vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, May 15, 2013


போட்டோ
[ வைதீஸ்வரன் ]                     கூடத்தில்  நானும்  அப்பாவும் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.
திடீரென்று   வாசலில் என் பெரியப்பா வேக வேகமாக  நுழைந்து  தாவாரத்துப் படிகளைத் தாண்டிக் கொண்டிருந்தார்.. பெரியப்பா  வாத்தியார் உத்யோகத்திலிருந்து ரிடையர்  ஆகி  ஆறு மாதம் கூட ஆகவில்லை. இவ்வளவு வேகமாக  ஓடி வருகிறாரே!  அதுவும் எங்கள்  மேட்டுத் தெரு வீட்டு வாசல் படிகள்  ஏறு மாறானது.  அதில் கால்களை வைக்கும் போது ஒரே சீராக  வைக்கக் கூடாது.. அதற்கு ஒரு பழக்கம் வேண்டும். இல்லாவிட்டால் ஆளைத் தள்ளி விடும்.   ஆறு வயதுக்குள்  என் முழங்காலில்  மூன்று முறை அடி பட்டு விட்டது.
  பெரியப்பா உள்ளே வந்து விட்டார்.  அவருக்கு மூச்சு வாங்கியது. ஆனால் பெருமிதமும்  தென் பட்டது.
  “சுந்தரம்...சுந்தரம்......நல்லவேளை இது  என் கண்ணுலெ  தென்பட்டுது...
பெரியப்பா தன் கையிலிருந்த சணல் பையிலிருந்து காகிதத்தில் சுற்றியிருந்த  ஒன்றை எடுத்தார்.
   “ என்ன  அண்ணா?  எங்கே போய்ட்டு வரே?  என்ன கையிலே?
  அவர் காகிதத்தைப் பிரித்து  உள்ளே இருந்து ஒரு போட்டோவை எடுத்தார்..  போட்டோ சற்று பெரிய அளவில் இருந்தது
போட்டோவை  திருப்பிப் பார்த்தேன்..
 “ஹை.......இது  என்  போட்டோ..... எனக்கு ஆச்சரியம்.
“ என்ன  அண்ணா  இது  நம்ம கண்ணன் போட்டோ  பாபு  ஸ்டுடியோவுலே  எடுத்தது   ஒரு மாசத்துக்கு முந்தி.... ஒனக்கு  எப்படிக் கிடைச்சது?..
   அந்தப் போட்டோவை எடுத்த நினைவு எனக்குள் பரபரவென்று  ஓடியது.   பாபு-ஸ்டுடியோஸ் மணி மாமாவின் முரட்டு மீசையும் பயமுறுத்தும்  சிரிப்பும்  ஞாபகம் வந்தது.  .. யதேச்சையாக மரவனேரிப்பக்கம் என்னைக் கூட்டிக் கொண்டு நடந்து போனபோது தான் அப்பா அந்த ஸ்டுடியோவைப் பார்த்தார். மணிமாமா என் அப்பாவைப் பார்த்தவுடன்  வெளியே ஓடி வந்தார். “சுந்தரம்...அய்ய்ய்யோ எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பாத்து! “ என்று கட்டிக் கொண்டார்,
 என் அப்பாவும் அவரும் பத்தாங் க்ளாஸுலே ஒண்ணா  பெயில் ஆனப்புறம் எங்கெங்கயொ வடக்கெ வேலை பாத்துட்டு இப்போ அவர் இந்தக் கடையை வைத்தாராம்.. அப்பாவுடன் பேசும் போது அடிக்கடி என் கன்னத்தைக்கிள்ளிக்கொண்டே இருந்தார்  விளையாட்டுக் காட்டி சிரித்தார். அவர் சிரிக்கும் போது எனக்கு சற்று பயமாக இருந்தது....
   “சுந்தரம் ....ஒம்பிள்ளையை ஒரு போட்டொ எடுக்கணும்  அழகா துரு துருன்னு இருக்கான்.. வட்டமான  மூஞ்சி போட்டோவுக்கு ரொம்ப நல்ல Face…” என்றார்.    “இப்ப  வேண்டாம்ப்பா...இன்னொரு  நாள்  வரேன்.. சரியா டிரஸ் கூட பண்ணலே...”  என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார். அப்பா
    “ ஒன் கொழந்தைக்கு டிரஸ்ஸெல்லாம் எதுவும் வேண்டாம்.டா.. அப்படியே எடுக்கலாம் அழகா இருக்கும்  ஒரு நிமிஷம் தான்  .. வா..” 
   “இல்லப்பா... நான்  எதுக்கும் இன்னொரு நாள் வரேன்...நான் சும்மாத்  தான் இந்தப்பக்கம் வந்தேன்... அப்பா சட்டைப் பையைத் தடவிக் கொண்டார்.
   “ சுந்தரம்....நீ  எதுக்கு .தயங்கறேன்னு புரியறது....நான் இதுக்கு காசு கீசு வாங்கப் போறதில்லெ...தெரிஞ்சுதா?  இது என்னோட ஆசைக்காக ..
அப்பாவுக்கு  நிம்மதி வந்தது
  “இருந்தாலும்...”  என்று இழுத்த அப்பாவையும் என்னையும் மணி மாமா இழுத்து கூட்டிக் கொண்டு போனார்...
 என்னை நடுவில் ஒரு குட்டி நாற்காலியில் உட்கார வைத்து ஒரு கருப்புத் துண்டை ஒரு விதமாக கோட் மாதிரி மடித்துப் போர்த்தி விட்டு ஒரு சின்ன கருப்புத்  தொப்பியை [hat]  தலையில் வைத்து அமுக்கினார்.      “ சபாஷ்....   கோந்தை... சிரிடா...சிரிடா..கண்ணு....என்று  பலமாக கை தட்டி சிரித்தார்..  நான்  அழுது விட்டேன்.... உடனே “அய்ய்ய்யோ என்று கன்னத்தைத் துடைத்து விட்டு “அழாதேடா..சிரிக்கத் தானே சொன்னேன்....”   மிட்டாய் கொடுத்தார்.
 “மாமாவைப் பாத்து பயந்துக்காதேடா.... .நல்ல..மாமா.....சிரிச்சாத் தான் நீ போட்டோவுலெ விழுவே .....எங்கே  சிரி சிரி...
அப்பா என்னை சமாதானப்படுத்தினார்.
   சுற்றிலும் எரிந்த பல்புகள் கண்ணைக் கூசின. என் முக பாவம்  சிரிப்புக்கும் கூச்சத்துக்கும் நடுவில் தடுமாறிக் கொண்டிருந்தது..
   மணி மாமா ஒரு கருப்புத் துணிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு கேமராவின் லென்ஸ் மூடியை பிடித்துக்கொண்டிருந்தார். “ரெடீ.. என்று சொல்லி விட்டு மூடியை அகற்றி விட்டு சில வினாடிகள் கழித்து மறுபடியும் லென்ஸை மூடி விட்டார்.  அந்த முறையில் இப்போது போட்டோ எடுக்க முடியுமா  தெரியவில்லை.  ஆனால் அதற்கு ரொம்ப தன்னம்பிக்கையும்   சாமர்த்தியமும்  வேண்டும்
    அதற்குப் பிறகு அப்பா அந்தப்பக்கம் போகவே இல்லை. எனக்கும் மறந்து விட்டது.
  பெரியப்பா  பரபரப்புடன் சொன்னார்...
   “சுந்தரம்..... ....நீ  எக்ஸிபிஷனுக்கு  இது வரைக்கும் போகலியா?
   வருஷந்தோறும் சேலம் விக்டோரியா மைதானத்தில் பதினைந்து நாளைக்கு விமரிசையாக பொருட்காட்சி நடை பெறும்  மாலை வேளைகளில்  ஜனக்கூட்டம்  ஏராளமாகத் திரளும்
   “இன்னும் போகலை அண்ணா  என்ன அங்கே?
   “ எக்ஸிபிஷன்லெ நுழைஞ்சவுடனே இட்து பக்கமே  ஒத்தன் போட்டோ ஸ்டால்   போட்டுருக்கான். அநியாயத்தைக் கேளு...ஸ்டால் முகப்புலயே ஒரு கண்ணாடிப்பொட்டிக்குள்ளே வெளக்கைப்போட்டு நம்ப கண்ணன் போட்டோவை தொங்க விட்றுக்கான் பாத்தா என் கண்ணே படும்போல இருக்கு. .ராஜா மாதிரி தொப்பி போட்டுண்டு .கழுத்தை சாச்சிண்டு.. சினிமாக் காரன் மாதிரி இருக்கான்
   அங்கே உள்ளெ நுழைஞ்ச அத்தனை ஜனங்களுக்கும் முதல்லெ கண்லெ பளிச்சுனு படறது ஒம்பிள்ளை போட்டோ தான்  எல்லாம் ஆன்ன்னு பாத்துண்டு அப்படியே  நிக்கறாங்க.. எனக்கு படபடன்னு வந்தது ..நான் நேரா  அந்தப்போட்டோக்காரன் கிட்டெ போனேன். “டேய் இந்தப்போட்டோவை வாசல்லெ தொங்க விடாதே உள்ளே மாட்டுன்னு சொன்னேன். அவன் முடியாது அது என் இஷ்டம்னு  சொல்லிட்டான். .அப்படீன்னா வெலைக்குக் குடுப்பியான்னு கேட்டேன். அஞ்சுரூபா கொடுத்தா சந்தோஷமா கொடுக்கறேன்னான்  உடனே நம்ப குழந்தை படத்தை வாங்கிண்டு வந்துட்டேன் இதை உள்ளெ கொண்டு போயி மாட்டு... குழந்தைக்கு சுத்திப் போடச் சொல்லு.. என்று பாசத்துடன் என் கன்னத்தைக் கிள்ளினார்.
அப்பா திகைப்பாகப் பார்த்தார்... அஞ்சு ரூபா அப்போது அதிகமான விலை
  “என்ன  அண்ணா... இதைப் போயி அஞ்சு ரூபா வெலை கொடுத்து வாங்கியிருக்கயே! போட்டோ என்றாலே நாலு பேரு பாக்கறதுக்குத் தானே!! ...சரி போகட்டும் இந்தா அஞ்சு ரூபா... அப்பா பெரியப்பாவிடம்  கொடுத்தார்.
 இந்த படவா மணி இவ்வளவு சாமர்த்தியமானவனா?!. படிக்கும்போது  மண்டுவாக இருந்தானே! “  தனக்குள் கரித்துக் கொண்டார். அப்பா
   மறு நாள் சாயங்காலம் அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு வேகவேகமாக எக்ஸிபிஷனுக்கு நடந்தார். உள்ளே நுழைந்து திரும்பியதுமே மணியினுடைய போட்டோ கடை. மணியை அங்கே காணவில்லை
  அங்கே   பெரியப்பா பார்த்தமாதிரியே முகப்பில்  பளிச்சென்ற வெளிச்சத்தில் என்னுடைய போட்டோ ஒன்று மீண்டும் தொங்கிக் கொண்டிருந்தது.!!
 சற்று அருகில் போய் பார்த்தோம்  பிரதி ஒன்றுக்கு விலை ஐந்து ரூபாய் என்று எழுதியிருந்தது.
 
                
     அம்ருதா  மே  13

Saturday, May 4, 2013

poem by vaidheeswaranவயதின் விரிசல்
------------------------------------------   வைதீஸ்வரன்


நினைவுகள்
கைநழுவும்  மீன்கள்
காலத்தோடு  பதுங்கிக் கொள்ளும்
கைக்கெட்டாப் பச்சோந்தி....
முகங்களின் பெயர்களை எப்படி மாற்றுகின்றன?...
சில சமயம் இறந்த வருஷங்களை
இடம் மாற்றி நிறுத்துகின்றன..
வேளை எனக்கு வெவ்வேறு  வரிசையில்
விடிகிறது..
பலமுறை
 நேற்று நடந்ததை இன்றாகவும்
இன்று பார்ப்பதை இனிமேல் தான்
பார்க்கப்  போவதாகவும்  ஏமாறிக் குழம்புகிறது
மனம்.
வந்த போது தெரிந்த நீங்கள்
விடைபெறும்போது வேறொருவராகிப்
போகிறீர்கள்......ஏன்  அப்படி?
 நினைவு மூட்டைகள்  சிதறித் தெறித்து
விட்டன.......  பாரமற்ற  தலை..
ஆசிரியரற்ற   ஆரம்பப் பள்ளிக் கூடம்...
இப்போது ஆகாசம்  எனக்கு உள்ளும் புறமும்
ஏதோ முடிவில் இறங்கி
இப்போது  குடையும் கையுமாக
கால் வீசி நடை பயில்கிறேன்...
குழந்தைகள் எப்போது  மீனானார்கள்?
 குளத்தின்  ஆழமா இது ?
அல்லது   இப்படி ஒரு  செவ்வானமா?

[*''கணையாழி  மே 13]