vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, July 26, 2012


அகமும் புறமும் ஒரே பகல்
      
_எஸ்.வைதீஸ்வரன்

வெள்ளி ஜரிகை வெய்யில்         கள்ளப் பரத்தையாய்
வீதியில் விரிந்து கிடக்கு
       
வாயிற்படி சார்பில் தரையோடு
வளைந்த  கந்தல் பூனைகள்
         

இங்குமங்கும் நிழல்பூச்சிகளைக்
கவ்விக் கொள்ளும் ஒளிப்பல்லிகள்
நீட்டும் கனல் நாக்குகள்     
முதலிரவுப் பிள்ளை வெறியாய்
நிலப் பெண்ணை நெருப்பால்
வருடி வருத்திய பின்னும்
சுமந்து  பொறுத்து
சிவந்து சிரிக்கிறாள்
செம் பூமிப் பெண்
வியர்வை.... புழுக்களாய்
உடலில் மழமழக்க
வெறுப்பும் நெருப்பும்
வீட்டைத் தெருவாக்கி
தெருவை சுதையாக்குது
தீ....
எரிந்தேன்... எரிவேன்... என
சமணர் போல் எறும்புக் கூட்டம்
முற்றத்தில் மெதுவாய் பொரியுது
என்னெதிரில்.
பாதக் குருதியின்
பச்சை ருசிக்காக
காய்ந்து கிடக்கும்
வெய்யில் வாய்க்கு
ஏழைக் கால்கள்
விதியற்று தெரிந்து பலியாகி
பதறுது... பதறுது...
கண்ணதிரில்..
தாகத்தால் வானத் தேன் வேண்டி
வாய் பிளந்து
மொட்டை முனிமரங்கள்
முரட்டுத் தவமிருக்கு
முள்காட்டில்.
''மாஜி '' கவிக் குயில்கள்
மறைந்திருந்து மரக் கிளைக்குள்
ஏறும் தீயணைக்க
ஈரக் குரலில் கூடிப் புலம்பிப் பின்
இறகு சலித்து ஓய்கிறது
உள்ளே  குமைந்து.
''தீ...தீ......"""
முடிவற்ற தீவெள்ளம்
கரையற்ற அனல் காடு..
எப்போது மாறும்?
எப்போது ஈரம்?
எப்போது மாற்றம்?
      
ஒட்டிக் கிடந்த சட்டையென
உடலை      
உரித்தெறிந்து தற்பரமாய்
தவமிருக்கத் தவிக்கிறது
தறி கெட்ட   மனம் .


         
        


No comments:

Post a Comment