vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, May 8, 2018

வைதீஸ்வரனின் மனக்குருவி - ஸிந்துஜா

வைதீஸ்வரனின்
மனக்குருவி
 குருவி எப்போதும் ஒரு மலர்ச்சியையும் உற்சாகத்தையும் 
தரும் பறவையாக இருக்கிறது.

அது கலைஞர்களைக்  கவர்ந்து  இழுத்தவண்ணமாக இருக்கிறது.  

சங்க இலக்கியத்திலிருந்து, பாரதியார், தி.ஜானகிராமன்
வரை.

ஜானகிராமனின்பெரும்பாலான நாவல்களில் அவர் 
வலியன் குருவி மீதுகொள்ளும் காதலைப் பார்த்து அதை 
ஜப்பானிலும் போய்த்தேடியிருந்திருப்பாரோ என்று நான் 
உதய சூரியனில் தேடிப்பார்த்திருக்கிறேன்.

அவ்வளவு வடிவும்  இயல்பும் கொண்ட பறவை அது. 

அது தன்பாட்டுக்கு அதன் வேலையை முனைந்து செய் கிறது, கடமையே கண்ணாயினார்  என்று.

வைக்கோல் கட்டிலிருந்து ஒவ்வொரு பிரியாக எடுத்து
வந்து கூடுகட்டுகிறது. 

ஒரு ஆயிரம் தடவையாவது பறந்துபறந்து போய்விட்டு
வந்தால்தான் இது சாத்தியம் என்றாலும் அயர்வதில்லை. 

குருவி வாய் என்ற அதன் புகழ்பெற்ற அங்கத்தை, கொள்ளை கொள்ளும்அழகுடன் உபயோகித்துத் தன்
குஞ்சுகளுக்கு ஊட்டி விடுகிறது. 

அது என்றாவது, எங்காவது யாருடனாவது சண்டை 
போட்டு ஆகாத்தியம் செய்ததாக நான் பார்த்ததில்லை, கேட்டதுமில்லை.

இந்த பௌதிக வடிவான குருவியின் அத்தனை ரம்மியங்
களையும் ஈர்ப்புகளையும் அதிகமாகத் தன்னுள் அடக்கிக்கொண்டு வலம்வருகின்றன _
வைதீஸ்வரனின் மனக்குருவிகள்

மனதில் ஆயிரம் இன்பக்ருவிகள்' எழுப்பும் கட்டற்ற 
மகிழ்ச்சி யை யார் தருகிறார்கள்? மாலையில் மயங்கி, 
இரவினில் முயங்கி, அதிகாலையில் கிழக்கே பறக்கும் 
பெருக்கல்குறிகள்தாம்! 

வைதீஸ்வரனின் கவிதை வரிகள் முதல் பார்வையில் 
சாதாரணத்தைத் தந்து வாசகனை ஏமாற்ற விரும்பு
கின்றன. புதையல் கிடைக்கவேண்டுமா? போய்த் தேடு என்று தேடலின் முக்கியத்துவத்தை அவரின் 
கவிதைகள் சொல்லாமல் சொல்லுகின்றன. 



நாற்பத்தி ஏழு வருஷங்களாகக் கவிதை எழுதிவரும் வைதீஸ்வரனின் பிடி
வாதத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இரைச்சல்களில் பிறந்து இரைச்சல்
களால் வளர்ந்து முடிசூடா மன்னர்களாகிவிட்ட  கவிஞர்களை இந்தப் பல 
பத்தாண்டுகளில் பார்த்தும், கேட்டும் சோர்வுற்ற ஒருவருக்கு வைதீஸ்வர
னின் கவிதைகள் தரும் அமைதியும், அவை நுணுக்கமாக எழுப்பும் சிந்தனை
களும் பரவசத்தைத் தருவதில் வியப்பொன்றும் இல்லை. 

மனக்குருவியில் திரும்பத்திரும்ப உங்களை நெகிழ்ச்சியுறச்செய்வது உள் வாங்கி ஒலிக்கும் இரைச்சலற்ற குரல்தான்.  கட்சி, ஜாதி, பணம், நம்ப ஊர் ஆள் என்ற எல்லாவித அரசியல்களிலும் ஊடுருவி "பெரிய  தனம்"
காட்டும் கவிகளை நாம் தினமும் பார்த்து ஒதுக்குகிறோம். ஆயாசம்  தரும் 
இரைச்சல்களின் முன்பு உண்மை சற்று ஒதுங்கி ஓரமாகத் தான் நிற்க 
வேண்டியிருக்கிறது. இரைச்சல்கள் ஓங்கி ஒலிப்பதால், இரைபவர்கள் 
ஜாம்பவான்கள் அல்லர்.

அமைதியும், குறுகத் தெறித்தலும் கொண்ட இக்கவிதையைக் கவனியுங்கள்:  

என் முகம் 
மலரச் செய்த சிறு காற்று
அந்த இலைச்சருகை
சாக்கடையில் தள்ளியதேன்?

"ஏன்?"  (பக்.101)

இந்த மிகச் சிறிய கவிதை ஒரு சாதாரண  கேள்விக்கு அப்பால்  மனித
மனப் பாங்கு, வாழ்வின் அபத்த சூழல், நியாயம் அநியாயம் போன்ற
வார்த்தைகளின்அர்த்தமிழந்த சப்த நிலை என்ற வெவ்வேறு நிலைப்பாடு
களை மீண்டும் வேறொரு தளத்தில் நின்று பார்க்க முடியும் வலிமையைக் 
கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். 

இலை சருகு ஆவதற்கு முன் இளமையான இலையாய் இருந்தபோது 
இதே காற்று அதன் மீது படர்ந்து அதனுடன் நேசத்தோடு கை குலுக்கி 
ஆடிப்பாடிய காலமும் இருந்தது. அப்போது காற்றை மயங்க வைத்துத் 
தன் பால்ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் இலைக்கும் இருந்தது. 
ஆனால் இப்போது உதறித் தள்ளப்பட்டுவிட்ட நிலைக்குக் காரணம் 
என்ன? 

வயதான மனிதர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.அவர்களை ஒதுக்கித்
தள்ளும் இளம்தலைமுறைக்காரர்கள்! இன்னொருவருக்குமுகமலர்ச்
சியை அதே சமயம் காற்று காட்டுவது போல்தான் மனிதனும் பக்கத்து 
வீட்டுக்காரனுக்கும்  எதிர் வீட்டுக்காரிக்கும் புன்னகை முகத்தைக் 
காட்டத்  தவறுதில்லை. ஆனால் வீட்டு முதியவர்களிடம் வீட்டிலும் 
சரி, வெளியிலும் சரி. ஒதுக்கல்கள்தான். ஒதுக்கப்படுதல்தான்.  
இந்த முதியவனும் ஒருகாலத்தில் இளையவனாகத் தான் நடமாடியிருப்
பான் என்கிற சிந்தனை கூட ஒதுக்கப்பட்டுவிடுகிறது. 

ஒவ்வொரு தினத்தின் சுயநலம் அல் லது குறுகிய பிற நலம் என்ற சூழலில் வாழுகிறோம். இலை சருகா னதற்குப் பின் அதைக் காற்று சாக்கடையில்
தள்ளுவதுதான் இருத்தலின் இயல்பு என்று கருதி மனிதர்களும் அதனைத்
தங்கள் வாழ்வினில்  ஏற்றுக்கொண்டுவிட்டார்களா என்ன  என்று கவிதை
நம் மைப் பார்த்து அதட்டுகிறது.   

இச் சூழலில் ' எங்கே அளவுகோல் ? '  பக்.184) என்கிற கவிதை இப் படிப் போகிறது:

"மௌனக் கடலின்
பூரண அமைதிக்குள் அது
அமுதாய்க் கிடக்கும் தருணத்தில்
அறிய முயன்றவன்
அளவுகோலற்று
அசைவுடன் கிடக்கிறான்
பிரமிப்புடன்."

இந்த அறியமுயலுவதும், அசைவுடன் இருப்பதும், பிரமித்திருப்பதும்
தான் உலக வாழ்வின் தேடலின் அளவுகோல்களாக இருக்கின்றனவா 
என்னும் கேள்வியைக் கவிதை எழுப்புகிறது. 

தொகுப்பு முழுவதிலும் இயற்கையின் குறும்புகளை ரசிக்கும் ஒரு மனதை
நம்மால் இனம்காண முடிகிறது. கிணற்றில் விழுந்த நிலவைத் தூக்கி
விடத் தவிக்கிறார். (குறிப்பு:  எழுதப்பட்ட காலத்திலேயே அறிவு சார்ந்த 
விமரிசனம் ஒன்றை உணர்வு சார்ந்த இக்கவிதை பெற்றது சி. மணியிட
மிருந்து. 

ந.பிச்சமூர்த்தியைப் பற்றிய கவிதையில் (பக்.404) வைதீஸ்வரன் கூறிக்
கொள்வதுபோல 'சகபயணிகளின் சலசலப்பை சிரிப்புகளால் சந்தித்தவ
ராக  வைத்தீஸ்வரனும் இருந்திருக்கிறார்.) 

கொடியில் மலரும் பட்டுப்பூச்சி காற்றில் பறக்கும் மலராகிறது. விடிவில்
நீண்டு நெளியும் நீலத்துணியாக சிற்றாறு தென்படுகிறது. மேக நிழல்
மிக மெல்லிய  நைலான்துணியாக நிலத்தில் புரளுகிறது. இரவு வானம்
அக்கினிக்குஞ்சைத் தன் கருப்புமுட்டைக்குள் வைத்து அடைகாக்கின்றது.
வானமென்னும் மேலாக்கு இழுத்து மூடமுடியாத முலைகளா சூரிய
சந்திரர்கள் என்று கேட்கிறார். 

நாம் வாழ்க்கை என்று வாழும் அம்சத்தின்  திரிசங்கு நிலையை 
"இக்கட்டு" என்னும் கவிதை (பக்.34) மிகக் குறைந்த வார்த்தைகளால் 
செதுக்கப்பட்ட  அழகுடன் பதிவிடுகிறது. 

‘நாளை மணமும் நேற்றின் நாற்றமுமாய் இனமறியாக் குழப்பத்தில்'  
நின்று தவிக்கும் மனித வாழ்க்கையின் இக்கட்டு ' கனவற்ற  வாழ்க்கைக்
குள் இரவற்ற பகலாக' ஒருவனைத் துன்புறுத்துவதிலிருந்து தப்பிக்க 
முடிவதில்லை. என்னதான் செய்வது? நேற்றைக்கும் நாளைக்கும் 
நடுவிலான ஊமைத் தூக்கத்தில் மயங்கிவிழுவதுதான் முடிவா?

ஆனால் வைதீஸ்வரன் அம்மாதிரி ஒரு முற்றுப்புள்ளியைப் போட்டு
விட்டுப் போகத் தயாராயில்லை என்று 'எப்போதாவது..'  என்னும் 
கவிதை (பக்.257) சிலிர்த்துக் கொண்டு முன்னால் வருகிறது. 

முதுகேறி என்னை
ஓயாமல் சவாரி செய்யும்
வாழ்க்கையை
ஒரு கணம் உதறி
சாவுக்கும் வாழ்வுக்கும்
இடையில்
சரித்திர ஒளியில்
விழித்துக் கிடக்கும் ஆசையில்
உள்ளம் தவம் இருக்கிறது.

அடேயப்பா! என்ன ஒரு திரிசங்கு வாழ்க்கை?' என்று சற்று  முன்பு  
மருகிய  மனம் இப்போது சரித்திரத்தில் இடம்பெறத்  தவமிருக்கத் தயார்
என்கிறது! 

"அவர் ஏன் சமூகத்தைப் பற்றிய அக்கறைகளுடன் கவிதைகள் எழுதுவ
தில்லை?" என்றொரு குறைக்குரல் அவ்வப்போது எழுகிறது. 
இத்தொகுப்பின் பதிப்பாளரும், கவிஞருமான லதா ராமகிருஷ்ணன் 
கடைசிப்பக்கப் பதிவில் பதில்தருகிறார்.

ஆனால் ஏன் வைதீஸ்வரனை இன்னொரு 'எக்ஸ்' ஆகப்பார்க்க
வேண்டும்? வைதீஸ்வரனை வைதீஸ்வரனாகப் பார்க்காமல், படிக்காமல் பேசுவது வைதீஸ்வரனுக்குச் செய்யும் துரோகம். 

தவிர, 'மைலாய் வீதி' யில்  (பக்.51 - 53)  நாம் காணும் வைதீஸ்வரன் குறைக்குரல்களுக் கும், தப்புக்கணக்குகளுக்கும் பதில் தருபவராக 
ருக்கிறார்.அமெரிக்காவின்மனிதத்தன்மையற்ற கொலை பாதகத்தைக் 
கண்டு வெதும்பும் ஒரு மனிதக் குரலை நாம் கேட்கிறோம். "ஏகாதிபத்திய 
அமெரிக்கா" என்று ரஷ்யக் கூச்சலுடன் எழுந்த பல 'சிவப்பு'  சவலைக் 
கவிதைகளைப் போன்றதல்ல இது: 

இன்று
தெருவிலே நடக்காதே திரு. மனிதா !
திரும்பி வா உள்ளே.
வீட்டின் இருட்டு மூலையில்
குருட்டுப் பறவையாய்ப் பதுங்கு.
இருதயத்தைப் பிடித்துக் கொள்.
இருபதாம் நூற்றாண்டு...

"கற்கால இருட்டுக்குள்
கண் புதைத்து
இருதயத்தைப் பிடித்துக் கொள்.
உயிர் வாழப் பழகிக் கொள்.
இருபதாம் நூற்றாண்டு....

நாகரிக எல்லையிலே
நரகங்கள் தெருக்களிலே !
வானிலில்லை.

சாகாத பிணங்கள்
செத்துவிட்ட பிணங்கண்டு
பொறாமையால்
துடித்து முனகும்.
மிருகங்கள் வளர்ப்பதற்கே
மனிதர்கள் மடிகிறார்கள்.

இக்குரலில் காணப்படும் விரக்தியும் பயமும் 'பத்திரிகை வரிகளில் 
மட்டும் எழுச்சியையும் வீரத்தையும்' காண்பிக்கும் குரல்களை' 
நிராகரித்து உண்மைநிலைமையைப் பறைசாற்றுகின்றன. 

இதழில் புன்னகையை வரவழைக்கும் சில கவிதைகளும் 
இத் தொகுப்பில் உண்டு: 

மூக்கைச் சுற்றி
ஓயாமல் பறக்கிறது கொசு.
ஓங்கி அடித்தேன்
ஆத்திரக் கைகளால்.
பிடிபட்டது
தப்பித்துக் கொள்ளத் தெரியாத
மூக்கு மட்டும்தான்.

- தண்டனை (பக்.411) 



கட்சிக் கொடிகள் காற்றில் பதற
'காக்கை குருவி எங்கள் ஜாதி...'
என ஓலமிட்டன ஒலிபெருக்கிகள்.
அலறிப் புடைத்துப் பறந்தன
அத்தனை காகங்களும்..

(பக் .321)  

       
'அறியாமை' என்னும் கவிதையில் 

காலந்தோறும்   ஒற்றைத் தென்னை
கண்ணாடி வானத்தை
முட்டி முட்டிப் பார்க்கிறது

என்கிறார். 

குழல் விளக்கு வெளிச்சத்தில் 'முட்டிமுட்டிப் பால் குடிக்கின்றன /
விட்டில்பூச்சிகள்" என்னும் பாலகுமாரனின் கவிதைவரிகள் 
ஞாபகத்துக்கு வருகின்றன. 

'மிடில் கிளாஸ்', (பக்.79), விடிவு (பக்.111), பொறுத்திரு (பக். 117),  
மிருகம் (பக்.364) ஆகிய கவிதைகள் காட்சி ரூபமாக நின்றுவிடுகின்
றன. காட்சிகள் கவிதைகள் அல்ல.

பக்கம் 456, பக்கம் 460 ஆகிய இரு பக்கங்களிலும் ஒரே கவிதை 
அச்சாகியுள்ளது. இப்படி இருமுறை அச்சடிப்பது தவறுதான் என்றா
லும், ஒரு சிறந்த  கவிதை என்பதால் விதிவிலக்கு அளித்துவிடலாம்  
என்று நினைத்து விட்டார்களா?                     

ஒரு கவிதைத் தொகுப்பைப் பிரசுரம் செய்வது என்பது வெகு உயர
மான மலை உச்சியிலிருந்து ஒரு ரோஜா இதழை எறிந்துவிட்டு  கீழே 
அது பூமியில் விழுந்த இடத்திலிருந்து சத்தம் வருகின்றதா என்று காத்தி
ருப்பதுபோல்தான் என்று எங்கோ படித்த ஞாபகம். அதை மறுபடியும் 
நினைவூட்டும் பிரசுரகர்த்தரான லதா ராமகிருஷ்ணனின் தைரியத்தை 
நான் பாராட்டுகிறேன். 
                                                 

மனக்குருவி
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்: வைதீஸ்வரன்
வெளியீடு:  அநாமிகா  ஆல்ஃ பபெட்ஸ்
விலை : ரூ. 450/-





No comments:

Post a Comment