்காரம்  போன்ற  நல்லபொழுதுபோக்குகளை வளர்த் துக் கொள்ள வேண்டும்
இதைவிட முக்கியமாக,வாலிப நாட்களில் திறமைக்கேற்ற தொழில்செய்து  நிறையப் பொருள்ஈட்டியிருக்க  வேண்டும். அந்திம வயதில்  மிகுந்த  நிம்மதியையும்  பாதுகாப் பையும்அளிப்பது  வங்கியில் உள்ள பணம் தான்.  
தன்னுடைய பராமரிப்பு  மருத்துவசெலவு அத்தனைக்கும் போதுமா னதாக  பிறரை எதிர்பார்க்காத  அளவுக்கு  சேமிப்பு இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்
இதையெல்லாம்விட இன்னும் முக்கியமாக  மேலும் இரண்டு விஷயங்கள்தான்  வயதான காலத்தில்  நிம்மதியைக் கொடுக்க கூடியது... 
ஒன்று, எப்போதுமே உங்களை மற்றவர்களோடு ஒப்புநோக்கி சீர் தூக்கிப் பார்த்துக் கொள்வது  தவறு.
இரண்டு,எப்போதும்மற்றவர்கள்மேல் பொறாமையோ எரிச்சலோ நெஞ்சில் வளர்த்துக் கொள்வது மனஆரோக்கியத்துக்கு மிகவும்   தீங்கு விளைவிக்கக் கூடியது .””
குஷ்வந்த் சிங்கின் தந்தையும் ஆரோக்கியமான நீண்டஆயுளுடன் வாழ்ந்தாராம். அவரு டைய மூத்த  சகோதரர் இறக்கும்போது  நூறு வயதைத் தாண்டினாராம். அவருடைய தொண்ணூற்றி ஐந்து வயது இளையசகோதரர் மிக ஆரோக்கியமாக வாலிப மிடுக் குடன்  இருக்கிறாராம் “அவன் நிச்சயம்  என்னை  மிஞ்சி விடுவான் “  என்கிறார் சிங்!
இந்த ஆயுள்நீட்டிப்புக்கு  தங்கள்குடும்ப மரபணுக்களின்  ரஸாயனக் கலவைகளும்  இன்னொரு  காரணமாக  இருக்கலாம் என்கிறார் பிரபல  எழுத்தாளர் குஷ்வந்த்  சிங்.
****************
படிப்பதற்கு  உற்சாகமாக  இருக்கிறது.  ஆனால் ஆண்டவனின் திட்டம் தான்  அறுதியான கணக்கு. (அதைத் தான் மரபணு என்று சொல்லுகிறார்களோ!?}
சாப்பிடும் பொழுதைத்தவிர உதட்டில் சுருட்டை ஒட்டிக் கொண்டே  வாழ்ந்த  சர்ச்சில்  90 வயது தாண்டி  வழுக்கிவிழுந்துதான் இறந்தார்...

Thursday, September 27, 2012

தாகம் -a poem by vaidheeswaran


தாகம்
                      ---------------------------
 
வானத்து உச்சியில்
 குதிரையை அவிழ்த்து விட்டு
 வாசலுக்கு ஓடி வந்தான்.
 கொதிக்கும் உலை நின்று
 கூத்தாடும் ஆவியாய்
 பதைத்த சுடு மூச்சில்
 பகற்கனவு கலைந்தெழுந்தேன்
“நீ யார் “என்று நினைக்கவும்
நேரமில்லை.--------------
“தாகம்...தாகம்...” என்று
 தோள்மீது குடை சாய்ந்தான்.
“நாக்கில் கனல்தாங்கி
நாயாய் அலைகின்றேன்
மேற்கும் கிழக்காக
மேய்த்துத் திரிகின்றேன்
தாகம் தண்ணீர்..என்று
தவித்துக் கையேந்தினான்.

நெஞ்சில் சுரந்த ஈரம்
கையில் பெருகவில்லை.
 பஞ்சாகப் பறந்தோடி
பூவாளி தூக்கிப்போய்
படுத்திருந்த நதி முதுகைக்
குடைந்து குடைந்து பார்த்தேன்.
நகமும் நனையவில்லை
புதுக் கிணற்றில் காலை விட்டுக்
கொப்புளமாய் எழுந்து வந்தேன்
வறண்ட பூமியெங்கும்
வாடிக்கை கை விடவும்
நேற்று விதைத்த விதை
நெஞ்சில்  தட்டுப்பட---
“விதைத்தவன் நான் கேட்டேன்...
நீரில்லை-  தேனிருக்கோ?..
நேரமில்லை நிற்க” வென்றேன்
“காலம்வர வேண்டுமப்பா...
சூலாகிச் சுரக்க..
வாயேன் பார்க்கலாம்..”
என்று வளைந்தது முளை.
“ஹூம்...காலம்..
தாகத்திற்கு காலமில்லை...
தண்ணீருக்கு என்ன காலம்?..
வாசலில் வெந்து  நிற்கும்
வாய்க்கு என்ன சொல்வேன்?...
இதென்ன தேசம்?.......”
என்னெஞ்சும் உடலும்
உருகி  உப்பாச்சு.
கண்கள் குளமாக
வெறுங்கையில் வாளி யேந்தி
வாசலுக்குத் திரும்பி வந்தேன்.
“அரைக்கணம் பொறுக்க வேணும்..
மலருக்குள்  தேனில்லை
நதி மனசில்  நீரில்லை
அரைக் கணம் பொறுக்க வேணும்..
அமருங்கள்..”  என்றேன்
“ ஐய்யய்யோ...நான் கடவுள்...
காலம்  எனக்கில்லை..
மேலும் பொறுத்து நின்றால்
குதிரை கட்டவிழ்ந்து
திசையைத் தின்று விடும்..
நீயும்  வியர்த்தாய் -  --“என்று
நெற்றியைத் துடைத்து விட்டு
சிறகை விரித்துப்
படபடத்துப்  பறந்தான்
“தாகம்....தாகம்.. என்று 
தனைமறந்து பின் தொடர்ந்தேன்
“ஆமாம்...தாகம்....
நீர் கொடுக்கவில்லை நீ..
நானோ தாகத்தைக் கொடுத்தேன்..
பாடு! “ --- என்று பறந்தான்  விண்ணுக்குள்.
மேகம்  கனைத்தது.

           -வைதீஸ்வரன்    –1962
[*If I could say    this  can be   treated    as  a  Metaphorical  poem  and   has  a  Classic   tone
  Published   in  a  TAGORE  -SPECIAL  issue from  Calcutta  and  the   creative  writings from Tamil.
Was  compiled    by  Ashoka Mitran]


.