சிறுகதை:
நீருக்குள் நிறங்கள்
வைதீஸ்வரன்
அறுபது வருஷங்களுக்கு முன் நான் படித்த கிராமத்துப் பள்ளிக் கூடத்தைப்
பற்றி நினைத்துப்பார்க்கும்போது உடனே
ஞாபகத்துக்கு வருவது அப்போது அங்கே நான் தண்ணீருக்காக அவஸ்தைப் பட்டது தான்.
ஒரு சின்ன கூரைக் கொட்டகையில் தான் எங்கள் பள்ளிக்கூடம் ஆரம்பித்தது. ஆரம்பித்தபோது தண்ணீர் விஷயத்தைப் பற்றி
யாரும் பெரிதாக நினைத்துப் பார்க்கவில்லை.
அப்போது அதை சுற்றி ஒரு ஓடை ஓடிக்கொண்டிருந்ததால் தண்ணீருக்காக பிரத்யேகமாக அக்கறை
எடுத்துக்கொள்ள யாருக்கும் அவசியமிருக்கவில்லை.அநேகமாகஎல்லா மாதங்களிலும் அதில்தண்ணீர்ஓடிக்கொண்டிருக்கும்.இடைவேளையில் பள்ளிக்கூடம் விட்டவுடன் மத்தியானம் நாங்கள் கொண்டுவந்த சோற்றை சாப்பிட்டுவிட்டு ஓடைப் பக்கம் ஓடுவோம். அங்கே கைகழுவி
கால்களைக் கழுவிக் கொண்டு தண்ணீரைக் குடித்து விட்டு வருவோம்..
அந்த தண்ணீர் மாணவர்களின் ஆரோக்கியத்தைக்
கெடுத்துவிடுமோ என்று யாரும் சந்தேகமோ கவலையோ பட்டதில்லை...ஓடையும் அந்த
நம்பிக் கைக்கு துரோகம் செய்யாமல் இருந்தது.
தவிர அந்த ஓடை எங்களுக்கு அவ்வப்போது ஒரு நல்ல
பொழுது போக்காகவும் இருந்தது. முக்கியமாக மழை பெய்து ஓய்ந்தவுடன் அந்த ஓடைத் தண்ணீரில் சின்ன
சின்ன மீன்கள் துள்ளிக் கொண்டு ஓடி வரும்.. அதன் ஓட்டத்தை திசை திருப்பி
விடுவதற்காக சில பையன்கள் மணலைக் குறுக்கே போட்டு
மேடாக்கி விடுவார்கள்.
வேகமாக நீந்தி வரும் மீன்கள் திடீரென்று மேட்டைக் கண்டவுடன் சற்றுமேலே துள்ளி
எழும்பி திசை மாறிப் பாயும். பார்ப்பதற்கு ஒரு பூவாணம் போல
இருக்கும் சில பையன்கள் மேல் எழும்பும் துளித் துளி மீன்களை கையால் தடுத்துப் பிடிக்க முயற்சி
செய்வார்கள். மணி அடிக்கும்வரை ஓடைப் பக்கம் எங்களுக்கு ஓயாத விளையாட் டாக இருக்கும். அந்த ஓடை முழுவதுமாக வற்றி வறண்டுபோய் விட்டது
நான் மூன்றாம் வகுப்பு முடிந்து நான்காவதுக்கு வந்த போது ஓடைநீர் நூலாக தேய்ந்து குறுகிவிட்டது. நடுவில் யாரோ செல்வாக்குள்ளவர்கள் அந்த ஓடையை தங்கள் வயல் பக்கம் திருப்பிக் கொண்டிருப் பதாக சொன்னார்கள்.
இடைவேளையில் கை அலம்பவும் தண்ணீர் குடிக்கவும் தட்டையாக கலங்கலாக ஓடிக்கொண்டிருந்த ஓடைத் தண்ணீரை உபயோகிக்க முடியவில்லை.
நாளுக்கு நாள் அதுவும் வறண்டு போய் உச்சிவெய்யிலில் ஓடை சுடுமணலை விரித்துக்கொண்டு வானத்தை வெறித்துப்
பார்த்துக்கொண்டு கிடந்தது.
நாங்கள் தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தோம்.
ஹெட்மாஸ்டரும் மற்ற ஆசிரியர்களும் கையைக் கன்னத்தில் சொறிந்து யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
பள்ளிக்கூடத்தின் பின்பக்க வேலிக்குப்பின்னால் ஒரு தோட்டக்காரன் குடிசை யும் கிணறுமாக குடியிருந்தான். அவன் தினமும் வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டி
ருந்தான். எங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வது அவனுக்கு இப்போது ஒரு உப
தொழிலாக அமைந்தது.
ஐந்து வகுப்புகளுக்கும் ஐந்து பானை வைக்கப் பட்ட்து. தோட்டக்காரன் தினமும்
காலையில் ஐந்து பானையிலும் தண்ணீர் நிறைத்து விட்டுப் போக வேண்டும். தண்ணீர் மொள்ள ஒரு கோப்பை வைக்கப்பட்ட்து....
உச்சி வேளையில் நாங்கள் தண்ணீருக்கு அலையாமல் தாகம்
தணித்துக் கொள்ள இந்த ஏற்பாடு சௌகரியமாகவே இருந்தது. ஆனால்_
சில நாட்கள் தான்......
இந்த வசதியை ஒழுங்கமைதியாக பயன்படுத்திக் கொள்ளும் பக்குவமோ முதிர்ச்சியோ பையன்களுக்கு இருக்கவில்லை. தண்ணீரை மொள்ளுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது
பானை மேல் வைக்கப் பட்டிருந்த கோப்பை அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருந்த்து. அல்லது இடம் மாறி ஏதாவது பெஞ்சிக்கு அடியில் பார்வைக்கு ஏமாற்றும் இடுக்குகளில் உருண்டு பதுங்கிக்கொண்டிருந்தது.
ஒவ்வொரு தடவையும் அதைத் தேடி எடுப்பதற்கு பையன்களுக்கு
எப்போதுமே பொறுப்பும் அக்கறையும் இல்லை... சோற்றுப் பாத்திரத்தை அப்படியே பானைக் குள் போட்டு
மொள்ள ஆரம்பித்தார்கள். சோற்றுக் கைகளை அப்படியே பானைக் குள்
முக்கினார்கள்
தண்ணீர் ஒரு கலப்படமான அமில நாற்றத்துடன் பானைக்குள் ஏதோ கதம்ப மான கழிவு நீரை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தது.
இந்த மாதிரி தருணங்களில் தோட்டக்காரனும் ஊருக்குப் போய்விடுவான் என்கிற அசந்தர்ப்பத்தை ஹெட்மாஸ்டர் எதிர்பார்க்கவில்லை..
இந்த ஏற்பாட்டை உடனடியாக மாற்ற வேண்டியதாக இருந்தது
பிறகு “தண்ணி—மாஸ்டர் “ என்று ஒருவனை ஏற்பாடு செய்தார்கள். .
அவன் குடுமி வைத்துக்கொண்டு நெற்றியில் திருமண் பூசிக்கொண்டு
ஒல்லியாக இருப்பான்.
தினந்தோறும் வழக்கமாக அவனைப் பார்ப்பவர் களுக்கு எப்போதுமே அவன்
தரித்துக்கொண்டிருக்கும் ஒரே அழுக்கு வேட்டியும் துண்டும் அருவருப்பாக இருக்காது. . . அவன் வேலை தினமும் பானைகளைக் கழுவித் தோட்டக் கிணற்றிலிருந்து
தண்ணீர் ரொப்பி வைப்பது.. தண்ணீர் குவளைகளை இடம் பெயர்ந்து போகாமல்
நாய்ச்சங்கிலி போட்டு அருகில் கட்டித் தொங்க விடுவது.
இந்த ஏற்பாடு ஓரளவு நிரந்தரமாகவே இருந்ததென்று சொல்லலாம்
எங்கள் இடை வேளைகள் நாக்குலர்ந்து போகாமல்
சௌகரியமாகவே வகுப்புகளை கவனிக்க முடிந்தது. . ஹெட்மாஸ்டர் இந்த ஏற்பாட்டிற்குப் பிறகு
ரொம்பவுமே தன்னை மெச்சிக்கொண்டார்.. வகுப்பில் சில பையன் கள் “ “அந்தக் குடுமிப் பையன் வேலையில்லாமல் வீட்டில் இருந்து
கொண்டிருக்கிற ஹெட்மாஸ்டருடைய மச்சினன்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
ஆனாலும் தண்ணீர் பிரச்னை சரியாகி விட்டது. அல்லது சரியானது போல் சில வாரங்கள் கழிந்தது...
ஒரு நாள் சரித்திரப்பாடத்தில் பாபர் யுத்தம் செய்து கொண்டிருந்தபோது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சோமு மயக்கம் போட்டு சாய்ந்து விட்டான்.
வாத்தியார் பதறிப் போனார். பையன்கள் அவனைத் தூக்கி உட்கார வைத்தார்கள்.
அவன் வாயோரம் லேசாக நுரை கசிந்துகொண்டிருந்தது. வாத்தியார் பயந்துபோய் முகத்தில் தண்ணீர் தெளிப்பதற்காக பானையிலிருந்து தண்ணீர் மொண்டார். கோப்பையில் எடுத்த தண்ணீரில் ஒரு செத்த அரணை மிதந்துகொண்டிருந்தது. அந்தத் தண்ணீரைத் தான் சோமு காலையில் குடித்திருக்கிறான்
உடனே ஹெட்மாஸ்டர் ஓடிவந்து பக்கத்தில் இருந்த சித்த வைத்தியரிடம் சோமுவைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் அவனை வாந்தி எடுக்க வைத்து நல்ல வேளையாக மீண்டும் அவனைக் கண் முழிக்க வைத்தார்.
கேள்விப்பட்ட சோமுவின் அப்பாவும் மற்ற எல்லா அப்பாக்களும் ஹெட்மாஸ்டரை ஆனமட்டும் திட்டித் தீர்த்து விட்டு போலீஸுக்கு போவதாக
மிரட்டினார்கள். ஹெட்மாஸ்டர் அத்தனை பேர் கால்களிலும் விழுந்து இனிமேல் இந்த மாதிரி தவறுகள் நேர்ந்து விடாமல் தண்ணீருக்கு நல்ல ஏற்பாடு செய்வதாக வாக்களித் துக் கை கூப்பினார்.
தண்ணீருக்கென்று தனியாக ஒரு அறையைக் கட்டி அதில் தண்ணீர் கொட்டிவைக்க சுத்தமான மூடி போட்ட பாத்திரத்தை ‘ துணி போட்டு மூடி வைக்கும்படி செய்து அந்தக் குடுமிப் பையனை மேலும் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும்படி மிரட்டி வைத்து ஒரு நாளைக்கு மூன்று தடவை ஹெட்மாஸ்டர் போய் அதை கவனித்துக் கொண்டு வர ஆரம்பித்தார்.
இருந்தாலும் பெற்றோர்கள் இந்த ஏற்பாட்டை முழுமையாக நம்பவில்லை.
பல பெற்றோர்கள் தன் பையன்களின் சோற்று மூட்டையோடு தோளில் தண்ணி பாட்டிலையும் சேர்த்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
அப்படித் தான் எனக்கும் வீட்டிலிருந்து தண்ணீர் பாட்டிலை என் விருப்பமில் லாமல் தோளில் மாட்டி விட்டார்கள்.. முரண்டு பிடிக்கமுடியாத இந்த கட்டாயச் சுமையாலோ எதனாலோ நான் அடிக்கடி தண்ணீர் பாட்டிலை
எடுத்துக்கொண்டு போக மறந்து விடுவேன். அந்த சமயங்களில் குடுமி மாமா விடம் கூட்டத்தோடு கூட்டமாக அல்லாடி தண்ணீர் வாங்கிக் குடிப்பது ஒரு போராட்டமாகத் தான் இருக்கும். ஒரு வாய்த் தண்ணீருக்காக எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அலைமோதுவார்கள். பல சமயங்களில் நான் தண்ணீர் குடிக்காமலேயே இருக்க நேரிடும்... வெய்யில் மாதங்களில் இது ரொம்பக் கொடுமையாகவே இருக்கும்..
சந்தானம்... சேஷன்... கோபாலனையெல்லாம் சாப்பிடும் போது தண்ணீர் கேட்டுப்பார்த்தேன்.. “எனக்கே பத்தலைடா!” என்று முழு பாட்டிலையும் அவர்கள் அவசரம் அவசரமாகக் குடித்து விடுவார்கள்.
அப்போது தான் எங்கள் வாத்தியார் நடத்திய மனக்கணக்கு வகுப்பு என் காட்டில் மழை பெய்ய வைத்தது.
“
ஒம்பதோட நாலைக் கூட்டி மூணைக் கழிச்சா எவ்வளவு? “ வாத்தியார்
எல்லோரையும் பார்த்துக் கேட்பார். மனதுக்குள் கூட்டிக் கழித்து விடையை
ஸ்லேட்டில் எழுதித் தயாராக இருக்க வேண்டும் வாத்தியார் ஏதாவது ஒரு பெஞ்சியைப் பார்த்து ஒரு மாணவனை நோக்கி விரல் சுட்டி விடை சொல்லச் சொல்லுவார். பையன் சொல்லுகிற விடைசரியாக இருந்தால் முதுகில் ஒரு ஷொட்டு. தப்பாக இருந்தால் நெருங்கி வந்து தலையில் நறுக்கென்று ஒரு குட்டு. தன் விடை பற்றி சந்தேகமாக இருப்பவனின் மூஞ்சியை அவருக்கு எப்படித் தான் அடையாளம் தெரியுமோ? அவர் கேட்கும் மாணவர்களில் பாதிப் பேர் குட்டுத் தான் வாங்குவார்கள்.
அப்படித் தான் அன்றைக்கு என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கன்னியப்பன்
இரண்டு குட்டு வாங்கி விட்டான். கொஞ்சம் இடை வெளிவிட்டு மறுபடியும்
அவனையே விரல் காட்டினார் வாத்தியார். கன்னியப்பனை நினைத்தால் பாவமாக இருந்தது. நான் விடையை பெரிதாக என் ஸ்லேட்டில் எழுதி கன்னியப்பன் பக்கம் காட்டினேன். கன்னியப்பன் குட்டு வாங்காமல் தப்பித்தான்.
கன்னியப்பனுக்கு மாட்டு வண்டியில் மத்தியானம் சாப்பாடு வரும். கூடவே
ஒரு பானை போன்ற கூஜாவில் தண்ணீரும் வரும். அன்று நான் சாப்பிட்டு விட்டு தண்ணீருக்காக அலைந்த போது கன்னியப்பன் என்னை ஆர்வமுடன் கூப்பிட்டான். “இனிமே தெனம் எங்கூடவே இருந்து சாப்பிடுரா....” என்று சொல்லி தண்ணீரை தாராளமாக பகிர்ந்து கொண்டான். மனக்கணக்கு வகுப்பில் நானும் அவனை கவனித்துக்கொண்டேன்.
கன்னியப்பன் பழகுவதற்கு நல்லவனாக சாதுவாக இருந்தான். என்னை விட
இரண்டு பங்கு பருத்தவனாக இருந்தான் அவன் அப்பா பெரிய வியாபாரம் செய்துகொண்டிருப்பதாகத் தெரிந்தது. அவனுக்கு தினமும் உயரமான டிபன்பாக்ஸில் விதவிதமான மணமும் நிறமும் கொண்ட சாப்பாடு வரும். அவனுடைய சாப்பாட்டுத் தூக்குக்கு என் சின்ன தயிர்சாதபாத்திரம்
ஒரு சுண்டெலி அளவுக்குத் தான் வரும்.
ஆரம்பத்தில் அவனுடன் சாப்பிட நேர்ந்த போது அவன் சாப்பாட்டிலிருந்து
வரும் பழக்கப் படாத லவங்க வாசனை எனக்கு ஒவ்வாமல் இருந்தது. அவனுடைய நட்புக்காகவும் அவன் என்னுடன் பகிர்ந்து கொண்ட தண்ணீருக் காகவும் வாடையை சகித்துக் கொள்ள வேண்டி யிருந்தது. நாளடைவில் அந்த அசூயை நீங்கி மணமும் நிறமும் ஓரளவு பழகிப் போய்விட்டது.
மனக்கணக்கு வகுப்பு பிரச்னையில்லாமல் முடிந்த ஒரு நாள் பகலில் சாப்பிட உட்கார்ந்தபோது கன்னியப்பன் அடுக்குகளை ஒவ்வொன்றாக திறந்து வைத்தவாறு என்னை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். .பிறகு திடீரென்று கேட்டான்.
“ டேய்.. சங்கரா......நீ என்னோட friend தானே? “
“ ஏண்டா.....ஏன் இப்படிக் கேக்கறே? “ வாயில் இன்னும் முழுங்காத சோற்றுடன் கேட்டேன்.. அவன் தயங்கி மீண்டும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ ஏண்டா....கன்னீ.....ஏண்டா இப்பிடி கேக்கறே? “
“நீ என் ப்ரெண்டா இல்லையா? அதை சொல்லு! “
“ஏண்டா சந்தேகம்? நான் ஒன் ப்ரெண்ட் தான்! “
“இல்லே....நீ என் ப்ரெண்டா இருந்தா... இன்னிக்கு நான் குடுக்கறத
நீ சாப்பிடுவயா?........ சாப்பிடுவியா? ....”
கன்னியப்பன் கையில் நீளமாக சற்று சிவப்பாக ஒரு எலும்புத்துண்டு இருந்தது. திடீரென்று அவன் இப்படிக் கேட்டதும் செய்த காரியமும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. குழப்பமாக இருந்தது. என்ன பதில்...
எப்படி... சொல்வதென்று தெரியவில்லை.. ..
சின்ன வயதிலிருந்து இம்மாதிரி பண்டங்களைச் சாப்பிட்டதில்லை வீட்டில் சாப்பிடப் பழக்கியதில்லை. அதோடு மட்டுமல்லாமல் இந்த மாதிரி பண்டங் களைப்பற்றி இழித்தும் பழித்தும் பேசி பெற்றோர்கள் என் மனதில் ஒரு விதமான அசூயையை அருவருப்பை உண்டு பண்ணியிருந்தார்கள்..
சாப்பிட்டால் நரகத்திற்குப் போகவேண்டும் என்று எதையோ சொல்லி குழப்பமான கலவரத் தை ஏற்படுத்தியிருந்தார்கள். மேலும் இதை சாப்பிடு பவர்கள் பற்றியும் ஏதேதோ
கூறியிருந்தார்கள். அப்படி அவர்கள் பயமுறுத்தி இருக்கவேண்டாம்.. நம்
வீட்டில் இதை சாப்பிடுவது வழக்கமில்லை என்று மட்டும் சொல்லிப் பழக்கியிருக்கலாம். ஒரு ராரின் பழக்கவழக்கத்தைப் பற்றி மனதில் இப்படி வேண்டாத பாரபட்சங்கள் ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் இப்படிப் பட்ட சங்கடங்களை சந்திக்க
வேண்டியிருக்காது.
என் இளம் மனதில் இப்படியெல்லாம் அப்போது நினைப்பு ஓடவில்லை.
கன்னியப்பன் நல்ல சிநேகிதன்.. அவன் நட்பில் சிறிது சுயநலம் இருந் தாலும் மற்றவர்கள் மறுத்த எனக்குத்
தேவையான உபகாரத்தை அவன் எனக்கு செய்கிறான். சந்தானமும் சேஷனும் ஒரு வாய்த்தண்ணீரை எனக்குத் தர மறுத்தார்கள்..
இப்போது கன்னியப்பன் அன்புடன் கொடுத்த பண்டத்தை நான் வேண்டா மென்று மறுத்தால் அவன் நட்பையே நிராகரித்தமாதிரி இருக்காதா? அவன் இதைச் சகஜமாக ஏற்றுக் கொள்வானா? அல்லது என்னை தன்னிலிருந்து வேறுபட்ட வனாக நினைத்து ஒதுக்கிவிடுவானோ?
எனக்கு அவன் தண்ணீரும் வேண்டும்.. நட்பும் வேண்டும்.
“நீ என் ப்ரண்டா இருந்தா இதை சாப்பிடுவியா?” ன்னு கேட்கிறான்.
கணக்கில் பலஹீனமாக இருந்தாலும் கன்னியப்பன் நல்லவனாக இருந்தான். அவன் நட்பை இழக்க எனக்கு விருப்பமில்லை.
மனதைக் திடப்படுத்திக்கொண்டு அவன் கொடுத்த பண்டத்தை வாங்கி முகத்தில் அசூயை காட்டாமல் லேசாக சுவைத்தவாறு அவனைப் பார்த்தேன். ... அவன் அதிசயமாக என்னைப் பார்த்தான். ஏதோ எதிர்பாக்காதது நிகழ்ந்து விட்டது போல் அவன் முகத்தில் ஒரு வெற்றிப்
புன்னகை.
“டேய்...டேய்... டேய்...நீ என் ப்ரெண்டு...” அவன் கண்களில் சந்தோஷம் ....
நான் உடனே என்னுடைய பாத்திரத்திலிருந்து ஒரு கவளம் எடுத்து அவனிடம் நீட்டினேன். அவன் சற்றும் தயக்கமில்லாமல் ஆசையுடன் அதை வாங்கி சாப்பிட்டான். நாங்கள் மிக நல்ல நண்பர்களாகி விட்டோம்.
******************************************* *
அதற்குப் பிறகு இப்போது ஒரு முப்பது வருஷ காலம் ஓடிப் போயிற்று.
என் பள்ளிப்பருவத்திலேயே என் அப்பாவுக்கு ஊர் மாற்றலாகி சென்னைக்கு வந்து விட்டோம். அதற்குப் பிறகு கல்லூரி அதற்குப் பிறகு தொழிற்படிப்பு: பயிற்சிக்கு வெவ்வேறு மாநிலங்கள்....பிறகு உத்யோகம் காரணமாக பல பிரதேசங்கள்........
கடைசியாக இப்போது தாய் நாட்டைத் தொலைத்து விட்டு வேறெங்கோ வந்து திருமணமாகி இப்போது என் குழந்தையின் முதல் ஆண்டு நிறைவு
பிரார்த்தனை செலுத்துவதற்காக குலதெய்வத்தைத் தேடிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன்.!
நினைத்துக் கொண்டால் வினோதமாகத் தோன்றியது. என் பெற்றோர்கள் காலத்து வழக்கங்கள் ஒழுக்கங்கள் எல்லாம் இப்போது என்னை விட்டுப் போய் விட்டன. முக்கியமாக உணவு விஷயத்தில் எல்லா சமயமும் எச்சரிக் கையாக இருக்க முடியவில்லை . சூழ்நிலைக் கட்டாயத்தால் அசூயைப்படா மல் அளிக்கப்பட்ட உணவை ஏற்றுக் கொள்ள வெண்டியிருந்தது. அதைப் பற்றிய குற்றஉணர்வோ நரகத்தைப் பற்றிய பீதியோ எதுவும் தொந்தரவு செய்யவில்லை.
பல வருஷங்களுக்குப் பிறகு குழந்தையின் பிரார்த்தனையை சாக்காக வைத்துக் கொண்டு நான் என் சொந்த ஊரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தேன்.
ஊரில் போய் இறங்கியதும் நிச்சயம் ஏதாவது நண்பன் தட்டுப் படுவான் என்ற நம்பிக்கை இருந்தது. அதே போல் கடை வீதிப் பக்கம் நடந்து போனபோது ஒரு பலசரக்குக் கடையின் கல்லாவில் உட்கார்ந்திருந் தவரின் முகம் ஓரளவு மாறாத சாயலுடன் கண்ணில் பட்டது. ஆனால் அந்தத் தொப்பை தான் சற்று பரிச்சயத்தைத் தடுக்கியது.
இருந்தாலும் சற்று துணிச்சலுடன் நெருங்கினேன்.. “ சோமு தானே ... ... நீ.... நீங்க..?.” என்று கேட்டு விட்டு அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் தன் பெயர் கூப்பிட்ட திசையில் பார்த்து தலையைத் திருப்பி என்னை யாரென்று ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான்.
“ நான் ரொம்ப மாறி விட்டேனா?. .நான் தான் சங்கரன்....”.
“அடேடே...சங்கரா.....நீயா...? எத்தனை வருஷமாச்சு...? எப்படிடா இருக்கே? எங்கே இருக்கே? என்ன வெள்ளக்காரன் மாதிரி மாறிப் போயிட்டே? வா... உட்காரு....” “
ஒரு சில நிமிஷங்களில் எங்களுக்குள் பல வருஷ இடைவெளிகள் உருகிக் கரைந்து போனது.
நாங்கள் மீண்டும் எங்கள் ஸ்கூல் வகுப்பில் பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு நடந்த கதைகளை பேசிக் கொண்டிருந்தோம்.
“ என்னடா அந்த அரணை ஞாபகம் இருக்கா? “
அவன் தொப்பை குலுங்க சிரித்தான்.
சந்தானம் யாரோ கிருஸ்துவப் பெண்ணைக் காதலித்துக் கலயாணம் செய்து கொண்டு அவளுடன் கோவாவுக்குப் போய் விட்டதாக சொன்னான். சேஷன் விமான ஓட்டியாக பயிற்சி பெற ஜபல்பூருக்கோ எங்கோ போய் அங்கே பயிற்சி யின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்ட்தாகத்
தெரிவித்தான்.
“கன்னியப்பன் இப்போ எங்கேடா இருக்கான்? “ என்றேன்.
“கன்னியப்பனா?..” “
இப்படியெல்லாம் அவரை மரியாதைக்குறைவாக பேசக் கூடாதுடா....”
நான் அவனை உற்றுப் பார்த்தேன்..
“ அதோ பார் எதித்தாப்புலே.... சுவத்திலே வால் போஸ்டர்......தெரியுதா?“
பார்த்தேன்.
“ ஹிந்து அறக்கட்டளை சார்பில் சைவ சித்தாந்த சொற்பொழிவு.
உரை நிகழ்த்துபவர் . திரு- கன்னியப்ப ஸ்வாமிகள்
இடம் ஜீவாமைதானம். தேதி...........................
போஸ்டரில் தெரிந்த போட்டோவைப் பார்த்தேன். அடர்ந்த தாடிக்குள் புதைந்த முகத்துடன் காவிச் சட்டை போட்டுக் கொண்டு தீவிரமாக தெருவைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவரின் முகத்தில் என் பழைய கன்னியப் பனைக் காணமுடியவில்லை!!
“என்னடா இது?” நம்பமுடியாமல் சோமுவைக் கேட்டேன்.
“ஏண்டா...ஆச்சரியப் படறே? நீ நெனைக்கிறமாதிரி தான் எல்லாமே
நடக்கிறதா? “...
“இருந்தாலும் கன்னியப்பனா இப்படி ஆனான்? நம்பவே முடியலேடா!
“இப்படி நேர்லெ பாக்கலேன்னா நான் நம்பி இருக்கவே மாட்டேன்...... இப்போ அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமா?
“. ..
“ஏன் இருக்காது? அவன் எதையும் மறந்திருக்க மாட்டான். ஆனா ஒண்ணு... அவனைப் பாக்கறதுக்குத் தான் அப்பாய்ட்மென்ட் வாங்கவேண்டியிருக்கு..!..” ..... லேசாக சிரித்தான்..
அப்படியா! நான் யாருன்னு சொன்னாக் கூட உடனே பாக்க முடியாதா!!
“முடியலாம்...”
“நாளைக்கு என் குழந்தையோட கோவில் பிரார்த்தனை முடிஞ்சவுடன் அவனைப் போய் பாக்கப் போறேன்......”
“தாராளமா போய்ப் பாரு....ஆனா போகும் போது எதையாவது வாங்கிண்டு போயிடாதே!..
”
ஏண்டா... அப்படி சொல்றே? “
“சுவாமிகள் மத்தவங்க கொடுத்தது எதையுமே கையால தொட மாட்டாரு........... பழங்களைத் தவிர ! அவர் ரொம்ப ஆசாரம்! “”
0
No comments:
Post a Comment