வெளி’ ரங்கராஜன்
இன்றைய
பின் – நவீன
காலகட்டத்தில் புனைவு எழுத்துக்களுக்கும் அ-புனைவு எழுத்துக்களுக்கும் இடையிலுள்ள
இடைவெளிகள் மறைந்து அ-புனைவு எழுத்துக்களின் இலக்கியப் பரிமாணம் அதிகமாக
உணரப்படும் நிலை உள்ளது. வாழ்வுக்கும், புனைவுக்கும்
இடைப்பட்ட கோடுகள் விலக்கப்பட்டுக்கொண்டே வரும்போது புனைவு குறித்த பிரமைகள்
நீங்கி இரண்டும் இணையாகப் பயணிக்கும் நிலைகள் உருவாவதோடு ஒரு செறிவான படைப்பு
முயற்சி வடிவ நிர்ணயங்களைக் கடந்து வாழ்வை அண்மைப்படுத்தும் சாத்தியங்களைக்
கொண்டிருக்கிறது. அவ்வகையில் கவிஞராக அறியப்பட்டுள்ள வைதீஸ்வரனின் இக்கட்டுரைகள்
கவிதைக்கும், புனைவுக்கும் வாழ்வுக்கும் இடையே
ஊடாடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற மெல்லிய பயணங்களை கவனப்படுத்துகின்றன.
கவிதை மனநிலை என்பது இறுக்கமான கணங்களில் மட்டுமல்ல, எண்ணற்ற
சிறுசிறு நெகிழ்வுகளிலும் வெளிப்படக் காத்திருக்கிறது என்பது தொகுப்பின் பல இடங்களில்
புலப்படுகிறது. இயற்கையுடனான உறவிலும், மனிதர்களுடனான
உறவுகளிலும் எண்ணற்ற கவிதைக்கணங்களை வாழ்க்கைப்பயணம் வழங்கினாலும் ஒரு கவிமனம்
அவைகளைத் ஹ்டொடர்ந்து சேகரித்தும், பரிசீலித்தும் தனகான மதிப்பீடுகளைப்
புதுப்பித்துக் கொள்கிறது. அதுதான் இரைந்துகொண்டிருக்கும் கடலைப் பார்த்து ஆறுதலாக
சில வார்த்தைகள் சொல்லத் தூண்டுகிறது. பாலைவனத்தின் ரகசியங்களையும், ஒட்டகங்கள்
எழுப்பும் சங்கேதமான உலோக ஒலிகளையும் பகிர்ந்துகொள்ளத் தூண்டுகிறது.
பட்டுப்பூச்சியை ஏன் ஒரு பெண்ணுடனேயே ஒப்பிடவேண்டும் என்ற சிறுபெண்ணின்
விழிப்புணர்வுக் ‘கேள்வி’ பெண்ணை
ஏன் மென்மையானவளாகவே பார்க்கவேண்டும் என்ற பொறியைத் தூண்டுகிறது. இன்னும்
மலையேறும் குதிரையின் இயந்திர ரீதியான இயக்கம் தாண்டிய விடுதலை உணர்வு, மரங்கள்
மீதான பற்று, மறையப்போகும் அலைஞனின் ஆழ்ந்த
பார்வைகள் பற்றிய பரிவு, இறந்துபோன பறவை எழுப்பும் நினைவுகள், கொடூர
யதார்த்தங்கள் பற்ரிய மிகை கற்பனை உருவாக்கும் பிம்பங்கள் ஆகிஅய்வை கட்டுரை
மொழியிலேயே மிகுந்த புனைவுத்தன்மை கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
_வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயில் ஆச்சுதடி
_என்ற வள்ளலாரின் பாடலில் படிமங்களும், புதிர்த்தன்மையும்
மாறி மாறி வாழ்வைக் கலைத்துப்போடும் குணம் கொண்டிருப்பதை உணரும் ஒரு நவீன கவி
மனத்தையும், கட்டமைப்பையு அடையாளங்கண்டு
_ தோட்டத்தை விடிந்து பார்த்தால்
சுகமாய் கிடக்குதொரு தேங்காய்
நேற்று தூக்கத்தில் என்னைக் கலைத்த
சத்தம்-
என மறுதலிப்பு செய்கிறது. இவ்வாறே கவிஞர் சி.மணியின்
கவிதைகளில் வெளிப்படும் உடல் குறித்த இடைவிடாத பிரக்ஞையும், எஸ்ரா
பவுண்ட் பழைய கவிதைகளின் வர்ணனை மரபை விட்டு கருப்பொருளுக்கு இயைந்த படிமக்
காட்சியாக மாற்றும் நிலையில் புதுக்கவிதை இயக்கம் வீச்சு கொள்வதையும் விவரிப்பது
ஒரு செறிவான இலக்கியப் படைப்பின் தன்மை கொள்கிறது. இன்னும் வ.ரா.வின்
சீர்திருத்தக் கருத்துகளின் வரவேற்பும், கைத்தட்டல்
என்பது பார்வையாளர் பங்கேற்பை பதிவு செய்வதை விவரிக்கும் ‘உம்பர்ட்டோ
ஈக்கோ’ வின் கட்டுரைத் தழுவலும், பாகற்காயை
முழுங்கி தாய், குழந்தை பெற்ற சுயசரிதை போன்ற
விவரிப்பும் புனைவின் சுவையை அளிக்கின்றன. எழுத்தாளப் பிரதியைத் தொலைத்ததனால்
உருவாகும் விபரீதங்கள் காலங்காலமாக வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டிருப்பதைச்
சொல்லும்போது அந்த இழப்பின் அதீதங்கள் இலக்கியப் பரிமாணம் கொள்கின்றன. பறவையின் நினைவு
மற்றும் கல்லை எறிந்தவன் போன்ற சம்பவ விவரிப்புகள் கூட சிறுகதையின் தன்மை
கொள்கின்றன.
இன்று ‘கொலாஜ்’ தன்மையிலான
எழுத்துகள் கூடுதலான நெகிழ்வும், சிதறல்களும் கொண்டு அதிக
அழுத்தங்களுடன் இலக்கியப் பரிமாணம் கொள்ளும் சாத்தியங்கள் கொண்டிருப்பதை
வைதீஸ்வரனின் இத்தொகுப்பு கவனப்படுத்துகிறது.
Velirangarajan2003@yahoo.co.in
No comments:
Post a Comment