vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, March 25, 2012

கவிஞர் கோ.கண்ணனின் படைப்புலகம் வைதீஸ்வரன்





கவிஞர் கோ.கண்ணனின் படைப்புலகம்

வைதீஸ்வரன்




ஒரு வளரும் கவிஞரின் கவிதைகளைப் பற்றி பேசவும், வாசிக்கவும் இங்கே ஒத்த நண்பர்கள் அனைவரும் கூடியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இந்த நாளில் கவிதைகளை இப்படித்தான் ஒருவருக்கொருவர் தெரிந்து         கொ ள்ள வேண்டும், ரசிக்க வேண்டும், பாராட்ட வேண்டும். எழுதும் கவிஞருக்கு ஏதோ ஒரு விதத்திலுள் மன உந்துதல் ஏற்படவும், அவர் ஈடுபட்டிருக்கும் இந்த இலக்கிய முயற்சிகளில் ஏதோ ஓர் அர்த்தத்தை உணர்ந்துகொள்ளும் வகையிலும் இப்படிப்பட்ட எளிய சந்திப்பு உபயோகமாக அமையும்.

இனிமேல் அரசாங்க நூலகங்களில் கவிதைப்புத்தகங்கள் கிடைக்கப் போவதில்லை. கவிதையில் ஆர்வமுள்ள எவ்வளவோ பாமரர்களுக்குஒரு உபயோகமான இலக்கிய வாசிப்பு இனிமேல் கிடைக்கப் போவதில்லை. கவிதை இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தால் நீங்கள் காசு கொடுத்து வாங்கும் வாழ்க்கைத்தரம் உள்ளவராக இருந்தாக வேண்டும். அல்லது, இரவல் புத்தகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதற்கு ஒரு படி மேலாக, இலக்கிய ஆர்வமுள்ள, இங்கு கூடியிருக்கும் பார்வையற்ற இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்ல இலக்கியப் புத்தகங்கள் பிரெய்லி எழுத்தில் கிடைக்கும் வழிவகைகள் இன்னும் துரிதமாக ஏற்படவில்லை. அதன் காரணமாக, இத்தகையோர் தமது நல்ல நண்பர் களின் உதவியையும், அவகாசத்தையும் வெகுவாக நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

இவ்வளவு சூழ்நிலைத் தடங்கல்களையும் மீறி, தன் உயிர் சக்தியின் வலிமையால், அறிவுத்தேடலின் தீராத முயற்சியால் நமது தோழர் கோ.கண்ணன் போன்றவர்கள் ஒரு படைப்பாளியாக, கவிஞராக இன்று வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது நமக்கு பெருமிதத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்கிறது.

கவிஞர் கண்ணனுடைய இலக்கிய முயற்சிகள் மேலும் மேலும் வளர வேண்டும்.உள்ளப் பார்வையும், உலகப் பார்வையும் மேலும் மேலும் விசாலமாகி ¡வரிடமிருந்து இன்னும் பல நல்ல கவிதைகள் நமக்குக் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவருக்கு எனது நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'மழைக்குடை நாட்கள்' என்ற அவருடைய தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சில தெளிவான அம்சங்களை எனக்குத் தெரிவிக்கிறன. நவீன கவிதைகள் எவ்வெவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற உள்ளுணர்வு அவருக்கு இருக்கிறது. வாழ்க்கையைப் பார்க்கும் விதத்திலும், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கும் ஒரு இயல்பான நேரடித் தன்மை வரவேற்கத்தக்க அம்சம். அதைவிட முக்கியமாக, எந்தவித சுய பரிதாபமோ, சுயநலமான ஆத்திரமோ, தன்னை கவனிக்கச் சொல்லும் புலம்பலோ அற்ற கவிதைகள் இவரை ஒரு 'விடுபட்ட நடுநிலை கொண்ட சிந்தனையாளராய்' எடுத்துக்காட்டுகின்றன.

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று இது :-


ஆயுதக் கிடங்குகள்

நம் காலத்து ஆயுதங்கள் நவீனமானவை
நம்மைப் போலவே
அவை அணு ஹைட்ரஜன் குண்டுகளைப் போலவே
அதி வலிமையோடு தாக்கக் கூடியவை
புன்னகை, மென்சிரிப்பு, தோழமை, தழுவல்
நேசக் கைகுலுக்கல், இனக்கவர்ச்சி
பரிமாறப்படும் விருந்து
பரிமாறிக் கொள்ள முடியா மௌனம்
என
எல்லா மனித செயல்பாட்டுக்குள்ளும்
தீமை தரும் நுண்கிருமி என
இன்று மறைந்துள்ள ஆயுதங்கள்..

நவீன மனிதனை
ஆயுதங்கள் நிழலாய் பற்றித் தொடர்கின்றன.
இன்று ஒவ்வொரு மனிதனும் காட்சியளிக்கிறான்
ஓர் ஆயுதக்கிடங்காய்.

_இந்தக் கவிதைக்கு அதிக விளக்கம் தேவையில்லை. எளிமையால் நேரடியாய் இன்று மனிதப் பண்பும், மனித உடலின் உபயோகமும் எவ்வளவு அபாயமான திருப்பத்துக்குப் போய்க் கொண்டிருக்கின்றன என்பதை கவிதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இதையே நீட்டித்துப் பார்த்தால், ‘மனிதன் மீண்டும் மிருகங்களாய் மாறினால் கூட அங்கே உயிர்சேதங்களும் வன்முறைகளும் இப்படியிருக்காது. மனிதன் தன்னை ஆயுதமாக மாற்றிக் கொள்ள நினைத்த இன்றைய விபரீத காலகட்டம் நம்மை எப்படியெல்லாம் அழிக்கக் கூடியது’ என்று பல அதிர்வலைகளை இந்தக் கவிதைகள் மனதில் உருவாக்க வல்லவை.

ஒரு கவிதை எழுதப்பட்டுவிட்ட பிறகு அதற்கு ஒரு பொதுவான அடையாளம் ஏற்பட்டுவிடுகிறது. அக்கவிதையின் அடையாளத்தை வேறு கவிதைகளிலும் கண்டுணர முடியும். அவ்வாறே 'மழைக்குடை நாட்கள்' என்ற தொகுப்பில் இடம்பெறும் நேர்காணலில் 'நவீன தமிழ்க்கவிதையில் இருண்மை நிரம்பியிருக்கிறது என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்தென்ன?' என் கேள்விக்கு கவிஞர் கோ.கண்ணன் பின்வருமாறு பதில் தருகிறார்:

"இருண்மை என்ற வார்த்தையை கவிதைக்குப் பயன்படுத்துவதே தவறு. சங்கக் கவிதைகளிலும், சித்தர் பாடல்களிலும் கூட பூடகத்தன்மை உண்டுதானே.லா.ச.ரா. முதலில் புரியவில்லை. அதனால் பிடிக்க வில்லை. இப்போதும் முழுவதும் புரிந்ததென்று சொல்லிவிட முடியாது. ஆனால், பிடிக்கிறது. காரணம், இப்போது நான் வளர்ந்து விட்டேன்" என்று கண்ணன் கூறுகிறார்.

இதை வாசித்தபோது என்னுடைய கவிதை ஒன்றி யதேச்சையாக ஞாபகத்திற்கு வந்தது. "விசாரங்கள்" என்று தலைப்பிட்ட கவிதை.

புரியாமலிருந்தாலும், சந்தோஷமாக நாம் உணருவதும், வருத்தம் நமக்குள் நிறைவதும், விம்மி விம்மி அழவேண்டும் போல் தோன்றுவதுமாக சில எதிர்பாராத கணங்கள் நமக்குள் நிகழ்கின்றன. கவிதையின் கணங்கள் அவை தான் என்று நான் நினைக்கிறேன். மொழியின் சாமர்த்தியங்களை, மொழியின் அர்த்தங்களைக் கடந்த ஒரு மௌன நிலை நமக்கு லபிக்கிறது.

ஓர் அருமையான வயலின் இசை, வீணையின் நாதங்கள் தேர்ந்த கலைஞனால் மீட்டப்படும்போது நமக்குக் கண்களில் நீர் துளிர்க்கிறது. ஏன் என்று அதை ஆராய முடியாது; ஆராயவும் கூடாது. "கண் ணீர்த்துளி வர உள்ளுருக்குதல்" என்று ரத்தினச்சுருக்கமாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் பாரதியார்.

அதேபோல், நிறங்களும் ஒரு சூழலின் உணர்வைத் தீர்மானிக்கின்றன. உஷ்ணமான புறச்சூழல்களுக்கிடையில் குளிர்ச்சியான மென்பச்சை நீலம் இளமஞ்சள் உள்ள உட்புறங்கள் அந்த உஷ்ணத்தை மென்மையாக்கிக் காட்டுவனவாய் அமையும்.

கண்ணனின் "ஓசைகளின் நிறமாலை"யை வாசிக்கும்போது எனக்கு மேற்கண்டவாறு சிந்திக்கத் தோன்றுகிறது. இதையே நீட்டித்துப் பார்த்தால் நிறங்கள் நம் உள்ள உணர்வுகளைத் தீர்மானிக்கும்போது, நாம் ஏன் நிறங்களைத் திர்மானிக்கக் கூடாது?' என்று தோன்றுகிறது.

எப்போதுமே நாம் வானத்தை நீலவெளியாக, எரிக்கும் மஞ்சளாகப் பார்த்துப் பழகிவிட்டோம். இதே வானம் விண் ஊர்தியில் பயணித்து பூமிக்கு வெகு உயரமாகச் சென்றுவிட்டால், கன்னங்கரேலென்று அல்லது கடும் பச்சையாக சில சமயம் இருக்கும் என்று படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.

இந்தத் தொடர்பில் என் கவிதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது. 'நிறங்கள்" என்ற தலைப்பில் நான் எழுதியது.

பொதுவாகவே, கவிதை என்பது மனிதனின் சுதந்திரவேட்கையின் அத்தாட்சிகள் தான். அந்த சுதந்திரத்தின் உன்னத அனுபவம் தான் கவிதை எழுதும் ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

நாம் எழுதுகின்ற ஒவ்வொரு நல்ல கவிதையும் நம் முழுமையான இயல்புடன் நம் மனமும் உலகமும் தனைமறந்து ஒன்றிப் பிணைந்த தருணங்கள் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட, இதைத்தான் பாலுறவின் நுண்மையான தருணங்களுக்கு ஒப்பிடுகிறார்கள்.

மனப்பக்குவத்தைப் பொறுத்தும், அறிவுச் சேகரிப்பைப் பொறுத்தும், இயல்பான சில பிறவிஞாபகங்களைப் பொறுத்தும் நம்முடைய கவிதையினுடைய வெளிப்பாடும், அதன் ஆழமும், பொருட்செறிவும், அடர்த்தியும் அமைகின்றன என்று நினைக்கிறேன். கவிஞர்கள் ஞானிகளாகிவிட முடியாது. அவர்களுக்குக் கோபதாபங்கள், விருப்பு-வெறுப்புகள், ஆசை-நிராசைகள் இருப்பது தான் இயல்பு. அத்தகைய குணாம்சங்களை எந்த அளவு ஒரு பொதுவான மனிதகுலத்தின் அக்கறைக்காக உன்னதப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில் தான் படைப்புக்கு இரு நியாயமும், பெருமிதமும் கூடுகிறது.

அதிகமாக இந்த விஷயத்தை சிக்கல் பிரித்துக் கொள்ளாமல் பார்த்தால், ஒரு கவிஞன் ஒரு சுரணையுள்ள, பொறுப்புள்ள மனிதனாக இந்த வாழ்க்கையையும், ஜீவராசிகளையும் பார்க்க வேன்டும் என்று நினைக்கிறேன். 

கோ.கண்ணன் அவருடைய நேர்காணலில் ' மனசு ரொம்ப துக்கமாகக் குழம்பியிருக்கும் நிலையில், இனமறியாமல் இருக்கும் நிலையில் அவருக்குக் கவிதை எழுதத் தோன்றுகிறது என்று அழகாகக் கூறுகிறார்.

கலைகளின் நுண்மையான உயர்வே அது தான். தெருவில் ஒரு நாய் அடிபட்டு ரத்தம் சொட்ட சாவின் விளிம்பில் துடித்துக் கொண்டிருக்கும் போது நமக்கு உதவியற்ற இனம்புரியாத துக்கம் நெஞ்சை அடைத்துக்கொள்கிறது.

அந்த துக்கத்திற்கு வடிகாலாய் நாம் கவிதை எழுதத் தூண்டப்படுகிறோம். எழுதிய கவிதையைப் படித்துப்பார்க்கும்போது நமக்கு ஏனோ சந்தோஷமாக இருக்கிறதல்லவா? 'நாய்மை' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை என் நினைவில் மீள்கிறது.

ஒரு நல்ல கவிதையை வாசிக்கும்போது கிடைக்கக் கூடியன யாவை, கிடைக்க வேண்டியன யாவை என்று எனக்குள் எப்போதும் சில அம்சங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறேன். இந்த அம்சங்கள் முதலும் முடிவுமான கவிதைக் கோட்பாடுகள் அல்ல. இவை எனக்கு மட்டுமாய் நான் வரித்துக் கொண்ட சில விதிகள் மட்டுமே. 



0

No comments:

Post a Comment