சிறுகதை:
ஓவியங்களுக்கு
இடையில் ஒரு காட்சி
வைதீஸ்வரன்
நான் இதை பார்க்க வேண்டுமென்று நினைத்தபோது இவ்வளவு நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று
காத்திருக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. சாதாரணமான ஓவியக்லைக் காட்சிகளில் முதல் நாள் திறப்பு விழாவில் மட்டும் தான் ஒரு பத்து இருபது நண்பர்கள் கூடிக் கை தட்டி விட்டு சிற்றுண்டி அருந்தி சிரித்து
விட்டு சென்று விடுவார்கள்.
ஆனால் இந்த ஓவியக் காட்சி மிக
விசேஷமானதாக உலக பிரசித்தி பெற்றதாக இருந்தது. CANBERRA தேசீய கலைக்கூடத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இந்த ஓவியக் கலைக் காட்சியில் வேன் கோ [van gogh] பால் கோகன் [paul gaugin
] செஸான் [ Paul
cezaane] இவர்களின் மூல ஓவியங்கள் பிரான்ஸ் இங்கிலாந்து நாடுகளின் ஓவியக் கலைக் கூடங் களிலிருந்து தருவிக்கப்பட்டு மிகுந்த பாதுகாப்பு
ஏற்பாடுகளுடன்
பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
பால் காகின்
ஓவியக்கலையில் ரஸனையுள்ள யாருக்கும்
இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வாழ்க்கையில் எப்போதோ தான் நேரக் கூடியது. இப்படிப்பட்ட
அபூர்வக்கலைஞர்களின் வித்யாசமான கலைவெளிப்பாடுகளையும் அவர் களின் அசாதாரணமான
வாழ்க்கை பற்றியும் கலைப் புத்தகங்கள் மூலம் ஏற்கனவே தெரிந்து கொண்டவர்கள்
இத்தகைய நேரடி அனுபவத்தை நழுவ விட
மாட்டார்கள்.
அவற்றை வாசிக்கும் போது இந்த ஓவியர்களைப் பற்றிய பிம்பங்கள் அமானுஷ்ய பிரமிப்புடன் நமக்குள் தோற்றம்
கொள்ளுகிறது.
எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி
ஆயுள் முழுவதும் கலைகளின் புதிய புதிய பரிமாணங்களைத்
தேடிக்கொண்டிருந்த அந்தக் தீவிரமான கலைஞர்களை நினைத்து பார்க்கும்போது நமக்கு
சிலிர்த்துப் போகிறது.
ஜனங்களின் வரிசை மெள்ளத் தான்
உள்ளே நகர்ந்து கொண்டிருந்தது. ஏற்கனவே உள்ளே சென்ற பார்வையாளர்கள் வெளியே வர விருப்பமில்லாமல் தயங்கித்
தயங்கி வந்துகொண்டிருந்தார்கள். அதனால் உள்ளே செல்வது நிதானப்பட்டது.
எனக்கு முன்னே நின்று கொண்டிருந்தவர்களில்
நிறைய பேர் வயதானவர்களாக இருந்தார்கள். இந்த வயதானவர்களும் என்னைப்
போல் ஒரு கால கட்டத்தில் கலைகளில் ஆர்வமுள்ள இளைஞ்ர்களாக இருந்திருப்பார்கள்
என்பதை ஒரு கணம் ஏனோ மறந்து போயிருந்தேன்.
நாங்கள் இப்போது ஓவியக் கூடத்தின் உள்ளே
நுழைந்துகொண்டிருந் தோம் . நுழைவு வாயிலில் நிறைய பாதுகாப்பு முஸ்தீப்புகள் செய்யப்பட்டிருந்தன நம் கைவசம்
இருந்த கேமரா கைபேசி பேனா பென்ஸில் நகம்வெட்டி கத்தி மற்றும் கூர்மையான
வஸ்துக்கள் தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் அகற்றப்பட்டன. “ இந்த ஓவியங்களைப் ரஸிப்ப தற்கு கலைஆர்வமும் கண்களும் மட்டுமே போதுமானது . வேறெதுவும் தேவையில்லை..” என்று எழுதியிருந்தது.
பார்வையாளர்களில் பலர் என்னைப்
போலவே ஏற்கனவே தெரிந்த பரிச்சயத்துடன் ஒவ்வொரு
படத்தையும் ரஸித்துக் கொண்டிருந் தார்கள். அந்த வரிசையில் எனக்கு முன்னால்
ஒரு மூதாட்டி தன் வயதான கணவனை சக்கர நாற்காலியில் வைத்துத்
தள்ளிக் கொண்டே படங்களைப் பார்வையிட்டு ரஸித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்க எனக்கு
நெகிழ்ச்சியாக இருந்தது.
நான் அந்தக் கிழவரைப் பார்த்து
நட்புடன் சிரித்தேன் அவரும் திரும்பி புன்னகைத்தார்.
“Gaugin ஓவியங்கள் மிகவும் ரஸிக்கத்
தகுந்தவை.. அவருடைய உலகமே வித்யாசமானது..இல்லையா? “ என்றார். அந்தக் கூடம் முழுவதும் Gaugin ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கோகனின் [Gaugin} தஹிதி தீவின் ஓவியங்கள்.......
...தஹிதீ தீவின் மணல்பரப்பில் ஒரு நாட்டுப் பாடலின் அமைதியுடன் நாவல்பழநிற மேனியுடன்
அமர்ந்திருக்கும் பழங்குடிப்பெண்களின் உருவங்கள்.. அவர்களை சுற்றி இயல்பாக வளைய வரும் நாய்களும் குதிரைகளும்.. பின்புலத்தில் வானத்தை புதிய வடிவங்களில் அலங்கரிக்கும்
மரங்களும் தாவரங்களும்..
அந்த ஓவியங்கள் யதார்தத்தை சற்றே கலைத்துப்
போட்டு பூமியின் ஆதாரமான செழுமையை மௌனமாக பறைசாற்றிக்
கொண்டிருந்தன. வெய்யிலும் நிழலும் இயல்பான சார்புகளில் ஒன்றையொன்று
பிரமாதப்படுத்திக்கொண்டிருந்தன.
கணக்கு வழக்குத் தொழில்
பார்த்துக்கொண்டு குடும்பஸ்தனாக வாழ்ந்து கொண்டிருந்த Paul Gaugin நாற்பது வயது கடந்தபிறகு
திடீரென்று எப்படி ஒருநாள் " நான் ஒரு ஓவியனாகப்
போகிறேன்" என்று கிளம்பினான்?
தன் வீட்டையும் தொழிலையும் வாழ்வின்
பாதுகாப்புகளையும் ஒரு நொடியில் தூக்கி எறிந்து விட்டு ஓவியக்கலையின் தேட்டத்துக்காக
தன்னை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொள்ள அவனால் எப்ப்டி ஒரு
கணத்தில் முடிவெடுக்க முடிந்தது? பூமியில் மூலையில் நகர சந்தடிக ளற்ற ஒரு தொலைவில்
தஹிதீ தீவில் குடியேறி அங்கே உடல் நலிவுற்று
விரல்கள் வளைந்து போகும் வரையில்
அற்புதமான சுயமான ஓவியங்களை பெரிய ஆதாயங்கள் எதுவும் அற்ற நிலையில் படைத்துக்
கொண்டே மறைந்த அந்தக் கலைஞனின் மனத் திண்மையை
தீவிரத்தை எவ்விதம் நினைத்துப் பார்ப்பது?
தன்னை அறிவதற்காக வீட்டையும் சுகத்தையும் துறந்து வெய்யில் மழை பாராமல்
காட்டுக்குள் சென்று கடுந் தவமிருக்கும் ஞானிகளுக்கும் இப்படிப்பட்ட கலைஞர்களுக்கும் அவர்கள் தேட்டத்தில் தான்
வித்யாசம், என்று தோன்றுகிறது.. வைராக்கியத்தில் இரண்டுமே ஒரு பான்மையானது
பால் கோகனின் துணிகரமான துக்ககரமான கலை வாழ்க்கையைத் தழுவி ஸாமர்ஸெட் மாகம் எழுதிய பிரசித்தி பெற்ற moon and six pence நாவல் எனக்கு நினைவு வந்தது. அதை எழுதும் முன் அந்த ஓவியன் வாழ்ந்த இடத்தைப்
பார்ப்பத்ற்காக ஸாமர்ஸெட் மாகம் தஹிதீ தீவுக்குப் போனார். அங்கே Gaugin வாழ்ந்து மறைந்த வீட்டை நேரில்
பார்க்க பல அடர்ந்த புதர்களைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டி யிருந்தது. அங்கே கூரைகள் பிய்ந்து கதவுகளும்
கண்ணாடி ஜன்னல்களும் சேதமடைந்த ஒரு சிதிலமடைந்த வீட்டுக்குள்ளிருந்து இரண்டு
மூன்று சிறுவர்கள் ஓடி வந்தார்கள்.அவர்களைத் தொடர்ந்து ஒரு பழங்குடிக் கிழவன் வெளியே
வந்தான்.
வந்தவரை வீட்டுக்குள்ளே
அழைத்துக் கொண்டு போய் " இங்கே தான் கோகன தங்கியிருந்து படம் வரைஞ்சிகிட்டு
இருப்பாரு.ன்னு சொல்லு வாங்க...இப்ப யார் யாரோ வந்து பாத்துட்டு போறாங்க..” என்றான் .
வேன் காக் ஓவியமும் புகைப்படமும்
சுவரிலும் தரையிலும் கழுவப்படாத
சாயக் கறைகள் தென்பட்டன. ஸாமர்செட் மாகம் உடைந்த கண்ணாடி ஜன்னல்களைப்
பார்த்தார். அதிர்ந்து போனார். மூன்று கண்ணாடி ஜன்னல்களில்
இரண்டு அநேகமாக உடைந்து விட்டன. மூன்றாவது இரண்டாக விரிந்து கிடந்தது. அந்த மூன்றிலும் கோகன் அழகான
வண்ண ஓவியங்களை வரைந்திருந்தார்.
ஸாமர்ஸெட் மாகம் அந்தக்
கிழவனிடம் இரண்டாக விரிசல் விட்டிருந்த அந்த கண்ணாடி ஜன்னலை விலைக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டார். “ அதைக் கொடுத்துட்டா நான் ஜன்னலுக்கு என்ன பண்றது? புதுசா மரம் வாங்கி
செஞ்சிக்கணுமே! இந்தக் கதவுகளைக் கூட
மாத்தியாகணும்.. அதுக்கெல்லாம் எனக்கு காசு தேவைப்படும்..”
“ எவ்வளவு வேணும்?..”
“ நீங்க பெரிய மனுஷன் கேக்கறீங்க.. ஒரு 200 frank கொடுத்துட்டு எடுத்துகிட்டு
போங்க...”
மாகம் உடனே பணத்தைக் கொடுத்து விட்டு அந்த
ஜன்னலை சேதப்படுத்தாமல் அகற்றிக் கொடுக்கச் சொன்னார். அவன் கேட்ட விலை மிகக்குறைந்தது
என்று அந்தக் கிழவன் அறிந்திருக்கவில்லை.
அவர் அந்தக் கண்ணாடி ஜன்னலை
எடுத்துக் கொண்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற பிறகு கறுப்பாக இன்னொரு இளைஞன் வந்து
கதவைத் தட்டினான்... தான் அந்தக் கிழவனின் மகன் என்றும் 'அப்பாவுக்கு அதன் மதிப்புத் தெரியாது.. அதற்கு இன்னொரு 200 பிராங்குகள் கொடுக்க வேண்டும்
என்றான் ஸாமர்ஸெட் மாகம் சந்தோஷமாக அதையும் கொடுத்து அவனை
அனுப்பி வைத்தார். ஊருக்குத் திரும்பி தன்னுடைய பல ஏக்கர் பரப்புள்ள
ப்ரும்மாண்டமான பண்ணை பங்களாவில் வரவேற்புக் கூடத்தில் இந்தக் கண்ணாடி ஜன்னல் ஓவியத்தை செப்பனிட்டுப் பொருத்தி
வைத்தார். சில வருஷங்கள் கழித்து இதே ஓவிய்ம் ஏலத்திற்கு விற்ற போது பல லட்சங்களுக்கு அது விலை
போயிற்று.
ஆனால் Paul Gaugin தன் ஓவியங்களுக்கு
பிற்காலத்தில் இவ்வளவு மதிப்பு ஏற்படும் என்று தெரிந்தால் கூட பிரமித்துப் போகக் கூடியவ னல்ல. அவனுக்குத் தன் படைப்புகளின்
மேல் அபார நம்பிக்கை இருந்தது.. அதே போல் தான் விரும்பித் தேர்ந்து கொண்ட வேதனைகள் மிகுந்த வாழ்க்கையை நினைத்தும் அவன் எப்போதும் வருத்தப்பட்டுக்
கொண்டதில்லை..! அந்த அனுபவத்தை அவன் ஏற்றுக் கொண்டான்.
கலைக் கூடத்தில் இன்னொரு அறை
முழுவதும் வேன் கோவின் [ Van Gogh] ஓவியங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.
நான் புத்தகங்களில் பார்த்த
போது இந்த ஓவியங்கள் பெரிய அளவில் இருக்குமென்று கற்பனை செய்து
கொண்டிருந்தேன். ஆனால் எல்லா படங்களும் இரண்டு சதுர அடிக்குக் குறைவாகவே
இருந்தன கோகன் ஓவியங்களும் இதேபோல் பெரிய அளவில் இல்லாமல் தான்
இருந்தது.
எனக்கு முன்னால் அந்த
மூதாட்டியும் சக்கர நாற்காலியில் கிழவரும் நகர்ந்து கொண்டிருந்தார்கள். Van Gogh வின் ஓவியங்களைப் பார்த்தவுடன்
கிழவரின் கைகளும் உடலும்
பரபரத்தன. அவர் "அடடா! எப்படிப்பட்ட கலைஞன்..ஆஹா!.. அந்தக் கடல் கொந்தளிப்பைப்
பாருங்கள்..அந்த இரவுக் காட்சியில் தெறிக்கும் தீப் பொறி போல் ஜொலிக்கும்
நட்சத்திரங் களைப் பாருங்கள்...அவற்றை தீட்டிய மனவேகத்தைப்
பாருங்கள்..” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லிக்
கொண்டே என்னை பார்த்தார்.
”வேன் கோ’வின் ஓவியங்கள் நமக்குள்
பரவசத்தை ஏற்படுத்தக் கூடியவை வீரியத்தை வெளிப்படுத்துபவை. வேன் கோ ஆவேசங் கொண்ட ஓவியர் என்று
சொல்லலாம். ஓரளவுக்கு எனக்கு அவன் ஓவியங்களைப் பார்க்கும்போது
பாரதியின் வசன கவிதைகள் ஞாபகத் துக்கு வருகின்றன.
ஓவியங்கள் தீட்டும்போது வேன் கோ
தன்னையே மறந்து விடக் கூடியவன். அடிக்கடி மனப் பிறழ்வுக்கு ஆளாகக்
கூடியவன் .ஓவியங்கள் தீட்டும் போது தன் எண்ண ஓட்டங்களை உரக்கச்
சொல்லிக் கொண்டே இயங்குபவன். தன் அற்ப ஆயுளின் முடிவு வரை தான் இன்னும் சிறந்த ஓவியனாகவில்லை
என்ற மனஅழுத்தம் அவனை வருத்திக் கொண்டே யிருந்தது..
வாழ்நாள் முழுவதும் தன்
சகோதரனின் பராமரிப்பிலேயே வாழ வேண்டிய குற்ற உணர்வும் புதிய எல்லைகளை இன்னும் தொட வில்லையே என்ற
ஆதங்கமும் தன் ஓவியங்கள் ஒன்று கூட விலைக்குப் போக வில்லையே என்ற உள்வருத்தமும்
அவனைத் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் தூண்டி விட்டது.
அவன் படங்களைப் பார்க்கும் போது எனக்கு துக்கமாக இருந்தது. ஒரு
கலைஞன் கலைக்காக இந்த அளவுக்கு தன்னைத் தானே எரித்துக் கொள்ள வேண்டுமா? இப்படியெல்லாம் வருத்திக்
கொள்ளாமலும் எத்தனையோ கலைஞர்கள் சிறப்பான கலைப் படைப்புகளை படைத்து செல்வச்செழிப்புடன் இருந்திருக்கிறார்களே!..இப்படிப்பட்ட
வித்யாசமான பாரபட்சமான உயிரியல் விதியை எது தீர்மானிக்கிறது?
அறுபதுகளில் சென்னைக் கலைக்
கல்லூரியில் படித்து வந்த ராமானுஜன் என்ற ஓவியனை அப்போது வேன் கோவுக்கு ஒப்பிட்டு சொல்லுவார்கள். தன் படைப்பின் அருமையை உணராமல்
அற்புதமான சில ஓவியங்களைப் படைத்து விட்டு குடும்பத்தின் பாசமோ பாதுகாப்போ
அற்ற சூழலில் இளம் வயதில் தற்கொலை செய்து கொண்டான் ராமானுஜம்.
கூடத்தின் நடுவில்
போடப்பட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் நான் உட்கார்ந்தேன். அந்த மூதாட்டியும் சக்கர
நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வந்து என்னருகில் அமர்ந்தாள்.. அந்தக் கிழவரின் தேகம் சற்று
நடுங்கிய மாதிரி இருந்தது..உடனே அந்த மூதாட்டி அவள் கைப் பையில் இருந்த சில
மாத்திரைகளை எடுத்து அவர் வாயில் போட்டாள். அவர் சற்று நிம்மதி அடைந்தது
போல் தோன்றியது.
“அவருக்கு உடம்பு சரியில்லையா? “ என்று விசாரித்தேன்.
“நீங்களும் ஓவியரா? “ என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்
“ ஆமாம்...இல்லை...என்று எப்படி
வேண்டுமானாலும் சொல்லலாம். இவருக்கு ஏன் இப்படி உடல்
நடுங்குகிறது? “ என்று
மீண்டும் கேட்டேன்.
“ இந்தப் படங்கள் அவரை என்னவோ செய்கின்றன ...”
“ அவரும் ஓவியரா? “ என்று கேட்டேன்.
“ இல்லை.. ஓவியராக தன்னைக் கற்பனை செய்து
கொண்டிருந்தவர்..”
“ ஹஹ்ஹா... அப்ப்டியும் ஒரு சாத்தியம்
இருக்கத்தான் இருக்கிறது. அதை நீங்கள் எப்படிக் கண்டறிய
முடிந்தது...”
“ ஒரு நாற்பது வருஷங்களுக்கு முன் இதே மாதிரி ஓவியக் கண்காட்சியில்
தான் நான் இவரை சந்தித்தேன். ஓவியங்களைப் பற்றி நிறையவே
பேசினார். தான் மிகப் பெரிய ஓவியனாகப்
போவதாக அதுவே தன் வாழ்க்கையின் லட்சியம்
என்றெல்லாம் சொன்னார்.. கடைசியில் என்னைக் காதலிப்பதாக சொன்னார்......”
“அப்புறம் நீங்கள் திருமணம் செய்து
கொண்டீர்கள்...அப்படித்தானே! “
“ஆமாம் ..ஆனாலும் நாங்கள் திருமணம்
செய்து கொண்ட போது அதிக
வசதிகள் இல்லை..அவர் என்னை
மிகவும் நேசித்தார். என்னை சௌகரியமாக வைத்துக் கொள்ள
வேண்டுமென்ற அக்கறையால் அவர்
மிகவும் பொறுப்புள்ள தொழிலில்
ஈடுபட்டு ராப்பகலாய் உழைத்தார்.. நிறைய செல்வம் சேரச் சேர பணம் சம்பாதிப்பது என்பது ஒரு
விட்டு விட முடியாத கெட்ட பழக்கமாகவே மாறி விட்டது.. அடிக்கடி அவருக்குள் ஒடுங்கிப்
போன ஓவிய லட்சியத்தை ஞாபகப்படுத்த முயன்றேன். அந்த சமயங்களிலெல்லாம் அவர் மௌனமாக என்னை விட்டு அகன்றுபோய்
விடுவார்...
அவருடைய அறுபது ஆண்டு பிறந்த நாள் விழா வந்தது. அன்று நான் அவரை எங்கள் வீட்டின்
தோட்டத்துக் குடிலுக்கு அழைத்து சென்று “இது தான் என்னுடைய பிறந்த நாள்
பரிசு..திறந்து பாருங்கள் " என்று
சாவியைக் கொடுத்தேன். ..”
அவர் திறந்து பார்த்த போது
உள்ளே நான் ஏற்கனவே வாங்கி மாட்டியிருந்த Gaugin, Paul Van அருமையான மறுபதிப்பு ஓவியங் களைப் [Reproductions} பார்த்தார்.
கூடத்து நடுவில் ஒரு வெள்ளைக்
கேன்வாஸ் தூரிகையும் வண்ணங்களும் வைத்திருந்தேன்..
இந்த பிறந்த நாளில் உங்களுக்குள் இருக்கும் ஓவியனை மீட்டெடுக்கப் போகிறீர்கள். இன்று எனக்காக ஒரு ஓவியம்
வரையப் போகிறீர்கள்.” என்றேன்..
அவருக்கு சற்று நேரம் ஆச்சரியமும்
குழப்பமும் திக்பிரமையுமாக இருந்தது. அவர் உதடுகள் ஏதோ சொல்ல
வேண்டுமென்று பதறியது. அங்கே இருந்த நாற்காலியில்
உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொண்டார்.
“என்னால் முடியாதென்று தோன்றுகிறது...” என்றார் குனிந்த முகத்துடன்.
“இல்லை உங்களால் முடியும்..” என்றேன்.
தூரிகையிடம் சென்று தன் கையில்
எழுது கோலை எடுத்துக் கோடுகளை வரைய முயன்றபோது அவருக்கு கைகள்
நடுங்க ஆரம்பித்துவிட்டன..
“ என்ன ஆச்சு...என்ன ஆச்சு..?” என்று பதறிப் போய் அவரை
அணைத்துக் கொண்டு அவரை உட்கார வைத்தேன்..
“என்னால் முடியாது...என்னால்
முடியாது...” என்று
நாக்குழறினார்
“அந்தத் தருணத்திற்குப் பிறகு அவருடைய நரம்புமண்டலம் கொஞ்சம்
கொஞ்சமாக தளர்ச்சி அடைந்து விட்டது. கைகால்கள் ஸ்வாதீனம் குறைந்து
போய் விட்டது. சக்கர நாற்காலியில் நகர வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுவிட்டது”.
“ஆனால்..இப்போது....? “
“ அதன் பிறகு நீண்ட மனோதத்துவ
சிகிச்சைக்குப் பிறகு அவருக்குள்
புதைந்து போயிருந்த
லட்சியங்களைப் பற்றிய புதிய தெளிவு கிடைத்தது. அவர் தனக்குள் இருந்த ரஸிகனை
ஓவியனாக தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறார்னென்று தெரிந்தது. இப்போது அவரைக் கேட்டால் ‘எனக்கு மனைவியை ரஸிப்பதும் கலைகளை ரஸிப்பதும் ஒரே விதமான
மகிழ்ச்சியைக் கொடுக்கிறது..’, என்பார்", என்று சொல்லிச் சிரித்தாள்.
“அதெப்படி அப்படி ஒரு முடிவுக்கு வர முடிந்தது? “ என்று கேட்டேன்.
“ தீவிரமான ஓவியனாக இருந்திருந்தால் அந்த GAUGIN மாதிரி என்னை நடுத்தெருவில்
விட்டு விட்டு அன்று ஓடி இருக்க மாட்டாரா? “ என்று சொல்லிச் சிரித்தாள்..
அந்தக் கிழவர் "போகலாம் " என்று சக்க்ர நாற்காலியை சற்று
ஆட்டிக்
காட்டினார்.
****
*[தீராநதியில் வெளிவந்தது]
No comments:
Post a Comment