vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, December 12, 2017

நந்தியின் கதை

      நந்தியின்  கதை
      வைதீஸ்வரன்
 (அம்ருதா டிசம்பர்  2017)

     வாழ்க்கையில் சம்பவங்கள்  அதிசயத்தக்க  ஒழுங்குடன்  நடை பெறுகிறதுஆனால் அதை  ஊகித்துக்  கொள்ள நமக்கு  அகப்பார்வை அவசியமாக  இருக்கிறது,

   ப்ரொபஸர் சுவாமிநாதனை  எனக்கு  எப்படி தெரிய வந்தது??.  அவர்  எனது இளங்கால  நண்பனின்  சம்மந்தியென்று  அறிகிறேன்அந்த  நண்பன் சொல்லுகிறான்..”அவனுடைய  சம்மந்தி என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு  இருக்கிறாராம்!!

  பிறகு  சுவாமிநாதன்  அவர்களை  நான் சந்திக்கிறேன்அவருடைய  தொல்லியல்  ஆர்வங்களை  பற்றி அறிகிறேன்அஜந்தா எல்லோரா  பல்லவர் கால  சிற்பங்கள்; பற்றிய அவருடைய  ஸ்வாரஸ்யமான வரலாற்றுத் தகவல்கள்ஆதிகாலத்திலி ருந்து  பரிணமித்து இன்று வரை வளர்ந்திருக்கும் மொழிகளின்  சரித்திரம்; ; காலங்காலமாக  மனித வாழ்க்கைக்கு செழுமை கூட்டிய  பல்வகையான பிரும்மாண்ட  மரங்கரளைப் பற்றிய  அரிய  உண்மைகள்  இது  போல இன்னும்   எத்தனையோ  மரபு விஷயங்களை   ஆர்வலர்களிடம்  பகிர்ந்து கொள்வதையே  தன் வாழ்க்கையின் முக்கியமான காரியமாக  செய்து கொண்டிருக்கிறார்  சுவாமிநாதன்அவரை அறிந்து கொண்ட்து எனக்கு பெருமிதமாக  ஒரு நற்பேறாக  எண்ணத் தோன்றுகிறது.

  அவர் என்னை  புதுக் கோட்டைக்கு  விருந்தினராக  அழைத்தார். அங்கே  அவர்  பல வருஷங்களாக  ஈடுபட்டுக் கொண்டிருக்கும்  மேற்சொன்ன விஷயங்களை  எனக்கு நேரிடையாக  காண்பிப்பதற்க்கும்’   புதுக் கோட்டையை  சுற்றிப் பரவிக் கிடக்கும்  தொன்மையான  கல்வெட்டுக்கள்  சிற்பங்கள்  கோவில்கள்  இவற்றை  காண்பிப்பதற்கும்  என்னை  அன்புடன்  அழைத்திருந்தார்.

      அங்கு  பரவிக்கிடந்த  சிதிலமான  பல  பல சிறிய  கோவில்கள் பல்லவர் காலத்துக்கு  முந்திய  முயற்சிகளென்றும்கோவில் கட்டும்  கலைஅறிவு தமிழ் நாட்டில் அங்கிருந்து தான்  தொடங்கி இருக்க்க்கூடுமென்றும்  சொன்னார். இதை  நேரில் பார்த்தது  எனக்கு ஒரு அரிய அனுபவம்.

   வண்ணங்கள்  உதிர்ந்து  ஓவியங்கள்  சேதமாகியும்  இன்னும் வியப்பை  உண்டாக்கும்  சித்தன்ன வாசல்  கற்கோயிலைக்  பார்த்தேன்நமது முன்னோடிகள்  எவ்வளவு பெரிய கலைஞர்கள் !! கற்பனை செய்து பார்க்க  பிரமிப்பாக  இருந்தது.

    நார்த்தா மலையில்  எனக்கு  இன்னொரு  முக்கியமான  அதிசயம் காத்திருந்ததுஅது  தான்  அந்த  நந்தி சிற்பம்.

   சிதிலமான  பழைய சிவன் கோவிலின்  முன் வாசலில்  ஒரு இளங்காளை அழகாக  அடக்கமாக  வாரியெடுத்துக் கொள்ளத் தூண்டும் குழந்தையைப்போல  வாலைமடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தது..

   ஒரு சின்ன கற்பாறை  இவ்வளவு  அற்புதமாக  சதைப்பற்றான உயிர்ப்புடன்  உணர்வுடன்  ஒரு காளையாக  எப்படி வடிவெடுத்ததுஅதை வடித்த  அந்த உன்னதக் கலைஞன்  கடவுளுக்கு நிகரானவன்  என்று சொல்ல வேண்டும்!

   நான்  அதை ஆசையுடன்  புகைப் படம்  எடுத்தேன்.

நான்  சென்னை  திரும்பிய பின் அந்தப் புகைப் படம்  வழக்கம் போல் என் புத்தக அலமாரியின்  ஒரு  மூலையில் அடக்கமாகி விட்ட்துமீண்டும்  சில  மாதங்கள்  கழிந்து  அலமாரியிலிருந்து ஒரு  கவிதைப் புத்தகம்  எடுக்க  முனைந்த போது  அந்த  காளைப் படம் தரையில்  விழுந்ததுபார்த்த  க்ஷ்ணத்தில்  அது எனக்குள்  இருந்த  ஓவியனைத்  தூண்டி விட்ட்துஅதைப் படமாக  வரைந்தால்  என்னஇல்லை...இப்போதே  வரைந்தால் என்னஇந்தக் கணமே அதை  செய்ய  வேண்டும்  என்று  ஆர்வம்  என்னை  விரட்டியது..

   அந்த படத்தை  முடிக்க எனக்கு  இரண்டு  மணி நேரம்  ஆனது..  என்ன  இருந்தாலும்  நான்  அந்த  மகா சிற்பியிடம்  போட்டி போட  முடியாது. என்  ஆர்வம்  தான் அதன்  குறை நிறைகளைத்  தாண்டி அந்த  பட்த்தில் ஒரு வித லக்ஷணத்துடன்  தெரிந்தது.  இது ஒரு  தொழில்  ஓவியனின்  காரியமல்ல.

   நான்  படத்தை  முடித்து  விட்டு  நிமிர்ந்த போது தான்  கவனித்தேன்....என்  அம்மா  என்  பின் புறம்  தடியை ஊன்றிக் கொண்டு  நின்று கொண்டிருந்தாள். எனக்கு மிகவும்  ஆச்சரியம்.

பல காலமாக  நான் அடிக்கடி படம் வரைவதுண்டு ..ஒரு முறை கூட  என்  அம்மா  அதைப் பொருட்படுத்தியதில்லை.  கவனித்து நின்ற்தில்லைஆனால்  இந்தக் காளையின் படம்.....
   “ என்ன  நந்திகேஸ்வர்ர்  படமா? “  அம்மா  மெதுவாகக் கேட்டாள்...

அம்மாவுக்கு  அப்போது  92 வயதுஅவ்வளவு நேரம் எனக்குப் பின்னால் தடியை  ஊன்றி நின்று  கொண்டிருந்ததே  அவளுக்கு  பெரிய அவஸ்தையாக  இருந்திருக்க வேண்டும்!.

  “ ஆமாம்...”  என்றேன்.

“  ரொம்ப  நன்றாக  இருக்கே!...எனக்கு இந்தப் படத்தை  தரயா? ..”

அம்மாவின்  அந்தப் பாசம்  நிறைந்த  குரலும்  குழைவும்  தொனியும்  கேட்ட போது நான்  நெகிழ்ந்து  போனேன்..

  “  ..தாராளமா...!  எடுத்துக் கோயேன்!...”

 “  இதை என் அறையிலே  கொண்டு  போயி வைக்கறியா?...”

 நான்  உடனே  அந்தப் படத்துக்கு  அழகான  சட்டம்  போட்டு  அம்மாவின்  அறையில்  கொண்டு போய் வைத்தேன்

        மறு  நாள்  காலை  விடிந்த போது  ஏதோ  வீடெல்லாம்  வாசனை. அம்மாவின்  அறைக்கு  சென்றேன், வாசனை  அங்கிருந்து தான்  வந்து.கொண்டிருந்தது.   ஊது வத்தி மணம் ..

  என்  நந்தி   படம்  அங்கே  பிறையில்  வைக்கப் பட்டு  மாலையுடன்  அழகாக காட்சி தந்து மொண்டிருந்த்துஅதற்கு முன் கற்பூர விளக்கு. பட்த்தை ஜ்வலிக்க செய்து கொண்டிருந்தது..  நந்தியின் நெற்றியில்  சந்தனம் குங்குமப் பொட்டு.....  பிறை முழுவதும் ஒரு சன்னிதானம் மாதிரி  ஆகி  விட்டது.

    ஒரு   கணத்தில்  எனக்குள் என்னென்னமோ  உணர்வுகள்  மின்னி மறைந்து போயின.

  “..  நேற்று நான்  வரைந்த  நந்தியின்  படமா....இது.?  அந்தப் படத்திற்கும்  இங்கே  காட்சி தரும்  நந்திக்கும்  ஏதோ ஒரு வித்யாசம்  இப்போது நிகழ்ந்து விட்டது.

இதற்கு இப்போது  இன்னொரு பரிமாணம்...ஒரு  புனிதத்தன்மை  வந்து விட்ட்துஇப்போது நான்  மட்டும் இதை பாத்யதை கொண்டாட முடியாத உயரத்தில்  இந்த  நந்தி  இப்போது உட்கார்ந்து கொண்டிருக்கிறது!..

  “  அம்மாவைப் பார்த்தேன்அம்மா  தலை குனிந்தபடி கையில்  ஒரு  பழைய புத்தகத்தை வைத்துக் கொண்டு  நந்திகேஸ்வர்ர்  அந்தாதியைப் படித்துக் கொண்டிருந்தார்

  நான்  படத்தை  சற்று நெருங்கிப் பார்க்க  நகர்ந்தேன்.

“  அதை  நீ  தொடப்படாது..  குளிக்காம  தொடப் படாதுகுளிச்சுட்டு வந்து  ரெண்டு  பூப் போடு!”  என்றாள்.

    நான்  என் படத்திலிருந்து  விலகிப்போனேன்.

               *******

  ஆனாலும்  அம்மாவால்  அதிக  நாட்கள்  அந்தப் படத்திற்கு  பூஜை செய்ய முடியவில்லைஅநேகமாக  ஒன்பது  மாதங்கள்  விடாமல்  செய்து வந்தாள்  வயது  93  ஆகி விட்டது.

  ஒரு  நாள்  இரவு  முழுவதும்  அவள் நெஞ்சு  மூச்சிரைத்துக் கொண்டிருந்த்து. மூச்சிரைப்பிலும் அவள் உதடுகள்  ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்ததுகாலையில் பார்த்தபோது அநேகமாக  அவள்  அமைதியாகிக் கொண்டு வந்தாள்.

  நான்  எழுப்பி உட்கார வைக்கப் பார்த்த போது   அவள்  கண்கள்  லேசாகத் திறந்து கொண்ட்து. கைகள் மெல்ல உயர்த்தி  விரல்களை  வெளியில் நீட்டி நீட்டிக் காட்டியதுஅவள்  காட்டிய  திசையைப் பார்த்தேன்.

  அங்கே  ஒரு ஸ்டூலில்  பூத்தட்டு  தட்டு நிறையப் பூக்களுடன்  இருந்ததுஅந்த்த் தட்டை அம்மாவின்  அருகில்  கொண்டு வந்து காட்டினேன்

  நந்தி படத்தின் பக்கம்  லேசாக  தலையைத்  திருப்பி  கைகளில் அகப்பட்ட பூக்களை எடுத்து அவள்  நந்தியைப் பார்த்து  வீசினாள்

   பூக்கள்  நந்திக்குப் பதிலாக  அவள்  காலடியிலேயே  விழுந்தன !!

அம்மா  கண்ணை மூடிக் கொண்டாள்...........

              *******

அந்த நந்தியின்  படம்  இப்போது  எங்கள்  குடும்ப சொத்தாக  ஆகி விட்டதுஅதை மூன்று  பிரதிகளாக  [ Reproductions}   ஆக்கி  என்  வாரிசுகள்  மூவருக்கும்  கொடுத்து  விட்டேன்.

    அந்தப் படத்தில்  நந்தியின்  நெற்றியின் மேல் என்  அம்மா  இட்ட  குங்கும சந்தனப் பொட்டு  வெகு நாட்கள் வரை  அழியாமல்  இருந்தது.

அழியாதது  ஞாபகங்கள்  மட்டும் தான்.....



1 comment:

  1. நந்திக்கு உயிர் கொடுத்தது வண்ணங்களா....எண்ணங்களா..

    ReplyDelete