vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, July 11, 2014

கைக்குட்டை                                        எஸ்.வைதீஸ்வரன்  சுமார்  இருபது  வருஷங்களுக்கு முன்பு  நான் கேட்ட  தகவல்  இது.

தத்துவஞானி ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  பல வருஷங்களாக ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும்  சென்னைக்கு  வந்து  மூன்று நான்கு நாட்களுக்கு சொற்பொழிவாற்றுவார். 

காலைவேளைகளில் ஆர்வலர்களோடு கேள்வி-பதில் நிகழ்ச்சிகளும் ஸ்வாரஸ்யமாக  நடை பெறும்.  இந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கி ஒரு பெரிய அறிவுஜீவிக்கூட்டமே ஒவ்வொரு வருட மும் காத்திருக்கும் .

அவருடைய சொற்பொழிவின் சாராம்சமே “என்னை நீங்கள்  எந்த விதத்திலும் உயரமான பீடத்தில் உட்கார்ந்திருக்கும் குருவாக பாவிக்கக்கூடாது. இங்கே நான் உட்கார்ந்திருப்பது ஒரு நிமித்தமே!  இந்த சொற்பொழிவு உங்களுக்குள் ஆழமான சுயமான கேள்விகளைத்  தூண்ட வேண்டும். அதன்  மூலம் உங்களுக்குள் ஏற்படும்  எண்ணங்கள்  தாண்டிய உணர்வு பூர்வமான “புரிதல்” உங்கள் வாழ்க்கையை முற்றிலும்  மாற்றி அமைக்க வேண்டும். தயவு செய்து இங்கே பேச்சைக் கேட்டுவிட்டுப் போகும் மனப்பான்மையுடன் வர வேண்டாம்..”  என்பது தான்

 அவர்  சென்னைக்கு வரும் போதெல்லாம் விடியற்காலையில்  கடற்கரைக்கு போய்  நீண்ட நேரம் நடைபயில்வார்.அவருடன் கூட அவருக்கு இணக்கமானசில நண்பர்களும் தொடர்ந்து செல்வார்கள். ஆனால் மௌனமாகத் தான்  நடப் பார். 

 ஒரு  நாள் அவர் அப்படி நடந்துபோய்க்கொண்டிருந்தார். அவர் சற்று வேகமாக நடப்பார்.  தொடர்ந்து போன நண்பர்கள் சற்று பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது  பிளாட் பாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு நொண்டிப் பிச்சைக்காரன் வயதான பெரியவரைப் பார்த்தவுடன் வேகமாக அவரை எதிர்கொண்டு “அய்யா...தருமம் போடுங்க அய்யா!..”  என்று  கை நீட்டினான்.

ஜே.கே  சட்டென்று நின்று  விட்டார்.  அந்தப் பிச்சைக்காரனை சில வினாடிகள் கூர்ந்து பார்த் தார். தன் ஜுப்பாவின் பைகளில் கையை விட்டு அதில் இருந்த புத்தம்புதுக் கைக்குட்டையை அவனிடம் அன்புடன் கொடுத்துவிட்டு  நடையைத் தொடர்ந்தார். 

பிச்சைக்காரன் குழப்பத்துடன்  கைக்குட்டையைக் கையில் வைத்துக்கொண்டு அவர் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே நின்றான். ‘இவர் என்ன பைத்தியமா? இந்தக் கைக்குட் டையை நான் என்ன செய்வது?’  என்று கூட  அவனுக் குத்  தோன்றியிருக்கும்.

அப்போது  பின்னாலிருந்து ஓடிவந்தார் ஒருவர். “இந்தக் கைக்குட்டையை அந்த அய்யா  கொடுத்தாரா?”  பிச்சைக்காரனிடம் கேட்டார்.  பிச்சைக்காரன்  “ஆமாம்” என்றான்.

“இந்தா  பத்து ரூபாய். தரேன்......அந்தக் கைக்குட்டையை எனக்குக் கொடுத்து விடு.”  என் றார். பிச்சைக்காரன்  சந்தோஷமாக அந்தக் கைக்குட்டையை அவரிடம் கொடுத்து பணத்தை  வாங்கிக்கொண்டான்.

“அந்த அய்யா பெரிய குருஜி... தெரியுமா உனக்கு?”என்று சொல்லிக்கொண்டே கைக்குட்டை யைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு நகர்ந்தார் அந்த மனிதர். ஒரு பெரிய பொக்கிஷம் கிடைத் தது போன்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் பொங்கியது..

“ஆமாங்க..உண்மையிலேயே அவரு பெரிய மகான் தான்...அவரால எனக்கு எவ்வளவு பெரிய தருமம் இன்னிக்கு  கிடைச்சிருக்கு! “ என்று சொல்லிக் கொண் டான் பிச்சைக் காரன்.

இந்த நெகிழ்ச்சியான  சம்பவத்தைக் கேள்விப்பட்ட போது எனக்கு இரண்டு விதமாக  நினைக் கத்தோன்றியது.

ஒன்று... சித்தர்கள் தான் இந்த மாதிரி  நடைமுறையான நிகழ்வுகளில் வினோதமான தீர்வைத் தர முடியும். அவர் செய்த தருமம்  வித்யாசமானது..!

இரண்டு...என்ன தான் ஜே.கே.  .தன்னை  ஒரு பெரிய குருவாகப் பார்த்து ஆராதிக்காதீர்கள் என்று சொன்னாலும்  அவரை ஒரு மகானாக பக்தியுடன் பார்க்கும் நேயர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 


                   
  அமுதசுரபி  ஜூன்  14

Thursday, July 3, 2014

பருக்கை

பருக்கை

வைதீஸ்வரன்


பருக்கை
வைதீஸ்வரன்
அன்று  ஒரு  கல்யாணத்திற்குப் போக அழைப்பு வந்தது.  அவர்கள்  அதிகம் பரிச்சய மில்லாதவர்களாக  இருந்தாலும் சில உறவு நிர்ப்பந்தங்களால் இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு போயாக வேண்டியிருக்கிறது...

 ஆனால்  அன்று அந்தக்  கல்யாணத்துக்குப் போக எனக்கு கொஞ்சமும் மனம் ஒப்ப வில்லை.  காரணம் என்று எதுவும்  இருக்கவில்லை. ஆனால்“ “”நான்  வரவில்லை “ என்று மனைவியின்  ஏமாற்றத்தையும் பொருட்படுத்தாமல் அவளிடம் உறுதியாக  சொல்லி விட்டேன்.  

 மாலையில்  போவதற்கு  என்று  எந்த  இடமும் இல்லாவிட்டாலும்  நான் நடக்கும் திசைகளை என்  கால்களே  தீர்மானிக்கட்டும் என்று  வெளியில் இறங்கிவிட்டேன்.  பல சமயம் எனக்கு இப்படிப்பட்ட இயக்கம் பிடிக்கும்.  நோக்கமோ  அவசரமோ அவசி யமோ  எதுவுமில்லாத ஒரு அசைவுக்கு  ஒரு  விடுதலை இருக்கிறது இறக்கையசைக் காமல்  பறப்பது  போல்  ஒரு  மிதப்பான அனுபவம்.   தெருக்கள்  எல்லாமே நடப்பவனை அலட்சியப்படுத்துகிற மாதிரி தான்  இருக்கிறது...கடந்துவந்த தெருக்களை திரும்பிப் பார்க்கும்போது எப்படிக் கடந்து வந்தோம் என்று திகைப்பாகக் கூட  இருக்கிறது. சில சமயம் 

அதுவும்  அன்று  நான்  கடந்து  வந்த  தெருக்கள்  ஒவ்வொன்றிலும்  ஏதாவது  ஒர்  விசேஷமோ கொண்டாட்டமோ  கல்யாணமோ கோவில் உற்சவமோ ஏதாவது ஒன்று தெருவை அடைத்துக்  கொண்டிருந்தன.

 அந்த  நாள் ஏதோ விசேஷ நாளாக  இருக்கவேண்டும். ஒருவேளை அந்த  ஆண்டின்  கடைசி முகூர்த்த  தினமாகக் கூட  இருக்கலாம். போகிற  வழியில் குறைந் தது  இரண்டு  மூன்று கல்யாண  மண்டபங்களை நான் கடக்க  நேரிட்டது.  இது யதேசையாக நேர்ந்த தாக  இருக்கலாம். 

ஒரு தெருவில் அந்த கல்யாண மண்டபத்தின் வரவேற்பு அலங்காரம் அநேகமாக நடை பாதைவரை தாண்டியிருந்தது.  இரண்டு பக்கங்களிலும் கார்களும் ஸ்கூட்டர்களும் நெருங்கிப் புதுங்கி தெருவை ஒற்றையடிப் பாதையாக ஆக்கிக் கொண்டிருந்தன. உறவுக ளும் நண்பர்களும் கூட்டங் கூட்டமாக நுழைவதும் வருவதுமாக இருந்தார்கள். அநேகமாக  தெருவில் நடப்பவர்கள் எல்லாருமே கல்யாண வீட்டிற்குள் நுழைந்துவிட லாம்!!  அப்படி ஒரு  சந்தடி.!!

பூவாசனை  சந்தனகந்தம்  பன்னீர்மணம் வெற்றிலை வாசம் வியர்வை நாற்றம்  உடல் பூச்சுக்களின் மூச்சுக்களின் நெடி  என்று பலதும் அந்த வாசலின்  புழுக்கமான  மாலைக் காற்றில் கலந்து  குழப்பிக் கொண்டிருந்தது.

 இந்த சங்கடத்திலிருந்து தப்பித்துக்  கொள்ள  சற்று வேகமாக  மண்டபத்தின் வாசலைக் கடந்தேன்.  வசதியாக  அருகில் திரும்பிய  ஒரு  சின்ன  சந்துக்குள் நுழைந்துவிட்டேன். அங்கே அதிக  வெளிச்சமில்லை ஆனால் சற்று அதிர்ச்சி தருவதாக வீடுகளின்  பின்புறங் கள் தான்  அந்தத்  தெருவுக்கு இருபுறமும் வரிசையாக  இருந்தன... நுழைந்தது தவறென் றாலும்  கடந்து தான் தீர  வேண்டும்.

கொஞ்ச  தூரம் நடந்துசென்றபோது  பக்கவாட்டில் கல்யாண மண்டபத்தின் நீண்ட சாப்பாட் டுக் கூடம்  மேல்மாடியில் பிரகாசமான விளக்கொளியில் தெரிந்தது.  அங்கே வரிசையாக  உட்கார்ந்து  சாப்பிடுபவர்களையும் பண்டங்கள் ரொப்பிய பாத்திரங்களோடு முன்னும் பின்னுமாக உலா வரும் பரிமாறுபவர்களையும் பார்க்க முடிந்தது.

“ அண்ணா...சாம்பார்  இன்னும் கொஞ்சம்  போடட்டுமா?’

 “டேய்..  அந்த  மாமிக்கு  பால்  பாயஸம்  ஊத்துடா! “

  “அப்பளம்...  அப்பளம்  கொண்டா..டா....இந்தப்பக்கம்....”

 “அதோ அந்த  மூலையிலே நாலு  இடம் காலியா  இருக்கு...”

இந்தக் கூக்குரல்களோடு  விருந்தின்  கதம்ப மணமும்  கலந்து  வேடிக்கையான உச்சிக் காட்சியாக  இருந்தது.!

 மேலே தெரிந்த மண்டபப் பந்தலின்  பிரகாசமான  ஒளியின் காரணமாக கீழே தெருச் சுவரோரம்  இருட்டில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த  உயரமான  தகரத் தடுப்பை  நான்  உடனடியாக கவனிக்கவில்லை.  

 மேலே விருந்து சாப்பிட்ட  எச்சில் இலைகளை எல்லாம் அங்கே தான்  போடுகிறார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.  

நான்  அதைக் கடந்து போக முயற்சித்தேன் . இருண்ட குப்பைத் தொட்டிக்குள் பார்வைக்குத் தெரியாமல் ஒரு  நாய்  ஆத்திரத்தோடு உறுமுகிற சத்தம் கேட்டது. சத்தம் பயங்கரமாக தூண்டப்பட்டதாக இருந்த்து.  மாறி மாறி உச்சத்துக்கு போய் கமறலாக இறங்கியது. கேட்பதற்கு நடுக்கமாக  இருந்தது.

எதையோ எதிர்த்து விரட்டிக் குரைப்பது போல் நாயின் குரைப்பு ஆங்காரத்துடன் எதிரொலித்தது. ஆனால் நாய் என் பார்வைக்குப் படவில்லை.  இன்னொரு நாயின் பதில் குரைப்பும் கேட்கவில்லை!

எச்சிலிலைகளுக்காக  தகரத் தடுப்புகளின் பின்னால் இரண்டு  நாய்கள் அடித்துக் கொண்டு .போராடிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.  ஆனால்  நாய்களை பார்க்க முடியவில்லை.

வினோதமாக குரைப்பும் உறுமலும் ஒரே நாயினிடமிருந்து தான் வந்துகொண்டிருந்தது.. . ஏன் அப்படி? விசித்திரமாக இருந்தது. 

 மறுகணம்  அந்த  நாயின்  பலமான உறுமல் திடீரென்று  சில நொடிகளில்  மாறி வலிவேதனையின் உச்சத்தில் ஒலிக்கும் ஊளையாக மாறியது. தகரத் தட்டிகள் முன்னும் பின்னும் தள்ளாடின. 

 திடீரென்று வெளிப்பட்ட அந்த நாய் வெளியே பாய்ந்து ஓட யத்தனித்தது. ஆனால் அதனால் வேகமாக ஓடமுடியவில்லை.  பின்னங்காலை நொண்டிக்கொண்டு  வாலை மடக்கிக் கொண்டு ஊளையிட்டவாறே திரும்பிப்பார்த்துக்கொண்டு நொண்டி  நொண்டி நகர்ந்து  போயிற்று.

காட்சியின் வேதனை நெஞ்சைப் பிழிந்தது.  எச்சில்சோற்றுக்காக அந்த  நாயைக் கடித்துக் குதறி விரட்டிய அந்த இன்னொரு நாய் எப்படிப்பட்ட வெறியனாக இருக்க வேண்டும்?

காக்கைகள் கூட பகிர்ந்து உண்ணுகின்றன  இந்த நாய்களுக்கு ஏன் அந்த பண்பில்லை?

எந்தக் கணமும் அந்த நாய் இலையை வாயில் கவ்விக்கொண்டு வெளியே வர லாம்......திகைப்புடன், அதைப் பார்த்துவிடவேண்டுமென்று நிலைத்திருந்தேன்..

  அப்போது தான்  அங்கே பார்த்தேன்.

 இரண்டு மூன்று எச்சில் இலைகள் நிறைய மிஞ்சிய சோற்றைப் பொட்டலம் கட்டிக் கொண்டு கையில் ஒரு கொம்புடன்  புறங்கையிலும் மாரிலும்  ரத்தம் வழிய, வாயிலும் உடம்பிலும்  தாடியிலும் பருக்கைகள் சிதறி ஒட்டிக்கிடக்க, பரட்டைத்தலையுடன் கருப்பாக அழுக்காக வெளிப்பட்டான். ..ஒருவன்!!! ....... மனிதன்!! 

 அந்த இன்னொரு  நாய்  ஏன்  குலைக்கவில்லை என்ற உண்மை இப்போது என் மனதைப்  பதறவைத்துக்கொண்டிருந்தது.!!!.............

  
[*ஜூலை 2014 அம்ருதா இதழில் வெளியாகியுள்ளது] 
0