vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, November 15, 2016

ஒரு புகைப் படத்தின் கதை-வைதீஸ்வரன்


        ஒரு புகைப் படத்தின்  கதை

******************************************
வைதீஸ்வரன்


 இந்த  புகைப்  படம்  எடுத்த  போது  எனக்கு  ஐந்து  வயது  இருக்கலாம்.  சேலத்தில்  என்  அப்பாவின்  நண்பர்  ஒருவர்  திடீரென்று  ஒரு போட்டோ ஸ்டுடியோவை  ஆரம்பித்து  விட்டார். அப்போது  அந்தத்  தொழில் மிக  வித்யாசமானது.  நூதனமானது.  ஆனால்  அவர்  தொழிலில்  மிக ஊக்கமானவர்.  தன்  நண்பர்களையெல்லாம்  அழைத்து  வந்து  போட்டோ  எடுத்துக் கொள்ளும்  ஆர்வத்தைத்  தூண்டி விட்டார்.

அநேகமாக  நான்  பிறந்த பிறகு  எடுத்துக் கொண்ட  முதல்  போட்டோ  இதுவாகத் தான் இருக்கும்.  அதற்கு முந்தைய  வருஷங்களில்  போட்டோ எடுப்பதை  என்  பாட்டி பிடிவாத மாகத்  தடுத்து   நிறுத்திவிட்டாள்போட்டோ  எடுத்தால்  ஆயுசு குறைந்து  விடும்என்பது  அவளுடைய  அபிப்ராயம். இப்போதெல் லாம்  வயிற்றுக்குள்ளிருந்தே  குழந்தையை போட்டோ எடுக்க  ஆரம்பித்து விடுகிறார்கள் !! 

   இந்த போட்டோவில்  என் கூட  நிற்கும் அக்கா  எனக்கு  இரண்டு வயது  மூத்தவள்.  சாயங்காலங்களில்  திண்ணையில்  கல்லாட்டமும் பாண்டியும்  மற்ற  சிறுமிகளோடு விளையாடிக் கொண்டிடிருப்பதைத் தடுத்து  என் அம்மா  அவளை  இப்ப்டி  இழுத்து வந்து  விசேஷமாக  அலங்கரித்து  போட்டோவுக்குத்  தயார் செய்ததில்  அவளுக்கு ரொம்பக் கோபமும்  அழுகையும்  வந்திருக்க வேண்டும்.

 “போட்டோவில்  சிரிக்காமல்  இருந்தாலும்  பரவாயில்லை.  அழுகாம  இரு..”  என்று என் அப்பா  அதட்டி இருக்க வேண்டும்.  தவிர  எங்களுக்கு எதிரே  பளீரென்று விளக்குப் போட்டு  கருப்புத் துணிக்குள்  தலையை  நுழைத்துக் கொண்டு நிற்கும்  அந்த காமிரா  மாமாவைப் பார்க்கும் போது  ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பது  போல்  இருந்திருக்கலாம்.

    எனக்கு  அந்த  மூன்று சக்கர  சைக்கிள்  மிஅவும் பிடிக்கும். அப்போது  அப்பா  சேலத்தில்  சைக்கிள்  கடை  வைத்திருந்தார்.  அவர் கடைக்கு  இந்த  சைக்கிள்  பழுது பார்ப்பதற்கு  வந்திருந்தது.  அதை நான்  சில நாட்கள்  ஓட்டிக் கொண்டிருந்தேன்.

 சைக்கிளை  ஓட்ட விடாமல்  அந்த  காமிரா  முன்னால்  அசை யாமல்  உட்காரச் சொன்னது   எனக்கு பிடிக்கவில்லை.  அப்பாவின் கண்டிப்புக்காக  அசையாமல்  உட்கார்ந்திருக்கிறேன்.

   இந்தப் புகைப்படம்  சுமார்  75 ஆண்டுகளுக்கு  முன் எடுத்தாலும்  அதை எடுத்தவரின்  தொழில் நேர்த்தியை நிச்சயம் பாராட்ட வேண்டும்  .அப்போதைய  காமிராவில்  மிகக் குறைவான  நுணுக்கங்களே இருந்தன.. இதை இயக்குவதற்கு  தீவிரமான  மனப் பயிற்சி வேண்டும்  லென்ஸை  சரியான  நேர அளவுக்கு  சில வினாடிகளுக்கு  கையால் திறந்து மூடவேண்டும்   இந்தக்  கைத் திறமை  ஒரு தியான நிலைக்கு  சமமானது

 எண்பது  வருஷங்களுக்கு  பிறகு  நம்மையே   நாம் திரும்பிப் பார்த்துக்  கொள்ளும் போது  நமது  வாழ்வின்  ஆச்சரியமான  பரிணா மமும்  புதிரும்  வளர்ச்சியின் அரூபமான  ஒழுங்கும்   தீராத  நெகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.  ஏதோ  ஒரு  மகாசக்தியின்  விசாலமான  கருணையை         நினைக்கத்  தூண்டுகிறது