vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, December 30, 2016

மேதைக்கு ஏது ஜாதி? - வைதீஸ்வரன்

மேதைக்கு   ஏது  ஜாதி?

வைதீஸ்வரன்
நய்னா பிள்ளை
  சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை





ஒரு மேதையின் மனவெளியில்  மனிதனின் புற அடையாளங்கள் பொருட்படுத்தத்தகுந்ததாக  இருப்பதில்லை.

காஞ்சீபுரம் நயினா பிள்ளை அவர்கள்  ஒரு சங்கீத விற்பன்னர்.  சங்கீத குடும்பத்தில் சூழலில் இருந்தாலும்  பதினெட்டு வயது வரை  மல்யுத்தப் பயிற்சியிலும் மற்ற விளையாட்டுக்களிலும் காலங்கழித்துக் கொண்டி ருந்தவர். திடீரென்று ஒரு நாள் கோவில் சன்னிதியில் பைராகி  ஒருவர் இவரை உட்காரவைத்து சங்கீதப் பயிற்சி  கொடுக்க ஆரம்பித்தார். பிறகு இவர்  வாழ்க்கையே  சங்கீதத்துக்கான அர்ப்பணிப்பாக மாறியது.

அந்த பைராகி தான் யார் என்றுகூட தெரிவித்துக்கொள்ளவில்லை.

நய்னா பிள்ளை சங்கீதத்தை ஒரு விஞ்ஞானியின் பார்வையில்  அணுகி யவர். மேலோட்டமான  ரஸனையைவிட  அதன் தத்துவங்களை  மேலும் அலசிப்பார்ப்பதுதான் அவரது சங்கீத பாணியாக இருந்தது.  இதனால் அவருக்கு பரவலான  ரஸிகர் கள்  இல்லாமல் போனாலும் தனித்தன்மை யான சிறந்த பாடகர்களின் தலைமுறையை அவரால் உருவாக்க முடிந்தது.

அப்படி இவர் உருவாக்கிய சிஷ்யர்களில் சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை  மிக முக்கியமானவர். ஆனால் இந்த சிஷ்யரின் பெயர் முற்றிலும்  வேறானது  என்பது தான்  இங்கே குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

 1930ல்  சென்னையில்  காங்கிரஸ் மகாநாடு கூடியது.  அது  ஒரு பெரிய கலை இசை விழாவாகவும் கொண்டாடப்பட்ட்து. அரிய பெரிய வித்வான்களெல்லாம் அங்கே கச்சேரி செய்தார்கள். நயினா பிள்ளையும் பின்பாட்டாக சித்தூர் வெங்கடரங்க ராமானுஜ நாயுடு என்கிற ஒருவ ரும்  கச்சேரி செய்ய அழைக்கப்பட்டார்கள்.

அப்போது மகாநாட்டு கச்சேரிகளின் ஒருங்கிணைப்பாளர் அங்கே வந்தார்.

நய்னா பிள்ளை   “ என்ன விஷயம்?  “ என்று  கேட்டார்.

அவர் சொன்னார் “அய்யா.. உங்கள் பின்பாட்டுக்காரரின் பெயர் மிக நீளமாக  இருக்கிறது.  கொஞ்சம்  சுருக்கமாக  மாற்றிக்கொடுக்க முடி யுமா?”  என்று  கேட்டார்.

தீவிர சங்கீத சாதகத்தில் இருந்த நயினாபிள்ளை  சற்றும் யோசிக்க வில்லை. இதென்ன பிரச்னைசித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை என்று  போட்டுக்கோங்க”...  என்று  விஷயத்தை முடித்து விட்டார்.

ஒரே நொடியில்  பின்பாட்டுக்காரரின்  ஜாதி குலம் கோத்திர அடையா ளங்களையும்  பெயரையும் நய்னாபிள்ளை மாற்றிவிட்டார். பின்பாட்டுக் காரரருக்கும்  இது  ஒரு பெரிய  விஷயமாகப்படவில்லை. சித்தூர் சுப்பிர மண்யப் பிள்ளை  என்கிற பெயர்  நிலைத்து  நீடித்துவிட்டது.  நய்னா பிள்ளையின் சங்கீதத்துக்கு  நேர் வாரிசாக  ஆதர்சமாக  அவர் இன்றும் கருதப்படுகிறார்.

மேதைகளுக்கு  ஜாதியில்லை.


 தகவல்  V. Sriram                     



Sunday, December 4, 2016

யந்திரக் கவர்ச்சி - வைதீஸ்வரன்

யந்திரக் கவர்ச்சி
வைதீஸ்வரன்





அவன்
 தாடியைத்  திருகிக்கொண்டு
யோசித்தான்  
கை செயற்கையாகப்  பரபரத்தது
உலோகக்  கம்பிகளை உருவி யெடுத்து
நீட்டி  வளைத்து  சுருட்டி
சின்ன  வடிவாக்கிப்  பரத்தி
மூக்கு வைத்து
சன்னக் கால்களில்  நிறுத்தினான்
குறிக்கு பதிலாக  பேட்டரியைப்
பொருத்தினான்.  முடுக்கி விட்டான்
தகரச் சிறகுகள்  படுவேகத்தில் துடிதுடிக்கக்
காற்றில்  எழும்பியது  வண்ணமற்ற  பூச்சி. ஒன்று
தோட்டம்  முழுக்க சுற்றிப் பார்த்து
வருத்தமாய்  வீட்டுக்
கூடத்திற்கு  திரும்பி வந்து வட்டமிட்டது.


மூலையில் நின்ற  பித்தளைப் பூ  ஜாடி கண்டதும்
பேதுற்று  சத்தமாகப்    பறந்து போய்
காலை விரித்துக் குந்திக்கொண்டது
ஒரு  ப்ளாஸ்டிக் பூவின்  நடுக்குழிக்குள்