vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, January 23, 2018

கல் - வைதீஸ்வரன்

கல்
வைதீஸ்வரன்


ஊமைக்குப் பேச்சு வந்தது போல்
இருட்டின் கூச்சல் இந்த விடியலில்---

எதுவும் நிகழாதது போல்
சூரியன் எழுந்து வருகிறான்
சகஜமாக
அங்கங்கே தேங்கி இருக்கும்
ரத்தக் குளத்தை அலட்சியப் படுத்தியவாறு.

ஆறு தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது
காடெங்கும் நாறிக் கிடக்கும்
பிணங்களின் இடைவெளிகளில்.

பூச்செடிகள் எழுந்து பூமிக்குப்
பூச்சூட்டிக் கொண்டிருக்கின்றறன.

விஷப்புகையும் வேட்டுகளும்
மண்டிப் பரவும் வெளிதாண்டி
நிலவும் நட்சத்திரங்களும்
நிர்த்தாட்சண்யமான ஜொலிப்புடன்..

கோடுகளற்ற பிரபஞ்சத்தின்
எல்லையற்ற ஆகர்ஷணத்தின்
எல்லை மீறாமல் சுழலுது
எண்ணற்ற கிரகங்கள்..

இயற்கையின் பிடிவாதமான பேரமைதி
மனிதனை எவ்விதமும் மனிதனாக்கவில்லை

விளக்கை எறிந்து விட்டுத்
தீயைப் பற்றிக் கொள்ளுகிறான்
விழியைப் பிடுங்கி விட்டு
வெறுப்பைப் பொருத்திக் கொள்ளுகிறான்

இந்த மனிதனை
எது எப்போது எவ்விதம்
பாதிக்கப் போகிறது?


No comments:

Post a Comment