vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, April 27, 2016

இட ஒதுக்கீடு - வைதீஸ்வரன்

இட ஒதுக்கீடு


            வைதீஸ்வரன்   


பிளாட்பாரத்தில்  முக்கால்  மணி நேரமாக  உட்கார்ந்திருந்தோம்.  இரவு
பத்து மணிக்கு புறப்படுகிற  ரயில்  அஞ்சு நிமிஷம் கழித்துத்தான் பிளாட்
பாரத்துக்கு வந்து நின்றது.  வெளியே ஒட்டியிருந்த  பெயர் பக்கத்தை சரி
பார்த்து கைப்பெட்டியுடன்  உள்ளே தள்ளாடி  முட்டி மோதி நகர்ந்து  என்
ஸீட்டை ஒரு வழியாய்க் கண்டுபிடித்துவிட்டேன்.  அதில்  ஏற்கனவே
சற்று வயதானவர்.

   “அம்மா....இது  என் ஸீட்டு   9.  ...”

அந்த மாது என்னை   ஏறிட்டுப் பார்த்த வண்ணம்  சற்றும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

 “அம்மா....  இதோ பாருங்கள்...என்  டிக்கட்டு......இது  என்  ஸீட்டு.. A9 நீங்கள்  
தவறாக  உட்காந்திருக்கிறீர்கள்....

இது  என்  ஸீட்டு  ஸார்..  நீங்கள்  தான்  தப்பாக  சொல்லுகிறீர்கள்.  நான் 
பார்த்து விட்டுத்தான்  உட்கார்ந்திருக்கிறேன்...”  அந்த  அம்மாள் மிக நிச்சய
மாக  அழுத்தமாக  சொல்லிவிட்டு  சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள்.
மேலும் என்னுடன் பேச விரும்பாதவள்  போல்.

  “இல்லை..மேடம்... இதோ பாருங்கள்  என்  ஸீட்டு நம்பர்   9 ..”

 “ நீங்கள்  என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.  9  என்  ஸீட்டுத்தான்.. கம்பார்ட்மெண்ட் நம்பர்  பி2..........உங்களுடையது  வேறாக  இருக்கலாம்.

  நான்  சொன்னேன், மீண்டும்  டிக்கட்டைப் பார்த்துவிட்டு.. “இல்லை மேடம்... 
என்  டிக்கட்டு  இதோ...எனக்கும்  கம்பார்ட்மென்ட்  பி2 தான்.. நீங்கள்  தப்பாக 
வந்து விட்டீர்கள்.

இல்லை  இது என்  ஸீட்டுத்தான்  ..டி டிஆரிடம்  போய் சொல்லுங்கள்...

  “இல்லை  மேடம்  நீங்கள்  தான்  தவறாக,,,,”

அந்த  மாது  உரத்த குரலில்  பேசினாள். .. Don’t disturb me…Go away. I cannot    
vacate.   This  is  my  Seat…” அவள்   ஒரு வேளை  ஓய்வு பெற்ற 
கல்லூரி பிரின்ஸிபாலாக  இருக்கலாமோ!!

நகராமல்  வழியை  அடைத்துக்கொண்டு நான்  அந்த  மாதுவிடம்  வாதாடிக் கொண்டிருந்ததை மேலும் பொறுத்துக்கொள்ளா முடியாமல் உள்ளே வர 
முடியாத  பயணிகள்  கத்தினார்கள்.

 “மிஸ்டர்  வழியை  விட்டுட்டு  சண்டை போடுங்க....நாங்க  உள்ளே போக  வேண்டாமா?“

 “ஸார்  என் ஸீட்டு  A9 பாருங்க...இவங்களும்  அதே நம்பர்னு  சொல்றாங்க.. 
பாருங்க.. “   நான்  என்  டிக்கட்டை  அவர்களிடம்  காட்டினேன்.

 பயணிகளில் ஒரு  இளைஞன்.  கம்ப்யூடர்  பையனாக  இருப்பான்
போலும்.    “ஸார்... உங்க  டிக்கட்டை  கொடுங்க....”    

கொடுத்தேன்.

சரியா  இருக்கு....அம்மா...ஒங்க  டிக்கட்டைக் கொடுங்க...

 தயக்கத்துடன்  சற்றுக் கோபமாக  அவள்  டிக்கட்டைக் கொடுத்தாள்.

  “அம்மா  ஒங்க  ஸிட்  நம்பர்  கம்பார்மென்ட்  நம்பர்  எல்லாம்  சரியாத் தான்...இருக்கு........

அந்த அம்மாள்   கோபத்தோடு  குறுக்கே பேசினாள் :

Tell  this   bloke   I  have  the  correct   Seating…Bloody  nuisance”

அந்தப்  பையன்  அவளைக் கையமர்த்தி விட்டு  சொன்னான்.  

 Wait  Madam..  நான்  சொlல்றதை  கேட்டுட்டு  பேசுங்க...நீங்க  உக்காந்த  ஸீட் 
சரியானது  கம்பார்ட்மெண்ட் சரிதான். ஆனா.  ஒக்காந்த  ரயில்  தான்  வேறெ! 
இது  25630.   நீங்க  ஏறவேண்டிய  வண்டி  25360.  அதோ  அந்த  நாலாவது 
பிளாட்பார்த்திலே  நிக்குது....இந்தாங்க  டிக்கட்...

அந்த  அம்மாளின்  முகம்  சிவந்து  பதறியது.  தலையைக் குனிந்தவாறு 
 “ What  a  confusion…Oh!  Hell…”  அவள்  எழ முடியாமல்  எழுந்து தடுமாறி 
நின்றாள்.

அவள் பெட்டியையும்  பைகளையும் அவசரமாக   சிலர் தூக்கி வெளியே இறக்கி வைத்தார்கள்.

  அவளையும்  ஒருவன்  கைத்தாங்கலாக  இறக்கிவிட்டான்.

அவள் நிலைமையப்  பார்க்க  எனக்கு பரிதாபமாக  இருந்தது.  அவளை
கண்ணாடி வழியாகப் பார்த்து  “SORRY “  என்றேன்.

 அவள்  என்னைப் பார்க்க விரும்பாமல்  கோபமாகத்   தலையைத்
திருப்பிக்கொண்டாள்.

அவள்  யார் மீது  கோபப்பட வேண்டுமோ!................. 

  நாலாவது  பிளாட்பாரத்தில் அவள்  ஏறவேண்டிய ரயில் ஒரு குலுக்க
லுடன் நகர்ந்து  கொண்டிருந்தது...............  ...


Friday, April 22, 2016

நவீனக் கவிதை பற்றி டாகூர்

நவீனக்  கவிதை  பற்றி  டாகூர்
வைதீஸ்வரன்

ரவீந்திரநாத்  தற்காலக்  கவிதையைப் பற்றிய தன் கருத்தை
இவ்விதம்  தெரிவிக்கிறார்.

வாழ்க்கையை அதீதமில்லாமல் அப்பட்டமாகக்  கண்டு
அலங்கரிக்காமல் வெளிப்படுத்துவதில் அவருக்கு ஒப்புதல்  
இல்லையென்று  இந்த வரிகள்  தெரிவிக்கின்றன:

ஒரு கவி ஒரு பெண்ணின் சிரிப்பழகை விவரித்தால்  இந்த 
செய்திவெளியிடத்தக்கதுதான் என்பேன். ஆனால் கவி இந்த 
வருணனைக்குப் பிறகு அந்தப் பெண் ஒரு  பல்ருத்துவரிடம் 
போவதாகவும் அந்த மருத்துவர் இயந்திரங்களைக் கொண்டு 
அந்தப் பெண்ணின்  பற்களைச் சோதித்து அவற்றில் கிருமிகள் 
இருப்பதாகச் சொல்வதாகவும் எழுதினால், இதுவும் செய்திதான். 
என்றாலும் எல்லோரையும் கூப்பிட்டுத் தெரிவிக்கத் தக்க செய்தி
யல்ல என்று நான் சொல்வேன்.

இந்தச்  செய்தியைச்  சொல்வதிலே யாராவது மிகுந்த ஆர்வம்
காட்டினால் அவருடைய  குணத்திலேயே நோய்மை பிடித்திருக்
கிறதென்று  சொல்வேன்  “

(  “ரபீந்திரநாத்  டாகூரின்  கட்டுரைகள்  “)


             Sunday, April 10, 2016

எழுத்தாளர் சார்வாகன் அவர்களை சந்தித்த தருணங்கள்

எழுத்தாளர்  சார்வாகன்  அவர்களை  சந்தித்த  தருணங்கள்

வைதீஸ்வரன்
       


இலக்கியப்பத்திரிகைகளில்  எழுதுவதை  நாங்கள்  எல்லாம் 
அறுபதுகளிலிருந்தே தொடங்கிவிட்டாலும் சார்வாகன் அவர்களை 
நான் முதன்முதலில்  நேரில் சந்தித்தது  90க்குப் பிறகுதான்.

நகுலன் தயாரித்த ’குருக்ஷேத்திரம்’ தொகுதியில் நான் மிகவும் 
ரஸித்து வாசித்த அவர் கதை “சின்னமன்னூரில்  கொடியேற்றம்“ 
மனிதமதிப்பீடுகளை அலட்சியப்படுத்துகிற யதார்த்தத்தை 
நுண்மையான பகடியாக இந்தக்கதை அதற்கும் மீறிய அர்த்த
முள்ள சங்கடமான  மௌனத்தை உள்ளடக்கிக்கொண்டுள்ளது.

தொழுநோய் மருத்துவரான டாக்டர் ஹரிசீனீவாஸன் என்கிற 
சார்வாகன் வாழ்க்கையின் பெரும்பகுதியை மனித உடலின் 
செயல்பாடுகளைப்பற்றிய  படிப்பிலும்  ஆராய்ச்சியிலும்  நோய்
நீக்கும் பணிகளிலுமே  செலவிட்டவர்..

தன்  அறிவை  விற்று  பொருளை ஈட்டுவதைவிட தன் படிப்பு 
மூலம் ஏழைஎளிய  மக்களின்  நோய் வேதனைகள்  தீர்ப்பதில்
தான்வர்  வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது.

 அபாயமும் ஆரோக்கியமும்  எப்போதுமே  கலந்து  தாக்கும்  நமது  
சுற்றுப்புறச்சூழலை  உடல்  தன்  சுய அறிவின் மூலம்  எப்படி 
இயற்கையாக எதிர்கொண்டு ஓயாமல் போராடித் தன்னை  
ஸ்திரப் படுத்துக்கொள்ளுகிறது என்பதை அவர்  தனது  ஆராய்ச்சி
களின் தருணங்களில்  ஒரு  பேரனுபவமாகக்  கண்டு  வியந்ததை  
நான்  அவரை சந்தித்தபோது மிக ஆத்மார்த்தமாகப் பகிர்ந்து 
கொண்டிருக்கிறார்.

ஒரு ரத்தத்தின் அணுவை மேலும் மேலும்  இழை இழையாகப் 
பிரித்துப்  பார்க்கபார்க்க  மேலும்  மேலும்  அபாரமான  
அறிவியல் ஒழுங்குகள் நம் கண்முன்னே  விரிந்துகொண்டே 
போவதைப் பார்க்கலாம்..  இதற்குமுடிவேயில்லை.  நம்முடைய  
இயலாமையால்தான் நாம்  ஒரு  நிலையில் இதை  நிறுத்திவிட்டு  
ஏதோ கண்டுபிடித்துவிட்டதாக  மார்தட்டிக்கொள்ளுகிறோம்.  
ஹ்ஹ்ஹா.....என்று சிரித்துக்கொண்டார்  அவர்..   

 நற்றிணைப்பதிப்பகம் அவருடைய முழுக் கதைத்  தொகுதிக
ளைப் புத்தகமாக கொண்டுவந்திருப்பதை மிக்க மகிழ்ச்சியுடன்  
என்னிடம் தெரிவித்தார்.

அவர்  தள்ளாமையையும்  மீறி நட்புறவுடன் என்  வீட்டிற்கு  
வந்துசந்தித்து  அவர்  தொகுப்பை அன்புடன் வழங்கிய  நினைவு  
எனக்கு நெகிழ்ச்சியான தருணங்கள்.  அவரை விட  வயதில்  
சற்றுக் குறைந்தவன்  நான்...!

அவரை  இலக்கியஉலகம்  இன்னும் ஞாபகத்தில் வைத்துக் 
கொண்டு இப்படி ஒரு  தொகுப்பு   வெளி வர  சாத்தியமானது 
அவருக்கே  ஆச்சரியமாக  இருந்திருக்கிறது.நான்  எழுதுவதை 
நிறுத்தியே  பல  வருஷங்கள்  ஆகிவிட்டது.  என்னை  இப்போது 
ஞாபகம்  வைத்துக் கொள்பவர்கள் கூட எங்கே  இருக்கிறார்கள் 
என்று எனக்குத் தெரியவில்லை.  இந்த  சந்தர்ப்பத்தில் இப்படி 
ஒரு  முழுத்தொகுப்பு!!  என்னாலேயே  நம்ப முடியவில்லை... 
ஆனால்  சந்தோஷமாகத்  தான்  இருக்கிறது.  ஹாஹா......

 “எனக்கு மொத்தமாகவே நான்கு எழுத்தாளர்களைத்தான் 
தெரியும் ஒன்று  பாரவி..இன்னொன்று  நீங்கள்....மூன்றாவது  
ஆள்  செத்துப்போய்விட்டார்.  நான்காவதும்  ஞாபகமில்லை.  
ஒருவேளை அது  நானாகவே இருக்கலாம்!!......ஹாஹா.......
என்றார்.

 கடைசியாக  அவர்  ஒரு  நாள்  அவசரமாக  என்னைத் 
தொலை பேசியில் அழைத்தார்.  வந்து பார்த்துவிட்டுப் 
போய்விடுங்கள்.  அடுத்த மாதம் நான்  இல்லாமல்  
போய் விடலாம்”.

 எனக்கு பதட்டமாக  இருந்தது.

 நான்  உடனே  சென்னையில்  இருந்த  அவரைப் பார்க்கப்
போனேன். தளர்ந்த நிலையில் நாற்காலியில்   உட்கார்ந்தி
ருந்தாலும்  இனிமையும்  சிநேகமும்  அவர்  முகத்தில்  
இன்னும் பரவியிருந்தது.

“உங்களையெல்லாம் ஒரு தடவை பார்த்துவிடவேண்டு
மென்றிருந்தது. இன்னும் ஓரிரு நண்பர்களிடமும் சொல்லி
விட்டேன். . டாக்டராக இருப்பதால்  இப்படி ஒரு  தொல்லை. 
என் உடம்புநிலைமை எனக்கே தெரிந்துபோய்விடுகிறது. 
என் பழைய அனுபவம் ஒன்றை உங்களுக்குச் சொல்ல
வேண்டும்.... உங்களுக்குத்  தெரியுமாஎங்கள்  குடும்பத்தில்  
அத்தனைபேரும் டாக்டர்கள்! என் மனைவி உள்பட!!ஆனா என்ன 
பிரயோஜனம்?  தினப்படி  வழக்கமாக  என் மனைவி  என்னை 
தவறாமல்   விடியற்காலம்  எழுப்பிவிடுவாள்..  வாக்கிங் 
கெளம்புங்கோ!”  என்று  உத்தரவு போட்டுவிட்டு மீண்டும் 
திரும்பிப் படுத்துக் கொள்வாள்.  சில காலத்துக்குப் பிறகு 
விடியலில்  அவள்  உத்தரவு  போடாமலேயே  அவள்  
என்னை விரட்டுவதுபோல் எனக்குத் தோன்றி நான் 
எழுந்துவிடுவதும் உண்டு!!

பத்துவருஷத்துக்கு முந்தி  அன்றும்  நான்  அப்படித்தான் எழுந்து 
அவளை  நன்றாகப் போர்த்தி  விட்டு  வாக்க்கிங் போனேன். 
ஒரு மணி நேரம் கழித்துத் தான்  வந்தேன்  இன்னும் 
நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.  நான்  அவள்  தூக்கத்தைக் 
கலைக்க விரும்பவில்லைநானே  காபி  தயாரித்துக்கொண்டு 
கூடத்தில்  பேப்பரை  விரித்துக்கொண்டு  உட்கார்ந்திருந்தேன்.

 மணி  ஒன்பதரைக்கு  மேல்  ஆகிவிட்டது.  அங்கே வந்த என்  
மகள்     “ஏன்  அம்மாவை எழுப்பவில்லையாஇன்னுமா 
தூக்கம்? “ என்றாள்.

“தூங்கட்டுமேடீ.... ஏதோ அசதியாக இருக்கலாம்...” என்றேன் .
 “நோ..நோ....எழுப்புங்கள்  நேரமாகிவிட்டது  “என்று  உள்ளே 
போனாள். நான் உள்ளே  போய்  அவளை விதவிதமாக  
எழுப்ப முயற்சித்தேன்  அவள்  கண் முழிக்கவே இல்லை.  
கைகள் சில்லிட்டுப் போயிருந்தது…..கலக்கமுடன்  அவசரமாக  
இன்னொரு  இருதய  டாக்டரைக்  கூட்டி வந்து  காண்பித்தோம்.  
உங்கள்  மனைவி  இறந்துபோய்  இரண்டு மணி நேரம்  
ஆகிவிட்டது.  “ என்றார்.  

"என்னால்  அதிர்ச்சியைத்தாங்க முடியவில்லை. அவள் 
காலையிலேயே இறந்து  போய் விட்டாள். இரண்டு  மணி
நேரமாக  மனைவி இறந்ததை  உணராமல் நான் காபி குடித்துக்
கொண்டு  ஆசுவாசமாக கூடத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். .. 
இப்படி ஒரு  விபரீதமான சோகமா ...எனக்கு?...  அவர் கண்ணில்  
ஈரம்  துளித்தது.

 “ஆனால்  இப்பொ  என்  விஷயத்தைப்பாருங்கள்  என்  முடிவு 
எனக்கு அநேகமாக நிச்சயமாகவே தெரிந்து விட்டது.  மாதம்... 
தேதி கிழமை கூட சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ஆண்ட
வன் எனக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டார். என் மனைவியைப்
போல் நான் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் 
சாகமுடியாது.

 இப்போது விடிந்தால் எல்லோருமே ஆவலுடன் 
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி என்னுடைய  சாவுதான்.  
அப்படி ஒரு ராசி  எனக்கு!  என்று  சிரித்துக்கொள்ளமுயன்றார்
அவருக்கு  பலமாக இருமல்  வந்து விட்டது... 

 நிச்சயம் அடுத்தமாதம் வருவேன். இதே கதையை  மீண்டும் 
என்னிடம்  சொல்லி நீங்கள்  சிரித்துக்  கொண்டிருப்பீர்கள் 
ஸார்... வரட்டுமா? “ என்று  விடைபெற்றேன்.

மூன்று நாட்கள்  கழித்து அந்தச்  செய்தி  அவர் குடும்பத்
தாரால் அறிவிக்கப்பட்டது.  

 மனிதாபிமானமுள்ள  மருத்துவர்,  
சிறந்த  எழுத்தாளர்,  
மகத்தான மனிதர் -
டாக்டர் ஹரிஸ்ரீனிவாசன்  என்கிற  சார்வாகன் .
v