vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, April 26, 2017

அசோகமித்திரனும் நானும்


அசோகமித்திரனும்  நானும்
------------வைதீஸ்வரன்

  நான்  பள்ளி வகுப்பை  முடிக்கும்  தருணத்திலிருந்து  அசோகமித்தினுடன்  பழக எனக்கு  நேர்ந்துவிட்டது. அப்போது  அவர்  . தியாகராஜனாக  மட்டும் இருந்தார்.  .செகந்திராபாத்திலிருந்து  வந்து  ஜெமினி ஸ்டுடியோவில் புதிதாக  சேர்ந்திருந்தார்எனது  சகோதரர் ராமநரசு { பெரியம்மா  மகன்] ஏற்கனவே  அங்கே  உதவி இயக்குனராக  இருந்ததால் அடிக்கடி தியாகராஜனை அழைத்துக்கொண்டு  வீட்டுக்கு வருவார்.  அப்போது  தியாகராஜன்  என்னைப் பார்த்த போதெல்லாம்  சிநேகிதமாக  சிரித்துக்  கொண்டு கடந்துபோவார்..  நானும் அப்போது    கல்கி  தேவன்  பாரதியார் வள்ளலார் படிப்பதிலும்; கதைகள்  பாடல்கள்  எழுதுவதிலும் ஆர்வமுடன் இருந்தேன்.

தியாகராஜன்  எங்கள்  வீட்டில்  இரவுகளில்  கூட  என்  அண்ணாவுடன்  தங்குவார். என்  அண்ணா  ஏற்கனவே நாடகத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். அவர் எழுதித் தயாரித்தகண்கள்”  “இருளும் ஒளியும்போன்ற நாடகங்களில் சிவாஜி கணேசன் பண்டரி பாய் நடித்திருந்தார்கள். அந்த சமயம்   என்  அண்ணா  “வானவில்என்று  ஒரு நாடகம்  எழுதிக்கொண்டிருந்தார்  அது  மேரி கார்லி  எழுதிய  நாவலைத் தழுவியதுதியாகராஜனும்  இந்த  முயற்சியில் ஆரம்பக்கட்டத்தில்  அண்ணாவுடன்  ஈடுபட்டிருந்தார்அது  1953- 54  என்று   நினைக்கிறேன் , அப்போது சில கதைகளை  தியாகராஜன்    எழுதியிருந்தார் .  ஒரு  நாடகம்  கூட  ரேடியோவுக்காக  எழுதினார். ஆனால்  கதைகள்  பிரசுரமாகவில்லை. பிறகு  முதல் கதை  கலைமகள்  பத்திரிகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது

  வானவில் நாடகத்தில்  “அசோகமித்திரன்”  என்று  ஒரு  பாத்திரம். இருந்தது.  தியாகராஜன்  அதை தன் புனைபெயராக  வைத்துக்கொண்டார்.  அந்தப் பெயர்  அவருக்கு  ஒரு  அதிர்ஷ்டமான  தேர்வு என்றுதான்  சொல்ல வேண்டும்.

 அசோகமித்திரன்  என்  அண்ணா ராமநரசுவை தன் வாழ்க்கையில்   மரியாதைக்குரிய  ஆதர்ச மனிதனராக; உன்னத நண்பராக  எப்போதும் மானசீகமாக    பாராட்டிக் கொண்டிருந்தார்,

நான்  அவருக்கு  சமகால  நண்பனாக  இளைய சகோதரன்போல் ஆகிவிட்டேன்.

ஜெமினி உத்யோகத்திலிருந்து  அவர்  ராஜீனாமா  செய்தது   அப்போது ஒரு மோசமான  அவசர முடிவாக  இருந்தாலும்  அது அவருக்கு ஒரு  சாதகமான  திருப்புமுனையாக  அமைந்ததை  அப்போது  நாங்கள்  நினைத்துப்பார்க்கவில்லைதன்னுடைய  படைப்பு மனத்துக்கும்  எழுத்துப்பற்றுக்கும் ஏற்ற  உத்யோகமாக  ஜெமினி ஸ்டுடியோ வேலை  இல்லாத அதிருப்தியில்  அவர் உழன்றுகொண்டிருந்தபோது  கல்கத்தாவிலிருந்த  கோஷ்  என்கிறவனின்  தொடர்பு அவருக்கு ஏற்பட்டதுஅவனும் இவரைப் போலவே  எழுதுவதிலும் தவிர  பத்திரிகைத் தொழிலில்  ஈடுபடுவதிலும் ஆர்வம் இருப்பதாக  சொன்னான்..  ஒரு ஆங்கிலப்பத்திரிகையை  இரண்டொரு மாதங்களில் நிச்சயமாக  தொடங்கப்போவதாகவும்  அதற்கு  மதறாஸ்  கிளை ஆசிரியராக  அசோகமித்திரன்  பணி செய்யலாம்  என்றும்  உத்தரவாதம்  கொடுத்தான்நிதி நிலைமை கூட  சாதகமாக ஏற்பாடு செய்துவிட்டதாக   சொன்னான்.. அவன்  வார்த்தையின்  நம்பிக்கையில்  ஜெமினி வேலையில் சலிப்படைந்த  சூழ்நிலையில்  அசோகமித்திரன் வேலையை  விட்டுவிட்டு கோஷுக்காக  காத்திருந்தார். ஆனால் கோஷ்  திடீரென்று திட்டத்தைக்  கைவிட்டு விட்டான்வேறொரு பத்திரிகையில்  சம்பளத்துக்கு சேர்ந்துகொண்டுவிட்டதாகச்  சொன்னான்.

அசோகமித்திரன்  ஒரு  நாள்  கோபமாக  என்  வீட்டுக்கு  வந்தார்  “அந்த  கோஷ்  ஒரு  ராஸ்கல்!.. என்னை நம்பி நீ  ஏன்  வேலையை  விட்டேஎன்று இப்போது கேட்கிறான்””...  என்று  பல்லைக் கடித்துக் கொண்டு  சொன்னார்.

 அவருடைய  பிரதானமான  அடையாளம் இடதுபக்கம் துருத்தலாக  இருந்த  அவருடைய  தாடை தான்அவர் குடும்பத்தில் எல்லோருக்கும் அது  ஒரு பொதுவான  அடையாளமாக  இருந்தது.. அந்த  சமயத்தில் அவருக்கு  திருமணமும்  ஆகிவிட்டது!!

  அசோகமித்திரன்  இயல்பாகவே  வாழ்க்கையை   மனிதர்களை  நுணுக்கமாக  ஆர்வ மாக  தன்னிலிருந்து  விடுபட்டு  கவனித்து வரும்  மனப்பாங்கு  பெற்றவர்ஜன்னல் கம்பி யைப் பிடித்துக் கொண்டு  தெருமனிதர்களை   வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்  ஒரு  சிறுவனின் ஆவல்  அவருக்கு இருந்தது. அதே சமயம்  அந்த அனுபவங்களில்  அலாதியான  ஒரு மனித நாடகத்தை  உள்ளுணர்ந்து  ரஸிக்கும் கலைஞனின்  பார்வை யும் அவருக்கு வாய்த்திருந்தது.

 பிற  மனிதர்களுக்காகவோ  பிற  சூழ்நிலைகளுக்காகவோ  அவரால்  தன்னை  மாற்றிக்  கொள்ள  முடிந்ததில்லை.. அதே சமயம்    அந்த  மாதிரி சந்தர்ப்பங்களில்  அவரால்  தன் ஆளுமையை அழுத்தமாக  அங்கே சரியாக பொருத்திக்கொள்ள   முடிந்தது.

அடிப்படையாக  ஒரு நல்ல  உத்யோகத்துக்குத்  தேவையான  கல்வித்தகுதியும்  சாதுர்ய மும்  இருந்தும்  கூட அந்த இளம் வருஷங்களில் அவர்  அப்படி ஒரு சுலபமான  வாழ்க்கையைத்  தேர்ந்து கொள்ளாமல்  இருந்தது  வியப்பாகக்கூட  இருக்கிறதுஅதுவும்  அறுபது களில்  கவர்மண்ட்/ வங்கிகள் உத்யோகம்  கிடைப்பது  கஷ்டமான  காரியம் அல்ல. அவருடைய இளைய  சகோதரர் கூட நல்ல  உத்யோகத்திலிருந்தார்..

அசோகமித்திரன் மனதளவில் தன்  வாழ்க்கைப்போக்கை  தீர்மானித்துக்கொண்டு விட்டார்எழுத்தும்  பத்திரிகை ஊழியமும்  தான்  தனது  முழு நேர ஜீவனம் என்று  ஏற்றுக்கொண்டுவிட்டார்அதன் காரணமாக அவருடைய  பொருளாதாரமும்  குடும்ப பராமரிப்பும் எவ்வளவு  பாதிப்புக்கு  உள்ளாகும் என்கிற  யதார்த்தமும்  அவருக்குத்  தெரிந்தே  இருந்ததுஅதனால்தான் அவர் தன் அன்றாட  கஷ்டங்களைப்  பற்றி  எப்போதும்  யாரிடமும் பகிர்ந்து கொள்ளவோ  நொந்து கொள்ளவோ  விரும்பியதில்லைஒருவேளை என் அண்ணாவிடம்  அவர் தன் மனம் விட்டு பகிர்ந்து  கொண்டிருக்கலாம்.

 ஆனால்  இத்தகைய  சுய வாழ்வனுபவங்களை  பொதுமையான  மனித  நிகழ்வாக  சிரிப்பும் வேதனையும்  துக்கமும் அருவருப்பும் வினோதமும் கலந்த  உன்னத நாடக மாக அவர்  படைப்புகள்  மூலம்   அவரால்  மாற்ற முடிந்திருக்கிறது.

 ஆனால்   இது  ஒரு பொதுமையான  விதி  அல்ல. ஒரு எழுத்தாளனின்  படைப்புக்களின்  அனுபவங்கள்  அவன் சொந்த வாழ்க்கை வேதனைகள்  கஷ்டநஷ்டங்களை  சார்ந்திருக்க வேண்டுமென்பதில்லை ...

மகத்தான  படைப்புகளை  எழுதிய டால்ஸ்டாய்  கோடீஸ்வரர்நிலச்சுவான்தார்....  ஹெமிங்வே  ஜான் ஸ்டீன்பெக்  இவர்களெல்லாம்  வசதியானவர்கள்  இப்படி இன்னும் பல வசதியான உன்னத  எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள்......

 ஆனால்  அசோகமித்திரனுடைய    எழுத்துக்கு  தனக்கு நெருங்கிய  இத்தகைய  எளிய இறுக்கமான  உறவுச்சிக்கல்கள் நிறைந்த சூழல்கள்  ஆதாரமாக தேவையாக  இருந்திருக்கிறது .

அசோகமித்திரன்  தனக்கென்று ஒரு வடிவத்தை  சொல்லாட்சியை  சரளமான வாக்கியங்களை  தேர்ந்தெடுத்துக்கொண்டார். ஆனாலும்  அதற்குள்  இலக்கு சிதறாத  பொருள் பொதிந்த அடர்த்தியான யதார்த்தமான செய்திகளை கட்டுக் கோப்பாக  வாசகன் மனதில்  நேரடியாக  தைக்கும் விதத்தில்  அவரால்  சொல்ல  முடிந்ததுசிறந்த நவீன அமெரிக்க ஐரோப்பிய  எழுத்தாளர்களை அவர்  தீவிரமாக வாசித்திருக்கிறார்நேசித்திருக்கி றார்அவர்கள்  கதை  சொல்லும் கச்சிதமான நேர்த்தியை  அவர்  அனுபவித்து உள்வாங்கிக்  கொண்டிருக்கிறார்அவர்  கதை சொல்லும் முறையில்  அத்தகைய  தொழில் நேர்த்தியை  பிசிறில்லாத வெளிப்பாட்டை  தேர்ந்த வாசகன்  கண்டறிய  முடியும்.

ஆனாலும்  தமிழ் சமூகத்தின் அடையாளத்தையும்  இந்திய  உருவகத்தையும்  தன்  எழுத்தின்  ஆணி வேறாக  வரித்துக்கொண்டிருந்தார். அதுதான் அவருடைய  சுயமான  படைப்புத் திறமை.

 அவருடைய  மொத்த படைப்புமே  ஊரெங்கும்  இடையறாமல்  தொடர்ந்து கொண்டிருக்கும்  சாதாரண நடுத்தர மக்களின்  கரடு முரடான  சவால்கள்  நிறைந்தஅற்ப சந்தோஷங்கள் ஊடு பாவிய  ஏதோ ஒரு வித அறியாமையில் தன்னையும் மற்றவரையும் வருத்திக்கொள்ளும் வாழ்க்கையின்  வெவ்வேறு  அங்கங்கள்  தான்.. அதுவும் அத்தகைய வசதி குறைந்த குடும்பங்களில்  இளம் பெண்களின்  மௌனமான  ஆறுதலற்ற  வாய்விட்டு அழ முடியாத  ஊமை வேதனைகள்  அவர் கதைகளில்  ஆழமான  வடுவாக  விரவிக் கிடக்கிறது.

 அசோகமித்திரனில்  நான்  கண்ட  மனித பிம்பம்  பற்றிய  கருத்தை அவர்  புத்தகத்துக்கு  எழுதிய என்னுடைய  முன்னுரையில்  “ His  Man  is  a fondling  abandoned  by  the  forces  that  created  him”   என்று  சொல்லியிருக்கிறேன்.

அவர்  கதைகளின்  நிகழும் சம்பவங்களால்  நமக்கு  துக்கம்  தொண்டையை  அடைத்துக் கொள்ளும்விபரீதங்களால்  மனம்  துணுக்குற்று  நிற்கும்கேவலமான  உறவுப் பகைகளால்  வேதனை அடையும்மனிதனின்  கோமாளித்தனமான சுபாவங்களால்  நமக்கு  அடக்க முடியாமல்  நினைத்து  நினைத்து  சிரிக்கத்  தோன்றும்.

 85  ஆண்டுகள்  இடையறாமல்  இயங்கி  வந்த  அவருடைய  அசாத்தியமான  ஏராளமான  இலக்கியப் படைப்புகளைப்  பற்றி  தனித்தனியே  விவரிக்கத்  தேவையில்லைதமிழ்ப் புனைகதை வரலாற்றில்  மிக முக்கியமான  படைப்பாளியாக  அவர்  என்றைக்கும்  கருதப் படுவார்.

 புனைகதைகள்  மட்டுமல்லஒரு  NORMAN MAILER     போல  ஒரு  ஸ்வாரஸ்யமான  நல்ல  வாசிப்புக்கு ஏற்ற  வரலாற்று  சமூக  மனித  செய்திகள்  தாங்கிய  அநேக  கட்டுரைகளை  ஒரு  நல்ல  ஊடக  எழுத்தாளருக்கு  இணையாக  அவர்  எழுதி இருக்கிறார். அவைகளை  நிச்சயமாக  ஒரு கணிசமான  ஆவணமாகக்  கருதலாம்.

தவிர  கணையாழி  பத்திரிகையின்  தொடக்கம்  முதலே  அவர்  பொறுப்பாசிரியராக  பணி செய்த கால கட்டத்தில்  பல  புதிய இளம்  எழுத்தாளர்களின்  ஊக்கப்படுத்தவேண்டிய  படைப்பாற்றலை  கண்டறிந்து  பிரசுரித்த  கதைகளும்  அந்த  ஊக்கத்தால்  பிற்காலத்தில்  சீரிய  எழுத்தாளர்களாக  வளர்ந்த  பல படைப்பாளிகளும்  அசோகமித்திரனின்  இலக்கிய  மதிப்பீடுகள்  பற்றிய  நுண்ணுர்வை  நமக்குத்  தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட  முதிர்ந்த  இலக்கியப் பான்மை  கொண்ட அருமையான  எழுத்தாளருக்கு  உரிய  கௌரவங்கள்  போய் சேரவில்லை  என்று  ஆங்காங்கே  எல்லோரும்  சொல்லுகிறார்கள்.  ஞானபீடம்  கிடைக்கவில்லை  நோபல்  பரிசு  கிடைக்கவில்லை  என்றெல்லாம்  சொல்லுகிறார்கள்.  இந்த  விருதுகள்  எல்லாம் காலத்தின் பார்வையில் தற்காலிகமான  கௌரவ  அடையாளங்கள் தான்.  ஆனால்  அதன் சார்பாக  எழுத்தாளனுக்கு  கிடைக்கும்  பொற்கிழி  நிச்சயமாக  அவனுடைய  அப்போதைய கஷ்டங்களை குறைத்து சௌகரியங்களை  அதிகப்படுத்தி  நிம்மதியை  ஏற்படுத்தலாம்

ஆனாலும் வரும்  தலைமுறைகளில்  ஒரு  படைப்பை  வாசிக்கும் நல்ல  வாசகனுக்கு  அந்த  எழுத்தாளர்  வாங்கிய  விருதுகள்  பொருட்படுத்தும்  அளவுக்கு  ஞாபகத்துக்கு வராதுஅவர்  விட்டு சென்ற   படைப்புகளின்  தாக்கம் தான்  அவனுக்கு  உன்னத  அனுபவமாக  எண்ணங்களில்  மீண்டும்  மீண்டும் புத்துணர்ச்சி  கூட்டும்  தருணங்களாக  இருக்கும்
v      
அசோகமித்திரனை  அவர்  இறப்பதற்கு  பத்து  நாட்கள் முன்பு கூட நேரில்  சந்தித்து பேசினேன்  “விளக்கு”  பரிசு  விழாவில்  கலந்துகொள்வதற்காக  வந்திருந்தார். ]

அப்போது . எனக்காக  கொண்டு வந்திருந்த  ஒரு  பெரிய  ஓவியப் புத்தகத்தை  பரிவுடன்  கொடுத்து விட்டு  கை பிடித்துக்  குலுக்கினார்.  அவருக்கு  பொதுவாக கவிதைகள்  பிடிப்பதில்லை என்று  அடிக்கடி  ஊடகங்களில்  சொல்லிவந்திருக்கிறார்.

ஆனாலும் என்னுடைய    கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து  நான்  பிரசுரம் செய்ய உதவி இருக்கிறார் Writers Workshop    Calcutta  பிரசுரித்த  என் கவிதை  தொகுதிக்கு   அவர்  எழுதிய  முன்னுரை  ஒரு  ஆதர்சமான  மதிப்பீடாக  அமைந்தது.. சீதாகாந்த் மகாபாத்ரா என்கிற ஓடிஷாவின் முக்கிய கவிஞரின்  கவிதைகள் பற்றிய  அவருடைய  ரஸனைகள்  அடங்கிய  சின்ன ஆங்கில பிரசுரத்தை  நான்  பார்த்திருக்கிறேன்..!!!

 23 மார்ச் 17  அன்று அவர்  இறந்த  சேதி  கேட்டு  வேளாச்சேரிக்கு அவர்  மகன்  வீட்டுக்கு  விரைந்தேன்.  . அப்போது  சடங்குகள்  முடிந்து அவர் உடலை தூக்கும்  தருவாயில்  நான் அவர்  அருகில்  போய் அவசரமாக  அதிர்ச்சியடைந்தவனாக  பார்த்து  வாய் பொத்தி நின்றேன்

அவர் கதைகளில்  வரும் பாத்திரம்போல்தான் அது  இருந்ததுஅவர்  வாய்  அகலமாகத் திறந்தபடி இருந்தது. வழக்கமாக  உயிர் பிரிந்தவுடன்  இப்படி  நேர்ந்து விடாமல்   வாயைக் கட்டி  விடுவார்கள்.

அவர் வாய்  அன்று திறந்தே  இருந்தது..

திறந்த   வாயில் கடந்த சில வருஷங்களாக  அவர் பொருத்திக் கொண்டிருந்த   அந்த  பொய் பற்களில்லை.   ஆகாசம் போல் அது    திறந்தபடியே  நிர்மலமாக  இருந்தது...........................

                              வைதீஸ்வரன்  ஏப்ரல்  2017